முதல் பாகம் படிக்க:

தந்தை பெரியாரின் 147- வது பிறந்தநாளும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டும்.(ஓர் நேர்மறை – எதிர்மறை அலசல்!)

சாதிப் பட்டம் ஒழிந்தது;
தந்தை பெரியார் பட்டம் வந்தது

1938-ல் சென்னை சூளைமேட்டில் சௌந்தரபாண்டியனார் தலைமையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் தந்தை பெரியார் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றினார். ஆம், தமது பெயருக்குப் பின்னாலே சாதிப்பட்டத்தை சுமக்கும் ‘சாதி தாங்கிகள்’ இனி அச்சாதிகளின் பெயர்களைத் தத்தம் பெயர்களுக்குப் பின்னால் போட்டுக் கொள்ளவே கூடாது என்றது அத்தீர்மானம்.

உடனே மாநாட்டு மேடையில் இருந்தோரும், மாநாட்டில் கலந்து கொண்ட எண்ணற்றோரும், சாதியுடன் கூடிய தத்தம் பெயர்களைச் சொல்லி இனி சாதியை அகற்றிவிட்டு தமது பெயரை மட்டும் பயன்படுத்துவதாக சொல்லியே தத்தம் பெயர்களை மட்டும் அறிவித்தார்கள். அத்தீர்மானமும், அது உடனடி செயற்பாட்டுக்கு வந்த விதமும் இந்திய நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது இன்று வரையிலும். இது விடயத்தில் மற்ற எந்த மாநிலங்களை விடவும் சாதிப் பெயரை தாங்காமல் மக்கள் தமது பெயர்களை அறிவித்துக் கொள்வது என்பது தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம் ஆகி இருக்கிறது என்றால் அதற்கு வித்திட்டவர் தந்தை பெரியார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அதற்கு முன்பாக, பெரியாரின் முக்கியமான போராட்டங்களில் 1922-ல் கள்ளுக்கடை மறியலில் தனது மனைவி நாகம்மாள், தங்கை கண்ணம்மா மற்றும் தோழர்களுடன் பங்கேற்றது. அதே ஆண்டில் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு கோரி போராட்டம் துவங்கியது.

1924-ல் கேரள மாநிலம், வைக்கம் சிவா/மகாதேவா ஆலயத்திற்கு அருகில் உள்ள சாலைகளில் கூட ‘கீழ் சாதியினர்’ நடமாடக்கூடாது என்ற தடையை மீறி போராட்டம் நடத்தி கைதானார்; வெற்றியும் கண்டார். இதன் மூலம் ‘வைக்கம் வீரர்’ என்ற பட்டம் பெற்றார்.

1925-சேரன்மாதேவியில் வி.வி.எஸ். ஐயர் என்பவரால் நிர்வகிக்கப்பட்ட குருகுலம் என்ற உறைவிடப் பள்ளியில் பார்ப்பனக் குழந்தைகளுக்கும், பார்ப்பனர் அல்லாத குழந்தைகளுக்கும் காண்பிக்கப்பட்ட வேறுபட்ட அவமானங்களுக்கெதிராகப் போராடி அப்பள்ளியை மூடச் செய்தார்.

1925 சுயமரியாதை இயக்கம் உருவாக்கிய பிறகு முதல் மாநாட்டை 1929 பிப்ரவரியில் செங்கல்பட்டில் W.P.A. சௌந்தர பாண்டியன் தலைமையில் நடத்தினார். இதில் குத்தூசி குருசாமி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் முதலானோரும் பங்கேற்றனர். சிறப்பு வாய்ந்த தமிழர் நலன்களுக்கான தீர்மானங்களை இயற்றச் செய்தார்.

1929 நடைபெற்ற மாநாடு ஒன்றில் பெண்களுக்குத் தந்தையின் சொத்தில் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற மகத்தான தீர்மானத்தை நிறைவேற்றினார். மேலும் பெண்களை பல்வேறு விதமான இழிநிலைகளில் இருந்து மீட்டெடுக்க – விழிப்புணர்வு ஏற்படுத்த “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற மகத்தான நூலை வெளியிட்டார்.

தந்தை பெரியாரின் சீர்திருத்த கொள்கைகள், எழுத்துச் சீர்திருத்தம், பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான அவரது செயற்பாடுகள் இவற்றையெல்லாம் உணர்ந்தே, 1938-ல் ஈரோட்டில், தமிழறிஞர் மறைமலை அடிகள் மகள் நீலாம்பிகை அவர்கள் தலைமையில் நிகழ்வுற்ற பெண்கள் மாநாட்டில், டாக்டர் தர்மாம்பாள் ஈ.வே. ராமசாமிக்கு ‘தந்தை பெரியார்’ என்று நிலைத்து நிற்கும் பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தார்கள்.

1938-ல் 125 உயர்நிலைப் பள்ளிகளில் அன்றைய மதராஸ் மாகாண முதலமைச்சர் ராஜாஜி ஹிந்தியை கட்டாயமாகத் திணித்து உத்தரவிட்டபோது, எதிர்க்கட்சித் தலைவர் நீதி கட்சி சார்பில் ஏ.ட்டி. பன்னீர்ச்செல்வம் சட்டமன்றத்தில் போராட, பெரியாரோ மக்களை திரட்டி, இந்தித் திணிப்புக்கு எதிராக தலைமை தாங்கி போராட்டம் நடத்தி முறியடித்தார்.

இவ்விதமாக அவருடைய செயல்பாடுகளும், அரசியல் சட்டத்தை எறித்த கோபா வேசங்களும், சாதி-தீண்டாமை ஒழிப்பு, சனாதன பார்ப்பனிய எதிர்ப்பு, எண்ணற்ற போராட்டங்களில் சிறை ஏகியது என பல்வேறு அம்சங்களிலும் அவரது பங்களிப்பு கணிசமாக இருந்தது என்பதை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அதே நேரத்தில் இவை யாவும், இருக்கக் கூடிய சமூக யதார்த்த சூழ்நிலையை கணக்கிற் கொண்டு, ‘சீர்திருத்தவாத’ அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்பதனையும் நாம் கணக்கிற் கொள்ள வேண்டும்.

ரஷ்ய புரட்சியும்

இந்திய பொதுவுடைமை இயக்க தோற்றமும்

இதற்கிடையில் சோவியத் ரஷ்யாவில் 1917-ல் நடைபெற்ற மகத்தான சோசலிசப் புரட்சியின் விளைவு, உலக நாடுகளை உலுக்கியது. அந்த அடிப்படையில்இந்திய நாட்டிலும் பொதுவுடைமை இயக்கம் முளைவிடத் தொடங்கியது.

“இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI)” 1925 டிசம்பர் 26-ல், கே. சுப்பராயன், சந்தோஷ் குமார், எம்.என். ராய் முதலானோரின் தலைமையில் உருவாக்கப்பட்டது. அது இந்திய நாட்டின் பிரத்யேக நிலைமைகளை உள்வாங்கிக் கொண்டு அதன் அடிப்படையில் செயல் திட்டம் வகுத்து செயல்படுவதற்கு முனையவில்லை.

குறிப்பாக பெரியார் வகுத்துக் கொண்டு செயலாற்றிய இந்து மதக் கொடுங்கோன்மைகள், சனாதன பார்ப்பனியம், சாதி தீண்டாமை, மூடநம்பிக்கைகள் ஒழிப்பு போன்றவற்றை ஆய்வுக்குட்படுத்தி திட்டம் வகுத்துக் கொண்டு செயல்பட முன்வரவில்லை. மாறாக, தொழிலாளர்- விவசாயிகளான பாட்டாளி வர்க்க விடுதலை என்ற கண்ணோட்டத்தை மட்டுமே கொண்டு இருந்தார்கள். அதனால் மார்க்சிய- லெனினிய பார்வையில் சரியான செயல் திட்டத்தை வகுத்துக் கொண்டு செயல்பட்டோராயிருக்கவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட 1964-க்குப் பிறகும் கூட அதே நிலையே நீடித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு முன்பு ஆந்திர தெலுங்கானாவில் ஏற்பட்ட நிலப் பிரபுகளுக்கு எதிரான விவசாயிகள் பேரெழுச்சி ஆயுதப் போராட்டம், பின்பு மேற்கு வங்கத்தின் 1969-ல் நக்சல்பாரி பேரெழுச்சி மூலமாக உருவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.)-ம் எதிரியின் ரத்தத்தில் கை நனைக்காதவன் கம்யூனிஸ்ட்டே அல்ல என்ற தவறான ‘இடது’ சாகசவாத கண்ணோட்டத்தையும், ‘சீனத் தலைவரே, நமது தலைவர்; சீனப் பாதையே நமது பாதை’ என்ற தவறான பாதையை வகுத்துக் கொண்டு செயல்படத் துவங்கி,பின் அதன் படிப்பினைகளைக் கற்றுணர்ந்து பல்வேறு புரட்சிகர குழுக்களாக பல்வேறு வகைகளிலும் ஏற்ற இறக்கங்களுடன் செயல்பட்டாலும், பல்வேறு ஆய்வுகளினூடாக களமாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

மேலும் படிக்க:

நூல் அறிமுகம்: நக்சல்பாரி

எனவே இந்திய நாட்டில் பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் சமத்துவத்தை உருவாக்க – மக்கள் ஜனநாயக கூட்டரசை நிறுவிட போர் பிரடனம் செய்து வினையாற்றி வருகின்றனர். இன்னும் பல்வேறு குழுக்களும் பல்வேறு நிலைப்பாடுகளில் நின்று களமாடிக் கொண்டிருக்கிறார்கள். காலம் விடை சொல்லும். ஆக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதன் தொடர் மாற்றங்கள் பலவற்றைக் கொண்டவையாக இருந்தாலும், 2025-ல் நூற்றாண்டை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

பெரியாரின் ரஷ்ய நாட்டுப் பயணமும் – விளைவுகளும்!

பெரியார் 13-12-1931 முதல் 11-11-1932 முடிய சுமார் 11 மாதங்கள் அயல் நாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஆப்பிரிக்கா, எகிப்து, கிரீஸ், துருக்கி, சோவியத் ரஷ்யா, இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, போர்ச்சுகல், பிரான்ஸ், இலங்கை… போன்ற நாடுகளுக்கு பயனுள்ள வகையில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

குறிப்பாக மற்ற நாடுகளை விட சோவியத் ரஷ்யாவில் மட்டும் மூன்று மாதங்களுக்கு மேல் தங்கி பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றுப்பார்த்ததோடு மட்டுமல்லாமல் பல்வேறு விதமான பயன்பெறத்தக்க தகவல்களை திரட்டி கொண்டார். சோவியத்தில் ஏற்பட்ட மகத்தான மாற்றம் அவரது எண்ணங்களில் பெருத்த மாறுதல்களை உண்டாக்கியது என்பதனை அவர் இந்தியா திரும்பி மேற்கொண்ட நடவடிக்கைகள் மெய்ப்பிக்கின்றன.

பெரியாரும், அவருக்கு உதவியாகச் சென்ற எஸ் ராமநாதன் மற்றும் ராமு என்கின்ற ஆர் ராமசாமி ஆகியோரும் ரஷ்யா செல்வதற்கு முறைப்படியான அனுமதி கிடைக்காததால், துணிவாக பயண அனுமதி (பாஸ்போர்ட்) இல்லாமலேயே
ஒரு பிரஞ்சு நாட்டு சரக்குக் கப்பலிலேயே ரகசியப் பயணம் மேற்கொண்டார்கள். பிரிட்டிஷ் சாம்ராஜ்ய குடிகளான மூவரும் பிரிட்டிஷ் உளவு அதிகாரியிடம் அகப்படாமல் இருக்க வேண்டி கப்பலின் அடித்தட்டில் இருந்த ஒரு அறையில் வைத்து பூட்டப்பட்டனர். பல மைல்கள் தூரம் ரஷ்ய எல்லையான கருங்கடல் எல்லைக்கு போன பிறகு கப்பலின் மேல் தளத்திற்கு வர மூவரும் அனுமதிக்கப்பட்டனர். அதற்கு முன்னதாக ஏதென்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சோவியத்துக்கு போக அவர்கள் உதவியை நாடிய பொழுது சாம்ராஜ்ய குடிமக்களான அவர்களை நம்பிட உரிய ஆதாரங்கள் கேட்டனர்.

1929-ல் ஈ வே ராமசாமியும், எஸ் ராமநாதனும் ஆசிரியர்களாக இருந்து வெளியிட்ட ரிவோல்ட் (REVOLT) ஆங்கில வார ஏட்டின் முழு தொகுதி ஒன்றை ஏதன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் அளித்து அந்த ஏட்டின் ஆசிரியர்களே தாங்கள் தான் என்று கூறிய பின்னரே அவர்கள் இவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தனர். எப்படியோ ரஷ்யா வந்து ரஷ்யாவில் அரசு முறை விருந்தாளிகளாக ஏற்கப்பட்டு சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாக சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது சோவியத் நாட்டின் அரசவைத் தலைவர் ஆசான் ஸ்டாலின்.

இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடயங்கள் யாதெனில் 1932 மே 1 பேரணியின் போது, மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் நின்று அனைவருக்கும் ஸ்டாலின் ரெட் சல்யூட் செய்கிறார். பெரியார் குழுவினர் அந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் சோவியத்தின் அதிகாரிகள் மூலமாக ஸ்டாலினை, பெரியார் குழுவினர் சந்திப்பதற்கு 28-05-1932 என தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், பெரியாரை அறையில் தங்க வைத்து விட்டு எஸ். ராமநாதன், ரஷ்யாவில் அப்பொழுது சோவியத்திற்கு எதிராக – கலகக்காரர்களாக செயல்பட்டுக் கொண்டிருந்த ட்ராட்ஸ்கியவாதிகளை அடிக்கடி சந்தித்துக் கொண்டிருப்பதை ரஷ்யாவின் உளவுத்துறை கண்டறிந்து பெரியாரிடம் விவரங்களை கூறி எச்சரிக்கை செய்கின்றனர்.பெரியாரும் எஸ். ராமநாதனைக் கடுமையாகக் கண்டனம் செய்கிறார், எச்சரிக்கை செய்கிறார்.

ஆனாலும் எஸ் ராமநாதனின் தொடர் செயற்பாடுகள் என்பது ட்ராட்ஸ்யவாதிகளைச் சந்திப்பதிலேயே குறியாய் இருந்துள்ளார். இந்நிலையில் ரஷ்யாவின் உளவுப் பிரிவு அதிகாரி ‘பிடய்’ என்பவர் பெரியாரை சந்தித்து, ‘உங்கள் குழுவினர் 28-05-1932-ல் ஸ்டாலினைச் சந்தித்துப் பேச உறுதி செய்யப்பட்டிருந்த ஏற்பாடு ரத்து செய்யப்பட்டு விட்டது என்றும், உங்கள் குழுவினர் 19-05-1932-க்குள் சோவியத் நாட்டில் இருந்து வெளியேறிவிட வேண்டும்’ என்றும் கூறிவிட்டனர்.

வேறு வழியின்றி 17-05-1932-ல் மாஸ்கோவில் இருந்து ஜெர்மெனி புறப்பட்டுச் சென்றனர். இப்படிப்பட்ட சூழல் உருவாகியது குறித்து பெரியார் மிகவும் மனம் புளுங்கிப் போனார். எஸ். ராமநாதன் மீது அவருக்கு நீங்காத ஆத்திர உணர்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக ஸ்டாலினை சந்திக்காமல் திரும்பியது அவருக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

பெரியார் சோவியத் புறப்படுகின்ற பொழுது “வாய்ப்பு இருந்தால் நான் அங்கேயே தங்கிவிடலாம் என்ற முடிவோடு போனேன்; ஆனால் எஸ். ராமநாதன் நடவடிக்கைகள் காரணமாக அங்கிருந்து உடனே வெளியேறும்படியாகிவிட்டது” என்று 1972ல் தம்மிடம் நேரில் கூறியதாக திருச்சி வே. ஆனைமுத்து (இறுதிக்காலத்தில் மார்க்சிய – பெரியாரிய பொதுவுடமை கட்சி தலைவராய் இருந்து மறைந்தவர்) தான் வெளியிட்ட ஆதார பூர்வமான ‘பெரியாரின் அயல் நாட்டுப் பயணக் குறிப்புகள்’ என்ற நூலில் தெளிவுபடக் கூறியுள்ளார்.

இறுதியில், 7/11/1932-ல் இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு 8/11/1932 தூத்துக்குடி வந்தடைகிறார். மதுரை (9) திருச்சி (10) வழியாக 11-11-1932-ல்
ஈரோடு வந்து அடைகிறார் பெரியார்.

ஈரோட்டுத் திட்டம்

அயல்நாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய திரும்பியவுடன் அதே சூட்டோடு ஈரோட்டில் தமது இல்லத்தில் 1932 டிசம்பர், 28, 29 நாட்களில் பொதுக்குழுவைக் கூட்டுகிறார். அதற்கு முன்பே தோழர்கள் மா சிங்காரவேலரிடம் தாம் எடுத்து வைத்திருந்த கருத்துக்களின் அடிப்படையில் ஈரோட்டுத் திட்டம் என்ற வரைவறிக்கை ஒன்றை மா. சிங்காரவேலரைக் கலந்து தயாரித்தார். அச்சடிக்கப்பட்ட
அப்புதிய திட்டம் கூட்டத்தில் கலந்து கொண்டோரிடம் படித்துக் காண்பிக்கப்பட்டது. பெரியார், சிங்காரவேலர் விளக்கவரை நிகழ்த்தினர்.

அத்திட்டத்தை சாமி சிதம்பரனாரும் வேறு சிலரும் கடுமையாக எதிர்த்தனர்.
“சுயமரியாதை இயக்கத்தில் அரசியல் கொள்கையே வேண்டாம்; சமூக இயக்கமாகவே இருந்து வேலை செய்தால் போதும்; அரசியல் இயக்கமாக மாற்றினால் நீதி கட்சி போலவே சமூக சீர்திருத்த வேலையை சரிவரச் செய்ய இயலாமல் போய்விடும்” என்பதே எதிர் அணியினரின் குற்றச்சாட்டுகள் ஆகும்.

பின்பு, “சுயமரியாதை இயக்கம் வழக்கம் போல் சமூக சீர்திருத்த பணிகளை மேற்கொள்ளலாம்; அதே நேரத்தில் அரசியல் அரங்கில் ‘சமதர்மக் கட்சி’ என்ற புதியதொரு அமைப்பை இணைத்துக் கொண்டு பயணிக்கலாம் என்று ஏகோபித்த முறையில் இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

எஸ். ராமநாதன் உட்பட பலரும் சமதர்மக் கட்சிக்கு எதிர்ப்பு நிலை காட்டி வந்தனர். ஆனால் பெரியாரோ, ‘பொருளாதாரத் துறையிலும் அரசியல் துறையிலும் வேலை செய்யாமல், சமூக முற்போக்கு எப்படி ஏற்படும்? ஒரு சமூகத்துக்கு பொருளாதாரமும், அரசியலும் அவசியமானது அல்லவா! இந்த இரண்டையும் விட்டுவிட்டு செய்யும் ஒரு முற்போக்கான நமது சுயமரியாதை இயக்கம் தேவையே இல்லை. சும்மா அலங்காரமாக- வேடிக்கையாக புராண முட்டாள்தனத்தையும், பார்ப்பன சூழ்ச்சியையும் பேசிக்கொண்டே காலங்கழிப்பது மாத்திரமே சுயமரியாதை இயக்கம் என்றால், அது அழிந்து போவதே மேலான காரியம் என்று சொல்லுவேன்”

“வர்ணாசிரமம் இருக்க வேண்டும்; ஜாதி தீண்டாமை இருக்க வேண்டும்; ராஜாக்கள் இருக்க வேண்டும்; மதம் இருக்க வேண்டும்; வேதம், புராணம், இதிகாசம் இருக்க வேண்டும்; இன்றைக்கு இருக்கிறது எல்லாம் இருக்க வேண்டும்; என்று சொல்லிக் கொண்டு இவற்றையெல்லாம் பலப்படுத்த நிலைக்க வைக்க வேண்டி வெள்ளைக் காரன் மட்டும் வெளியேற வேண்டும் என்கின்ற காங்கிரஸோ, சுயராஜ்யமோ, தேசியமோ, காந்தியமோ… சுயமரியாதை இயக்கத்திற்கு வைரியேயாகும். ஆகையால் சுயமரியாதை இயக்கத்தினரால் அழிக்கப்பட வேண்டியவற்றில் இந்த காங்கிரசும், காந்தியமும் முதன்மையானவை ஆகும்” என்று திருப்பத்தூரில் ஏப்ரல் 1933-ல் நடைபெற்ற மாநாட்டில் பெரியார் பேசினார். இவ்வுண்மையை அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

இதற்கிடையில், பகத் சிங் எழுதிய ‘நான் நாத்திகன் ஆனது ஏன்?’ என்ற நூலை தமிழில் தோழர் பா. ஜீவானந்தத்தைக் கொண்டு தமது “உண்மை விளக்கம்” பதிப்பகத்தில் அச்சிட்டு வெளியிடச் செய்தார் பெரியார். இதனால் தந்தை பெரியாரின் தமையனார் தோழர் ஈ.வே. கிருஷ்ணசாமி, தோழர் பா. ஜீவானந்தம் இருவரையும் பிரிட்டிஷ் போலீசார் கைது செய்தது மட்டுமின்றி, ஒட்டுமொத்த நூல்களையும் பறிமுதல் செய்தது.

மேலும் படிக்க:

ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்

எந்த வகையிலோ தமிழ்நாடு எங்கும் 145 சமதர்மச் சங்கங்கள் அமைக்கப்படுகின்றன. அனைத்து இடங்களிலும் பொதுவுடமை கொள்கைகள் பெரியார், மா. சிங்காரவேலர் உட்பட பலராலும் பிரச்சாரப் பொதுக் கூட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இப்படிப்பட்ட கூட்டங்களில் வேற்று மாநிலங்களில் இருந்தும் முற்போக்கு எண்ணம் கொண்ட தோழர்கள் வரவழைக்கப்பட்டு பேச வைக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யா சென்று வந்த பிறகு பெரியாரிடம் ஏற்பட்ட இந்த மாறுதல்கள் அரசியல் எதிரிகளால் குறிப்பாக பார்ப்பனர்களால் பிரிட்டீஷாருக்குப் பற்ற வைக்கப்பட்டு, பெரியார் உருவாக்கிய அமைப்புகளை தடை செய்வதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டிருந்த – அதே நேரத்தில் பெரியாரியிடம் மதிப்பு கொண்டு இருந்த சிலர், ‘அமைப்பு தடை செய்யப்பட்டு விட்டால், நாம் எந்த ஒரு இயக்க நடவடிக்கைகளிலும், சீர்திருத்த செயற்பாடுகளிலும் ஈடுபட முடியாது; எனவே சமதர்மக் கொள்கைகளை கைவிட்டு சீர்திருத்தக் கொள்கைகளை மட்டும் மேற்கொள்ளலாம் என்ற கோரிக்கைகள் பெரியார் முன் வலியுறுத்தப்பட்டன. இங்கேதான் பெரியாருக்கு சறுக்கல் ஏற்பட்டதாக உணர முடிகிறது.

பிரிட்டிஷாரின் தொல்லைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்; முதலில் அமைப்பை பாதுகாத்துக் கொள்வோம் என்ற பாணியில் பெரியாரும் தமது லட்சியப் பயணத்தில் சற்று பின் வாங்கலை உருவாக்கிக் கொண்டார். இதனை மறைந்த பேராசிரியர் தோழர் கோ. கேசவன் ‘பெரியாரியமும் பொதுவுடமை இயக்கமும்’ – என்ற தமது நூலில் வெள்ளைக்காரன் பெரியார் இயக்கத்தை தடை செய்ய முனையும் பொழுது, அதற்கு ஏற்ப வளைந்து நெளிந்து சட்டகத்துக்குள் நின்று இயக்கம் நடத்துவதே மேல்; அமைப்பைக் காப்பாற்றிக் கொள்வதே மேல் என்ற தவறான கண்ணோட்டத்திற்கு வந்து விட்டார் பெரியார் என்று பதிவிடுகிறார்.

அதில் உண்மை இல்லாமல் இல்லை என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். ஏனெனில் பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த முற்பட்ட சாதியினரும், சீர்திருத்த கொள்கைகளில் மட்டும் நாட்டம் உடையோரும் பெரியாரை பொதுவுடமை கொள்கைகளிலிருந்து பின்னுக்கு இழுப்பதிலேயே குறியாக இருந்து போராடி உள்ளனர் என்பதும் பல்வேறு பதிவுகள் மூலம் உணர முடிகிறது.

எந்த வகையில் பார்த்தாலும், இன்று ஆர் எஸ் எஸ்-பாஜக-இந்துத்துவ-பாசிச காவிக் கூட்டம், நாடு முழுமையும் பரவி சனாதனப் பார்ப்பனியத்தை நிலை நிறுத்தக்கூடிய இக்காலகட்டத்தில் பெரியாரின் பல அம்சங்களை, அவரது முன்னெடுப்புகளை நாம் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது; அவரது கோட்பாடுகளை இந்திய நாட்டு சூழலுக்கு ஏற்ப ஏற்று நடைமுறைப் படுத்த இணைத்துக் கொள்ள வேண்டி உள்ளது.

(தொடரும்…)

எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here