பீகார் மாடல் வெற்றியும், நாம் தமிழர் சீமான் கும்பலின் அரசியலும்!
பாட்டாளி வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கின்ற வகையில் தமிழர் × தெலுங்கர், தமிழர் × மலையாளி, தமிழர் × கன்னடியர் போன்ற முரண்களை முன்வைத்து தமிழ் பாசிச அமைப்பாக வளர்ந்து வருகின்ற சீமான் கட்சி பாரம்பரிய பாசிச கட்சியான ஆர்எஸ்எஸ் பாஜகவுடன் சித்தாந்த ரீதியாக ஒன்றிணைகிறது.

பீகார் மாடலில் தமிழகத்தில் 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்” என்று ஆர்எஸ்எஸ் – பாஜக சங் பரிவார கும்பலும், இந்திய ஒன்றியத்தின் பிரதமரான மோடியும் கடந்த இரண்டு நாட்களாக கொக்கரித்து வருகின்றனர்.

பீகாரில் ஏற்கனவே ஆளும் கட்சியாக இருந்து வரும் நிதீஷ் குமாரின் சமாஜ்வாதி ஐக்கிய ஜனதா தளத்தை பயன்படுத்திக்கொண்டு கூட்டணி அமைத்து சிராக் பாஸ்வான் போன்ற பிழைப்புவாத தலித் தலைவர்களை ஒன்றிணைத்துக் கொண்டு தேர்தலில் நின்றனர்.

தன்னை ஒரு சோசியலிஸ்ட் என்று கூறிக் கொள்ளும் பித்தலாட்ட பேர்வழியான நிதீஷ் குமார் ராம் மனோகர் லோகியா மற்றும் பீகாரின் சமூக நீதிக் கொள்கைகளுக்காக போராடிய கற்பூரி தாக்கூர் போன்றவர்களின் வழி வந்தவர்.

பீகார் மக்கள் தொகையில் மூன்று சதவீதமே உள்ள குர்மி சாதியைச் சார்ந்த அதாவது அதிக அளவில் நிலவுடமை வைத்துள்ள குர்மி சாதியைச் சேர்ந்த பின்னணி கொண்டவர் என்றாலும், தாக்கூர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட மேல் சாதிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் கூட்டமைப்பில் தன்னை முன்னிறுத்தி செயல்படுகின்ற கடைந்தெடுத்த பிழைப்பு வாதியாவார்.

தான் முதல்வராக பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி, பிறகு காங்கிரசுடன் கூட்டணி, பிறகு மீண்டும் பாஜக உடன் கூட்டணி என்று கட்சி மாறி கட்சி கூட்டணி வைத்துக் கொண்டிருக்கின்ற தமிழகத்தில் ராமதாசையே மிஞ்சுகின்ற பச்சோந்தி அரசியல்வாதி தான் திருவாளர் நிதீஷ் குமார்.

அதேபோல ஒரு கூட்டணியை தமிழகத்தில் உருவாக்குவதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள். கூட்டணியில் இல்லாத ஓட்டுகளை பிரிக்கின்ற தமிழ் பாசிச அமைப்பாக வளர்ந்து வரும் சீமான் போன்றவர்களை தேசங் கடந்த தரகு முதலாளிகளில் ஒருவரான ஷிவ் நாடார் துணையுடன் வளர்த்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில், நாம் தமிழர் கட்சி ஆட்சி நடத்தினால், அது சர்வாதிகார ஆட்சியாகத் தான் இருக்கும் என்பதை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள். செயற்பாட்டு வரைவில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. தமது சர்வாதிகார ஆட்சிக்கு உதாரணமாக லீகுவான்யூவின் சிங்கப்பூரை காட்டுகிறார்கள்.

“தன்னலமற்ற”, “அன்பான” சர்வாதிகாரம் என்று சொல்லிக் கொண்டாலும், அது முதலாளித்துவ வர்க்க நலன் சார்ந்தது தான் என்பதில் ஐயமில்லை. அதை நாம் தமிழர் கட்சி மறைக்கவில்லை. “எல்லோரும் முதலாளிகள் ஆகலாம்” என்றும் ஆசை காட்டுகிறார்கள். இது ஏற்கனவே பல முதலாளித்துவ ஆதரவாளர்களிடம், கேட்டுக் கேட்டு புளித்துப் போன வாதம்.

“ஒரு நிறுவனத்தின் பங்கு வாங்கி வைத்திருக்கும், ஒரு தனி நபரும் முதலாளி தான்!” இந்தக் காலத்தில், அந்தக் கூற்றை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு காலம் மாறி விட்டது. ஆனால், புதிய மொந்தையில் பழைய கள் மாதிரி, நாம் தமிழர் கட்சி அதனை தமது செயற்பாட்டு வரைவில் எழுதியுள்ளது” என கலையரசன் தெரிவித்திருக்கிறார்.

முதலாளித்துவ சர்வாதிகாரத்தை எதிர்த்து முறியடிப்பதற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தான் தீர்வு என்று முன்வைக்கிறது கம்யூனிச இயக்கம். ஆனால், இரண்டுக்கும் இடையில் அன்பான சர்வாதிகாரம் என்ற பெயரில் பாட்டாளி வர்க்க முகாமிற்கு பெரும்பான்மை உழைக்கும் மக்கள் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் கைக்கூலிகளாக இந்த அன்பான சர்வாதிகாரத்தை முன்வைக்கின்ற சீமானியர்கள் களமாடுகிறார்கள்.

பீகாரில் நிதிஷ்குமார் மற்றும் பாஜக கூட்டணியின் வெற்றிக்கு அடிப்படையாக இருந்த தலித் அமைப்புகள் குறிப்பாக ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் போன்றவர்கள் செயல்பட்டதை போலவே தமிழகத்தில் புதிய தமிழகம் உள்ளிட்ட பிழைப்புவாத தலித் அமைப்புகள் பாஜக கூட்டணியில் இணைந்து செயல்படுகிறார்கள் இணைவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

படிக்க:

 மாடு மேய்க்கும் போராட்டம் நடத்திய கோமாளி சீமான்!

 பீகார் தேர்தல் முடிவுகள்: எதிர்கட்சிகளுக்கு அடித்துள்ள எச்சரிக்கை மணி!

கம்யூனிச இயக்கங்களின் மீது வெறுப்பு கொண்டவர்கள் என்ற பிரிவினரும், திராவிட இயக்கங்களின் மீது வெறுப்பு கொண்டவர்கள் என்ற பிரிவினர்களும் ஒன்று சேரும் புள்ளி பாஜக ஆதரவு என்ற கோடாக விரிவடைகிறது. மற்றொருபுறம் பாஜகவையும் வெறுக்கின்ற எப்படியாவது நல்லது நடந்தால் போதும் என்று சிந்திக்கின்ற அன்பான சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறவர்கள் சீமானிசத்தையும் சீமானையும் ஆதரிக்கிறார்கள்.

இதனால்தான் 2010 ஆம் ஆண்டு கட்சி ஆரம்பித்த சீமான் கட்சிக்கு, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் சேர்த்து நாம் 8.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் நாம் தமிழர் கட்சி மாநிலக் கட்சி என்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் நிலையை எட்டியுள்ளது. இவர்கள் பாஜகவிற்கு சாதகமாக திமுக ஆதரவு ஓட்டுக்களை பிரிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

தேர்தல் அரசியலில் நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகிறது என்பதல்ல நமது பிரச்சனை. பாட்டாளி வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கின்ற வகையில் தமிழர் × தெலுங்கர், தமிழர் × மலையாளி, தமிழர் × கன்னடியர் போன்ற முரண்களை முன்வைத்து தமிழ் பாசிச அமைப்பாக வளர்ந்து வருகின்ற சீமான் கட்சி பாரம்பரிய பாசிச கட்சியான ஆர்எஸ்எஸ் பாஜகவுடன் சித்தாந்த ரீதியாக ஒன்றிணைகிறது.

நடைமுறையில் எதிர்த்துப் பேசுவதாகவும், போராடுவதாகவும் கூறிக் கொண்டாலும் அன்பான சர்வாதிகாரம் என்பதை முன்வைக்கின்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வழியில் செயல்படுவது, பசும்பொன் முத்துராமலிங்க தேவரை உயர்த்திப் பிடிப்பது, பகிரங்கமாக அன்பான சர்வாதிகாரம் தமிழகத்திற்கு தேவை என்று பிரச்சாரம் செய்வது போன்றவற்றின் மூலமாக பாசிச சர்வாதிகாரத்தை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மனநிலையை உருவாக்குவதில் சீமான் முன்னேறி வருகிறார்.

‘சீமான் ஒரு நடிகர்’, ‘ கோமாளி’, ‘ குடிகாரர்,’ ‘மூக்கு நோண்டி’ என்றெல்லாம் பிரச்சாரம் செய்து அவரை முறியடிக்க முடியாது. மாறாக அவர் முன்வைக்கின்ற தமிழ் பாசிச அரசியலை எதிர்த்து முறியடிப்பதற்கு தயாராக வேண்டும் என்பதுதான் தற்போதைய கட்டத்தில் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு அனைத்து புரட்சிகர, ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைக்கும் பணிக்கு உதவுகின்ற செயல்பாடாகும்.

பார்த்தசாரதி

புதிய ஜனநாயகம் தினசரி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here