பனையூர் பண்ணையாரின் வீட்டை முற்றுகையிடுவோம்!
கரூரில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதி கேட்போம்!

தமிழக அரசியலில் திடீரென்று குதித்துள்ள சினிமா நடிகர் விஜய் தனது திரைப்பட சூட்டிங் நடத்துவதைப் போன்றே தனது அரசியல் பரப்புரை கூட்டங்களையும் நடத்துவதற்கு திட்டமிட்டுக் கொண்டுள்ளார்.

வாரந்தோறும் மக்களை சந்திக்கின்ற பயணங்கள் என்ற பெயரில் சனிக்கிழமை நடத்தப்படுகின்ற இந்த ரோடு ஷோக்கள் மற்றும் சொகுசு பேருந்தில் இருந்து நடத்தப்படும் பொதுக்கூட்டங்களில் ஒவ்வொரு வாரமும் நடிகரை பார்ப்பதற்கென்று ஆவலாக உள்ள ரசிகர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்வதும், கூட்டங்களில் கடும் நெரிசல் ஏற்படுவதும் சமீப காலத்தைய வாடிக்கையாகிவிட்டது.

விஜய் என்ற நடிகனை பார்ப்பதற்காக கூடி நிற்கும் கூட்டத்தைப் பார்க்கும் போது, திரைப்படங்களைப் பார்ப்பதற்கு எப்படி முதல் நாளே டிக்கெட் வாங்குவதற்கு வரிசையில் நின்று கோஷம் போட்டு; கட்டவுட்டுகளுக்கு அபிஷேகம் செய்து; திரைப்படப் பெட்டியை வணங்கி திரைப்படம் பார்ப்பது போலவே, நடிகர் விஜய் நேரடியாக வரும்போது தரிசிக்க முதல் நாளே வீட்டிலிருந்து கிளம்பி பசி, பட்டினியுடன் ஆயிரக்கணக்கில் குவிந்து வருவது தமிழகத்தின் இளைய தலைமுறையானது ’அரசியலற்ற சக்திகளாக’ வளர்ந்து வருவதன் அறிகுறியை படம் போட்டு காட்டுகிறது.

பாலஸ்தீனத்தின் விடுதலைக்காக அமெரிக்கா முதல் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் உள்ள மாணவிகள் மாணவர்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். தனது நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் குலக்கொழுந்துகள் ஆடம்பர உல்லாச சொகுசு வாழ்க்கை அனுபவிப்பதை வீடியோவாக கண்டு கொதித்து எழுந்த நேபாள இளைஞர்கள் வீதிகளில் திரண்டு தண்டனை கொடுக்கிறார்கள்.

ஆனால் இதற்கு நேர் மாறாக தமிழகத்திலோ விடுதலைப்புலிகள் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கின்ற சீமான், திமுக எதிர்ப்பு என்ற பெயரில் அரசியல் நடத்த கிளம்பியுள்ள விஜய் போன்றவர்களின் கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் திரள்கிறார்கள். இவர்கள் பேசும் அரைவேக்காட்டு அரசியலுடன் சினிமா கவர்ச்சியும் உள்ளதால் கூட்டம் கூடுகிறது.

கூட்டங்களில் கூடுகின்ற கூட்டங்களின் எண்ணிக்கை; அவர்களின் ஆர்ப்பரிப்பு ஆகியவற்றைக் கண்டு தமிழக முதலமைச்சராகும் தகுதி இவர்களுக்கு உருவாகி விட்டதாக ஆர்எஸ்எஸ் பாஜக சங்க பரிவார கும்பல் கட்டுப்பாட்டில் உள்ள பார்ப்பன கழிசடை ஊடகங்கள் கூப்பாடு போடுகின்றன. மூன்றாவது சக்தியாக விஜய் வளர்கிறார் என கூச்சலிடுகின்றன. ஒவ்வொரு கூட்டத்திற்கும் சென்று காலைக் கடனை கக்கூசில் முடிப்பது துவங்கி ஸ்கிரிப்டுக்கு வீர வசனம் பேசுவது வரை ஒளிபரப்பி, ’ஊடக அறத்தை’ வெளிப்படுத்துகின்றனர்.

நிலவுகின்ற அரசு கட்டமைப்பு எப்படிப்பட்டது; இதில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்த வகையில் அதிகாரம் உள்ளது; உண்மையிலேயே தேர்ந்தெடுக்கப்படாத அதிகார வர்க்கத்தின் கையில் எவ்வளவு அதிகாரம் குவிந்துள்ளது; உண்மையாகவே அரசை கட்டுப்படுத்துகின்ற சக்திகள் யார்? இந்தியாவை அச்சுறுத்தும் கார்ப்பரேட் கொள்ளை என்ன? அது பாசிசமாக உருவெடுத்துள்ள அபாயம் என்ன? பார்ப்பன பாசிசம் தலைவிரித்தாடுவது எப்படி? என்ற அடிப்படையான பல கேள்விகளுக்கு எந்த பதிலும் தெரியாமல் கும்பல் கூடுவது, கோஷம் போடுவது, ”வாழ்க, ஒழிக” என்று கூச்சலிடுவது, பஞ்ச் டயலாக்குகளுக்கு அல்லது அபத்தமான டயலாக்குகளுக்கு விசில் அடிப்பது, கைதட்டுவது, கீழ்த்தரமான முறையில் ஊளையிடுவது என்பதையே அரசியலாக மாற்றுவதற்கு இந்த இளைய தலைமுறை பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து வருகின்ற விஜய் சுமார் 71 திரைப்படங்களின் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய்களை ரசிகர்களிடமிருந்து கொள்ளையடித்துள்ளார் என்று தான் சொல்ல முடியும். முதல் 50 படங்கள் வரை சுமார் 50 அல்லது 100 கோடி தான் நடிப்பதற்கு ஊதியமாகப் பெற்றுக் கொண்ட நடிகர் விஜய், அதற்குப் பிறகு வந்த திரைப்படங்களில் 150-200 கோடி ரூபாய் பெற்றதும், இறுதியாக 400 கோடி ரூபாய் வரை ஊதியமாக பெற்றதாக திரைத்துறை வட்டாரங்கள் தகவல்களை தெரிவிக்கின்றன.

விஜயின் மனைவியான சங்கீதாவிற்கு லண்டன் மற்றும் பிற நாடுகளில் சுமார் 400 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யிடம் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், பி.எம்.டபிள்.யூ எக்ஸ் 5, ஆடி ஏ8, ஃபோர்ட் முஸ்டாங் ஆகிய சொகுசு கார்கள் உள்ளன. விஜய் கடந்த 2023-2024ஆம் நிதியாண்டிற்கு 80 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாம் குரூஸின் புகழ்பெற்ற ஆடம்பரமான கடற்கரை மாளிகை போலவே விஜய்யின் சென்னை குடியிருப்பு, நீலாங்கரையின் மேல்தட்டு சுற்றுப்புறத்தில் உள்ள கேசுவரினா டிரைவில் அமைந்துள்ளது. இது நவீன கட்டிடக்கலை மற்றும் அழகிய வெள்ளை வெளிப்புறத்தை கொண்டுள்ளது. ஹவுசிங்.காம் இணையத்தின்படி, இந்த வீடு வங்காள விரிகுடாவின் அற்புதமான காட்சிகளை சுட்டிக்காட்டுகிறது. இந்த சொத்து மதிப்பு சுமார் 80 கோடி ஆகும்.

தனது கடலோர பங்களாவைத் தவிர, திருவள்ளூர், திருப்போரூர், திருமழிசை மற்றும் வண்டலூர் ஆகிய இடங்களில் விஜய்க்கு சொத்துக்கள் உள்ளன. மொத்த மதிப்பு சுமார் ரூ.100 கோடி ஆகும். ரியல் எஸ்டேட்டில் அவர் கணிசமான முதலீடுகளை செய்துள்ளார். விஜய் வைத்துள்ள சொகுசு கார்களில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ரூ.2.5 கோடி மதிப்புள்ள இந்த கார் சக்திவாய்ந்த 6.6 லிட்டர் ட்வின்-டர்போ வி12 எஞ்சினை கொண்டது.

மேலும், பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மற்றும் எக்ஸ்6, ஆடி ஏ8 எல், ரூ.65 லட்சம் மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் எவோக், ரூ.74 லட்சம் விலையில் ஃபோர்டு மஸ்டாங், வால்வோ எக்ஸ்சி90 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ ஆகியவை ஒவ்வொன்றும் ரூ.87 லட்சம் ஆக உள்ளன. இவையெல்லாம் அதிகாரப் பூர்வமான வகையில் வருமான வரிக்கு உட்பட்டு விஜய் தெரிவிக்கும் விவரங்கள் தான். உண்மையான சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிகளை தாண்டும் என்பதே நிலைமையாகும்.

மேலும் படிக்க:

சீரழிவுக் கலாச்சாரத்தால் கரூரில் 39 பேர் படுகொலை!

தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 38க்கும் மேற்பட்டோர் பலி! நடிகர் விஜய்-ஐ உடனடியாக கைது செய்!

இத்தகைய கோடீஸ்வரன் ஒருவன் மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களது வாழ்நிலையை மாற்றுவதற்காகவும் ஒரு விரல் புரட்சி நடத்தப் போவதாக எழுதி வைத்த ஸ்கிரிப்டை வைத்து அரைகுறையாக உளறித் தள்ளுவதையே, மக்களைப் பாதுகாக்க வந்த ஆபத்பாந்தவனை போல முன்வைக்கின்றன பார்ப்பன-நரித்தனமான ஊடகங்கள்.

மக்களின் வாழ்க்கையுடன் எந்த அளவிலும் ஒட்டுறவு இல்லாத, சினிமா நடிகன் ஒருவன் அரசியலுக்கு வருவதை பற்றி விமர்சன கண்ணோட்டத்தில் அணுகாமல், ’நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை’ என்று அரைகுறையாக மழுப்புவதும், தமிழகத்தில், ’இளைஞர்கள் மத்தியில் வெற்றிடம் நிலவுகிறது; அதனை விஜய் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்’ என்று தனது ’ஆய்வு மூளையை’ பயன்படுத்தி கட்டுரைகளை வெளியிடுவதும் தமிழகம், ’அரசியல் ஆபாசத்தின்’ உச்சத்திற்கே சென்று கொண்டுள்ளது.

கடைசியாக நடந்த கரூர்  கூட்டத்தில் தனது ரசிகர்களையும், தொண்டர்களையும் 7 மணி நேரத்திற்கு மேல் காக்க வைத்து, அதன் பிறகு ஆஜரான அல்லது திடீரென்று பிரசன்னமான விஜய்யை பார்ப்பதற்கு முண்டியடித்துக் கொண்டு ஓடிய கூட்டம் குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும் போட்டு மிதித்து கொண்டு ஏறி ஓடியதன் விளைவாக இதுவரை சுமார் 40 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

வழக்கமாக திமுக எதிர்ப்பு மனநிலையில் உள்ள சங்கி மனநிலை கொண்ட பத்திரிகையாளர்கள் மற்றும் கட்டுரையாளர்கள், முற்போக்கு பேசக்கூடிய போலிகள் அரசுதான் முதல் குற்றவாளி என்று வழக்கம்போல ஒரே பல்லவியை மீண்டும், மீண்டும் பாடுகின்றனர்.

விஜய் கூடுகின்ற கூட்டங்களில் பொது சொத்துக்கள் சேதமடைவது பற்றி ஏற்கனவே அவர் மீது வழக்குகள் பதியப்பட்டு இனி விஜய் நடத்துகின்ற கூட்டங்களுக்கு முன்னாள் பொது சொத்துக்கள் ஆகியவை சேதமாவதை தடுக்கின்ற வகையில் ஒரு டெபாசிட் தொகையை வாங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் திருச்சியில் நடந்த பொதுக் கூட்டத்தை ஒட்டி ஏற்கனவே நடந்த பொதுக்கூட்ட அனுபவங்களை வைத்து அனுமதி மறுத்த காவல்துறையை எதிர்த்து விஜய் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் ஆஜரான திருவாளர் ரங்காச்சாரி எழுப்பிய கேள்விகள் கீழ்க்கண்டவாறு செய்தியாக வந்துள்ளது.

”காவல்துறை தமிழக வெற்றிக் கழக நிகழ்வுகளுக்கு மட்டும் கடுமையான நிபந்தனைகளை விதிப்பதாக கட்சி புகார் அளித்தது. மூத்த வழக்கறிஞர் வி. ராகவாச்சாரி கூறுகையில், திருச்சியில் செப்டம்பர் 13 அன்று நடந்த விஜய் பேரணிக்கு காவல்துறை 23 நிபந்தனைகளை விதித்தது.

அதில் ஒரு நிபந்தனை கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நிகழ்வில் பங்கேற்கக்கூடாது என்பதாகும். தனது நிகழ்வுகளில் யாரையும் பங்கேற்பதை கட்சி எப்படி தடுக்க முடியும்” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

குறிப்பிட்ட நேரத்தில் அனுமதி வாங்கிவிட்டு அதன் தாண்டி அரை மணி நேரம் கூட பொதுக்கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்துவதற்கு தமிழக அரசு அது திமுகவாக இருந்தாலும் சரி! அதிமுகவாக இருந்தாலும் சரி! போராடுகின்ற புரட்சிகர-ஜனநாயக சக்திகளை அனுமதிப்பதில்லை. சமீபத்தில் செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாளை ஒட்டி மதுரையில் நடந்த ஆணவப்படுகொலைகளை கண்டித்த மக்கள் அதிகாரம் ஆர்பாட்டத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அனுமதியை மறுத்தது திமுகவின் காவல்துறை.

போலீஸ் மற்றும் அரசு எந்திரத்தின் உண்மையாக நடைமுறை அன்றாடம் அவர்களுடன் போராடிக் கொண்டிருக்கும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளுக்கு தெரியும். ஆனால் வீட்டில் இருந்தபடி, அரசு தான் அனைத்துக்கும் காரணம் என்று வேதம் ஓதுகின்ற சாத்தான்கள் 7 மணி நேரம் கழித்து ஏன் கூட்டத்திற்கு சென்றார். அதுவரை மக்கள் ஏன் காத்துக் கிடக்க வைக்கப்பட்டனர் இதற்கெல்லாம் அரசு ஏன் அனுமதி கொடுக்கின்றது என்று ஆத்திரப் படுவதில்லை.

மாறாக திமுகவை விமர்சிக்க வேண்டும் என்ற கோணத்தில் மட்டுமே சிந்திப்பதால் அரசே குற்றவாளி என்று கட்டுரையை எழுதி போட்டுவிட்டு தனது கடமை முடிந்தது என வீட்டுக்குள் தங்களை புதைத்துக் கொள்கிறார்கள்..

அரசு குற்றவாளி தான் என்று நாமும் சொல்கிறோம். ஏனென்றால் இப்படிப்பட்ட கட்டுப்பாடற்ற தறுதலை மற்றும் வெட்டிப் பயல்களின் கட்சிகளை (த.வெ.க) பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது; கூட்டம் கூடுவதற்கு அனுமதிப்பது; அவர்கள் கூட்டம் முடித்துவிட்டு சென்ற பிறகு அங்கு கொட்டப்படும் கழிவுகளை சுத்தம் செய்யும் பணியை தூய்மைப் பணியாளர்கள் மீது சுமையாக சுமத்துவது; பொது சொத்துகளை உடைத்தெறிந்த பிறகு அரசே அதனை சரி செய்வது; தற்போது கரூரில் நடிகன் விஜய்யால் படுகொலையான மக்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து பணத்தை கொடுப்பது ஆகியவை அனைத்தும் அரசு செய்கின்ற தவறு என்று நாங்களும் விமர்சிக்கின்றோம். இது திமுகவிற்கு மட்டுமல்ல! அதிமுக, மதிமுக அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகள் யார் ஆட்சிக்கு வந்தாலும் பொருந்தும்.

”ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா” என்று பாடினார் ரஜினி. அதுபோல 70 திரைப்படங்களின் மூலமாக பல்லாயிரம் கோடி சொத்து குவித்து வைத்துள்ள விஜய் தனது சொத்துக்களைப் பற்றி கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காகவும், ஈடி மற்றும் ஐடி ஆகியவற்றிலிருந்து தப்புவதற்காகவுமே தனியாக கட்சி துவங்கியுள்ளார். அதுவும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் பினாமி அரசியல் கும்பலாக. இந்த உண்மைக்கு மாறாக பொது மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியல் வாழ்க்கைக்கு வந்துள்ளதாக நாடகமாடுகின்ற விஜய் கரூரில் மக்கள் செத்து குவிந்துக் கொண்டிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்ட பிறகும்,, திருச்சியிலிருந்து 45 நிமிடங்களில் சென்னை பனையூரில் உள்ள சொகுசு பங்களாவிற்கு திரும்பியுள்ளார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளது.

தன்னுடைய ரசிகர்கள்-தொண்டர்கள் செத்து முடியும் போது கூட உடனிருந்து அதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வக்கில்லாத இத்தகைய கேடுகெட்ட இழிபிறவிகள் தான் தமிழகத்தின் இளைஞர்களின் எழுச்சி நாயகன் என்பதைப் போலவும், அரசியலில் திமுக மற்றும் திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக உருவாகி வருகின்ற, அரசியல் வெற்றிடத்தை நிரப்ப போகின்ற ஆதர்ச நாயகன் என்றும் சித்தரிப்பதை என்னவென்று காரித் துப்புவது?

”இளைதாக முள் மரம் கொய்க” என்கிறார் வள்ளுவர். இப்படிப்பட்ட கவர்ச்சிவாத, கொள்கை ஏதுமற்ற நடிகனும், பாசிசத்தை ஆதரித்து களமாடும் பினாமிக் கும்பலான விஜயின் பனையூர் பண்ணை வீட்டை முற்றுகையிடுவோம்! கரூர் படுகொலைகளுக்கு நீதி கேட்போம்.

◾தமிழ்ச்செல்வன்.

புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here