மத்திய பிரதேசத்தின் கோவில் ஒன்றில் வெளியில் சிதிலம் அடைந்து கிடக்கும் மகாவிஷ்ணு சிலையை சரி செய்து கர்ப்ப கிரகத்திற்குள் வைக்க வேண்டும் என அறிவுக்குப் பொருத்தமற்ற வழக்கு ஒன்றினை உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்ற பார்ப்பனர் தொடுத்தார்.

வழக்கினை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ‘இது முழுக்க தொல்லியல் துறை சம்பந்தப்பட்டதாகும். எனவே, அத்துறையை நாடி இதற்கு தீர்வு கண்டு கொள்ளவும்..’ எனக் கூறினார்.

அதை ஏற்றுக்கொள்ள மறுத்த வழக்கறிஞர் கிஷோர் ‘தொல்லியல் துறையில் எதனையும் சாதிக்க இயலவில்லை என்பதால் தான் உச்ச நீதிமன்றத்தை நாடி இருக்கிறேன்; எனவே நீங்கள் தான் தீர்ப்பளிக்க வேண்டும்..’ என்று அடம் பிடிக்கிறார்.

அப்பொழுது தலைமை நீதிபதி பி. ஆர். கவாய், சரியான சட்ட விதிமுறைகளைச் சுட்டிக் காண்பித்து, தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட விடயங்களில் நீதித்துறை தலையிட இயலாது; தேவையானால் நீங்கள் பெரிதாக நம்பும் உங்களது கடவுளிடமே சென்று முறையிட்டு தீர்வு கண்டு கொள்ளவும்…’ என்பதாக எளிதான முறையில் கிண்டல் ஏதும் செய்யாமல் பொறுப்புணர்வோடு தான் கருத்துத் தெரிவித்தார்.

அத்தருணத்திலேயே, நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ்- பாஜக- இந்துத்துவ- சங்கி கூட்டம், தலைமை நீதிபதி பி ஆர் கவாய் சனாதன தர்மத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து விட்டதாக மேலும் கீழுமாகக் குதித்து கூப்பாடு போட்டனர். அவர்களின் அனைத்து வித ஊடகங்கள் இன்ன பிற ஐ டி ஊடகங்கள் அனைத்தும் குய்யோ முய்யோ என்று கூப்பாடு போட்டனர். அனைத்தையும் பற்ற வைத்தது பார்ப்பன வழக்கறிஞன் ராகேஷ் கிஷோர்.

அதே நேரத்தில் கூடுதலான ஒன்றை நாம் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். அயோத்தி ராமர் கோவில் கட்டும் பிரச்சனையிலான விசாரணைகளில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் இருந்ததற்கான அடையாளங்கள் எதுவுமே தென்படவில்லை என்பதனை கீழ்மட்ட நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை உண்மையை ஒப்புக் கொண்டு விட்டன.

ஆனால் இறுதி தீர்ப்பளிக்கின்ற பொழுது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சந்திர சூட் என்ன கூறினார்? ‘தீர்ப்புரை எழுதும் முன் ராமபிரானிடம் எவ்வகையிலான தீர்ப்பினை வழங்கலாம் என்பதாக வேண்டிக் கொண்டேன். கடவுள் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே நானும் ராமர் கோவில் கட்டுவதற்கு இசைந்து தீர்ப்புரை எழுதினேன்’… என்ற பாணியில் துளியும் வெட்கமின்றி இந்த விஞ்ஞான யுகத்தில் கருத்தை வெளியிட்டாரா? இல்லையா? அப்படி அவர் கடவுள் மீது நம்பிக்கை வைத்து சொல்கின்றது மட்டும் இந்த காவி கூட்டம் ஏற்றுக் கொள்கிறது.

அதே நேரத்தில் பி. ஆர். கவாய் நீதித்துறைக்கு சம்பந்தமில்லாத தொல்லியல் துறைக்கு மட்டுமே சம்பந்தமுடைய பிரச்சனையில் நீதித்துறை தலையிட முடியாது; வேண்டுமானால் உங்களது கடவுளிடமே இது தொடர்பாக வேண்டிக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அது என்ன தவறு இருக்க முடியும்? அங்கே சனாதன மீறல் என்ன இருக்கிறது? உங்கள் சனாதனமே மக்களை ஏற்றத்தாழ்வாக பிரித்து வைத்து அடிமைப்படுத்துவது தானே! அப்படி இருக்கின்ற பொழுது ராகேஷ் கிஷோரை எளிதாக விட்டுவிட முடியுமா?

இவ்வளவு அட்டூழியங்கள் நடந்த பின்னரும் கூட தலைமை நீதிபதி பி ஆர் கவாய் தன்னடக்கத்துடனும், பொறுப்புணர்வுடனும், தன்னிலை விளக்கம் கொடுத்தார்.

இவை யாவும் முன்னர் நமக்குத் தெரிந்த சுருக்கமான செய்திகளே.

அக.6-ல் பி ஆர் கவாய் மீது ‘ஷூ’ வீசிய கொடுஞ்செயல்!

இந்நிலையில் கடந்த 06-10-2025 நாளன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி ஆர் கவாய் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது மத்திய பிரதேச கோயில் பிரச்சனையில் வழக்கு தாக்கல் செய்திருந்து, தலைமை நீதிபதியின் இறுதிக் கருத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக பிதற்றும் சனாதனப் பார்ப்பன வழக்கறிஞன் ராகேஷ் கிஷோர், தான் அணிந்திருந்த ‘ஷூ’ (Sports shoe) -வைக் கழற்றி பி.ஆர்.கவாய் மீது வீசி எறிந்தான். மயிரளவில் அவரது தலையில் படாமல், ‘ஷூ’ வேறு திசையில் சென்று விழுந்தது. உடனடியாக அங்கிருந்த பாதுகாவலர்கள்- மற்றையோர் அவனைப் ‘பாதுகாப்பாக’ காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிகக் குறுகிய மணி நேரத்திற்குள் வெளிவந்து விடுகிறான்.

‘சனாதனத்தைப் பழிக்கும் எவனுக்கும் எதிராக இப்படிப்பட்ட நடவடிக்கையில் தான் ஈடுபடுவேன். இச்செய்கைக்காக நான் வருத்தம் தெரிவிக்க மாட்டேன்; நான் செய்தது சரிதான்…’ என்ற பாணியில் பார்ப்பனக் கொழுப்பெடுத்து அகங்காரமாக அன்றும் பேசினான். இன்றும் பேசுகிறான். தமது கருத்தை மாற்றிக்கொள்ளவே இல்லை இந்த இழிபிறவி கிஷோர்.

இது குறித்து சங்கபரிவார் காவிக் கூட்டம் அலட்டிக் கொள்ளவே இல்லை. காரணம் இந்நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டுக் கொடுத்தவர்களே அவர்கள்தான். ஷு எறியப்பட்டதைக் கண்டித்துசில வழக்கறிஞர் அமைப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றம் முன்பாக திரட்சியான கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், ராகுல் காந்தி போன்றோர் கண்டன அறிக்கைகள் வெளியிட்டிருந்தனர். இன்னும் பல ஜனநாயக சக்திகளும் புரட்சிகர இயக்கங்களும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். சில பத்திரிகைகளும் கண்டனம் தெரிவித்தன. இது உலகச் செய்தியாகவும் மாறியது.

உச்ச நீதிமன்ற பார் அசோசியேசன் நடவடிக்கைகள்!

இப்பிரச்சனையில் உச்சநீதிமன்ற பார் அசோசியேசன் (SCBA), வழக்கறிஞர் ராகேஷ் குமாரை பார் அசோசியேஷனிலிருந்து நீக்கம் செய்தது.

சம்பவம் நடந்த அன்றே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய், ‘இதனைக் கடந்து செல்வோம்; பெரிது படுத்த வேண்டாம்; இதற்கான வேறு நடவடிக்கைகள் எதுவும் தேவையில்லை; நாம் நமது பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்…’ என்ற பாணியில் எளிதாகக் கடந்து சென்று விட்டார். நம்மைப் பொறுத்த மட்டிலும் அது மாபெரும் தவறு.

ஆனாலும் உச்ச நீதிமன்ற பார் அசோசியேசன், எதிரி ராகேஷ் குமார் மீது தக்க கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்ற அமர்வில் வழக்கு தொடுத்து இருந்தது. இதன் மீது பட்டியலிடப்பட்டு அக்டோபர் 27 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.

பார்ப்பான்  ஷூ-வால் அடிக்கலாம்!

உச்ச நீதிமன்றம் நமக்கு கற்றுத் தரும் பாடம்!

உச்சநீதிமன்ற பார் அசோசியேசன் தொடுத்த வழக்கில், பார் அசோசியேஷன் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், ‘காலணியை வீசிய நபர், தான் செய்த செயலைத் தொடர்ந்து நியாயப்படுத்தி பேசி வருகிறார்; மீண்டும் அதுபோன்ற செயலைச் செய்ய உள்ளதாகக் கூறியுள்ளார்; இது உச்ச நீதிமன்றத்தை மேலும் அவமதிப்பதாகும். எனவே, மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க சட்டபூர்வ உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர் மீது எடுக்க வேண்டும்..’ என்ற வகையில் வாதிட்டுள்ளனர்.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வினித் சரன் மற்றும் அர்ஜுன் சிகிரீ அமர்வு 27-10-2025 அன்று ‘மிக அருமையான’ தீர்ப்பு ஒன்றினை வழங்கியுள்ளது. ‘இந்த விஷயத்தில் தலைமை நீதிபதி மன்னித்து வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை விடுவிக்கக் கூறி விட்டார்; எனவே, மேலும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை; இருப்பினும் அதே நேரத்தில் ‘வரும் காலங்களில்(!)’
இது போன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கும் விதமாக உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வெளியிடலாம்; அதற்கான ஆலோசனை
களை வேண்டுமானால் பார் கவுன்சில் தரப்பில் தெரிவிக்கலாம்…’ என்ற பாணியில் ஷூ-வைக் கழற்றி வீசிய கொடும் செயலுக்கு உச்சநீதிமன்றம் முடிவுரை எழுதி விட்டது.

இந்திய ஜனநாயக மரபு என்று போற்றப்படும் உச்ச நீதிமன்றத்தின் கேந்திரமாக விளங்குவது ‘இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்’என்று பகட்டுகிறார்கள். அப்படிப்பட்ட அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் உச்சபட்ச பதவியில் இருக்கும் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ஒரு பார்ப்பன வழக்கறிஞன் எள்ளின் முனை அளவும் நியாயமற்ற ஒரு விடயத்திற்காக ஷூ-வைக் கழற்றி வீசிகிறான். பி.ஆர். கவாய் இதனை எளிதாகக் கடந்து சென்றது என்பது அவரது தாராளவாத மனப்போக்காக இருக்கலாம். அதில் நமக்கு கிஞ்சிற்றும் உடன்பாடில்லை.

ஆனால் ஒரு அம்பேத்கரியவாதியான பட்டியலின நீதிபதி பி.ஆர். கவாய் பணி இடத்தில் ஒரு பார்ப்பனனோ, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரோ
அமர்ந்திருந்தால் அல்லது வீசியது ஒரு முசுலீமாகவோ, தலித்தாகவோ இருந்திருந்தால் சம்பவம் நடந்த அன்றே குற்றவாளி என்ன கதிக்கு ஆளாகி இருப்பான்  என்பதனை நாம் சீர்தூக்கிப் பார்க்க இயலாதா? அப்படிப்பட்ட தருணங்களில் அக்டோபர் 27 உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் அளித்த தீர்ப்பை போல, தீர்ப்பு வெளிவர வாய்ப்புத் தான் இருந்திருக்குமா?

ஆக ஒட்டு மொத்த நாடும் காவிமயமாகி விட்டதாலும், பாசிசம் தலை விரித்தாடத் துவங்கி விட்டதாலும் இப்படிப்பட்ட இழிவான தீரீப்புக்கள் தொடரவே செய்யும்.

நீதித்துறையியில் இருந்து எண்ணற்ற நியாயமற்ற – சமூக விரோத தீர்ப்புக்கள் வருகின்றன. அப்பொழுதெல்லாம் ராகேஷ் கிஷோர் வழியை பின்பற்ற சாதாரண மக்கள் முடிவு செய்தால் என்ன நடக்கும்?

தீர்ப்புகளில் அதிருப்தி அடைபவர்கள் அனைவரும் ராகேஷ் கிஷோரின் வழியை பின்பற்றினால் உச்ச நீதிமன்றம் 27-10- 2025 அன்று அளித்த அதே தீர்ப்பையே சகலருக்கும் கொடுக்குமா? என்பதே  நமது வினா.

எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here