சில நாட்களுக்கு முன் இந்திய தேர்தல் ஆணையத்தின் துணையுடன் “வாக்கு திருட்டு” நடந்துள்ளது என்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி காங்கிரஸ் கட்சி திரட்டிய ஆதாரங்களை வெளியிட்ட நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று INDIA கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 300 பேருடன் பேரணி செல்ல முற்பட்டு கைதாகினர். தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் குறித்து பலரும் ஆய்வுகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். மோடி அரசு மற்ற துறைகளைக் கையாண்டது போலவே தேர்தல் ஆணையத்தையும் தனது அடியாளாக மாற்றும் முயற்சியைத் திட்டமிட்டு செய்து வந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதி அங்கம் வகிப்பர் என்ற நடைமுறை இருந்தது. மோடியின் ஆட்சியில் அந்த பழைய நடைமுறையானது மாற்றப்பட்டுள்ளது. அதில் உச்ச நீதிமன்ற நீதிபதி இந்தக் குழுவில் இடம் பெறுவது மறுக்கப்பட்டு பிரதமர், பிரதமரால் தேர்ந்தெடுக்கப்படும் மத்திய அமைச்சர் ஒருவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய குழு தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் என்று மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் மூலம் மோடி அல்லது ஆர்எஸ்எஸ் விரும்பும் நபர்கள் தான் தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நடுநிலமை, ஜனநாயகம் என்பது ஆர்.எஸ்.எஸ் காவி கும்பலால் காலில் போட்டு நசுக்கப்பட்டுள்ளது.
இப்படி ஆர்எஸ்எஸ் – பாஜக காவி பாசிஸ்டுகளால் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களை உறுப்பினர்களாக கொண்ட தேர்தல் ஆணையம் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் நலன்களுக்காகவே வேலை செய்யும் என்பது பல வழிகளில் இப்பொழுது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
தேர்தல்களில் முறைகேடுகள் நடப்பது என்பது காலம் காலமாக நடப்பதுதான் என்றாலும் இதற்கு முன்பு நடந்த முறைகேடுகளுக்கும் 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு நடக்கும் தேர்தல் முறைகேடுகளுக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. அதை இப்பொழுது பொது அறிவும், அறிவு நாணயமும் உள்ள அனைவரும் ஒப்புக் கொள்வர்.
“பாஜகவின் ஆட்சிக்கு முன்பும் பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பின்பும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் வேறுபாடு இல்லை. தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் எப்பொழுதும் போல்தான் தொடர்ந்து கொண்டிருக்கின்றன” என்று நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகளும் கூட கீழ்க்கண்ட விசயங்களை நேர்மையாக பரிசீலித்தால் அவர்களும் மேற்கண்ட முடிவுக்கு வருவார்கள் என்பது உறுதி.
தேர்தல் ஆணையத்தின் அயோக்கியத்தனங்கள்:
வாக்காளர் பட்டியலை மக்களின் பார்வைக்கு – பரிசீலனைக்கு பொதுவெளியில் வெளியிடுவது இந்தியத் தேர்தல்களில் வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்வு. இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் உள்ள தவறான சேர்த்தல் நீக்கல்களை மக்களும் தேர்தல் கட்சிகளும் கண்டறிந்து தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிப்பதும் அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்தத் தவறை தேர்தல் ஆணையம் சரி செய்வது என்பதும் வழக்கமான ஒன்றுதான்.
இந்த நிலையில் வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் வடிவில் கணினி மூலம் சரிபார்க்கும் வகையில்(Machine – readable format) வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றன. இப்படி வெளியிடுவது தேர்தல் ஜனநாயகத்திற்கோ, இந்தியாவின் பாதுகாப்பிற்கோ, அரசு நிர்வாகத்திற்கோ எந்த வகையிலும் பாதமாக அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை.
ஆனால் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை கணினி மூலம் சரிபார்க்கும் வகையில் கொடுக்கவே முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இப்படி கொடுத்து விட்டால் வாக்காளர் பட்டியலில் செய்யப்படும் தில்லுமுல்லுகளை மக்களும் எதிர்க்கட்சிகளும் கண்டுபிடித்து விடுவார்கள் என்பது தான் இப்படி மறுப்பதற்கு காரணம்.

உதாரணமாக, மகாராஷ்டிராவில் 2019 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை மொத்தம் சுமார் 32 லட்சம் பேர் புதிதாக வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அடுத்த ஐந்து மாதங்களிலேயே சுமார் 39 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஐந்து மாதத்திற்குள் இந்த அளவிற்கு புதிய வாக்காளர்கள் அந்த மாநிலத்தில் உருவாகி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையில் தேர்தல் ஆணையம்தான் போலியாக வாக்காளர்களை சேர்த்து உள்ளது என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் உரிய பதில் அளிக்கவே இல்லை.
மேலும், தேர்தல் ஆணையம் 2024ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள மகாராஷ்டிராவின் வாக்காளர் பட்டியலில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 9.70 கோடி பேர். ஆனால் அந்த மாநிலத்தில், அரசாங்கப் புள்ளிவிவரப்படி, ஓட்டு போடும் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களின் மொத்தம் எண்ணிக்கை 9.54 கோடிப் பேர் மட்டுமே. இப்படி, மகாராஷ்டிரா மக்கள் தொகையில் இல்லாத 16 லட்சம் பேருக்கு வாக்குரிமை கொடுத்தால் அப்பட்டமாக மாட்டிக் கொள்வோம் என்ற உறுத்தல் எதுவும் இன்றி தேர்தல் ஆணையம் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் செய்திருக்கிறது. இதைப் பற்றி பல தரப்பில் இருந்தும் கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க மறுக்கிறது.
போலி வாக்காளர்களை வகைத்தொகையின்றி இலட்சக்கணக்கில் சேர்ப்பது போன்ற இந்த அயோக்கியத்தனங்கள் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் டிஜிட்டல் வடிவிலான கணினி மூலம் சரிபார்க்கத் தக்க வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது.
அதேபோல, சென்ற நாடாளுமன்றத் தேர்தலில், நாடு முழுவதும் மாலை 5 மணிக்கு மேல் பல லட்சக்கணக்கானவர்கள் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் மாபெரும் பொய்யை கூறியது. அப்படி வாக்களித்திருக்க வாய்ப்பே இல்லை என்ற நிலையில் அங்கு வாக்களிக்க வந்தவர்களின் காணொளிக் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவுகளை கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால் தேர்தல் ஆணையம் கொடுக்க மறுத்துவிட்டது.
படிக்க:
இந்த நிலையில், வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த வாக்காளர்களின் காணொளி பதிவுகள் அடங்கிய சிசிடிவி காணொளி காட்சிகளை, 1961 ஆண்டு தேர்தல் சட்ட விதிகளின்படி, ஆறு வாரத்திற்குள் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று டிசம்பர் 2024ல் விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
‘அந்த காணொளி காட்சிகளை யாருக்கும் வழங்க வேண்டியது இல்லை’ என்று இந்த தீர்ப்பு வந்த ஒரு சில நாட்களிலேயே பாசிச பாஜக அரசு அந்தச் சட்டத்தையே திருத்தம் செய்துவிட்டது.
இந்திய தேர்தல் ஆணையம் அதற்கும் ஒரு படி மேலாகச் சென்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 45 நாட்களுக்குப் பிறகு இந்த காணொளி காட்சிகள், புகைப்படங்கள் எதையும் வைத்திருக்கத் தேவையில்லை அனைத்தையும் அழித்து விட வேண்டும் என்று தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த காணொளி காட்சிகளை எதிர்க்கட்சிகளிடம் கொடுத்து விட்டால் மாலை 5 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் வாக்களித்தார்கள் என்று தேர்தல் ஆணையம் கூறும் அப்பட்டமான பொய் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவிடும் என்பதால் தான் தேர்தல் ஆணையம் காணொளிக் காட்சிகளை கொடுக்க முடியாது என்று மறுக்கிறது.
தேர்தலில் மொத்தம் எத்தனை வாக்காளர்கள் வாக்களித்தனர் என்ற விவரத்தை வார கணக்கில் வெளியிடாமல் இழுத்தடிப்பதன் மூலம் ஏராளமான போலி வாக்குகளை வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையம் சேர்த்துக் கொள்ளும் அயோக்கியத்தனத்தையும் செய்து வருகிறது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அயோக்கியத்தனங்களை பற்றிய பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அதன் சமீபத்திய வெளிப்பாடாக பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.
போலி வாக்காளர்களை சேர்ப்பது மூலமாகத்தான் தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு செய்து வருகிறது என்று பலரும் நம்பிக் கொண்டிருந்த நிலையில் உண்மையான வாக்காளர்களை நீக்குவதன் மூலமாகக் கூட தேர்தல்களில் தில்லுமுல்லுகள் செய்து பாஜகவை வெற்றி பெற செய்ய முடியும் என்று தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
இப்படி தேர்தல் ஆணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்தல் தில்லுமுல்லுகள், அயோக்கியத்தனங்களை பற்றி ஏராளமான விவரங்களை கூறிக் கொண்டே போக முடியும். நாம் முத்தாய்ப்பாக ஒன்றை சுட்டிக்காட்டுவதுடன் நிறுத்திக் கொள்வோம்.
படிக்க:
பீகார் தேர்தல்: போலி ஜனநாயகத்தை கைவிட்டு பாசிச வழிமுறைக்கு மாறியுள்ள ’இந்திய ஜனநாயகம்’.
பெங்களூர் மத்திய பாராளுமன்ற தொகுதியில் 1,00,250 போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் சேர்த்தது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளார். இதற்கும் தேர்தல் ஆணையம் பதில் சொல்ல மறுக்கிறது. மாறாக ராகுல் காந்தியை மிரட்டுகிறது.
இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் ஆதாரப்பூர்வமாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை நேர்மை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு ஊடக வெளிச்சத்தில், உலகத்தினர் பார்வையில் படும்படி, நிர்வாணமாக நிற்கவைக்கப்பட்ட பின்னரும் கூட எதுவுமே நடக்காதது போல திமிராக பேசிக் கொண்டிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.
இவ்வளவு அயோக்கியத்தனங்களை தேர்தல் ஆணையமே முன் நின்று செய்து வரும் நிலையில் தேர்தல்களில் நின்று பாசிச பாஜகவை தோற்கடிப்பது என்பது சாத்தியமானது அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்.
தமிழகம் போன்ற விழிப்புணர்வு பெற்ற மாநிலங்களில் கூட பாஜக தனது வாக்கு சதவீதத்தை தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வருவது என்பதும் இப்படிப்பட்ட தில்லுமுல்லுகள் மூலமாக நடந்தவையாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.
தமிழகத்தில் இப்பொழுது வெற்றி வாகை சூட முடியாத நிலையில் பாசிச பாஜக இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், தற்போதுள்ள முறையிலேயே தேர்தல்களை நடத்த அனுமதித்தால் தேர்தல் ஆணையத்தின் மூலமாக தேர்தலில் தில்லுமுல்லுகள் செய்து எதிர்காலத்தில் தமிழகத்திலும் கூட பாஜக தனது ஆட்சியை அமைப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை தடுப்பது எப்படி?
இந்தியா முழுமைக்கும் உள்ள வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் வடிவில் கணினி மூலம் சரிபார்க்கத் தக்க வாக்காளர் பட்டியலாக வெளியிடப்பட வேண்டும். இதன் மூலம்தான் போலி வாக்காளர்களை இனம் கண்டு நீக்குவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
தேர்தல் மையங்களில் மக்கள் வரிசையில் நின்று வாக்களிக்கும் காணொளி காட்சிகளை வேட்பாளர்களும் பொதுமக்களும் பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துக் கொள்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். இதன் மூலம் தான் கள்ள ஓட்டு போட்டவர்களை மக்கள், எதிர்க்கட்சியினர் கண்டறிந்து அவர்களை பிடிக்க முடியும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லுகள் செய்து வெற்றி பெறுவதற்கான வழிகள் அடைக்கப்பட வேண்டும். இதற்கு தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும்.
சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது உதகை போன்ற இடங்களில் வாக்குப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கல்லூரியில் அவ்வப்பொழுது கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் போய் உள்ளன. இந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். இது போன்ற பிரச்சனைகள் தடுக்கப்பட வேண்டும்.
எனவே, வாக்குப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளில் வேட்பாளர்களின் சார்பில் அவர்களின் சொந்த பொறுப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அதை அவர்கள் நேரடியாக கண்காணித்துக் கொள்ளவும் காணொளி காட்சிகளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வேட்பாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
இவைகள் நிறைவேற்றப்படாமல் நடத்தப்படும் தேர்தல்களில் பங்கேற்பது என்பது புதைகுழி என்று தெரிந்தும் தானே போய் விழுந்து புதைந்து போவதற்கு சமம் என்பதை எதிர்க்கட்சிகளும் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் உணர வேண்டும்.
எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பது தீர்வாகுமா?
அதேசமயம் தேர்தல்களின் தில்லுமுல்லுகள் நடக்கின்றன; அந்தத் தில்லுமுல்லுகள் தடுத்து நிறுத்தப்படும் வரை தேர்தலில் பங்கேற்கப் போவதில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறினால் அதை பாஜக தனக்கு சாதகமாக்கி கொள்ளும்.
அதாவது இப்படி தேர்தல் புறக்கணிப்பு செய்தால் இந்தியத் தேர்தல்கள் நேர்மையாக நடப்பதாகவும் அதனால் எதிர்க்கட்சிகளால் வெல்ல முடியாது போய்விடுகின்றன என்றும் எனவே, இதற்கு பயந்து போய் எதிர்க்கட்சிகள் தேர்தல்களில் போட்டியிடாமல் தவிர்த்து விடுகின்றன என்றும் பாஜக பொய் பிரச்சாரங்கள் செய்து மக்களை ஏமாற்றுவதற்கான வாய்ப்புகளே அதிகம் என்பதை அனைவரும் உணர வேண்டும்!
மக்கள் கிளர்ச்சியே ஒரே வழி!
எனவே இப்பொழுது முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கு, எதிர்க்கட்சிகளுக்கு ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது.
அடுத்த தேர்தல் அறிவிப்பு வருவதற்குள் நாம் மேலே குறிப்பிட்டுள்ளபடி தேர்தல் நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை கட்டாயம் செய்தே ஆக வேண்டும். இதை தேர்தல் ஆணையம் தானாக செய்யப் போவதில்லை.
இந்தியா முழுமைக்கும் மக்கள் எழுச்சியை ஏற்படுத்துவதன் மூலமாக, அதாவது, தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், வருட கணக்கில் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்திய வீரம் செறிந்த போராட்டம் போன்ற போராட்டத்தை இந்தியா முழுமைக்கும் தொடர்ந்து நடத்துவதன் மூலமாக தேர்தல் ஆணையத்தையும் பாசிச பாஜகவையும் அடிபணிய வைத்து தேர்தல் நடைமுறைகளில் நாம் கூறும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
களத்திற்கு வரும் ஆர்எஸ்எஸ் குண்டர் படை!
இப்படிப்பட்ட மாற்றங்கள் வந்த பிறகு நடத்தப்படும் தேர்தல்களில் பாஜக மாபெரும் தோல்வியடையும் என்பது உறுதி. இதன் மூலமாகத்தான் பாசிச பாஜகவை தேர்தலில் வீழ்த்திட முடியும். அப்படி தேர்தலில் வீழ்த்தினாலும் கூட அவர்களை ஒன்றிய அரசு அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவது என்பது அவ்வளவு சுலபமானதாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.
ஆர்எஸ்எஸ் – பாஜக விடம் உள்ள பயிற்சி பெற்ற குண்டர் படையை வைத்து அராஜகங்களை கட்டவிழ்த்து விடுவதன் மூலமாக பாசிச பாஜக பதவியில் நீடித்திடவே முயற்சிக்கும். இந்தப் பயிற்சி பெற்ற குண்டர் படையையும் எதிர்த்து மக்கள் படை முறியடிக்கும் பொழுதுதான் பாஜகவை ஒன்றிய அரசு பதவியில் இருந்து அகற்ற முடியும் என்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும்.
மீதமிருக்கும் ஜனநாயகத்தின் எச்சங்களை காக்கும் போராட்டத்தில் முற்போக்கு, ஜனநாயக சக்திகள் அனைவரும் ஓர் அணியில் திரண்டு ஐக்கியப்பட்டு மக்களிடையே பிரச்சாரம் செய்து மக்களுக்கு பாசிசத்தை பற்றி விழிப்புணர்வு ஊடுவதே இதற்கு உள்ள ஒரே வழி.
- குமரன்
இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் மீது நம்பிக்கை வைக்காமல் பாஜக மீது நம்பிக்கை வைத்து தேர்தலை நடத்தி இருக்கிறது.
மக்கள் இந்த தேர்தல் ஜனநாயகத்தை இனியும் நம்புவது எந்தவித பலனும் இல்லை என்பதை உணர்த்துகிறது.
மக்கள் போராட்டங்கள் மூலமாக அதிகார மாற்றங்கள் நிகழ்ந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தை இந்த செயல்பாடு கொண்டு வந்திருக்கிறது.
அரசின் அனைத்து பிரிவுகளும் ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பல்களுக்கு என்று நிரூபணம் ஆகிவிட்டது.
மக்கள் எழுச்சி மூலமாக இதை தகர்த்தெறிய வேண்டும்.