
சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே பல ஆண்டுகளாக செய்த வேலையைக் கேட்கும் துப்புரவு தொழிலாளர்களின் தொடர் போராட்டம் பல்வேறு வடிவங்களை எடுத்து படிப்படியாக அவலத்தை நோக்கி செல்கிறது. கூவத்தில் இறங்குவது, சுடுகாட்டில் படுத்து போராடுவது என்று தம்மை வருத்திக் கொள்வதாகவும் தம்மை தாழ்த்திக் கொள்வதாகவும் பயணிக்கிறது.
அரசின் தொடர் புறக்கணிப்பால் எங்கே களப்பலிகள் நடந்து விடுமோ என்று சென்னையில் துப்புரவு பணியாளர்களுக்கு வழிகாட்டும் தொழிற்சங்க தலைவர்கள் கவலைப்படுகிறார்கள். இந்த கொலைப்பழி மாநகராட்சி அதிகாரிகளையும், தமிழ்நாடு அரசையுமே சாரும் எனவும் சுட்டிக்காட்டி எச்சரிக்கின்றனர். அதுவே உண்மை.
போராட்டத்தின் இலக்கு எது?
சென்னை பெருநகராட்சியானது தமது வார்டுகளில் குப்பைகளை அப்புறப்படுத்தும் தூய்மை பணியை கான்ட்ராக்ட்களுக்கு விட்டு வருகின்றன. குப்பை அள்ளக் கூட கார்ப்பரேட்டுகள் களம் இறங்கி விட்டனர்.
நாங்கள் இத்தகைய கார்ப்பரேட்டுகளிடம் வேலை செய்ய மாட்டோம் என்றும், சென்னை பெருநகராட்சியிடமே தொடர்ந்து வேலை செய்ய வேண்டும்; எங்களுக்கு நீங்கள் வேலை கொடுங்கள் என்று கேட்டும் போராடி வருகின்றனர். அதாவது அரசின் கொள்கை முடிவான தனியார்மயத்தை எதிர்த்து தான் போராடி வருகின்றனர்.
கண் முன்னே samsung தொழிலாளர்களின் போராட்ட அனுபவம் அரசின் கார்ப்பரேட் சார்பை முகத்தில் அறைந்து சொல்கிறது. ஒரு வர்க்கமாக ஒரு ஆலையின் முதலாளியை எதிர்த்து, கார்ப்பரேட்டை எதிர்த்து, அடிப்படை உரிமைகளைக் கேட்டு நின்ற போராட்டம் திட்டமிட்டு பல அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டது. தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் உள்ள திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி தொழிற்சங்கமாக இருந்தும் கூட இதுதான் நிலைமை.
கொரிய நிறுவனத்திற்கு அரசின் ஆதரவு உள்ளது. ஆனால் மண்ணின் மைந்தர்களான உழைக்கும் மக்களுக்கு ஊடகங்களின் ஆதரவும்கூட துளியும் கிடைக்கவில்லை. விதிவிலக்காக சமூக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. கார்ப்பரேட் ஊடகங்கள் கணக்கு காட்டுவதற்காக மட்டுமே இச்செய்தியை ஒளிபரப்பினர். நியாயமான கோரிக்கைகள் கூட ஏன் தோற்கடிக்கப்படுகிறது? அநீதியான, கார்ப்பரேட் கோட்டையை தகர்ப்பதற்கு எது தேவை? என்பதை பரிசீரிப்பது காலத்தின் கட்டாயம்.
கோட்டையைத் தகர்க்க பீரங்கிகள் தேவை!
கோட்டையை தகர்க்க வேண்டும் என்றால் வெறும் கரங்களாலோ, கள்ளிகளாலோ முடியாது. அதற்கு பீரங்கி குண்டுகளை தான் வீச வேண்டும். அதாவது பீரங்கி குண்டின் வலிமையை ஒத்த அரசியல் முழக்கங்களின் அடிப்படையில், உணர்வுபூர்வமாக மக்கள் ஒன்று திரட்டப்பட வேண்டும்.
துப்புரவுப் பணியாளர்கள் அதிலும் குறிப்பாக ஒரு சில வார்டுகளில் மட்டும் பணிபுரியும் சில 100 பேர் மட்டுமே தனித்து இத்தகைய பீரங்கி குண்டின் வலிமையை அடைய முடியுமா? சாத்தியம் இல்லை. அவர்கள் வேறு எதைத்தான் செய்தாக வேண்டி உள்ளது?
தனியார்மயத்தால், கார்ப்பரேட்டுகளின் சுரண்டலால் பாதிக்கப்படும் சுரண்டப்படும் ஒடுக்கப்படும் அனைத்து பிரிவினரையும் ஓரணியில் திரட்டும் போது தான் அரசின் கொள்கை முடிவையே மாற்றி அமைக்கும் வலிமை கொண்டதாக போராட்ட களம் மாறும். அதற்குத் தேவை பொதுவான முழக்கம், பொதுவான திட்டம், பொதுவான இலக்கு. இதன் கீழ் தான் போராட்டங்கள் உறுதியும் வலிமையும் பெறுவர்.
ஒரு ஸ்டெர்லைட்டை மூட வைக்க பல ஆண்டுகள் போராட்டமும், லட்சம் பேர் அணிதிரட்டலும், அரச பயங்கரவாதத்திற்கு எதிராக களப்பலிகளும் – தியாகங்களும் தேவைப்பட்டன.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டமானது மீனவ சமுதாயத்தினரின் தனிப்பட்ட போராட்டமாக சுருக்கப்பட்டு, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் உள்ள மக்களுடன் ஒன்றிணைக்கப்படாமல் துண்டிக்கப்பட்டு, படிப்படியாக நீர்த்துப்போக வைக்கப்பட்டு தோல்வியடைந்து விட்டது.
ஜல்லிக்கட்டு போராட்டம் வென்றதற்கும் எது அடிப்படை? மோடி அரசின் பல்முனை தாக்குதல்களால் கொதிப்புற்று இருந்த பல்வேறு பிரிவு மக்களும், பல்வேறு வர்க்கத்தினரும், மாணவர் – இளைஞர்களும், நகரங்கள் மற்றும் கிராமப்புறங்கள் அனைத்தும் ஓரணியில் திரண்டு களம் இறங்கியதுதான் அடிப்படை. இதன் விளைவாகத்தான் தமிழ்நாட்டில் அடித்த அடிக்கு டெல்லி பணிந்தது.
படிக்க:
♦ தூய்மை பணியாளர்கள் போராட்டமும், திமுக அரசின் துரோகமும்!
♦ MRB செவிலியர்கள் போராட்டமும், தமிழக அரசின் துரோகமும்!
எனவே விடாப்பிடியாக உறுதியாக போராடிவரும் துப்புரவுப் பணியாளர்கள் வெற்றியடைய தேவையான வலிமையை எங்கிருந்து பெறுவது? எப்படி பெறுவது? என்ற திசையில் வேலைத்திட்டங்கள் வகுத்து தரப்பட வேண்டும். அதற்கேற்ப பிற துறையினரும், பிற பிரிவினரும், இந்த நியாயமான போராட்டத்திற்குத் தமது ஆதரவினை தர களமிறங்கவும் வேண்டும்.
குறிப்பிட்ட வார்டுகளில் குப்பை அகற்றும் வேலையை யார் மூலம் செய்வது? அதாவது போராடும் தொழிலாளர்கள் யாரிடம் பணி செய்வது? என்பதற்கான போராட்டமாக இல்லாமல், தனியார்மயத்தை திணிப்பதற்கு எதிரான போராட்டமாகவும், கார்ப்பரேட் சுரண்டல்களை கடிவாளம் இட்டு நிறுத்தும் போராட்டமாகவும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
எனவே அரசின் கொள்கைக்கு எதிரான போராட்டமாக, தனியார் மயத்துக்கு எதிரான போராட்டமாக, கார்ப்பரேட் கொள்ளைக்கும், சுரண்டலுக்கும் எதிரான போராட்டமாக ஒருங்கிணைக்கும் முயற்சிகளை தொடங்குவது தான் முதன்மையானது. கூவத்தில் இறங்கி நின்று போராடுவதோ அல்லது சுடுகாட்டில் சென்று படுத்து போராடுவதோ நம்மை வருத்திக் கொள்வதாகவும், மற்றவர்களை பார்வையாளராக பார்க்கச் செய்து நம்மீது பரிதாபப்பட்டு கடந்து செல்வதற்கும் தான் உதவுகிறது.
மாநகராட்சியிடம் வேலைக் கேட்டு நடக்கும் போராட்டம் ஆனது, பொருளாதார கோரிக்கைக்கான போராட்டம் ஆனது தனியார்மய எதிர்ப்பு அரசியலாக முன்னேற வேண்டும். இத்தகைய அரசியல் கோரிக்கையின் பின்தான் அனைத்து தரப்பினரும் ஒன்றுபடுத்தப்பட வேண்டும் – ஒன்றுபடுத்தப்படுவதும் சாத்தியமாகும்.
இத்தகைய ஒருங்கிணைப்பு நடக்காமல், அரசின் கொள்கை முடிவான தனியார்மயத்தை, கார்ப்பரேட்மயத்தை அசைத்துப் பார்ப்பது கடினமான காரியம். கார்ப்பரேட் சுரண்டலை எதிர்கொள்ளும் அனைவரும் போராடும் தரப்பினருடன் – துப்புரவு பணியாளர்களுடனும் செவிலியர்களுடனும், இடைநிலை ஆசிரியர்களுடனும் கரம் கோர்ப்போம்.
ஒன்றுபட்ட போராட்டத்திற்கு ஆக்கபூர்வமாக பங்களிப்பை செலுத்துவோம். கார்ப்பரேட்டுகளின் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குவோம். திமுக அரசு கார்ப்பரேட் நல கொள்கைகளைக் கைவிட போராட்டங்கள் மூலம் கீழிருந்து நிர்பந்திப்போம்.
- இளமாறன்






