மக்கள் கல்வி கூட்டியக்கம்
கண்டன அறிக்கை
தமிழ்நாடு அரசு, தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட முன் வரைவை தற்போதைய சட்ட சபை கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளது. அரசின் இந்த முன்னெடுப்பை மக்கள் கல்வி கூட்டியக்கம் வன்மையாக கண்டிக்கிறது .
ஏற்கனவே தனியாருக்குப் பல்கலைக்கழகங்கள் திறக்க அனுமதி அளித்துவிட்டு, அதில் மேலும் சலுகைகள் வழங்கும் வரைவு திட்டம் இது. இது முற்றிலும் உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டமாகும்.
உயர்கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு தன்னை முற்றிலுமாக விடுவித்துக் கொள்ளும் நடவடிக்கையே இது. நடுவண் அரசின் தேசிய கல்விக் கொள்கையை இம்மி பிசகாமல் அப்படியே நிறைவேற்றும் முயற்சியே இது. இதன்படி தற்போது செயல்பட்டு வரும் எந்த ஒரு தனியார் கல்லூரியும் விருப்பப்பட்டால் பல்கலைக்கழகமாகத் தங்களை மாற்றிக் கொள்ளலாம். அப்படியாயின் அவர்கள் வைப்பது தான் சட்டம்.
ஆசிரியர்கள் அலுவலர்கள் ஊதிய விகிதம் முதல், கல்வித் திட்டங்கள் ஊடாக, மாணவர்கள் கட்டணம் மற்றும் சேர்க்கை முறை வரை எல்லாம் தனியார்களே தீர்மானிப்பார்கள்.
பல்கலைக்கழகம் தொடங்க குறைந்தது 100 ஏக்கர் நிலம் வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி 25 ஏக்கர் போதும் என்ற தளர்ச்சி யாருக்காக?
அரசு எதற்காக இந்த சட்ட திருத்தத்தைக் கொண்டு வருகிறது?
தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகங்களின் நிலைமை, அரசினுடைய கவனிப்பு இல்லாமல் சீர்கெட்டுப் போயிருக்கிறது.
அதை சரி செய்ய மனம் இல்லாமல் மௌனமாக அரசு வேடிக்கை ப் பார்த்து வருகிறது.
அதற்குப் பதிலாக, எதிர் நிலையாக தனியாருக்கு உயர்கல்வியை வாரி வழங்கும் நிலை ஏன் ஏற்படுகிறது? ஏதோ ஆராய்ச்சி மேம்பாடு, கல்வி மேம்பாடு போன்றவற்றின் காரணமாக இந்த முன் வரைவை வைக்கிறோம் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் வேலை.
இந்தச் சட்ட திருத்தம் வருங்கால ஏழை மாணவர்களைக் கடுமையாக பாதிக்கும். வருங்காலத்தில் உயர்கல்வி ஒரு வியாபார விலை பொருளாக மட்டுமே மாறும்.
இதில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கல்லூரிகள் புதிய பல்கலைகளாக செயல்படலாம் என்ற திட்டமும் முன் வைக்கப்படுகிறது.
உள்நாட்டிலேயே தரமான கல்வி வழங்க திறமை மிகுந்தவர்கள் இருக்கும் வேளையில் ஏன் இந்த வியாபார முன்னெடுப்பு?
தனியார் மருத்துவக் கல்லூரிகள் இன்னும் பிற தொழில் கல்வி கல்லூரிகள் மேலும் வளர்ச்சி அடைந்து தங்கள் வணிகத்தை பெருக்கிக் கொள்ளத்தான் இந்த சட்ட திருத்த முன் வரைவு உதவுவதாகத் தெரிகிறது.
தமிழகத்தின் அனைத்து மக்களும் இது குறித்து அக்கறை செலுத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுகிறோம்.
சட்டசபையில் உள்ள சட்டசபை உறுப்பினர்கள் தங்கள் கவனத்தை இந்தப் பிரச்சனையின் மீது செலுத்தி, இந்த சட்ட முன் வரைவை அரசு திரும்பப் பெற வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஒருங்கிணைப்பாளர்கள்
பேரா இரா.முரளி
பேரா வீ.அரசு
பேரா.ப.சிவகுமார்
கல்வியாளர் கண குறிஞ்சி
தக்க தருணத்தில் வெளியிடப்பட்ட எச்சரிக்கை சமூகப் பொறுப்பு வாய்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த அரசின் இக்கடுகெட்ட முன்மொழிவு மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டு அறிவிஜீவிகள் முற்போக்கு இயக்கங்கள் மக்களைத் திரட்டிப் போராட வேண்டும்.
பேசுவது ‘திராவிட மாடல்; சமூக நீதி’; நடைமுறையில் உழைக்கும் மக்களுக்கு விரோதமான செயல் திட்டங்கள். இது இழிவானது! கண்டிக்கத்தக்கது!