குஜராத்: மழையில் பயிர்கள் சேரமடைந்ததற்கு அற்பத்தொகையை நிவாரணமாக வழங்கும் பாஜக அரசு!
குஜராத்தை ஆளும் பாரதிய ஜனதா அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை என்பது அந்த மாநில விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிவாரணத் தொகையின் அளவை ஆர் எஸ் எஸ் இன் விவசாய சங்கம் கூட ஆதரித்து “சரி” என்று நியாயப்படுத்தி பேச முடியாத அளவிற்கு அற்பமானதாக உள்ளது.

குஜராத் மாநிலத்தில் பெய்த பருவம் தப்பிய மழை காரணமாக 16,000 கிராமங்களில் உள்ள சுமார் 42 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த விவசாய நிலங்களில் நிலக்கடலை சோயாபீன் நெல் போன்ற விவசாய பயிர்கள் மழை நீரால் சேதமடைந்துள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள இழப்பு காரணமாக விவசாயிகள் சொல்லான துயரத்தில் உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. அதன் முதல்வரான பூபேந்திர பட்டேல் சேதம் அடைந்த பயிர்களுக்கு ரூ.10,000 கோடி நிவாரணத்தை அறிவித்துள்ளார். இப்படி அறிவித்ததுடன் கடந்த 20 ஆண்டுகளில் குஜராத்தில் இப்படிப்பட்ட மழை பெய்தது இல்லை என்றும் கூறியுள்ளார்.

பாஜக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை என்பது மிகவும் சொற்பமானது என்று கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. குஜராத் காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்டா பாஜக அரசு அறிவித்துள்ள இந்த நிவாரணத் தொகை என்பது “விவசாயிகளின் வலியை கேலி செய்வதாக உள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள், பாஜக வை ஆதரிக்காத விவசாய சங்கங்கள் போன்றவை அரசை எதிர்த்து விமர்சனத்தில் ஆச்சரியம் இல்லை.

ஆனால், ஆர் எஸ் எஸ் இன் விவசாய பிரிவான “பாரதிய கிசான் சங்” (Bhartiya Kisan Sangh) -ன் மாநிலத் தலைவர் ஆர் கே பட்டேல்  “எந்த அடிப்படையில் இந்த நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது?” என்று கேள்வி எழுப்பியதுடன் “அறிவிக்கப்பட்ட தொகையை விவசாயிகளின் பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள உண்மையான இழப்பீட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாதது” என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், விவசாயிகளின் கோபம் மேலோங்கி அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிராக விவசாயிகள் போராடுவார்களேயானால் “பாரதிய கிசான் சங்கம் விவசாயிகளின் பராட்டத்தில் கலந்து கொள்ளும்” என்றும் கூறியுள்ளார்.

சவர்குண்டா தாலுக்கா பாஜகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், அம்ரேலி மாவட்டத்தில் உள்ள வேளாண் உற்பத்தி சந்தை குழுவின் இயக்குனருமான (Director of the Agricultural Produce Market Committee – APMC) பாஜக தலைவர் சேர்த்தன் மலானி, தான் வகித்துவரும் அனைத்து கட்சி பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்ததுடன் குஜராத்தை ஆளும் பாரதிய ஜனதா அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை என்பது “விவசாயிகளின் மீது ஒரு கொடூரமான நகைச்சுவை” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

குஜராத்தை ஆளும் பாரதிய ஜனதா அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை என்பது அந்த மாநில விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிவாரணத் தொகையின் அளவை ஆர் எஸ் எஸ் இன் விவசாய சங்கம் கூட ஆதரித்து “சரி” என்று நியாயப்படுத்தி பேச முடியாத அளவிற்கு அற்பமானதாக உள்ளது.

இவ்வளவு குறைவான நிவாரணத் தொகையை பாஜக அரசு அறிவிப்பதற்கான காரணம் என்ன? இந்தியாவில் விவசாயத் துறையில் பெரும் பெரும் கார்ப்பரேட்டுகளை நுழைய விடுவதன் மூலம் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் அடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு துடித்துக் கொண்டிருக்கிறது மோடி அமித்ஷா கும்பல்.

அதற்கு விவசாயிகளை விவசாயத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (MSP) சட்டத்தை நிறைவேற்ற மறுக்கிறது பாஜக அரசு. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரங்களை கிடைக்காத நிலையில் அவர்களால் நீண்ட காலத்திற்கு விவசாயத்தில் இருக்க முடியாமல் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது பாஜக.

அதன் ஒரு பகுதியாகத்தான் புயல், மழை வெள்ளம்,  போன்ற காரணங்களால் விவசாயப் பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு விவசாயிகள்  நட்டம் அடையும் நேரத்தில் அவர்களுக்கு உரிய நிவாரணத் தொகையைக் கொடுக்காமல் இருப்பதன் மூலமாகவும் விவசாயிகளை போண்டியாக்கி விவசாயத்தை விட்டு விரட்டியடிப்பதற்கான வேலையையும் செய்து வருகிறது பாஜக அரசு.

சென்ற வாரம் தான் “விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலத்தில்,  நாக்பூர் நகருக்கு வெளியே  நாக்பூர் – வார்தா NH 44 தேசிய நெடுஞ்சாலையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு மாபெரும் சாலை மறியல் போராட்டத்தை நடத்தியதை பார்த்தோம்.

படிக்க:

 மகாராஷ்டிராவில் வெடித்த விவசாயிகள் போராட்டம் !

 விவசாய பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி: விவசாயிகள் மீது மோடி அரசின் மற்றுமொரு தாக்குதல்!

விவசாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியை முற்றுகையிட்டு, 750 விவசாயிகள் போராட்டத்தின்போது இறந்த பொழுதும், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போராடி மோடி அரசை மண்டியிட வைத்ததை பார்த்தோம். ஆனால் அன்று பாஜக அரசு விவசாயிகளிடம் எழுதிக் கொடுத்ததை நடைமுறைப்படுத்தாமல் இன்றுவரை இழுத்தடித்து வருவதையும் நாம் பார்த்து வருகிறோம்.

இந்தியா முழுமைக்கும் உள்ள விவசாயிகளுக்கு மிகமிக அத்தியாவசிய தேவையாக உள்ள குறைந்தபட்ச ஆதாரவிலைச்  சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்ற மறுக்கிறது. அதேபோல பாதிக்கப்படும் விவசாய பயிர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை கொடுக்காமல், அற்பத் தொகையை கொடுத்து விவசாயிகளை ஏமாற்றுவதற்கு அந்தந்த மாநில அரசுகள் முடிந்த வரை  முயன்று வருகின்றன.

இவை அனைத்தும், அதாவது மத்திய மாநில அரசுகள் விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருவது என்பது, விவசாயிகளை விவசாயத்தை விட்டு விரட்டுவது, விவசாயத்தில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதித்து அவர்கள் கொள்ளை இலாபம் அடிப்பதற்கு ஏற்பாடு செய்வது என்பதை நோக்கமாகக் கொண்டது. இதை விவசாயிகளும் நாட்டு மக்களும் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு எதிராக தனித்தனியாக போராடிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. இதை உணர்ந்து இந்தியா முழுமைக்கும் உள்ள விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களுக்கான கோரிக்கைகளுக்காக போராடி அதை வென்றெடுக்க வேண்டும்.

அதேபோல விவசாயிகளின் போராட்டம் விவசாயிகளின் பிரச்சனைக்கானது; அது நமக்கான பிரச்சனை அல்ல என்று பிற தொழிலில் ஈடுபட்டுள்ள மக்கள் கருதிக்கொண்டு ஒதுங்கி இருப்பது என்பதும் நியாயமானது அல்ல என்பதை உணர வேண்டும்.

விவசாயம் கார்ப்பரேட்டுகளின் கரங்களுக்கு சென்றால் பாதிக்கப்பட போவது விவசாயிகள் மட்டும் அல்ல; விவசாய பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மக்களும் இதனால் பாதிப்பிற்கு உள்ளாக நேரிடும். இதை நாட்டு மக்கள் அனைவரும் உணர்ந்து விவசாயிகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். விவசாயிகளின் போராட்டத்திற்கு துணை நிற்க வேண்டும்.

குமரன்

செய்தி ஆதாரம்: தி வயர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here