13.02.26 இல் சேலத்தில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் வெள்ளி பட்டறையில் வேலை செய்யும் சூரஜ் என்ற இளைஞர் பலியாகி உள்ளார். ஈரோடு கூட்டத்தை அடுத்து, 55 நாட்களுக்கு பிறகு மீண்டும் பொதுவெளிக்கு வந்திருந்தார் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்.

வரி ஏய்ப்பு நாயகனின் நிர்வாகிகள் சந்திப்பு!

சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கே.வி.பி கார்டனில், பகல் 12 மணிக்கு தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இரவில் கடும் பனி கொட்டினாலும் பகலில் சூரியன் சுட்டெரிக்கவே செய்கிறது. அப்படி இருந்தும் மேற்கூரை அமைக்காமல் திறந்தவெளி மைதானத்தில்,  மதிய நேரத்தில் பொறுப்பற்று இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

பிண நாயகனின்  கரூரின் கூட்ட நெரிசல் உயிர் பலியைத் தொடர்ந்து நீதிமன்றம் வரை பிரச்சனை சென்றது. தவெக – வினரும் பாஜகவினரும் கூட்டு சேர்ந்து கொண்டு தமிழக அரசால் தான், காவல்துறையின் அலட்சியத்தால் தான் உயிர்ப்பலி நடந்தது என்று திசை திருப்பினர்.

நீதிமன்றமோ மக்கள் கூடும் கூட்டங்களை நடத்துவதற்கான வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க உத்தரவிட்டது. அதன்படி வழிகாட்டு நெறிமுறைகள்  உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தவெக – வினரின் சேலம் கூட்டத்திலும் சில தயாரிப்பு ஏற்பாடுகள் இருக்கவே செய்தன.

க்யூ.ஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4 ஆயிரத்து 998 பேர் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இது பின்னர் மீறப்பட்டது.

இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு 7 இடங்களில் பார்க்கிங் வசதி, கழிவறை, குடிநீர் வசதி, ஆண்கள், பெண்கள் தனித்தனியாக செல்ல இரு நுழைவு வாயில்கள், கண்காணிப்பிற்காக 25 சிசிடிவி கேமராக்கள், 15 மருத்துவக்குழுக்கள், 6 மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 250 பேருக்கு ஒரு கேலரி என மொத்தம் 20 கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தன. கேலரியில் இருந்து 50 மீட்டர் தொலைவில், விஜய் பரப்புரை மேற்கொண்டார் – என களச் செய்திகளை மீடியாக்கள் பதிவிட்டுள்ளன.

பொதுமக்களுக்கும் தாராள அனுமதி!

விஜய்யை பார்ப்பதற்காக ஏராளமானோர் அங்கு வந்திருந்தனர். அதேசமயம், மைதானத்தில் நிர்வாகிகள் மட்டுமே இருந்த நிலையில், கூட்டம் பெரிதாக இல்லாததால், வந்திருந்த பொதுமக்களுக்கும் பிறகு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

பல ஆயிரம் பேரை ஒரு இடத்தில் திரட்டினால், அவர்களின் நலனுக்கு நாம்தான் பொறுப்பு என்ற புரிதல் இல்லாதவர்களாகவே தவெக வினர் நடந்து கொள்கின்றனர். தலைவன் விஜய் செல்ல மட்டும் தனி விமானம் குளிரூட்டப்பட்ட கேரவன் வண்டி. ஆனால் நிர்வாகிகளும் பொதுமக்களும் அரை மணி நேர விஜய் பேச்சு கேட்க 5 மணி நேரம் கால் கடுக்க கடும் வெயிலில் நிற்க வேண்டுமாம். இப்படித்தான் சேலத்திலும் நடந்து கொண்டனர்.

மதியத்தில் நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தால் அதற்கு பொருத்தமாக ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.  ஒன்று மேற்கூரை அமைத்து நிகழ்ச்சியை நடத்தி இருக்க வேண்டும்; அல்லது மாலையில் நிகழ்ச்சியை தொடங்கி இரவில் முடித்திருக்க வேண்டும். முக்கியமாக தேவையின்றி மக்களை கால்கடுக்க காக்க வைக்காமல், குறித்த நேரத்திற்கு விஜய் சரியாக வந்திருக்க வேண்டும். ஆனால் பல கூட்டங்களில் விஜய் தாமதமாக வருவதையே வழக்கமாக வைத்திருந்தார் என்பதை பலரும் விமர்சித்துள்ளனர்.

இதை புரிந்துகெள்ள தொண்டர்களின் நலனில் நிர்வாகிகளின் நலனில் பொதுமக்களின் நலனில் துளியாவது அக்கறை கொண்டவர்களாக இருந்தாக வேண்டும். ஒருவேளை பிறர் ஆலோசனை சொல்லி இருந்தாலும் கூட அதை அமல்படுத்துவதற்கு மக்களை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும். மக்களுக்காகவே கட்சி தொடங்கி இருப்பதாக கூவுபவர்கள்  எங்கே, எதில், ஏன் கோட்டை விட்டார்கள் என்பதை விஜயோ, புஷ்…சி ஆனந்தோ, ஆதவ் அர்ஜுனாவோ, நிர்மல் குமாரோ வெளிப்படையாக பேசத் துணிவார்களா?

இறந்தவர் நோயாளி அல்ல!

பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் இருந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுராஜ் என்பவர் மயங்கி விழுந்து பரிதாபமாக பலியாகியுள்ளார். கடும் வெயிலின் காரணமாக மயங்கி விழுந்தவர், உடனடியாக மீட்கப்பட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அம்மருத்துவமனையில் வரும் வழியிலேயே சுராஜ் இறந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது. அவரின் உடலை போலீசார் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுராஜ் பொதுக்கூட்டத்திற்கு தானாக வரவில்லை. தம் முதலாளியால் அனுப்பி வைக்கப்பட்டவர்.

இந்நிலையில், மாரடைப்பால் சூரஜ் மரணமடைந்தது வேதனை அளிக்கிறது எனக் குறிப்பிட்டு த.வெ.க நிர்வாகி சி.டி.ஆர் நிர்மல்குமார் இரங்கல் தெரிவித்து இருந்தார்.

நிர்மலின் அரைவேக்காட்டுத்தனம்!

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “இன்று த.வெ.க சார்பில் சேலதில் நடைபெற்ற கூட்டத்தைக் காண வந்த சூரஜ் என்ற இளைஞர் திடீர் உடல்நலக்குறைவால் மயங்கி உள்ளார் அவருக்கு உடனடியாக முதலுதவி செய்யபட்டு கழக நிர்வாகிகள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் மாரடைப்பால் சூரஜ் மரணமடைந்தது வேதனை அளிக்கிறது. இளைஞர் சூரஜின் இந்த எதிர்பாராத மரணத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேம்.” என்று பதிவிட்டு இருந்தார்.

அம்பலமாகும் உண்மை!

இந்த நிலையில், விஜய் கூட்டத்தில் மரணமடைந்த சூரஜூக்கு உடல் நல பிரச்சனை ஏதுவுமில்லை என்றும், த.வெ.க-வினர் கூறுவது உண்மையல்ல என்றும் சூரஜின் நண்பர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சூரஜ் வெள்ளி உருக்கும் தொழில் செய்து வருகிறார். உடலில் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நன்றாகத் தான் வேலை செய்து கொண்டிருந்தார்.

விஜயை பார்க்க வேண்டும் என கூட்டத்திற்கு சென்றுள்ளார். சென்ற இடத்தில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. அவரை எனக்கு 20 ஆண்டுகளாக தெரியும்.அவருக்கு எந்தவித உடல்நலக் குறைவும் இல்லை.” என்று அவர் கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் மீது பாய்ந்த அணில்கள்!

மக்கள் மயங்கி விழுவதையும், ஆம்புலன்ஸ் ஏற்றிச் செல்லப்படுவதையும் மீடியாக்கள் செய்திகளாக முயற்சித்தனர். இதைக் கண்டு ஆத்திரம் அடைந்த தவெக -வின் அணில் குஞ்சுகள் மீடியாக்களின் வண்டிகளின் மீது ஏறி நின்று செய்தியை வெளியிடக்கூடாது என்று அலப்பறை செய்துள்ளனர். ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியும் உள்ளனர்.

சூரஜ் க்கு தமிழில் பேசத் தெரியாது அப்படி இருந்தும் அவர் எப்படி விஜய் கூட்டத்திற்கு வந்தார்?  இது முக்கியமான ஒரு கேள்வி.

விஜய் கட்சியினர் தமது கூட்டத்திற்காக நிர்வாகிகளாக கலந்து கொள்வதற்கான டோக்கன்களை விநியோகித்துள்ளனர். சில்வர் பட்டறை முதலாளியும் குறிப்பிட்ட டோக்கன்களை வாங்கி கூட்டத்திற்காக ஆட்களை சப்ளை செய்துள்ளார். அப்படித்தான் தமிழே பேச வராது சூரஜ் தன் முதலாளி கொடுத்த டோக்கனை பெற்றுக் கொண்டு விஜயின் கூட்டத்திற்கு சென்றுள்ளார்.

விஜய்க்கு தனது ரசிகர்களான தமிழக இளைஞர்களின் மீது அக்கறை இல்லை. மிதிபட்டு சாகட்டும், வெயிலில் சுருண்டு விழுந்து சாகட்டும் என அலட்சியமாகவே கூட்டங்களை நடத்தி  தொடர்ந்து தன்னை ஒரு ‘பிண நாயகன்’ என்று நிரூபிக்கிறார். ஆனால் தமிழக மக்கள் அப்படி இல்லை. தம் இனத்தவரை மட்டும் இன்றி, பஞ்சம் பிழைக்க வரும் வடமாநிலத்தவரையும் உறவாகவே பார்க்கின்றனர்.

சேலத்தில் உயிர் பலியான சூரஜின் அண்டை வீட்டாரோ அவர் பலியானதை கேட்டு கண்ணீர் மல்க பேட்டி தருகின்றனர். தமிழில் பேசத் தெரியாவிட்டாலும் அவனை தமது உறவினர் போல கருதி அவன் குடும்பத்தின் துயரத்தை அழுது புலம்பித் தள்ளுகின்றனர்.

இந்த பாசமும், புரிதலும் விஜய்க்கு வருமா? சினிமாவில் மட்டும்தான் அப்படி பாசம் உள்ளவனாக தன்னை காட்ட முடியும். அதாவது நடிப்பு மட்டும்தான் வரும். இதை விஜயின் பின்னால் செல்லும் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

விஜயின் நோக்கம், விஜயின் உடன் நிற்கும் நிர்வாகிகளின் நோக்கம், தமிழக மக்களின் நலன் அல்ல; நேரடியாக தாமரையை கையில் ஏந்தி செல்வாக்குப் பெற முடியாத பாசிச பாஜகவின் B – டீமாக இங்குள்ள திராவிட கட்சிகளை ஒழிப்பது தான் ஒரே இலக்கு. இப்படி பாசிசத்துடன் உறவாடுபவனிடம் மனிதத் தன்மையை, மனிதாபிமானத்தை, சமூகப் பற்றை எதிர்பார்ப்பது நம் தவறுதான். இளைஞர்களே புரிந்து கொள்வோம். தற்குறிகள் என்றும் அணில் குஞ்சுகள் என்றும் அவமானப்படுவதில் இருந்து விடுபட்டு திருந்துவோம். மக்களை பலியிடும் பிண அரசியல் செய்யும் விஜயை அம்பலப்படுத்தி மக்கள் நிராகரிக்கும் படி களமாடுவோம்.

இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here