1947 ஆம் ஆண்டு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் போது காஷ்மீர் மக்கள் மத்தியில் ஐநாவின் மேற்பார்வையின் கீழ் சுதந்திரமான வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படும். அவ்வாறு நடத்தப்படும் வாக்கெடுப்பின் அடிப்படையில் காஷ்மீர் மக்கள் விரும்புகின்ற வகையில் காஷ்மீருக்கு உரிமைகள் வழங்கப்படும்.
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள காஷ்மீரி இனத்தைச் சேர்ந்த மக்கள் இந்தியாவுடன் தொடர்ந்து நீடிப்பதா அல்லது பாகிஸ்தானுடன் செல்வதா, இரண்டும் இல்லாமல் தனி நாடாக மாறுவதா என்ற கேள்விக்கான பதிலை சுதந்திர வாக்கெடுப்பு முடிந்த பிறகு தீர்மானித்துக் கொள்ளலாம் என்று இந்திய ஒன்றிய அரசாங்கம் வாக்குறுதி கொடுத்தது.
பிரிட்டன் காலனி ஆதிக்கத்திற்கு பிறகு இந்தியாவை ஒருங்கிணைத்த பட்டேல் காஷ்மீரின் மன்னனான ஹரிசிங் என்பவர் உடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தம் இதுதான். இன்று இதைப் பற்றிப் பேசினால் பிரிவினைவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது உறுதி என்பதுதான் நிலைமை.
இது ஒரு புறமிருக்க பாசிச பாஜகவின் கொள்கை லட்சியங்களில் ஒன்றான காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது; அதாவது அரசியலமைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவின் கீழ் காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகளை ரத்து செய்வது என்ற நோக்கத்தை 2019 ஆம் ஆண்டு நிறைவேற்றியது.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டவுடன் இந்தியாவில் உள்ள தேசங்கடந்த தரகு முதலாளிகளான அம்பானி, அதானி முதல் தனது மாநிலத்தின் எல்லையை கூடத் தாண்டாத ஆர்எஸ்எஸ் சங்கிகள் வரை அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் குதித்தனர். அதாவது, ”இனிமேல் காஷ்மீரில் இடம் வாங்கிக் கொள்ளலாம், இதுவரை இருந்த தடைகள் அகன்றது” என்றெல்லாம் தெருவில் இறங்கி குத்தாட்டம் போட்டனர்.
இதற்கு நிகராகவே காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டாக பிரிக்கப்பட்ட போது லடாக் பகுதியைச் சேர்ந்த மக்களும், ”இந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்தும், லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்குவோம், ஆறாவது அட்டவணைப்படி உரிமைகள் வழங்கப்படும்” என்று முன்வைத்த ஆர்எஸ்எஸ் பாஜகவின் சதி திட்டத்தை புரிந்து கொள்ளாமல் ஆதரித்து நின்றனர்.
இந்த இடத்தில் காஷ்மீர் மக்களின் அனுபவத்தை மீண்டும் நினைவுபடுத்துகின்றோம். மன்னன் ஹரி சிங்குடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய ஒன்றிய அரசாங்கமானது, அதாவது காங்கிரஸ் அரசாங்கமானது காஷ்மீர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின் படி சுதந்திர வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவில்லை.
மாறாக காஷ்மீரில் இருந்து கிடைத்த சுற்றுலா வருமானத்தையும், காஷ்மீரில் கிடைக்கின்ற இயற்கை வளங்கள், மூலிகைகள், பழங்கள் ஆகியவற்றை அவர்களிடம் இருந்து சுரண்டி இந்திய ஒன்றிய அரசாங்கம் தனது வருவாய்க்கு வழி தேடியது.
தனக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்ற காரணத்திற்காகவே இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் பித்தலாட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாத, காஷ்மீரி இன மக்கள் காஷ்மீரின் சுயநிர்ணய உரிமைக்காக போராடத் துவங்கினர். இதற்காக அவர்கள் 35 ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்து அதை நிறைவேறவில்லை என்ற காரணத்தினாலேயே காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் துவங்கியது.
படிக்க:
♦ மாநில அந்தஸ்து கோரிப் போராடும் லடாக்! ஒடுக்கும் பாசிச பாஜக!
♦ பாஜக அலுவலகம் பற்றி எரிகிறது! லடாக்கில் நடப்பது என்ன?
அவ்வாறு நடத்தப்பட்ட போராட்டங்கள் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டது. வரலாற்றிலேயே எங்கும் நிகழாத அளவிற்கு உள்நாட்டு மக்களுக்கு எதிராக ராணுவம் தாழ்நிலை போரை நடத்தி வந்தது. ஏறக்குறைய 6 முதல் 7 லட்சம் ராணுவ வீரர்கள் காஷ்மீர் முழுவதும் குவிந்துள்ளனர். காஷ்மீர் முழுமையாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இன்றும் தனது ’சுதந்திரத்தை’ அனுபவித்துக் கொண்டுள்ளது.
இவ்வளவு வரலாற்று உண்மைகளையும் தெரிந்த பிறகும் லடாக்கில் உள்ள திபெத்திய வம்சாவளியினரான பௌத்த மற்றும் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த லடாக்கியர்கள் ஏதோ சொர்க்கம் கிடைத்துவிடும் என்பதைப் போல பாசிச ஆர்எஸ்எஸ் பாஜகவின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்தனர். அதுவும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஐந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவே தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று புரிந்து கொள்ளத் துவங்கி விட்டனர். ஆனால் காலம் கடந்து விட்டது. பார்ப்பன இந்திய தேசிய ஒடுக்குமுறையின் கீழ்; இராணுவ பாதுகாப்பின் கீழ் அடக்கப்பட்டுள்ளனர்.
சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதற்கு முன்பு, லடாக் மக்களுக்கு அவர்களின் பழங்குடி அந்தஸ்து காரணமாக பாதுகாப்பு இருந்தது, இப்போது அதுவும் இல்லை. இந்த நிலையில் லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து கோரியும், அரசியலமைப்பு சட்டம் அட்டவணை 6-ல் லடாக்கை இணைக்கக் கோரியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் செப்டம்பர் மாத துவக்கத்திலிருந்து இரண்டு வார காலமாக உண்ணாவிரதம் இருந்தார்.
இவ்வாறு இவர் உண்ணாவிரதம் இருப்பது, போராட்டங்களை ஒருங்கிணைப்பது இது முதல் முறையல்ல; ஏற்கனவே 2024 பிப்ரவரியிலும் இதுபோன்று உண்ணாவிரதப் போராட்டங்களும், மக்களை ஒருங்கிணைக்க ஆர்ப்பாட்டங்களும் லடாக்கில் நடந்துள்ளது.
தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் லடாக் மக்களிடம் சோனம் வாங்சுக்கின் சமீபத்திய உண்ணாவிரதம் பெரிய ஆதரவை பெற்றது. இதைத் தொடர்ந்து 24.09.2025 அன்று, ”அபெக்ஸ் பாடி லே” (ABL) மற்றும் ”கார்கில் ஜனநாயகக் கூட்டணி” (KDA) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது. இதுதான் மாபெரும் மக்கள் போராட்டமாக வெடித்துள்ளது. அது இந்திய ஒன்றிய அரசாங்கத்திற்கு எதிரான கலகமாக வெடித்தது.
குறிப்பாக ஆர்எஸ்எஸ் அலுவலகங்கள் மற்றும் லடாக் தன்னாட்சி பற்றி பேசுகின்ற அரசு அலுவலகங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் மீது போலீசு நடத்திய தாக்குதலில் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டு 60 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். போராட்டத்தை ஒருங்கிணைத்த சோனம் வாங்சுக் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
இதையெல்லாம் பின்னிருந்து தூண்டி விட்டதாகத்தான் சோனம் வாங்சுக் மீது சட்டம் பாய்ந்துள்ளது. இத்தனைக்கும் சோனம் வாங்சுக் உறுதியாக பாசிச பாஜக ஆர்எஸ்எஸ் செய்துள்ள மோசடிகளையும், சதித்தனங்களையும் தொடர்ந்து எதிர்த்து வருபவர் அல்ல.
உதாரணமாக லடாக் மக்களின் போராட்டம் தீவிரமடைந்த காரணத்தினால் ஐந்து மாவட்டங்கள் புதிதாக இணைக்கப்பட்ட போது அதனை ஆதரித்து மோடி மற்றும் அமித்ஷாவிற்கு நன்றி தெரிவித்து செய்தி வெளியிட்டார்.
அதுமட்டுமின்றி லடாக தலைநகர்களில் ஒன்றான லேயில் உள்ள விமான நிலையம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், லடாக் பிரதேசமானது கார்பன் அல்லாத, ”நியூட்ரல் கார்பன்” பிரதேசமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று இந்திய ஒன்றிய அரசாங்கம் உடனடியாக பதில் கொடுத்தது என்றவுடனே மனக் கிளர்ச்சியடைந்து மோடி அரசாங்கத்திற்கு வெண்சாமரம் வீசினார்.
மோடி அறிவித்துள்ள, ’சுற்றுச்சூழல் மிஷன் வைப்’ என்ற திட்டத்தை ஆதரித்த்து மட்டுமின்றி, இமயமலை பனிப்பாறை பாதுகாப்பை மோடி முன்னணியில் நின்று செய்ய வேண்டும் என்ற அளவிற்கு புளகாங்கிதம் அடைந்த நபர் தான் இந்த சோனம் வாங்சுக்.
இவ்வாறு பல்வேறு காலகட்டங்களில் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு ஜால்ரா போட்ட போதிலும், தற்போது லடாக்கில் உள்ள இமயமலைப் பிரதேசங்களை உடைத்து கனிம சுரங்கங்களை அமைப்பதற்கு ஆர்எஸ்எஸ் பாஜக திட்டமிட்டுள்ள சூழலில், அதனை எதிர்த்து மீண்டும் போராட்டம் நடத்தியுள்ளார் என்றும், வன்முறை வெறியாட்டத்தை தூண்டியுள்ளார் என்றும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் அவரது கைதுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளது. குறிப்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர் அமைப்பு சார்பாக சோனம் வாங்சுக்கை விடுதலை செய்யக் கோரி போராட்டங்கள் முன்னிலை பெறத் துவங்கியுள்ளது. அவரது நடைமுறையில் சில சிக்கல்கள் இருந்த போதிலும், பாசிச அடக்குமுறைகளுக்கு எதிராகவும் லடாக் மக்களின் தனி மாநில உரிமை கோரிய போராட்டங்களுக்கு ஆதரவாகவும் துணை நின்றவர் என்ற காரணத்தினால் அவரது விடுதலைக்காக நாமும் குரல் கொடுப்போம்.
அதே சமயத்தில் பாசிச மோடி அரசை எதிர்த்து போராடாவிட்டால், தமிழகத்திற்கும் இதுதான் கதி என்று சோனம் வாங்சுக் கைது வர்க்க அரசியலை கற்றுக் கொடுக்கும் என்று நம்புவோம்.
◾மாசாணம்