சீனா ஒரு சோசலிச நாடு என்றும், அந்த நாட்டின் அரசாங்கம் கம்யூனிசக் கொள்கைகளை கடைப்பிடித்து வருவதாகவும், 21 ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான கம்யூனிச நடைமுறையை மேற்கொண்டு வருவதாகவும், இந்தியாவில் உள்ள திருத்தல் வாத கம்யூனிஸ்டுக் கட்சிகள் முதல் குட்டி முதலாளித்துவ தாராளவாத கம்யூனிச அபிமானிகள் வரை பிரச்சாரம் செய்து திரிகின்றனர்.
சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி தோழர் மாசேதுங் மறைவுக்குப் பிறகு முதலாளித்துவ கொள்கைகளை கடைபிடிக்க துவங்கியதன் விளைவாக கட்சிக்குள் ஊழல், லஞ்சம், ஆடம்பர வாழ்க்கை முறை மற்றும் பல்வேறு விதமான மோசடிகள், சீரழிவுகள் தலை விரித்தாட துவங்கி விட்டது.
போல்சவிக்மயமான கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கு கட்சியில் உள்ள அணிகள் நேர்மையாகவும், புரட்சிகர கடமைக்கு விசுவாசமாகவும், தங்களுடைய சொந்த வாழ்க்கையை எளிமையாகவும், தியாகப்பூர்வமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதும், இவற்றில் சிக்கல்கள் ஏற்படுகின்ற போது அதனை விமர்சனத்திற்கு உட்படுத்தி திருத்தப்பட வேண்டும் என்பதுதான் சர்வதேச அளவில் புரட்சிகர கம்யூனிச இயக்கங்கள் மேற்கொண்டு வருகின்ற நடைமுறையாகும்.
தோழர் மாவோ மறைவுக்குப் பிறகு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் படிப்படியாக தலைவிரித்தாடத் துவங்கிய முதலாளித்துவ பண்புகள் மற்றும் கம்யூனிச விரோத துரோகத்தனங்கள், பண்பாடுகள் அனைத்தும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரிக்கவே 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சி காங்கிரஸின் முடிவின்படி ஜி ஜின்பிங் சில முடிவுகளை அறிவித்தார்.
‘ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் உள் பிளவுகள் தவிர்க்க முடியாதவை என்றும், ஆனால் ஊழல் அதிகாரிகளை வேரறுக்க வேண்டும் என்ற முடிவினை அறிவித்தார், கட்சிக்குள் ஒழுக்கத்தை வளர்க்க “கத்தியை உள்நோக்கித் திருப்ப வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.
2023 ஆம் ஆண்டில், கட்சி ஒழுக்கத்தை மீறியதற்காக சுமார் 610,000 கட்சி அதிகாரிகள் தண்டிக்கப்பட்டனர், அவர்களில் 49 பேர் துணை அமைச்சர் அல்லது ஆளுநர் மட்டத்திற்கு மேல் அதிகாரிகள் என்று கட்சியின் மத்திய ஒழுங்கு ஆய்வு ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல, “சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி, அந்த நாட்டின் உயர்நிலைக் குழுவாக கருதப்படுகிறது. இந்த கமிட்டி ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பெய்ஜிங்கில் கூடி ஆலோசிப்பது வழக்கம். இதன்படி 2025 ஆம் ஆண்டு 20-ம் தேதி அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் மத்திய கமிட்டியின் கூட்டம் பெய்ஜிங்கில் தொடங்கியது. இதில் 350 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் 3 நாட்கள் நடைபெற்றது.
இதன் பிறகு மத்திய கமிட்டி வெளியிட்ட அறிக்கையில், “சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, ஆட்சி நிர்வாகம் மற்றும் ராணுவத்தில் முக்கிய பதவிகளில் இருந்த 9 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். குறிப்பாக ஹீ வெய்டோங்கின் பதவி நீக்கத்துக்கு மத்திய கமிட்டி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ராணுவத்தின் ஊழல் தடுப்பு துறை தலைவராக ஜாங் ஷெங்மின் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் மத்திய ராணுவ கமிஷனின் துணைத் தலைவராகவும் பதவி வகிப்பார்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த நிலையில் உள்ள முக்கியமான ராணுவ துறையை கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் கொண்ட சீன ராணுவத்தின் தலைமைத் தளபதி, ஜெனரல் சாங் யுக்ஸியா, நாட்டின் முக்கிய அணு ஆயுத ரகசியங்களை அமெரிக்காவுக்கு கசிய விட்ட குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார்.
தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அவர் மீது, அணு ஆயுதத் திட்டம் குறித்த தகவல்களை அமெரிக்காவிற்கு கசியவிட்டது, முன்னாள் பாதுகாப்பு அமைச்சரின் பதவி உயர்வு உட்பட பதவி உயர்வுகளுக்காக லஞ்சம் பெற்றது என கடும் குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளன. ஜெனரல் சாங் யுக்ஸியா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தியை பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறது.
ஜெனரல் சாங் யுக்ஸியா, அரசியல் குழுக்களை உருவாக்கியதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ராணுவ ஆணையத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. ராணுவ கொள்முதல் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகவும், பதவி உயர்வுகளுக்காக பெரும் லஞ்சம் பெற்றதாகவும் எழுந்த புகாரை விசாரிக்கையில், ஜெனரல் சாங் யுக்ஸியா சிக்கியிருக்கிறார். தற்போது இவர் தொடர்பான விஷயங்களை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
படிக்க: சீனா நவீன சமூக ஏகாதிபத்தியம் | புதிய ஜனநாயகம் வெளியீடு
25-01-2026 அன்று உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில் இந்த விவகாரம் குறித்து பேசப்பட்டிருக்கிறது. சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் சாங் மீது விசாரணையை அறிவித்திருக்கிறது. ஜெனரல் சாங் யுக்ஸியா, கட்சியின் ஒழுக்கம் மற்றும் அரசுச் சட்டங்களை மீறியதாகச் சந்தேகிக்கப்படுவதாக அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமானது, சீனாவின் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய முக்கிய தொழில்நுட்பத் தரவுகளை சாங் அமெரிக்காவிற்கு கசியவிட்டுள்ளார் என்பதுதான்.
சாங் மீதான சில ஆதாரங்கள், சைனா நேஷனல் நியூக்ளியர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் கு ஜூன் மீதான விசாரணையிலிருந்து வந்தவை. கு ஜூன், சிவில் மற்றும் ராணுவ அணு திட்டங்களை மேற்பார்வையிடும் அரசு நிறுவனத்தின் முன்னாள் தலைவர். அவர் கட்சி ஒழுக்கம் மற்றும் அரசுச் சட்டங்களை மீறியதாகக் கடந்த வாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த விசாரணை குறித்து சீன தூதரக செய்தித் தொடர்பாளர், லியு பெங்யு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஊழலை எதிர்த்துப் போராடுவதில் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுமையான மற்றும் ஊழலுக்கு இடமளிக்காத அணுகுமுறையை இது வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
படிக்க: கம்யூனிசத்தையும், பாட்டாளி வர்க்கத்தையும் அச்சுறுத்தும் சீனாவின் ‘ சோசலிச பாதை?’
கட்டுப்பாடு, ரகசியம் என்பதை கேடாக பயன்படுத்திக் கொண்டு பல்வேறு கிரிமினல் குற்றச் செயல்களை செய்கின்றவர்கள் தனது தவறுகளை மறைப்பதற்கு அமைப்பின் உயர்ந்த ஒழுக்க நெறிகளை துச்சமாக கருதுகிறார்கள்.
இத்தகைய கம்யூனிச விரோத மனப்பான்மை கொண்டவர்களுக்கு சலுகை காட்ட வேண்டும் அவர்களின் நீண்ட கால பங்களிப்புகளை கணக்கில் எடுத்துக் கொண்டு மென்மையாகவும், தாராளவாதமாகவும் அணுக வேண்டும் என்ற கேடுகெட்ட முதலாளித்துவ கழிசடைக் கலாச்சாரம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் புகுந்ததன் காரணமாகவே இத்தகைய கேடுகெட்ட நடவடிக்கைகள் முன்னிலைக்கு வருகின்றன.
இவையெல்லாம் சர்வதேச அளவில் வெளி வருகின்ற கம்யூனிச விரோத பத்திரிகைகளின் தகவல்கள் தான் ஆனால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இன்னமும் சோசலிச சித்தாந்தத்தை கடைபிடிப்பதாகவும் கம்யூனிச ஒழுங்குகளை கடைப்பிடித்து வருவதாகவும் இனியும் ஏய்க்க முன் வந்தால் அவர்கள், கம்யூனிசத்தை குழிதோண்டி புதைப்பதற்கு வேறு வகையில் முயற்சி செய்கிறார்கள் என்பது தான் அர்த்தமாகும்.
தோழர் மாவோ இறப்புக்கு பிறகு சீனாவில் படிப்படியாக முதலாளித்துவம் நிலைநாட்டப்பட்டதும் 2007 உலகப் பொருளாதார நெருக்கடிக்கு பிறகு சீனா நவீன சமூக ஏகாதிபத்தியமாக பரிணாம வளர்ச்சி அடைந்ததையும் மார்க்சிய லெனினிய அமைப்புகள் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளனர்.
ஆனால் சீனாவில் இன்னமும் சோசலிசம் பூத்துக் குலுங்குவதாகவும், 21ம் நூற்றாண்டுக்கான சோசலிசம், சீனாவின் பாதை மற்றும் சீன சோசலிச பாதை என்றெல்லாம் குட்டி முதலாளித்துவ ஆய்வாளர்களும், திருத்தல்வாத கம்யூனிஸ்டுகளும் வியந்து கொண்டாடி வருகின்றனர்.
◾ஆல்பர்ட்
புதிய ஜனநாயகம் தினசரி






