சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இருந்து பத்திரிகையாளர்
திரு. கரிகாலன் நீக்கப்பட்டதையும்
பொதுக்குழுவில் கலந்துகொண்ட கும்பலின் நடத்தையையும் தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
கடந்த 16-11-2025 அன்று சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி கலை அறிவியல் கல்லூரியில், காலை 11 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகப் பொதுக்குழு கூடுகிறது என்ற மகிழ்ச்சியோடு கலந்துகொள்ள வந்த அதன் உறுப்பினர்களாகிய ஊடகவியலாளர்களுக்கு அங்கு அரங்கேற்றப்பட்ட செயல்களால் அதிர்ச்சியும் கோபமும் வருத்தமுமே மிஞ்சியது. பொதுக்குழுவின் அஜெண்டாவை மீறி, ஊடகவியலாளர் திரு. கரிகாலன் அவர்கள் நீக்கப்படுவதாகத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நீக்கப்பட்டுள்ளார். மேலும் அங்கேயே இவ்விவகாரத்தில் கேள்வி எழுப்பிய எமது சங்கத்தின் பொதுச்செயலாளர் – ஊடகவியலாளர் திரு. இந்திரகுமார் தேரடி மற்றும் ஊடகவியலாளர் நித்தியானந்தன் ஆகியோர் மீது தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளது. இவ்விரண்டு விவகாரங்களுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அமைப்பு விதிகள் மற்றும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைப்பதாகவும் உள்ளன.
ஊடகவியலாளர்கள் கரிகாலன் மற்றும் சுப்பையா ஆகியோரிடையே நடந்தது என்ன?
கடந்த அக்டோபர் 26 அன்று, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெளியே நடைபாதையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக வழக்கறிஞர் G.S.மணி மற்றும் தவெக வழக்கறிஞர் அறிவழகன் ஆகியோரது செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றபோது ஊடகவியலாளர் திரு. கரிகாலன் அவர்களும் கலந்துகொண்டு அவர்களிடம் வினாக்களை எழுப்பினார். அவரைக் கேள்வி கேட்கக்கூடாது என்று திரு. சுப்பையா குறுக்கீடு செய்தார். ஆனாலும் கரிகாலன் வழக்கு தொடர்பான கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பினார். உடனே திரு. சுப்பையா அந்த இடத்தைவிட்டுச் செல்லுமாறு மெல்லிய குரலிலும் சைகை மூலமாகவும் வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தினார். அவர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் பிறகே கரிகாலன் தனக்கு நடந்த அநீதி குறித்துக் கேள்வி கேட்டார். உடனே அவரைப் பார்த்து, திரு. சுப்பையா, “நீ பத்திரிகையாளரா? ஐ.டி கார்டைக் காட்டு” என்றார்.
தொடர்ந்து இதுபோன்ற இடையூறுகளைச் சந்தித்துவரும் கரிகாலன், இதனைக் காணொளியாகவும் தனது ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். நீ யார்? என்ற கேள்வி எதேச்சையானது அல்ல; தொடர்ந்து பல ஆண்டுகளாகச் செய்தியாளர் சந்திப்புகளில் கலந்துகொண்டு வரும் திரு. கரிகாலனை திரு. சுப்பையா உள்ளிட்ட அனைவரும் அறிவர்.
ஆனாலும் பொது வெளியில் ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அவ்வாறு கேட்பது அவமதிப்பைத் தவிர வேறென்ன?
இது வழக்கமாகப் பலமுறை நடப்பது தான் என்று சிலர் பேசினர். இளம் ஊடகவியலாளர்களையும் டிஜிட்டல் ஊடகவியலாளர்களையும் நெருக்கடிக்கு ஆட்படுத்துவது, அச்சுறுத்துவது, கேள்வி எழுப்பவிடாமல் தடுப்பது என்பனவெல்லாம் எத்தனை முறை நடந்தாலும் அது அநீதி தான். அது தடுக்கப்பட வேண்டுமே தவிர அந்த அநீதியை ஏன் வெளியில் சொன்னாய் என்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. ‘பேட்டி கொடுக்க வந்தவர் – நான் அழைத்து வந்த வழக்கறிஞர்’ என்று முட்டுக்கட்டை போட்ட திரு. சுப்பையா தான் பிரச்சினைக்கு முதற்காரணம்.
எதன் அடிப்படையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறதோ அது தொடர்பான கேள்வியைக் கேட்பதில் இடையூறு செய்வதும் நெருக்கடி தருவதும் ஏற்புடையது அல்ல. யார், எப்படிக் கேள்வி எழுப்ப வேண்டும் என்று கட்டளையிடுவது தான் பத்திரிக்கையாளர்களிடையே ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயல். அன்று நடைபெற்ற வழக்கறிஞர்களின் செய்தியாளர் சந்திப்பு ரோட் ஷோக்களுக்கான ஒழுங்கு விதிகளை வகுப்பது தொடர்பானது. அதில் கலந்து கொண்டவர்கள் தவெக மற்றும் பாஜக வழக்கறிஞர்கள். தவெக வழக்கறிஞரிடம் அவருடைய கட்சியின் தலைவர்கள் முந்தைய கூட்டத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டல்களைச் சரியாக பின்பற்றினார்களா? என்று திரு. கரிகாலனால் எழுப்பப்பட்ட கேள்வி வழக்கின் முகாந்திரத்திற்குத் தொடர்புடையதே. அதற்குரிய பதில் அளிப்பது அந்த வழக்கறிஞரின் கடமை. இந்தக் கேள்விக்கும் பதிலுக்கும் இடையில், இந்தக் கேள்வியைக் கேட்கக் கூடாது என்ற தலையீட்டிற்கு வேலையே இல்லை. ஆனாலும் திரு. சுப்பையா இடைமறித்தது கண்டிக்கத்தக்கது.
இதில் பாதிக்கப்பட்டவர் திரு. கரிகாலன் தான். ஆனால் இதற்கெல்லாம் நேரெதிராக மூத்த ஊடகவியலாளரை அவமதித்ததாகவும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை (Chennai Press Club) அவமதித்ததாகவும் செய்தியாளர்களின் அதிகாரப்பூர்வமற்ற வாட்ஸப் குழுக்களிலும் சென்னை பத்திரிகையாளர் மன்றப் பொதுக்குழுவிலும் பொதுவெளியிலும் சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர்.
பொதுவெளியில் ஒரு ஊடகவியலாளரை, ‘உன் அடையாள அட்டையைக் காட்டு, நீ பத்திரிகையாளரா?’ என்றெல்லாம் கேள்வி எழுப்பிய ஒருவரை ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்ற சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தைச் சேர்ந்த பலரும் கண்டிக்க முன்வராதது அதிர்ச்சியளிக்கிறது.
இயற்கை நீதிக்கு மாறான முடிவு:
வாக்குவாதத்தைத் தொடங்கியதே திரு. சுப்பையா தான்; பாதிக்கப்பட்டவர் திரு. கரிகாலன் தான் என்ற நிலையில் இருவரையும் அழைத்து விசாரிப்பதே சரியானது. இந்த விவகாரம் குறித்துப் பொது வெளியிலும் வாட்ஸப் குழுக்களிலும் விவாதங்கள் நடந்தபோதே, தான் செயற்குழுவிடம் முறையாகப் புகார் அளிக்கத் தயார், இரு தரப்பு விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கிறேன் என்று திரு. கரிகாலன் சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகளிடம் தெரிவித்த பிறகும் கூட புகாரையும் பெற்றுக் கொள்ளாமல் இருவரையும் அழைத்து நடத்தியிருக்க வேண்டிய விசாரணையையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தியதும் வாய்ப்பை மறுத்ததும் ஏன்?
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் அமைப்பு விதி எண் 18இன் படி, உறுப்பினர் ஒருவரை நீக்குவதாகச் செயற்குழு தீர்மானித்தால், அந்த நீக்கத் தீர்மானத்தை 14 நாட்களுக்கு முன்னதாகவே அனுப்பி சம்பந்தப்பட்ட உறுப்பினர் நேரடியாக ஆஜராகி, அவர் விரும்புகின்ற வகையில் உரிய விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இந்த அமைப்பு விதியினை மீறி திரு. கரிகாலன் நீக்கப்பட்டது முற்றிலும் தவறான நடவடிக்கையாகும்.
பொதுக்குழுவில் கும்பல்வாதம்:
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் அமைப்பு விதி எண் 47இன் படி, annual general meeting எனப்படும் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் உட்பட எந்தப் பொதுக்குழுக் கூட்டம் ஆனாலும் அதன் வரையறுக்கப்பட்ட அஜென்ண்டா/அலுவல்களைத் (transaction of business) தாண்டிய எதுவாகினும் அது ‘சிறப்பு அலுவல்’ என்று அறியப்படும். அப்படியான சிறப்பு அலுவல்கள் என்னென்ன என்றும் அதற்குரிய விளக்கத்தையும் கூட்டத்திற்கான நோட்டிஸில் இணைத்து வெளியிட வேண்டும்.
ஆனால் இந்த விதிக்குப் புறம்பாக ஒரு கும்பல், அராஜகம் செய்து கலவரத்தில் ஈடுபட்டு திடீரென்று முன்மொழிந்த ஒன்றை எப்படித் திடீரென்று ஆண்டுப் பொதுக்குழுவில் நிறைவேற்றினார்கள்? விதிகளின் படி உரியவகையில் அறிவிக்கப்படாமல் கொண்டு வரப்பட்ட அத்தீர்மானம் செல்லாது.
2400 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பின் கோரம் (quorum) இல்லாத பொதுக்குழுவில் சிறுகும்பலின் அழுத்தத்தால் இதனை அனுமதித்தது எப்படி? என்பதை சென்னைப் பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் விளக்கியே ஆக வேண்டும். இவற்றுக்கு எதிராக (16-11-2025அன்று) திருத்தப்பட்ட விதி எண் 18இன் கீழ் திரு. கரிகாலன் அவர்கள் சென்னை பத்திரிகையாளர் மன்றத்திடம் மேல்முறையீடும் செய்யவுள்ளார்.
யூட்யூபர்களா? ஊடகவியலாளர்களா?
மேலும் மன்றத்தில் டிஜிட்டல் தளங்களில் பணியாற்றுவோரை எப்படி உறுப்பினராகச் சேர்த்தீர்கள் என்று சிலர் மன்றத்தின் பொதுக்குழுவில் பிரச்சனை செய்தனர். அமைப்பு விதி எண் 12 (A-இன் கீழ் b,c)படி, மின்னணு ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் என்றும் ஊடகவியலையே முதன்மைப் பணியாகக் கொண்டு செயல்படும் பகுதிநேர அல்லது தன்னார்வ ஊடகவியலாளர்கள் சங்கத்தின் முதன்மை உறுப்பினர்களாக இணையலாம். இதனடிப்படையில் 2021க்கு முன்பாகவே இணையதளங்களும் யூட்யூப் சேனல்களும் நடத்தி வருவோரும் அவற்றில் பணியாற்றுவோரும் உறுப்பினராகவே உள்ளனர்.
கருத்துக் கூறியோர் மீது நடந்த தாக்குதல்:
இவ்வாறு யூட்யூபர்கள் என்று டிஜிட்டல் ஊடகவியலாளர்களை இழிவுபடுத்திய போது, தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி, ‘யார் யூட்யூபர்கள்?’ என்று கேட்டதற்கு 50 பேர் கொண்ட கும்பல் மொத்தமாகப் பாய்ந்து தாக்க வந்தனர். அவருக்கு ஆதரவாக முன்வந்த ஊடகவியலாளர் திரு. நித்தியானந்தன் அவர்களையும் தாக்க முயன்றனர் அவ்வாறு தாக்க வந்தவர்கள் ஆபாசமான வார்த்தைகளைப் பேசினர், சிலர் குடிபோதையில் வந்திருந்தனர் என்பதெல்லாம் அதிர்ச்சியளித்தது.
20 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் பொதுக்குழுவிற்குச் சீர்குலைக்கும் நோக்கோடு வந்திருந்த சில உறுப்பினர்கள் திரு. ஷபீர் அவர்களிடம், தனித்தனியே சென்று ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தனர். அங்கு நடந்த அனைத்தையும் அந்தச் சிறுகும்பல் அரங்கேற்றிய நிலையில் பொதுக்குழுவையும் மன்றத்தையும் ஹைஜேக் செய்துவிட்டார்களா? என்றே அங்கிருந்த அனைவரும் அதிர்ந்தனர்.
கண்டிக்கின்றோம்!
திரு.ஆ கரிகாலனை நீக்க வேண்டும் என்றும் ஊடகவியலாளர் திரு. ஷபீர் அகமது (The News Minute), திரு. பாண்டியராஜன் (ETV Bharat) உள்ளிட்ட சில பேர் தொடர்ந்து அந்தப் பொதுக்குழு கூட்டத்தில் உண்மையை மறைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் கூச்சலிட்டதையும், அவர்களுடன் வந்தவர்கள் கும்பல் வன்முறையாளர்கள் போல நடந்து கொண்டதையும் ஊடகவியலாளர்கள் திரு.இந்திரகுமார் தேரடி மற்றும் திரு. நித்தியானந்தன் ஆகியோரைத் தாக்க வந்ததையும், ஊடகவியலாளர்கள் மாண்பைக் கெடுக்கும் வகையிலும் நடந்துகொண்டதை, தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும் அமைப்பு விதிகளுக்கும் இயற்கை நீதிக்கும் மாறாக செல்லாத தீர்மானத்தால் திரு. கரிகாலன் நீக்கப்பட்ட நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
கௌரி லங்கேஷ் போன்ற பத்திரிகையாளர்களின் பேனா முனையை எந்தத் தத்துவம் மௌனமாக்கியதோ, அதே கரங்கள்தான் உண்மையை உரக்கச் சொல்லும் ஊடகவியலாளர்களைத் துரத்தி, அவர்கள் பெரும்பான்மையாக டிஜிட்டல் ஊடகங்களில் செயல்படும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. இந்தப் பின்னணியில், டிஜிட்டல் ஊடகவியலாளர்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகளை, இது வழக்கமானதுதான் என்று கடந்து போகக் கோருவது இந்தியாவைச் சூழந்து வரும் வலதுசாரி ஆபத்துக்கு துணை போவதன்றி வேறில்லை. எனவே ஊடகவியலாளர்களிடையே நட்புணர்வைப் பேணி வளர்க்கவும், இனி எதிர்வரும் காலங்களில் ஊடகவியலாளர்களிடையே எந்த பேதங்களும் இல்லாமல், டிஜிட்டல் ஊடகங்களைப் புறக்கணிக்காத சுமுகமான சூழலை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் முன்வைக்கின்றோம்.
பொதுக்குழுவில் இருந்த சில ஊடகவியலாளர்கள் தடுக்க முயன்றதால் விபரீதம் ஏதும் நடக்கவில்லை. ஆனால் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுக்குழுவில் இவ்வாறு நடந்ததற்கு மன்றத்தின் செயற்குழு என்ன நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறது? இது சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்குக் களங்கம் விளைவிக்கவில்லையா? நடந்த அனைத்தும் 2 கேமராக்களில் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பொதுக்குழுவில் அத்துமீறி நடந்துகொண்ட உறுப்பினர்கள் மீது சென்னை பத்திரிகையாளர் மன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் வலியுறுத்துகிறது.







பாசிஸ்டுகளின் கைக்கூலியாக நிர்வாக பொறுப்புகளில் மேலே உள்ளவர்கள் கீழே இருக்கும் பத்திரிக்கையாளர்கள் குரல் எழுப்பும் போது ஒடுக்குவது அவர்கள் மீது தாக்குதல் தொடுப்பது போன்றவைக்கு நாம் தான் குரல் கொடுக்க வேண்டும். மக்கள் தான் நமக்காக குரல் கொடுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்…