அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் பார்ப்பன பனியா கும்பல்!

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் பார்ப்பன பனியா கும்பல்!
ஒரு சில நபர்களின் லாப வெறிக்காக 140 கோடி மக்களின் வாழ்க்கை உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் காவு கொடுக்கின்ற மிகப்பெரிய பாசிச கும்பல் இந்தியாவை ஆண்டு வருகிறது என்பதை கடைசி குடிமகனுக்கும் எட்டும் வகையில் கொண்டு செல்ல வேண்டும்.

ந்தியா உள்ளிட்ட நாடுகளின் மீது 25 சதவீதம் வரி விதித்திருந்த அமெரிக்கா குறிப்பாக இந்தியாவின் மீது ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை கண்டிக்கும் வகையில் மேலும் 25 சதவீதத்திற்கு வரியை விதித்துள்ளது.

இதனால் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகின்ற பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ளது என்ற நிலையில் இந்தியாவில் உள்ள சிறு குறு தொழில்கள், பின்னலாடை உற்பத்தி முதல் தோல் பதனிடும் ஆலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள், இறால் மீன் ஏற்றுமதி மற்றும் பச்சை காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஏற்றுமதி வரை அனைத்தும் மிகவும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இதனால் லட்சக்கணக்கான மக்கள் வேலையை இழந்து தவித்து வருகின்றனர். தமிழகத்தில் திருப்பூரில் ஏற்றுமதி நின்று போகவே அங்கு இயங்குகின்ற விசைத்தறி நிலையங்கள் அனைத்தும் தேக்க நிலைக்கு வந்துள்ளன என்றும், தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர் என்றும், திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கம் பதறுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற பொருட்கள் அனைத்திற்கும் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் தேக்க நிலை பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையிலும், “எரிகின்ற வீட்டில் பிடுங்கிய வரை ஆதாயம்” என்ற பழமொழிக்கு ஏற்ப நாட்டின் பொருளாதாரமும், பெரும்பான்மை மக்களும் வாழ்க்கையிழந்து நிற்கின்ற தருணத்தில் தேசங்கடந்த தரகு முதலாளியான முகேஷ் அம்பானி, குழுமம் கொள்ளை இலாபம் அடித்து வருகிறது.

குறிப்பாக ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க துவங்கியது முதல் ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் தடைபட்டதன் காரணமாக முக்கிய இறக்குமதியாளராக இந்தியா மாறியது. இந்தியா என்றால் இந்திய அரசாங்கம் அல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

“2022 முதல் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணையை வாங்கியதன் மூலம் கிடைக்க லாபமானது அரசு நடத்தும் சுத்திகரிப்பு நிறுவனங்களை விட இரண்டு தனியார் நிறுவனங்கள் அதிக லாபமீட்ட உதவியுள்ளன என்று கூறியுள்ளது.

இந்த இரண்டு தனியார் நிறுவனங்கள் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரஷ்ய ரோஸ்நெப்ட் இயக்கும் நயாரா எனர்ஜி ஆகும்” என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய எண்ணெய் சந்தையை கட்டுப்படுத்துகின்ற ரிலையன்ஸ் குழுமம் இதனை மிகப்பெரும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டு ரஷ்யாவிடம் இருந்து நேரடியாக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது.

குறிப்பாக இந்த ஆண்டு துவங்கியது முதல் 18.3 மில்லியன் டன் கச்சா எண்ணெய்-ஐ ரிலையன்ஸ் குழுமம் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இதன் மதிப்பு 8.7 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை ரிலையன்ஸ் குழுமம் ரஷ்யாவிடமிருந்து பெற்று கொள்கிறது.

இவ்வாறு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து ரிலையன்ஸ் ஜாம் நகரில் அமைத்துள்ள மிகப்பெரிய எண்ணெய் துரப்பன ஆலையின் மூலம் அதனை சுத்திகரித்து ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கும் எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது.

இவ்வாறு ஏற்றுமதி செய்வதன் மூலம் பல லட்சம் கோடிகளை சம்பாதித்துள்ள ரிலையன்ஸ் குழுமம், தற்போதைய 50 சதவீத வரி விதிப்பு காலத்தில் மட்டும் சுமார் 40,000 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது.

இந்தியாவில் கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு முக்கியமான காரணிகளில் ஒன்று, ஏற்கனவே இந்தியாவின் வளங்களை சூறையாடி வருகின்ற தரகு முதலாளிகளுக்கும், 2008 உலகப் பொருளாதார நெருக்கடிக்கு பிறகு உருவான தேசங்கடந்த தரகு முதலாளிகளுக்கும் உருவாகியுள்ள முரண்பாடுகள் தான் என்பதை புதிய ஜனநாயகம் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறது.

இதனை சில ‘அறிஞர் பெருமக்கள்’ ஏற்றுக் கொள்ளவில்லை. முரண்பாடு உருவாகிவிட்டதா இல்லையா என்பதை பூதக்கண்ணாடி வைத்து ஆய்வு செய்து வருகிறார்கள் என்பது தனிக்கதை.

படிக்க: அமெரிக்கா ஆரம்பித்துள்ள வரிப் போர்- வஞ்சிக்கப்படும் வளரும் நாடுகள்!

மேற்கண்ட முரண்பாட்டை நிரூபிக்கின்ற வகையில், “இந்தியாவில் உள்ள பார்ப்பன பனியா கும்பல் நெருக்கடிகளை பயன்படுத்திக் கொண்டு சொத்துக்களை குவிக்கின்றார்கள்” என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள் என்று அமெரிக்காவின் ஜனாதிபதியான ட்ரம்ப் ஆலோசகர் நவரோ கதறுகின்ற அளவிற்கு நிலைமை பட்டவர்தனமாக அம்பலமாகியுள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தில் வர்த்தகம் மற்றும் உற்பத்தி விவகாரங்களுக்கான மூத்த ஆலோசகரான நவரோ கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், “பிரதமர் மோதி ஒரு சிறந்த தலைவர். இந்தியத் தலைவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின் பிங்குடன் எவ்வாறு ஒத்துழைக்கிறார்கள் என்பது புரியவில்லை? அதேசமயம் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம்” என்று கூறினார்.

“எனவே நான் சொல்வதெல்லாம், இந்திய மக்களே, தயவுசெய்து இங்கே என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பிராமணர்கள் இந்திய மக்களின் இழப்பில் லாபம் ஈட்டுகிறார்கள். இதை நாம் நிறுத்த வேண்டும்” என்று நவரோ கூறினார்.

உலக மேலாதிக்க போட்டியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற அமெரிக்காவிற்கும் அதற்கு எதிராக பல் துருவ ஒழுங்கமைப்பு ஒன்றை உருவாக்கப் போவதாக கூறிக் கொள்கின்ற சீனா மற்றும் ரஷ்யா கூட்டணி, ‘ சிவப்பு போர்வை’’ போர்த்திக் கொண்டு உலக மேலாதிக்க போட்டியில் குதித்துள்ளது.

இவை இரண்டுக்கும் இடையில் தற்போதைக்கு சீனாவையும் ரஷ்யாவையும் மற்றும் பிரிக்ஸ் கூட்டமைப்பையும் சார்ந்து இருப்பதாக நாடகமாடி கொண்டுள்ள பாசிச மோடி கும்பல் அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரிக்கு எதிராக தனது வரிகளை உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, அமெரிக்கா மற்றும் சீனா இரண்டுக்கும் இடையில் நடக்கின்ற வர்த்தகப் போரை பயன்படுத்திக் கொண்டு நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும், விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்க்கைக்கும் முன்னேற்றத்தை கொண்டு வருவதற்கு பதிலாக தனது புரவலர்களான தேசக்கடந்த தரகு முதலாளிகள் அம்பானி, அதானி கும்பல் கொழுப்பதற்கு இதனை பயன்படுத்துகிறது என்ற உண்மை விவரத்தை நாம் பாட்டாளி வர்க்கத்திடம் கொண்டு செல்ல வேண்டும்.

ஒரு சில நபர்களின் லாப வெறிக்காக 140 கோடி மக்களின் வாழ்க்கை உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் காவு கொடுக்கின்ற மிகப்பெரிய பாசிச கும்பல் இந்தியாவை ஆண்டு வருகிறது என்பதை கடைசி குடிமகனுக்கும் எட்டும் வகையில் கொண்டு செல்ல வேண்டும்.

ஆனால் இதற்கு நேர் மாறாக ஜப்பான், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் இந்திய ஒன்றியத்தின் பிரதமரான பாசிச மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதையும் அந்த நாட்டின் அதிபர்கள், குறிப்பாக சீனாவின் அதிபர் தனது சொந்த காரை கொடுத்து மோடியை வரவேற்றது உள்ளிட்ட விவரங்களை எழுதி இந்தியா ஏதோ ராஜதந்திர ரீதியாக, குறிப்பாக மோடி சாணக்கியத்தனத்தில் இந்தியாவை தூக்கி நிறுத்தி வருவதாக பித்தலாட்டம் புரிகின்ற ஊடகங்களின் முகத்திரையையும் கிழித்தெரிய வேண்டும்.

பார்த்தசாரதி.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here