முந்தயை பாகங்கள் படிக்க
திரை நாயகன் விஜய் கட்சி தொடங்கியது முதல் 41 உயிர்கள் காவு கொடுத்தது வரை!
41 பேர் மரணமும், ஒரே புள்ளியில் இணைந்த துரோகக் கும்பலும்!
கரூர் த.வெ.க கூட்டத்தில் 41 பேர் இறந்து 10 நாட்களுக்கு மேலான நிலையில், நடிகர் விஜய் பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ கால் பேசியுள்ளார். கரூர் செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறையிடம் முறையிட்டுள்ளார். கரூர் கூட்டம் நடந்த செப்டம்பர் 27 இரவு முதல் இன்று வரை தவெக கட்சியினரும், அதன் தலைவர் விஜயும் நடந்து வரும் விதம் அருவருக்கத்தக்கது.
கரூருக்கு முன் திருச்சி, நாகப்பட்டிணம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தவெக நடத்திய பரப்புரை கூட்டங்களில் நடந்தது போலவே, சாலையின் ஓரம் நின்ற மரத்தின் மீது எண்ணற்றோர் ஏறி நிற்கவும், மின் கம்பங்களில் ஏறி நிற்கவும், கடைகளின் முன் போடப்பட்டிருந்த கிடுகு கொட்டைகளைப் பிய்த்தெறிந்து மேலே சென்று, அங்கிருந்து குரங்குகள் தாவுவது போல் அடுத்தடுத்த தகரக் கொட்டைகளின் மீதேறி நின்றார்கள். சில கடைகளை பூட்டை உடைத்துக் கூட உள்ளே நுழைந்து இருக்கிறார்கள். யாரிடமும் அனுமதி பெறாமல் மாடிப்படிகளில் ஏறி வீடுகளில் மொட்டை மாடிக்குச் சென்று தண்ணீர் தொட்டி உட்பட அனைத்திலும் ஏறி நின்று கொண்டார்கள்.
அப்பொழுதுதான் மரத்தின் கிளை ஒன்று கனம் தாங்க முடியாமல் முறிந்து கீழே விழ கீழே உள்ளவர்கள், பெண்கள் குழந்தைகள் கடுமையாக அடிபட்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் தகரக் கொட்டகையும் கனம் தாங்காமல் சரிந்து அதன் மேலிருந்தவர்களும், கீழிருந்தவர்களும் கடுமையாக அடிபட்டு இருக்கிறார்கள்.
* சுமார் 7:10 மணிக்கு விஜய் பேச்சைத் துவங்குகின்ற பொழுது, மக்கள் கூட்டம் பேச்சை கேட்கக் கூடிய நிலையில் இல்லை; மாறாக பாதிப்பிற்கு உள்ளானவர்கள் மிகப்பெரும் ஆபத்தில் மாட்டிக் கொண்டு கூக்குரல் இடுகிறார்கள்; செருப்பை தூக்கி எறிந்து கவனத்தை ஈர்க்கிறார்கள்.
*காயம் அடைந்தோரை, மயக்க முற்றோரை, செத்து மடிந்தோரை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வந்த ஆம்புலன்ஸ்களையும் தடுத்து பிரச்சினை செய்திருக்கின்றனர் தவெக ‘தொண்டர்கள்’.
அதே நேரத்தில் தண்ணீர், தண்ணீர் என்று பல திசைகளில் இருந்தும் கூக்குரல் எழும்பியதும் விஜயும், ஆதவ் அர்ஜூனாவும் பிச்சைக்காரர்களுக்கு தூக்கி வீசுவது போல தண்ணீர் பாட்டில்கள் சிலவற்றை தூக்கி வீசுகிறார்கள். அதனைப் பற்றுவதற்கும் கூட்டம் அலைமோதி நசுங்கி செத்தது.
*கழிவுநீர் கால்வாய் மீது மூடப்பட்டிருந்த ஸ்லாப்புகள் மீது எண்ணற்றோர் ஏறி நின்றதால் அந்த ஸ்லாப்புக்களும் உடைந்து விழுந்து கால்வாய்க்குள் விழுந்தவர்களும் இறந்திருக்கிறார்கள்.
*நிகழ்ச்சிக்கான ஜென்ரேட்டர் வைக்கப்பட்டிருந்த இடத்தில் மக்கள் கூட்டம் உடைத்துக் கொண்டு நுழைந்ததில் ஜெனரேட்டர் நிறுத்தப்படுகிறது. அதில் இணைக்கப்பட்டு இருந்து மின் விளக்குகள் அணைந்துள்ளன.
*இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு எடப்பாடி நடத்திய கூட்டத்தில் 15000 பேர் வரை கூட்டப்பட்டு எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் முடிந்துள்ளது.
*ஆனால் இந்த தறி கெட்ட கூட்டம், 10000 பேர் மட்டுமே பங்கேற்பர் எனக் காவல்துறைக்கு எழுதிக் கொடுத்துவிட்டு, கூட்டம் முடிந்த நாமக்கல் முதல் அண்டை மாவட்டங்களில் இருந்தும் வரவழைக்கச் செய்து 25 ஆயிரம் முதல் 27 ஆயிரம் பேர் வரை கூட்டத்தை கூட்டிவிட்டது என்பது மாபெரும் குறைபாடு. மேலும், கூட்டம் கட்டுக்கு அடங்காத இருப்பதை அறிந்த காவல்துறை அதிகாரிகள் விஜய் பரப்புரை வாகனத்தை திட்டமிட்ட இடத்துக்கு 500 மீ முன்பே நிறுத்தி பேச கூறியிருக்கின்றனர். அதை தவெக நிர்வாகிகள் ஏற்க மறுத்துள்ளனர்.
*ஆக, ஆபத்தான விளைவுகள் நேர்ந்து விட்டன என்பதை அறிந்து கொண்டவுடன் Z பிரிவு காவல் துறையினர், பவுன்சர்கள் ஆலோசனையின்படி கெட்டிக்காரத் தனமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து, திருச்சி விமான நிலையத்தை நோக்கி விரைந்து சென்றுவிட்டார் விஜய். அவர் திருச்சி நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கையிலேயே மருத்துவமனைகளில் 30 பேர் செத்து மடிந்து விட்டனர் என்ற தகவலும் அவர்களுக்கும் கிடைக்கப்பெற்று விட்டது.
*மக்கள் செத்து மடிந்த செய்தியையும், விஜய் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருக்கின்ற செய்தியையும் அறிந்து கொண்ட திருச்சி ஊடகவியலாளர்கள் விமான நிலையத்தில் காத்துக் கிடந்தார்கள்.
*விமான நிலையத்தில் பவுன்சர்கள் புடை சூழ காரை விட்டு இறங்கி நடக்க ஆரம்பிக்கின்ற பொழுது ஊடகவியலாளர்கள் சார் சார் கரூரில் 30 பேர் செத்துவிட்டார்களாம்: நில்லுங்கள்.. நில்லுங்கள் என்று ஓங்கிக் குரல் கொடுத்தும் கூட காது கேளாதது போல விமான நிலையத்திற்குள் புகுந்து தப்பிச்சென்று சென்னை ஏர்போர்ட் வந்தடைந்தார்.
அங்கேயிருந்து பனையூர் பங்களாவிற்கு புறப்படுகையில் அங்கேயும் ஊடகவியலாளர்கள் திருச்சியில் போன்றே சார் சார் என்று கதறியும் அங்கும் பதிலளிக்கவில்லை. ஆக கட்சி ஆரம்பித்ததிலிருந்தே ஊடகவியலாளர்களை சந்திப்பதையே முற்றிலும் தவிர்த்து வந்த விஜய் தன் கூட்டத்தில் கோரச் சாவுகள் ஏற்பட்டிருக்கின்ற பொழுதும் அதையே செய்துள்ளார்.
*விஜய் சென்னை சென்று கொண்டிருக்கையில், கரூர் சம்பவம் குறித்து அறிந்தவுடன் தலைமைச் செயலாளர் உள்பட காவல்துறை உயர்மட்ட அதிகாரிகள் முக்கிய அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து அதிகாரிகளுக்கு துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு விட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதலானோரை ஸ்பாட்டுக்கு அனுப்பி வைத்ததோடு, அண்டை மாவட்ட எண்ணற்ற அரசு மருத்துவர்களையும் கரூர் மருத்துவமனைக்கு உரிய சிகிச்சைக்காக வரவழைக்கப் பட உத்தரவிட்டார். அவரும் ஒரு மணிக்கு விமானத்தை பிடித்து திருச்சி சென்று அங்கிருந்து தரை மார்க்கமாக செப்.28 காலை 3 மணிக்கெல்லாம் கரூர் மருத்துவமனை வந்தடைந்தார்.
*ஆனால் அதற்கு முன்பாகவே 39 பேர் செத்து மடிந்திருந்தனர். 80-பேர் வரை காயங்களுடனும் ஆபத்தான நிலையிலும் அரசு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தனர்.
*ஏறத்தாழ தமிழகத்தின் அனைத்து முக்கிய கட்சி தலைவர்களும் சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
* இறந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், காயமுற்றோருக்கு தலா ரூ.1 லட்சமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கி உத்தரவிட்டார்.
*ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். எடப்பாடி பழனிச்சாமி கூறியது போல (இதைக் கூற எடப்பாடிக்கு முற்றிலும் கடுகுளவு தகுதி இல்லை என்றாலும்) இந்த விசாரணை கமிஷன் ‘ஐ வாஷ் கமிஷனே!’ கூடுமானவரை விசாரணை கமிஷன் என்றாலே பற்றி எறியும் பிரச்சனைகளை ஆறப் போடுவதற்கும், இழுத்தடிப்பதற்கும், திசை திருப்புவதற்கு மட்டுமே கடந்த எல்லா ஆட்சிக் காலத்திலும் நிகழ்ந்து வந்திருக்கின்றன. விசாரணை கமிஷன் அறிக்கை எவ்வளவு சிறப்பாக இருந்த போதிலும் அவற்றின் பரிந்துரைகள் நடைமுறைக்குப் போனது அரிது.
*தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு விசாரணைக்கு இதே நீதிபதி அருணா ஜெகதீஷனைத் தான் அன்றைய முதல்வர் எடப்பாடி நியமித்திருந்தார். அவர் வெகு காலம் கொடுத்த பரிந்துரைகள் ஒன்றும் நடைபெறவில்லை. சில காவல்துறை கண்காணிப்பாளர்கள் பதவி உயர்வு பெற்று முதல்வரின் கொளத்தூர் தொகுதியிலேயே முக்கிய பொறுப்புகளில் பணி புரிகின்ற அவலத்தை அறிய முடிகிறது. பிறகு என்ன ம..த்துக்கு விசாரணைக் கமிஷன்?
*அரசாங்கமும் காவல்துறையும் அன்று இரவே இந்த நடிகர் விஜய்யை கரூரை விட்டு தப்பிச் செல்ல அனுமதித்து இருக்கக் கூடாது. அவருடன் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி, நிர்மல் குமார், அருண் ராஜ், மதியழகன், பவுன்ராஜ் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்திருக்க வேண்டும்.
*ஆனால் காவல்துறை இதனை செய்யவில்லை என்பது மட்டுமல்ல; முதல் தகவல் அறிக்கையில் இவர்களில் மதியழகன், புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உட்பட சிலரது பெயர்களை மட்டுமே சேர்த்துள்ளது. இதில் ஏ1 குற்றவாளியாக விஜய் இடம் பெற்று இருக்க வேண்டும். ஆனால் அரசாங்கமும் காவல்துறையும் எதற்காக அஞ்சுகிறது என்பது தான் நமது கேள்வி. இது மிகவும் முட்டாள்தனமானது. மற்ற சாதாரண அமைப்புகளாக இருந்தால் இவர்கள் இப்படி விட்டிருப்பார்களா என்பதும் நமது கேள்வி.
*ஒரே ஒரு தவெக-காரன் கூட தமது கூட்டத்திற்கு வருகை தந்து செத்து மடிந்து கிடந்த எவரது உடலையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. சிகிச்சை பெறுவோரை எள்ளின் முனை அளவும் கண்டுகொள்ளவில்லை. எந்த ஒரு பகுதியில் இருந்தும் இரங்கல் தெரிவிக்கப்படவில்லை. 4 நாட்கள் கழித்து நடிகர் விஜய் வெளியிட்ட கரூரில் நடந்த துயரத்துக்குப் பொறுப்பேற்காமல் சதிக் கோட்பாடு முன்வைத்து தப்பிக்கவே முயன்றார்.
*ஆனால் இப்பொழுது ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் வலம் வரும் பெலிக்ஸ், சவுக்கு சங்கர், மாரிதாஸ் போன்றோரும், சில தொலைக்காட்சிகளும், youtube சேனல்களும், IT Wing Fake News பரப்புவோருமாகச் சேர்ந்து கொண்டு தவெக-வினர் கூட்டத்திற்கு முறையான ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்பது பற்றியோ, தண்ணீர் உணவு, கழிப்பறை… உள்ளிட்டவற்றுக்கும் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை என்பது பற்றியோ, திட்டமிட்டு வேண்டுமென்றே 7 மணி நேரம் மக்களை வாடி வதங்கி காத்திருக்க செய்து 12 மணிக்கு வர வேண்டிய நபர் இரவு 7 மணிக்கு வந்து சேர்ந்தது பற்றியோ குற்றம் சுமத்திட முன் வரவில்லை. மாறாக இவர்கள் திட்டமிட்டே விஜய்யின் பாதுகாவலனாக நின்று கொண்டு அரசாங்கத்தின் மீதும் காவல்துறை மீதும் அடுக்கடுக்கான முழுமையும் பொய்யான செய்திகளை பரப்பிய வண்ணம் இருந்தனர். ஆனால், பல நேர்மையாளர்கள், ஊடகவியலாளர்கள், ஜனநாயக சக்திகள், சாதாரண ஏழை எளிய மக்கள், நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள் என அனைவரும் உண்மையை உரக்க ஒலித்து தவெக-வையும், அதன் தலைவர் விஜய்யையும் ஆக்ரோஷமாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
*இதற்கிடையில் ஆர்எஸ்எஸ் பாஜக (ஒருவேளை அதிமுகவும்) அளித்த சதி ஆலோசனைகளின்படி உயர் நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜூனா வழக்கினை CBI-க்கு மாற்றி உத்திரவிட மனுச் செய்துள்ளார். முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் போன்றோர் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுச் செய்துள்ளனர். மதியழகனும், பவுன்ராஜும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
CBI விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தவெக.-வுக்கு ஆதரவான பொது நல வழக்குகள் என தாக்கலான அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்திருந்த முன் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
*இவர்கள் கைது செய்யப்பட்டதை எந்த தவறும் செய்யாத அப்பாவிகள் கைது செய்யப்பட்டது போல சித்தரித்து நேபாளம், ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் போன்ற புரட்சி தமிழ்நாட்டில் வெடித்து எழட்டும் என்று ட்விட்டர் பதிவிட்டு கலவரத்தைத் தூண்டிய ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*நீதிமன்றத்தால் Man made disaster என்ற இத்தகைய பெரும் குற்றத்தில் அரசாங்கமும் காவல்துறையும் போதுமான தீவிர நடவடிக்கைகளை குற்றவாளிகள் மீது மேற்கொள்ளவில்லை என சாட்டையடி கொடுக்கப்பட்டது.
*கரூர் நாமக்கல் சம்பவங்கள் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ள வடக்கு மண்டல காவல்துறை ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் விசாரணை குழு ஒன்றும் அறிவிக்கப்பட்டது.
ஆக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீஷன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன்; சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்த ஐஜி அஸ்ரா கர்க் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவன்னியில் முக்கிய குற்றவாளிகள் அனைவரையும் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய உயர் நீதிமன்றங்கள் வழிகாட்டுதல் கொடுத்துள்ளன.
இந்நிலையில் மனநல மருத்துவராக இருக்கும் ஷாலினி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் இல்ல திருமணத்தில் முதலமைச்சர் பங்கேற்ற ஃபோட்டோ ஒன்றை பதிவிட்டு, அதனால் தான் இந்த நீதிபதி விஜய்க்கு எதிராகவும், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளார் என்பதாக பதிவிட்டுள்ளார்.
இது எவ்வளவு கயமைத்தனமானது. இந்த ஷாலினி மனநல மருத்துவர் அல்ல. இவரே அப்பட்டமான, போலித்தனமான சதி கோட்பாடுகளை உருவாக்கி அதையே உண்மையென நம்பும் ஒரு மனநோயாளியாக மாறியுள்ளார். எனவே அவரை உடனடியாக சிகிச்சைக்காக சேர்ப்பித்தல் வேண்டும். இதில் பெரியாரிஸ்ட் என்று சொல்லிக்கொண்டுள்ளார் என்பது அதைவிட கொடுமை.
இது போலவே எடப்பாடி, அரசாங்கத்தின் தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் கரூர் சென்றது அரசியல் ஆதாய அறுவடை செய்யவாம். இதாவது அரசாங்கத்தின் கடமை. முதலமைச்சர் என்ற முறையில் கண்டிப்பாக செல்லாமல் இருந்தால் தான் குற்றம். ஆனால் எடப்பாடி குருட்டுத்தனமான குற்றத்தை சுமத்துகிறார். அப்படியானால் எடப்பாடி சென்றதை எந்த வகையில் சேர்ப்பது? அவர் மட்டும் சமூக நல நோக்கில் சென்றாரோ? இது போக ஆளில்லா கட்சியான ஜிகே வாசன் கரூர் சம்பவத்திற்கு உடனடியாக சிபிஐ விசாரணை தான் வேண்டுமாம். இப்படியாக அத்தி பூத்தாற் போல ‘அதிசயக்கத்தக்க’ வகையில் சரியான கருத்துக்களை வெளியிட்டுள்ள நீதிமன்ற நடவடிக்கைகளைக் கூட விமர்சனம் செய்து வரும் கூட்டம் நீடித்துக் கொண்டே இருக்கிறது.
தொடரும்…
எழில்மாறன்