“திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள காரியாமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அதன் பணியாளர்களுக்காக ஷெட் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு பி.ஆர்.பாண்டியன் மற்றும் அவரது தரப்பு அங்கு சென்றனர். கடப்பாரை உள்ளிட்டவை எடுத்து சென்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஓஎன்ஜிசி-யை வெளியேற வலியுறுத்தி அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்திய பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டவர்கள், பணியாளர்களையும் கொலை மிரட்டல் விடுத்து மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது” என்ற பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவருக்கும் 13 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணி மற்றும் மீத்தேனுக்கு எதிரான காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் போர்க்குணமிக்க போராட்ட இயக்கம் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

“தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கும்பகோணம், பாபநாசம், நீடாமங்கலம், மன்னார்குடி உள்ளிட்ட எட்டு வட்டங்களில் 667 சதுர கி.மீட்டர் பரப்பளவில் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் மீத்தேன் வாயுவை எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்துள்ளது, மைய அரசு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே அதன் ஒப்புதலோடு இத்திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் முடிவாகி, மீத்தேனை எடுக்கும் உரிமம் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற கார்ப்பரேட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கும் மக்களுக்கும் தெரிவிக்காமல், அவர்களின் கருத்தையும் கேட்காமல், மிகவும் கமுக்கமாக வைக்கப்பட்டிருந்த இந்தத் திட்டம், தற்பொழுது மீத்தேனை எடுப்பதற்காக 50 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு வருவதையடுத்து அம்பலத்திற்கு வந்துவிட்டது.

வளர்ச்சி என்ற பெயரில் கொண்டுவரப்படும் இத்திட்டத்தைத் தமிழக நெற்களஞ்சியத்தின் மீது வீசப்படும் அணுகுண்டு என்றே கூறலாம். ஏனென்றால், இத்திட்டத்தைச் செயல்படுத்த தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஏறத்தாழ 1,66,210 ஏக்கர் பூமி விவசாயிகளிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் அபகரிக்கப்படும். மீத்தேனை எடுத்துச் செல்லும் குழாய்களும் விளைநிலங்களில்தான் பதிக்கப்படும். கண்ணுக்குத் துலக்கமாகத் தெரியும் இந்த நேரடிப் பாதிப்பை விட, இத்திட்டத்தால் ஏற்படும் மற்ற பாதிப்புகள் காவிரிப் படுகை விவசாய பூமியை அழித்துவிடும் அபாயம் நிறைந்தவையாகும்”. என்று ஜூன் – 2013 ஆம் ஆண்டு புதிய ஜனநாயகம் இதழில் எழுதியிருந்தோம்.

அதைத்தொடர்ந்து திருவாரூரில் நடைபெற்ற எழுச்சிமிகு பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகளை அணி திரட்டி மீத்தேன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள்.

“இந்திய ஒன்றியத்தின் பொதுத்துறை நிறுவனம் என்ற பெயரில் செயல்படுகின்ற ஓஎன்ஜிசி நிறுவனம், இந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணை போகின்ற வகையில் பல்வேறு ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டு விவசாயிகளிடமிருந்து நைச்சியமாக நிலங்களை கைப்பற்றுகின்ற மோசடிகளையும், ஓஎன்ஜிசி அரசு நிறுவனம் தான்; அது நாட்டின் வளர்ச்சிக்காக இதனை செய்கிறது” என்று முன் வைக்கப்பட்ட பித்தலாட்டங்களையும் அம்பலப்படுத்துகின்ற வகையில் ஓஎன்ஜிசிக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு திருவாரூர் கொரடாச்சேரி, வலங்கைமான், புளிக்கரை, வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியான கண்டன ஆர்ப்பாட்ட போராட்டங்களும், பொதுக்கூட்டங்களும் விவசாயிகள் விடுதலை முன்னணியால் நடத்தப்பட்டது.

அப்போது முதல் 2015 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை டெல்டா மாவட்டங்களில் கட்டமைத்து முன்னெடுத்துச் சென்றது. முப்போகம் விளைகின்ற காவிரி டெல்டா பாசன பகுதிகளில் விவசாயத்தை ஒழித்துக் கட்டிவிட்டு கார்ப்பரேட் கொள்ளைக்காக மீத்தேன் எடுப்பது; ஷெல் கேஸ் எடுப்பது; நிலக்கரி சுரங்கங்களை உருவாக்குவது போன்ற திட்டங்கள் மூலம் பாலைவனமாக்கத் துடிக்கிறது என்பதை தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கமாகவும், போர்க்குணமிக்க போராட்ட வடிவங்களிலும் கொண்டு சென்றது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்.

படிக்க:

 காவிரியில் தமிழகத்தின் உரிமைப்படி நீரைப் பெற போராடுவோம்!

 மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் நடைபயணத்தைத் தடை செய்த திமுக.

முன்னர் தஞ்சை மாவட்டம் என்று கூறப்பட்ட தற்போதுள்ள தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் மத்தியில் டெல்டாவில் ஏற்பட போகும் பெரும் அழிவை அம்பலப்படுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியது மட்டுமின்றி மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடுகின்ற பிற அமைப்புகளின் போராட்டங்களிலும் ஒன்றிணைந்து மீத்தேன் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கான போராட்டங்களில் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு போராடியது, போராடி வருகிறது மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள்.

புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகளுடன் மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழு, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு, பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் ஆகிய அமைப்புகள் தொடர்ச்சியாக 2019 வரை போராடியதன் காரணமாக தற்காலிகமாக மீத்தேன் எடுக்கும் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கவும் டெல்டாவை பாலைவனம் ஆக்காதே என்ற முழக்கங்களை முன்வைத்து போராடிய விவசாயிகளையும் விவசாய சங்கங்களையும் ஒடுக்குவதற்கு பல்வேறு வழக்குகளை ஏற்கனவே ஆண்ட அதிமுக ஆட்சி போட்டு வந்தது. அதன் பிறகு 2021ல் ஆட்சிக்கு வந்த திமுகவும் இந்த வழக்குகளை முழுமையாக விளக்கிக் கொள்ளவில்லை. தற்போது திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்ற எடப்பாடி தாங்கள் ஏதோ போராடி இந்த திட்டங்களை நிறுத்திவிட்டதை போல தனது பிரச்சாரங்களில் பித்தலாட்டம் புரிந்து வருகிறார் என்பது தனிக்கதை.

மேற்கண்ட வகையில் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளை தற்போது ஆட்சியில் உள்ள திமுக முழுமையாக ரத்து செய்யாமல், ஒரு சில பகுதிகளில் மட்டும் வழக்குகளை திரும்பப் பெற்றுக் கொண்டது. ஆனால் தனக்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு தெரிவிப்பவர்களையும், விவசாயிகள் மத்தியில் முன்னோடியாக செயல்படுகின்றவர்களையும் குறி வைத்து இப்படிப்பட்ட வழக்குகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தது. அந்த வழக்குகளில் ஒன்று தான் திருவாரூரில் ஓஎன்ஜிசிக்கு எதிராக சேதம் விளைவித்தார் என்ற பெயரில் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 22 பேர் மீது பொதுச் சொத்துக்களை சேதம் செய்ததாக தொடரப்பட்டு நடந்து வந்த வழக்காகும்.

இத்தகைய வழக்குகளில் காண்ட்ராக்டர் மற்றும் அரசு அதிகாரிகள், போலீசு கொடுக்கின்ற வாக்குமூலங்கள் மற்றும் பொய் சாட்சிகளை மட்டுமே கணக்கில் கொண்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதிலும் கேடிலும் கேடாக 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பது என்பதெல்லாம் விவசாயிகளின் மீதான கொடூரமான தாக்குதல்களில் ஒன்றுதான்.

சமீபத்தில் கோவையில் நடைபெற்ற இயற்கை விவசாய மாநாட்டில் பிரதமர் மோடியுடன் இணைந்து மேடையில் பங்கெடுத்ததன் மூலம் தன்னை ஒரு பிரபலமான தலைவராக காட்டிக் கொள்ள முயற்சித்த பி.ஆர்.பாண்டியன் மீது இத்தகைய அடக்குமுறைகள் ஏவி விடப்படுகிறது என்றால் பிற விவசாயிகளின் மீது அடக்குமுறைகளை செலுத்துவதற்கு சொல்லவா வேண்டும்?

எனவே பி.ஆர்.பாண்டியன் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த சிறை தண்டனை என்பது அநீதியானது என்பது மட்டுமல்ல! போராடுகின்ற விவசாயிகளுக்கு மிரட்டல் விடுக்கின்ற கொடூரமான தன்மை கொண்டது.

இந்திய ஒன்றியத்தை ஆண்டு வருகின்ற பாசிச பாஜக விவசாயத்தை முழுமையாக கார்ப்பரேட்டுகள் கையில் படிப்படியாக ஒப்படைத்து வருகிறது. ஒருவேளை சோத்துக்கும் அந்நிய நிறுவனங்களிடமும், ஏகபோகங்களிடம் கையேந்தி நிற்கின்ற அளவிற்கு விவசாயக் கொள்கையை மாற்றி நாட்டின் இறையாண்மை மீதும், சுயசார்பு பொருளாதாரத்தின் மீதும், விவசாயத்தின் மீதும் பல கொத்துக் குண்டு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இத்தகைய சூழலில் விவசாயிகளை அணிதிரட்டிய ஒரு எழுச்சியை கீழிருந்து கட்டமைப்பதற்கு இப்படிப்பட்ட பொய் வழக்குகள்-தண்டனைகள் ஒரு மிகப்பெரும் தடைக்கல்லாக மாறிவிடும் என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டு இவற்றை முளையிலேயே கிள்ளியெறிகின்ற வகையில் போராட வேண்டும்.

நீதிமன்ற தீர்ப்புகளை சட்டரீதியாக முறியடிப்பது மட்டுமின்றி மக்கள் மத்தியிலும், விவசாயிகளின் மத்தியிலும் ஒன்றிணைப்பை உருவாக்குவதும், பல சங்கங்களாக பிரிந்து கிடக்கின்ற விவசாய சங்கங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் விவசாயக் கொள்கைக்கு எதிராக ஒன்றிணைக்க வேண்டும். குறிப்பாக அதனை அமல்படுத்துகின்ற கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாத ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு எதிராக ஒன்று திரட்ட வேண்டும் என்பதுதான் தற்போதைய முதல் கடமையாக மாறியுள்ளது.

  • மருது பாண்டியன்.

புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here