பீகார் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் நாம் ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான், எனினும் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி போன்ற கட்சிகள் எப்படியாவது தேர்தலில் வென்று விடலாம் என்ற கனவை குழி தோண்டி புதைத்துள்ளனர் பாசிஸ்டுகள்.
இந்தியாவிலேயே மிகவும் வறுமையான மாநிலங்களில் ஒன்று பீகார். கடந்த 10 ஆண்டுகளாக நிதீஷ் குமார் தலைமையிலான ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. வேலையின்மை, வறுமை, மாநில வருவாய் பிரச்சனைகளால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் அம்மாநில மக்கள். வேலையின்மையால்a தென் மாநிலங்களுக்கு வெறும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து வருகிறார்கள். இவை எல்லாம் ஆனால் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கவில்லை.
பீகாரில் தேர்தல் காலம் நெருங்குவதற்கு முன்னர் தனக்கு எதிரான வாக்காளர்களை SIR (வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்) மூலம் நீக்கிவிட்டு தான் தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். இது குறித்த பல்வேறு கட்டுரைகளை மக்கள் அதிகாரம் இணையதளத்தில் எழுதி இருந்தோம். SIR பாஜகவின் பாசிச நடவடிக்கை என்றும், மீண்டும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே தேர்தல் ஆணையத்தின் துணையோடு இதனை புகுத்தி இருக்கிறார்கள் என்றும் அம்பலப்படுத்தி இருந்தோம்.
இதையெல்லாம் அறிந்திருந்தும் காங்கிரஸ் உள்ளிட்ட பாஜகவிற்கு எதிரான கட்சிகள் தேர்தலில் கவர்ச்சி திட்டங்கள் அறிவிப்பதன் மூலமாகவே வென்று விடலாம் என்ற மனக்கோட்டையை தேர்தல் முடிவுகள் தகர்த்துள்ளன. கடந்த கால சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே அமைந்திருந்தன. அதிலிருந்து படிப்பினை எடுத்துக் கொள்ளாமல் பழைய பாணிலான தேர்தல் பிரச்சாரங்கள் மூலம் பாசிச பாஜகவை வீழ்த்த முடியாது என்பதை அவர்கள் உணரவில்லை.
பாசிஸ்டுகள் தேர்தல்களில் இருக்கும் வாய்ப்புகள் எல்லாவற்றையும் அது எவ்வளவு கேவலமான செயலாக இருந்தாலும் செய்ய தயங்குவதில்லை. SIR மூலம் தனக்கு எதிரான வாக்காளர்களை நீக்கி இருந்தாலும், ஏழரை கோடிக்கு மேலான வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் பாசிச கும்பலால் பல வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை தனக்கு சாதகமாக மாற்றுவதற்கு சீதைக்கு கோயில் கட்டுவது, இஸ்லாமிய வெறுப்பு அரசியல், பீகார் மக்கள் தென்னிந்தியர்களால் தாக்கப்படுகிறார்கள் என இனவெறியை கிளப்பியது, கவர்ச்சி வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றால் மக்களை திசை திருப்பி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது பாஜக தலைமையால் தேசிய ஜனநாயகக் கூட்டணி.
படிக்க:
♦ பீகார்: வாக்காளர்களுக்கு “லஞ்சம்” கொடுக்கும் பாஜக அரசு!
பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறுவதற்கு அவர்களுக்கு உற்ற உறுதுணையாக இருந்தது இந்திய தேர்தல் ஆணையம்.
SIR மூலமாக 65 லட்சம் வாக்காளர்களை நீக்கி பாஜக எதிர்ப்பு வாக்குகள் இல்லாமல் செய்தது. இதற்கு எதிரான வழக்குகளை கையாண்ட உச்ச நீதிமன்றமும் பாசிஸ்டுகளின் நடவடிக்கைகளுக்கு சாதகமாக தீர்ப்புகளை வழங்கியது. பாஜகவின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்.
பாஜகவை பொறுத்தவரை தேர்தலில் கொஞ்சம் நஞ்சம் இருந்த போலி ஜனநாயக உரிமைகளை ஒழித்துக் கட்டி தனக்கு தோதான வகையில் தேர்தலை நடத்துகிறது. ஏற்கனவே பீகாரில் பாஜகவிற்கும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் மக்களிடம் உள்ள எதிர்ப்பை சமாளிக்க, 75 லட்சம் பெண்களுக்கு முக்ய மந்திரி மகிளா ரோஜ்கார் யோஜனாவின் கீழ் 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இது பெண் வாக்காளர்களை கவரும் திட்டம். இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட பின்பு தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
பாஜக தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பல தகிடுதத்தங்களை செய்தது. அதே நேரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நிதிஷ்குமார் ஆட்சியின் கேடுகளை அம்பலப்படுத்தி மக்கள் போராட்டங்களை காங்கிரஸோ அல்லது ராஷ்டிரிய ஜனதா தள கட்சியோ பெரிதும் நடத்தவில்லை. மக்களை போராட்டகளத்திற்கு கொண்டு வருவதற்கான வடிவங்களை துளியும் பின்பற்றாமல் வெறும் தேர்தல் வாக்குறுதிகள் மூலம் மட்டுமே மக்களின் வாக்குகளை பெற்றுவிடலாம் என்ற தவறான திட்டத்தால் மக்கள் செல்வாக்கை பெறமுடியாமல் தோற்றுப் போயுள்ளது.
ஓட்டு திருட்டு, வாக்காளர் முறைகேடு, இவிஎம் மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டைகளையும் மோடி மீதும் பாஜக மீதும் வைத்தாலும் தேர்தல் ஆணையம் நீதிமன்றம் உள்ளிட்ட அரசின் அதிகாரம் மையங்கள் அவற்றை கண்டுகொள்ளாமல் பாசிஸ்டுகளுக்கு துணை போகின்றன. இது வெளிப்படையாகவே தெரிகிறது. அப்படி இருந்தும் தேர்தலில் பாசிஸ்ட்களை வீழ்த்துவதற்கு வெறும் கவர்ச்சி வாக்குறுதிகளை மட்டும் நம்பி இருப்பதால் என்ன பயன்?
தேர்தலில் பாஜக மோசடியாக வென்று விட்டது என புலம்புவதால் எந்த பயனும் இல்லை. தேர்தலில் பாஜகவை வீழ்த்த தேர்தல் வாக்குறுதிகள் மட்டும் போதாது என்பதே பீகாரின் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. இதற்கு மேலும் ஓட்டுக் கட்சிகள் விழித்துக் கொள்ளாவிடில் பாஜகவின் காங்கிரஸ் இல்லாத இந்தியா மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளே இல்லாத ஒற்றைக் கட்சி இந்தியாவை பாஜக உருவாக்கும். ஆகையால் பாசிச பாஜகவை தேர்தலில் வீழ்த்துவதற்கு கூட மக்களை அரசியல் ரீதியாக அணி திரட்ட வேண்டிய தேவை உருவாகியுள்ளது. வெறுமனே பொருளாதார ரீதியான திட்டங்களை தாண்டி காவி பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கு குறைந்தபட்ச செயல்திட்டத்தின் மூலம் மாற்றத்தை உருவாக்க போராடுவோம்..
● நலன்







பீகார் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு அடித்துள்ள எச்சரிக்கை மணி
இந்தக் கட்டுரை கடந்த 10 ஆண்டுகளாக பீகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான ஆட்சியில் மக்கள் வறுமை வேலை இல்லா திண்டாட்டத்தால் பல மாநிலங்களில் சென்று பிழைப்பு தேடி வருகிறார்கள் இந்த சூழலில் பயன்படுத்தி அங்கு இருக்கக்கூடிய பெண்களுக்கு பொருளாதார ரீதியாக பணத்தை வாரி இறைத்து பிஜேபி வெற்றி பெற்று உள்ளது
பீகாரில் நித்திஷ் குமாரின் கேடுகெட்ட ஆட்சியையும் பிஜேபியினுடைய கூட்டுக் களவாணித்தனத்தையும் மக்கள் மத்தியிலே அம்பலப்படுத்தி மக்களை திரட்டி மக்கள் போராட்டங்களாக நடத்தி பிஜேபியும் நிதீஷ்குமார் உடைய ஆட்சியையும் அம்பலப்படுத்தாமல் கவர்ச்சிகர திட்டங்களாலும் மக்களை கவர்வதன் மூலமாக பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விடலாம் என்று மனப்பால் குடித்தது இந்தியா கூட்டணி
மக்கள் அதிகாரம் தொடர்ச்சியாக இந்தியா கூட்டணியை விமர்சித்து வருகிறோம் தேர்தல் கவர்ச்சி திட்டம் மட்டும் போதாது குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் அந்த செயல் திட்டத்தின் அடிப்படையில் பிஜேபிக்கு எதிரான கட்சிகள் சிறு சிறு அமைப்புகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து பாசிஸ்டுகளை விழுத்த திறனற்ற கட்சிகளாக இந்திய கூட்டணி கட்சிகள் செயல்படுகிறது என இந்த கட்டுரை காங்கிரஸ் கட்சிக்கு விமர்சனமாக சுட்டிக் காட்டுகிறார் கட்டுரையின் ஆசிரியர் நன்றி