பருவகால மாற்றம் நடக்கும்போது, தொற்றுநோய் பரவுவது வழக்கமான ஒன்றுதான். அதைக் கட்டுப்படுத்துவதில் அரசுகளின் செயல்பாடுகள்தான் மிகவும் முக்கியமானது. கடந்த 2 ஆண்டுகளாக புதிதாக தோன்றியுள்ள கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடரும் நிலையில், வழமையான டெங்கு, ஜிகா வைரஸ் காய்ச்சல்களும் இந்தியாவின் சில பகுதிகளில் பரவி வருகின்றன.

ஏடிஸ் எனும் கொசு வகையால்தான் டெங்கு, சிக்கன் குனியா, ஜிகா வைரஸ் போன்ற காய்ச்சல் பரவுவதாக அறியப்பட்டுள்ளது. நன்னீரில் உற்பத்தியாகும் இவ்வகை கொசுக்கள் பகலில் மனிதர்களை கடிப்பதன் மூலமே இவ்வகை நோய்ப் பரவல் நடப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

கான்பூர் நகரில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள்!

கேரளா, மகாராஷ்டிராவைத் தொடர்ந்து இப்போது உ.பி யிலும் தொற்றுப்பரவல் கண்டறியப் பட்டுள்ளது. சென்ற மாதம் அக்டோபர் 23 ம் தேதி கான்பூரில் முதல் ஜிகா வைரஸ் நோயாளி அடையாளம் காணப்பட்டார். அதன் பின் கடந்த 20 நாட்களில் இந்த எண்ணிக்கை 123 ஐ தொட்டது. இதில் 6 கர்ப்பிணிப் பெண்களும் அடக்கம். ஜிகா வைரஸ் உயிர் சேதத்தை ஏற்படுத்தாது எனினும், கர்ப்பிணிப் பெண்களைத் தாக்கினால், குழந்தை தலை சிறுத்து பிறக்கும் அபாயம் உள்ளது. மேலும் வைரஸால் பாதிக்கப்டட்டவர்களுக்கு நரம்பியல் பிரச்சனைகளும், பக்கவாதமும் ஏற்படும் வாய்ப்புள்ளது.

ஒரு சதுர கி.மீட்டரில் 18,000 பேர் வசிக்கும் மக்கள் அடர்த்தி மிகுந்த நகரத்தில் நோய்த் தொற்று பரவுவது எளிதுதான். இருப்பினும், தொற்று கண்டறியப் பட்டவுடன் துரித நடவடிக்கை எடுத்திருந்தால், பரவலைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். இது குறித்து தேசிய தொற்றுநோய் பரவல் கட்டுப்பாட்டுத் திட்ட அதிகாரி
ஒருவர் கூறுகையில், ” பருவமழை காலம் தொடங்கியவுடன் நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுத்தால்தான் கொசு உற்பத்தியை தடுக்க முடியும். ஆனால் இந்த நடவடிக்கை ஒரு மாதம் தாமதமாக தொடங்கப் பட்டுள்ளது” என்றார்.

குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீர்

இதுகுறித்து கருத்து தெரிவித்த தேசிய மலேரிய ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானியான Dr. ஹிமத் சிங்,
” கேரள, மகாராஷ்டிர அரசுகள் ஜிகா வைரஸை கட்டுப்படுத்தி நல்ல நிர்வாகத்துக்கு உதாரணமாக விளங்குகின்றன. மேலும் கொசு உற்பத்தியை தடுத்தால்தான் நோய் பரவலை தடுக்க முடியும். வேறு எந்த வழியும் இல்லை” என உ.பி அரசின் தாமத நடவடிக்கையை சுட்டிக் காட்டுகிறார்.

இப்போது நோய்த்தொற்று கான்பூரைத் தாண்டி, தலைநகர் லக்னோ வரை பரவியுள்ளது கவலைக்குரிய விசயமாக பார்க்கப் படுகிறது. தினந்தோறும் புதிய நோயாளிகள் கண்டறியப்படும் நிலையில், ஏற்கனவே நாளொன்றுக்கு 400 – 600 மாதிரிகள் சோதனை என்பது இப்போது 200 – 300 என்ற அளவில் குறைந்துள்ளது. காரணம், சோதனைக்கான கிட் பற்றாக்குறை என்ற அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது.

ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களை 14 நாட்கள் கொசு வலைக்குள் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். வேலைக்குப் போனால்தான் குடும்பத்துக்கான உணவை உத்திரவாதப்படுத்தும் நிலையில் உள்ள தொழிலாளர்கள் எந்த இழப்பீடுமின்றி வீட்டில் எப்படி அடைந்து கிடக்க முடியும்? கொசு முட்டைகளை அழிப்பதற்கான மருந்து தெளிப்பதன் மூலம்தான் கொசு உற்பத்தியை தடுக்க முடியும் என்ற சூழலில் அந்தப் பணியை நகராட்சி ஊழியர்கள் செய்ய வில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு டெங்கு, ஜிகா போன்ற நோய்ப் பரவலை தீவிரமாக்கிக் கொண்டுள்ளது.

ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டவர் வீட்டில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்புகள்!

உ.பி – ஐ ஆளும் காவிச்சாமியார், யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, இந்து மதவெறியை பரப்புவதிலும், சிறுபான்மை மக்களுக்கெதிரான நடவடிக்கைகளிலும், அரசை விமர்சிப்பவர்களை ஒடுக்குவதிலும் காட்டும் அக்கறையை மக்கள் நலன் சார்ந்த சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் காட்டுவதில்லை. வெற்று அறிவிப்புகள், வாய்ச்சவடால்கள் என மோடியின் அடியொற்றி, உ.பி மாடலை வெள்ளோட்டம் விட்டு, ஜனநாயக மறுப்பில் எந்த எல்லைக்கும் இறங்கி ஆட்சி செய்யும் ஆதித்யநாத்தின் காவிப்பாசிச அரசிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

செய்தி ஆதாரம்: தபாசம் பர்னாகர்வாலா scroll.in இணைய பத்திரிகையில் எழுதிய கட்டுரை

தமிழில் ஆக்கம் : குரு

https://scroll.in/article/1010555/inside-uttar-pradeshs-zika-outbreak-can-indias-most-populous-state-contain-the-virus-spread

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here