கார்ப்பரேட் கம்பெனிகளிடம் தேர்தல் நன்கொடையாக ஆயிரக்கணக்கான கோடிகளை பாசிச பிஜேபி பெற்று வருவதை அனைவரும் அறிவர். அதற்காக அந்த கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளுக்கு என்னென்ன வசதிகளை பாஜக அரசு செய்து கொடுக்கிறது; அதன் விளைவாக நாட்டின் வளங்களையும் நாட்டு மக்களின் உழைப்பையும் ஒட்ட சுரண்டி அம்பானி, அதானி வகையறாக்கள் உலகின்  பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம் பெறும் அளவிற்கு வளர்ந்து இருப்பதையும் மக்கள் அறிவர்.

அந்த வரிசையில் இப்பொழுது பாசிச பாஜக, ஒன்றிய அரசினுடைய ( ஸ்வச் பாரத், பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ, கிசான் சேவா போன்ற)  நலத்திட்டங்களின் பெயரில் மக்களிடமிருந்து பணத்தை நன்கொடையாக கறந்து கொண்டிருப்பதையும் அந்தப் பணத்தை அரசிடம் கொடுக்காமல் விழுங்கி ஏப்பம் விட்டிருப்பதையும் பற்றிய செய்திகள் இப்பொழுது வெளிவந்து நாறிக் கொண்டிருக்கின்றன.

டிசம்பர் 2021 மற்றும் பிப்ரவரி 2022 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி நிதி திரட்டும் இயக்கத்தை நடத்தியது. இந்த இயக்கம் பிப்ரவரி 11, 2022 அன்று முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டது. Narendramodi.in மற்றும் NaMo app மூலம் இந்த நிதி வசூலுக்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டது. (ஆனால் இன்று வரை இந்த நிதி வசூல் வேட்டை முடிவடையவில்லை.)

இந்த நிதி வசூலின் பொழுது பாஜகவிற்கு நிதியளிக்குமாறு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டா போன்றோர் மக்களை வேண்டிக் கொண்டதுடன் அவர்கள் தங்கள் சொந்த பணத்திலிருந்து ரூ.1,000 ஐ கட்சிக்கு நிதியாக வழங்கி அந்த ரசீதின் நகலை பொதுவெளியில் வெளியிட்டனர். இது பாஜகவின் ஆதரவாளர்கள் பலரை நன்கொடை அளிக்கும்படி செய்துள்ளது.

திருவாளர் மோடியின் வேண்டுகோளை கண்ட சத்தியம் டிவியின் செய்தி ஆசிரியர் அரவிந்தாக்சன் அவர்கள் ஸ்வச் பாரத், பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ, கிசான் சேவா போன்ற நலத்திட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா 100 ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளார். இந்த நன்கொடைக்கான ரசீதையும் அவரது இமெயில் மூலமாக பிஜேபியின் மைய அலுவலகத்தில் இருந்து பெற்று இருக்கிறார்.

இப்படி நன்கொடை அளித்தது குறித்து “மத்திய அரசின் நலத்திட்டங்களின் பெயர்கள் நமோ ஆப்பில் காட்டப்பட்டதால் நான் அளிக்கும் நன்கொடைகள் இந்த திட்டங்களுக்கு போய் சேரும் என்று நான் உண்மையாக நம்பினேன்” என்று அரவிந்தாக்சன் கூறுகிறார்.

ஒன்றிய அரசு நலத்திட்டங்களின் பெயரைக் கூறி சட்டவிரோதமாக மக்களைக் கொள்ளையிடும் பிஜேபி!
மோடி ஆட்சியின் திருட்டுத்தனங்கள்

உயிரியல் ரீதியாகப் பிறக்காத, தெய்வக் குழந்தையான, விஸ்வகுருவான, திருவாளர் 56 இன்ச் மோடியின் பேச்சை நம்பி நன்கொடை அளித்ததுடன்  அரவிந்தாக்சன் அவர்கள் நின்றுவிடவில்லை. மத்திய அரசின் திட்டங்களின் பெயரில் பாஜக செய்து வரும் இந்த நிதி வசூல் தொடர்பான விவரங்களைக் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்( RTI) கீழ் மத்திய அரசின் பல்வேறு துறைகளிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளார்.

அரவிந்தாக்சன் ஆர்.டி. ஐ மூலம் கேட்ட கேள்விகளுக்கு ‘ஸ்வச் பாரத், பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ, கிசான் சேவா போன்ற மத்திய அரசின் நலத்திட்டங்களுக்காக நிதி வசூலிக்கும் எந்த அனுமதியும்  பாஜகவிற்கு வழங்கப்பட்டதாக’ எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, அரவிந்தாக்சன், மேற்கண்ட ஒன்றிய அரசின் நலத்திட்டங்களுக்காக நன்கொடை வசூலிப்பதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கோ தனிநபர்களுக்கோ ஏதேனும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்றும் குறிப்பாக Narendramodi.in மற்றும் NaMo app களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்றும் மத்திய அமைச்சகங்களை கேட்டிருக்கிறார். ஓரிரு துறைகளிடம் மட்டும் கேள்விகளை கேட்காமல் இந்த நலத்திட்டங்கள் தொடர்புடைய பல்வேறு ஒன்றிய அரசின் அலுவலகங்களுக்கு தனது கேள்விகளை அனுப்பி அதற்கான பதிலை பெற்றுள்ளார்.  பிஜேபி இப்படிப்பட்ட நிதி வசூல் செய்வதற்கான எந்த ஒரு அனுமதியும் கொடுத்ததாக ஒன்றிய அரசின் எந்த ஒரு துறையில் இருந்தும் பதில் வரவில்லை.

அதன் பிறகு பிரதம மந்திரி அலுவலகத்திற்கு தனது கேள்விகளை அரவிந்தாக்சன் அனுப்பி வைத்துள்ளார். அதற்கு ‘Narendramodi.in மற்றும் NaMo app இரண்டும் இந்திய நாட்டின் பிரதம மந்திரியின் அதிகாரப்பூர்வமான தாளமோ ஆப்போ இல்லை என்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் கிடைத்திருக்கிறது. மேலும் இந்த நிதிவசூல் தொடர்பான கேள்விகளுக்கு “நீங்கள் கேட்கும் விசயம் தொடர்பான எந்த ஒரு ஆவணமும் எமது அலுவலகத்தில் இல்லை” என்றும் பதில் வந்திருக்கிறது.

படிக்க:

♦ மோடி வாஷிங்மெஷினில் ஊழல்கறை நீக்கப்பட்ட புதிய உருப்படி சந்திரபாபு நாயுடு!

 மின்சார கொள்முதல் ஏலம்: பாஜக ஆளும் மாநிலங்களின் ஊழல் அம்பலம்!

ஆக இந்த பாசிச பிஜேபி, மத்திய அரசின் நலத்திட்டங்களின் பெயரில் வசூல் வேட்டை நடத்தி அதை தின்று செரித்துவிட்டது என்பது தற்போது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

அரவிந்தாக்சன் டிசம்பர் 8, 2025 அன்று சென்னை போலீஸ் கமிஷனரிடமும் சிபிஐ -யிடமும் இந்த பிரச்சனை குறித்து விசாரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசின் நலத்திட்டங்களின் பெயர்களை கூறி, அந்த நலத்திட்டங்களுக்காக வசூலிக்கிறோம் என்று கூறி மக்களை ஏமாற்றி வசூல் செய்து கொள்ளையடிக்கலாம் அதை எவராலும் தடுத்து நிறுத்தவோ அப்படி வசூலிப்பதற்காக தம்மை தண்டிக்கவோ முடியாது என்ற திமிரில் பாரதிய ஜனதா கட்சி இப்படி வெளிப்படையாக அயோக்கியத்தனம் செய்ய முடிகிறது என்பது எதை காட்டுகிறது?

“விசாரணை அமைப்புகளாவது கூந்தலாவது!…

நீதிமன்றமாவது கூந்தலாவது!!”   என்று தமது கூந்தலில் ஒன்றைக் கூட இந்த அமைப்புகளால் புடுங்க முடியாது என்ற திமிரில்தான் பாசிச பாஜக இப்படி வெளிப்படையாக அயோக்கியத்தனம் செய்து கொண்டிருக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. பாசிச பாஜக ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடித்ததன் விளைவு இது. பாஜக அதிகாரத்தில் இருக்கும் வரை பாஜகவின் இப்படிப்பட்ட அயோக்கியத்தனங்கள் வளர்ந்து கொண்டே இருக்கும்.

  • குமரன்

செய்தி ஆதாரம்: Thewire

1 COMMENT

  1. பிஜேபி மக்களை ஏமாற்ற வேண்டும், கொள்ளையடிக்க வேண்டும், சுரண்ட வேண்டும். ஒரு பக்கம் முதலாளிகள் வளர பொதுத்துறை நிறுவன பலியிட வேண்டும்.

    நாட்டு மக்களுக்கு எதிராக உள்ள இந்த கட்சியை அடியோடும் மண்ணடி வேரோடும் அழித்தொழிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here