41 பேர் மரணமும் – ஒரே புள்ளியில் இணைந்த துரோகக் கும்பலும்!
இந்தப் பொறுக்கி அரசியல்வாதி, தவெக ஆரம்பித்து முதல் மாநாட்டை 26-10-2024-ல் விக்கிரவாண்டியில் நடத்திய பொழுது 6 பேர் மாண்டனர். 400க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர்.
கரூரைப் போலவே மாநாட்டிலும் கூட குடிதண்ணீர், உணவுப் பஞ்சம் கடுமையாக நிலவியது. தண்ணீர் தாகத்தால் துவண்டு விழுந்த மக்கள், கழிப்பறை நீரை குடித்துள்ளனர். இறந்தோருக்கு ஒரு மௌன அஞ்சலி கூட செலுத்தப்படவில்லை.
21-08-2025-ல் இரண்டாவது மாநாடு மதுரையில் நடைபெற்ற பொழுதும் ஓரிருவர் இறந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர். இவற்றையெல்லாம் பட்டியலிட்டு புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுன், நிர்மல் குமார், ஜான் ஆரோக்கியசாமி முதலானோரிடம் பனையூர் பங்களாவில் வைத்து எடுத்துரைத்து, இறந்து போனவர்களுக்காகவாவது மாநாடுகளில் அஞ்சலி செலுத்தி இருக்க வேண்டும்; அல்லது வீட்டிற்கு வந்த பிறகாவது தலைவர் அஞ்சலி செய்தியை தெரிவித்திருக்க வேண்டும் என்று கட்சியின் முன்னாள் செய்தித்துறை பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்து தற்போது அக்கட்சியில் இருந்து வெளியேறிய ஒருவர் பட்டியலிட்டு தொலைக்காட்சி விவாத மேடைகளில் புட்டு புட்டு விவரித்துக் கொண்டிருக்கிறார். அவ்வாறு அவர் கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்களிடம் எடுத்துரைத்த பொழுது புஸ்ஸி ஆனந்த் இப்படிக் கூறினாராம்:
‘ஐந்தாறு பேர் தானே செத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் மௌன அஞ்சலி தேவையா? எதற்கடுத்தாலும் பதட்டப் படக்கூடாது; உனக்கு இது மட்டும் தானே தெரியும். மாநாட்டில் 400-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தது தெரியுமா? என்று கேட்டாராம் புஸ்ஸி ஆனந்த்.
இத்தகு சூழலில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு பரப்புரையில் ஈடுபடத் துவங்கியதும், இந்த அரசியல் பொறுக்கிக்கு இருப்புக் கொள்ளவில்லை. எனவே, தன்னால் நாள்தோறும் பயணம் செய்ய முடியாது எனக் கூறி weekend பரப்புரையை ஒவ்வொரு சனிக்கிழமையும் துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த செப்டம்பர் 13 சனிக்கிழமை முதன்முதலாக திருச்சி மரக்கடையில் கூட்டம் என அறிவிக்கப்பட்டது. இதனை ஒட்டி கொள்ளையன் பாரிவேந்தனின்புதிய தலைமுறை, பாலிமர் இன்னும் சில தொலைக்காட்சி கூலி ஊடகங்கள், விஜய் வீட்டில் இருந்து புறப்படுகின்ற பொழுது இதோ பேண்ட் சட்டை மாட்டி விட்டார் விஜய்… இதோ வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டார் விஜய்… இதோ பஸ்ஸில் ஏறி விட்டார் விஜய்… இதோ விமான நிலையம் நோக்கி விரைகிறார் விஜய்… இதோ விமானத்தில் ஏறிவிட்டார் விஜய்… இதோ விமான நிலையம் வந்து விட்டார் விஜய்… இதோ அங்கிருந்து பஸ்ஸில் ஏறிவிட்டார் விஜய்…என அனைத்தையும் ஒன்று விடாமல் (கக்கூஸ்ஸில் போய் உட்கார்ந்ததை மட்டும்தான் காண்பிக்கவில்லை) கவர்ச்சியான பின்னிசை கொடுத்து, அவனுக்கு ஏற்ற ரசிகர்கள் மனம் குளிரும்படி பாடல்கள் இசைத்துக் கொண்டிருந்தன ஊடகங்கள்.
அதே தருணத்தில் திருச்சி மரக்கடையிலும், திருச்சி விமான நிலையத்திலும் கூட்டம் கடலென ஆர்ப்பரித்துக் காத்துக் கிடக்கின்ற (உண்மையில் அன்னம் தண்ணி இல்லாமல் சோர்ந்து கிடக்கின்ற) கூட்டத்தை அனைத்தையும் ஒலிபரப்பி, இந்த அரசியல் பொறுக்கிக்கு ஒளிவட்டப் பிம்பத்தினை இடைவெளி விடாமல் பாய்ச்சிக் கொண் டிருந்தன இந்தக் கூலித் தொலைக்காட்சி ஊடகங்கள். இது மிகவும் அருவருக்குத் தகுந்த ஊடக அறச் செயலாக அமைந்திருந்தன. ஒரு சினிமா கழிசடை, தமிழ்நாட்டில் சீரழிவு கலாச்சாரத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த ஒரு பொறுக்கிக்கு இத்தகு விளம்பரங்களை செய்ததற்கு இந்த விஞ்ஞான யுகத்தில் ஊடகங்கள் துளி அளவும் வெட்கப்படவில்லை. அதன் பிறகு அரியலூர், பரப்புரை மேற்கொண்டிருக்கிறான்.
படிக்க: கிரிமினல் விஜய்: தமிழக அரசியலில் முளைத்துள்ள புதிய விசச் செடி!
இதற்காக பிரத்யேகமாக அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய 19 அடி நீளம் 12 அடி அகலம் கொண்ட பஸ் ஒன்றினை தயார் செய்யச் சொல்லிப் பெற்றுக் கொண்டான். பஸ்ஸின் டாப் பகுதியை தான் உரையாற்றுவதற்கு வசதியான முறையில் மேடையாக அமைத்துக் கொண்டான். திருச்சி மரக்கடை என்பது மிக முக்கியமான இடம். அதுவும் பஜார் பகுதி. திருச்சி விமான நிலையத்திலிருந்து இவனது பஸ் கிளம்புகின்ற பொழுது முன்னும் பின்னும் ஆயிரக் கணக்கில் இருசக்கர வாகனங்களில் லும்பன் ரசிகர்கள் ஊளையிட்டுக் கொண்டே வந்தனர்.
ஒவ்வொரு கூட்டத்திலும் மக்கள் மயக்கம் அடைவதும் இடுபாடுகளில் சிக்குவதும் முதல் கூட்டத்திலேயே துவங்கிவிட்டது.
பின்பு செப்டம்பர் 20-ல் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரப் பரப்புரை செய்தான். எங்கே சென்றாலும் குறித்த நேரத்திற்கு போகின்ற பழக்கமே இவரிடம் இருந்ததில்லை. காரணம் அது ஒரு சேடிஸ்ட் மனப்பான்மை.
மக்களை – ரசிகர்களை காத்திருக்க வைப்பது. தனக்காக எவ்வளவு பெரிய கூட்டம் எவ்வளவு நேரம் காத்துக கிடக்கிறது என்று கெத்துக் காண்பித்து தனது கூலி ஊடகத் தொலைக்காட்சிகள் மூலமாக விடாது பரப்புரை செய்வது என்று சுகம் கண்டு வந்தார்.
இந்நிலையில் திமுக சார்பாக முப்பெரும் விழா (தந்தை பெரியார் பிறந்த நாள், அண்ணா பிறந்தநாள், திமுக உருவாக்கப்பட்ட நாள்) மாநாடு போன்று, இதே கரூரில் தனியாரின் மைதானத்தில் மாபெரும் பந்தல் அமைத்து மாபெரும் ஒரு நாள் நிகழ்ச்சியை நடத்தி அது திமுகவினர் மத்தியில் குறிப்பாக செந்தில் பாலாஜி முன்னெடுத்ததன் பெரும் பங்கு என்று பரவலாக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 27 அன்று ஏற்கனவே விஜய் பரப்புரை செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட பகுதி என்பது சென்னை மற்றும் திருவள்ளூராம். ஆனால் கரூரில் திமுகவிற்கு இப்படிப்பட்டதொரு பெயர் புகழ் வந்து விட்டதே என்ற காழ்ப்புணர்வு கொண்டு சென்னை திருவள்ளூர் பரப்புரை திட்டத்தை கைவிட்டு நாமக்கல், கரூர் பரப்புரை திட்டமாக ஆதவ் அர்ஜுன், புஸ்ஸி ஆனந்த் முதலானோருடன் கலந்து பேசி திட்டத்தை மாற்றி விடுகிறார்.
செப்டம்பர் 27 காலை 8:45 மணிக்கெல்லாம் விஜய் நாமக்கல்லில் பேசுகிறார் என ஒலி பெருக்கி மூலமாக ஆனந்த் நாமக்கல்லில் விளம்பரம் செய்து கொண்டிருந்தார். எனவே விடியும் முன்பே நாமக்கல் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு ரசிகர்கள், மக்கள் குவியத் தொடங்கி விட்டார்கள். நாமக்கல்லில் 8:45 மணிக்கு பேசுகிறார் என அறிவித்துவிட்டு, விஜய் தனது பனையூர் பங்களாவிலிருந்து 8:45க்குத் தான் புறப்பட்டு இருக்கிறான். மக்கள் இங்கே கொலை பட்டினியாக வெயிலில் காத்துக் கிடக்கின்ற பொழுது, அப்படி என்ன வேலை செய்து முறித்தார் சென்னையில் என்பது தான் அனைவரின் முன் உள்ள கேள்வி. கடைசியில் அவன் நாமக்கல்லுக்கு வருகின்ற பொழுது பகல் 2 மணி. நாமக்கல்லிலும் மக்கள் காத்துக் கிடந்து இடுப்பாடுகளில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கும் அளவிற்கு நிலைமைகள் முற்றிப் போயிருந்திருக்கின்றன.
படிக்க: திரை நாயகன் விஜய் கட்சி தொடங்கியது முதல் 41 உயிர்கள் காவு கொடுத்தது வரை!
இங்கே கரூரில் 12:00 மணிக்கு எல்லாம் வந்து விடுவார் என்று தவெக அணில் குஞ்சுகள் விளம்பர செய்து கொண்டிருந்தன. ஆனால் கூட்டம் நடந்த கரூர் வேலுச்சாமி புறத்திற்கு இந்த பொறுக்கி வந்த நேரமோ இரவு 7 மணிக்கு மேல் தான். விளம்பர செய்யப்பட்ட நேரத்தில் இருந்து ஏழு மணி நேரம் கடந்து கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகிறார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் உண்மையில் நடந்தவை என்ன?
- தவெக-வினர் கூட்டம் நடத்த அனுமதி கோரிய லைட் ஹவுஸ் பகுதியும், உழவர் சந்தை பகுதியும் மிகக் குறுகலான பகுதி என்பதாலும், அப்பகுதியின் மக்கள் கொள்ளளவு முறையே 7000, 5000 வரை மட்டுமே கூட முடியும் என்பதாலும், அவை ஆபத்துக்கள் விளைவிக்கக் கூடிய பகுதி என்பதாலும், சில நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி நடத்திய பிரச்சார கூட்டம் நடத்திய இடமான வேலுசாமிபுரத்தை (அங்கே 15000 பேர் வரை கூடலாம் என்பதால்) காவல்துறை பரிந்துரைத்தது. தவெக-வும் அதனை ஏற்றுக்கொண்டு செப்டம்பர் 26-ல் அதே இடத்தைக் கேட்டு விண்ணப்பம் அளித்தார் மாவட்டச் செயலாளர் மதியழகன்.
- பத்தாயிரம் பேர் மட்டுமே கூடுவர் என அவர்கள் எழுதிக் கொடுத்திருந்ததால், காவல்துறை விதிகளின்படி 50 பேருக்கு ஒரு போலீஸ் என்பதற்கு பதிலாக (இவர்களின் லும்பன் நடவடிக்கைகளை பல இடங்களில் கற்றுணர்ந்ததால்) 20 பேருக்கு ஒரு போலீஸ் என 500 பேரைக் குவித்து இருந்தது. இதுபோக, உயர்நிலை அதிகாரிகள் பலர் தனியே நியமிக்கப்பட்டிருந்தனர்.
- கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு 12 மணிக்கு இந்த பொறுக்கி வந்து விடுவான் என அணில் குஞ்சுகளால் விளம்பரம் செய்யப்பட்டுக் கொண்டேருந்ததால், ரசிகர்கள் எண்ணற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் குழந்தைகளுடன்கூட மக்கள் கூட்டம் காலையிலிருந்தே கூடத் துவங்கிக் காத்துக் கிடந்தனர்.
- உண்மையில் நாமக்கல் கூட்டம் முடிந்ததும் உடனடியாக புறப்பட்டு இருந்தால் 4 அல்லது 4:30 மணிக்கு கரூர் வேலுச்சாமிபுரத்தை வந்து அடைந்திருக்க முடியும். ஆனால் இந்த சேடிஸ்ட் சாவகாசமாக நாமக்கலில் இருந்து ரோடு ஷோ நடத்திக் கொண்டே வர அவனைப் பின் தொடர்ந்து நாமக்கல் கூட்டத்தில் பங்கேற்றோரும் தொடர்ந்து வந்தனர்.
- கரூர் எல்கையை 5:30-க்கெல்லாம் அடைந்துங்கூட விஜய் பஸ்ஸை வேண்டுமென்றே மிக மெதுவாக நகரச் செய்து கொண்டிருந்தான். அப்பொழுதுதான் கூட்டம் நடைபெறும் இடத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதும்; தன்னைப் பின்தொடர்ந்து வருவோரும் ஒன்றிணைந்தால் அளவுக்கு மீறிய கூட்டத்தை சினிமாத் துறை சூட்டிங் பாணியில் ‘மாபெரும் கூட்டத்தை’ கூட்டி தமது கெத்தை காண்பிக்க முயற்சித்தார்.
- அதற்குள் கரூர் வேலுச்சாமிபுரத்தில் காலையில் இருந்து வதங்கிக் கிடந்த மக்கள் தண்ணீர் இன்றி, உணவு இன்றி வதங்கிக் கிடந்ததோடு வெளியில் சென்று தண்ணீரோ உணவோ வாங்கி வரவோ, சிறுநீர் கழிப்பதற்கே கூட வெளியில் செல்ல முடியாத அளவிற்கு கூட்ட நெரிசலில் மாட்டிக்கொண்டு திண்டாட்டத்திற்கு உள்ளாகினர்.
- இந்நிலையில் சுமார் 6:30 மணியளவில் இவனது பஸ் வேலுச்சாமி புரத்தை நோக்கி நகர்கையில், கரூர் டிஎஸ்பி ஒருவர் பஸ்ஸை மறைத்து ‘அங்கு செல்ல வேண்டாம்; கூட்டம் மிகுதியாக இருக்கிறது; அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கான கூட்ட நெரிசல் உள்ளது. எனவே ஒரு 500 மீட்டருக்கு முன் நின்றவாறே பேசுங்கள்’- என வலியுறுத்தியும், கெஞ்சியும் கெட்டுப் பார்த்தார். ஆனால் பொறுக்கியின் அல்லக்கை ஆதவ் அர்ஜூன் ‘அதெல்லாம் முடியாது; எங்களுக்கு பேசுவதற்கு அனுமதித்த அந்த இடத்திற்கே போய்த் தீருவோம்’ – என சண்டியர்த் தனம் செய்து பஸ்சை முன்நோக்கி நகர வைத்தார்.
- ரோடு ஷோ நடத்தி வரும் பொழுது பஸ்ஸின் மேலே நின்று கையத்தவாறு வந்த இந்த பொறுக்கி, கூட்டம் நடைபெறும் இடம் நெறுங்க – நெறுங்க சேடிஸ்ட் மனப்பான்மையில் பஸ்ஸுக்குள் புகுந்து கொண்டு, தன் முகம் வெளியே தெரிய முடியாத படி லைட்டை அணைத்துக் கொண்டார்.
இது அரசியல் பேச்சை கேட்க வந்த கூட்டம் இல்லை ஆதலாலும், ஒரு நடிகனைக் காண வந்த கூட்டம் ஆதலாலும் குறிப்பிட்ட இடத்திற்கு பஸ் வந்து சேரும் முன்னே முன்னும் பின்னும் கூட்டம் ஓங்காரமிட்டு ஆர்ப்பரித்து பஸ்சை நோக்கி பாய்ந்து நெறுக்குகின்ற பொழுது கூடியிருந்த மக்கள் மிகக் கடுமையான நெரிசலில் சிக்கித் தவித்தனர். அப்பொழுதுதான் பல விரும்பத்தகாத கடும் நிகழ்வுகள் நடந்தேறின.
(தொடரும்…)
- எழில்மாறன்
தொடரட்டும் உங்கள் கட்டுரை எழில் மாறன் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்