’இன்றைய காலை பொழுது தினகரனோடு விடியட்டும்’ என்ற தொலைக்காட்சி விளம்பரத்தை கேட்டுவிட்டு பேருந்தில் ஏறி பயணம் செய்து கொண்டிருந்தபோது பக்கத்தில் அமர்ந்திருந்த நபர் தினகரனை படித்துக்கொண்டிருந்தார். பொதுவாக ஓசி பேப்பர் படிப்பவர்களை கண்டால் எரிச்சல் அடையும் எனது மனநிலை. இன்று பள்ளி கல்வி அலுவலகத்தில் வைத்து பணி நியமன ஆணை வழங்கி பல லட்சம் மோசடி என்ற செய்தி கவனத்தை ஈர்க்கவே அதை மனதில் குறித்துக் கொண்டேன்.
மோசடிகள் பலவிதம்! ஒரு பிராண்டை துவக்கி அந்த பிராண்ட் பிரபலப்படுகின்ற வகையில் கவனம் கொடுத்து பிரச்சாரம் செய்து, பல வருடம் நுகர்வாளர்களிடம் சென்று சேர்ப்பதற்கு பலரது உழைப்பும் தேவைப்படுகிறது. ஆனால் பிரபலமடைந்த பிராண்டுகளை நோகாமல் நொங்கு தின்பதற்கு உடலை வருத்திக் கொள்ளாத டெக்னாலஜியை மட்டும் கைப்பற்ற தெரிந்த கும்பல் எப்போதும் அலைந்துக் கொண்டிருக்கும் காலம் இது.

அலுவலகம் சென்றவுடன் முதல் வேலையாக தினகரனை தரவிரக்கம் செய்து படிக்க துவங்கினேன். அதில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வி இயக்க அலுவலகத்திற்கு கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி பட்டதாரி இளைஞர்கள் பலர் வந்துள்ளனர். அப்போது மோசடி கும்பல் ஒன்று பட்டதாரி இளைஞர்களிடம் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு தேர்வுத் துறையில் இளநிலை பணியாளர் பணி உள்ளதாகவும், கொரானா காலத்தில் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் பணி செய்ய வேண்டும் என்றும், இந்த வேலைக்காக தங்களுக்கு 2 லட்சம் கமிஷனாக கொடுத்தால் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர். அதை நம்பிய பட்டதாரிகளிடம் அந்த மோசடி கும்பல் வேலை பெற்றுத் தருவதாக நம்பிக்கையளித்து, பலரிடம் முன் பணமாக 50 ஆயிரம் வரை பெற்றுள்ளனர்.

பிறகு பணம் கொடுத்த பட்டதாரிகளை தொடர்பு கொண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்க வளாகத்திற்கு (டிபிஐ) வரவழைத்துள்ளனர். அப்போது பணி நியமன ஆணைகள் வழங்க உள்ளதால் மீதமுள்ள பணத்தை கொண்டு வரவேண்டும் என்றும் கூறியுள்ளனர் அதை நம்பி பட்டதாரிகள் பலர் மோசடி கும்பல் கூறியபடி பள்ளி கல்வி இயக்ககம் அமைந்துள்ள டிபிஐ வளாகத்திற்கு பணத்துடன் வந்துள்ளனர்..

பிறகு அந்த மோசடி கும்பல் (இனி மேலும் இந்த ஆபீசர்களை மோசடி கும்பல் என்று கூறுவது அந்த ’ஆண்டவனுக்கே’! பொறுக்காது) இளநிலை பணியாளர் பணிக்கான போலி பணி நியமன ஆணைகளை பணம் கொடுத்த பட்டதாரிகளுக்கு நேரில் வழங்கியுள்ளனர். அப்போது பணியில் சேருவதற்கான கையெழுத்தும் வாங்கி உள்ளனர். இது அனைத்தும் டிபிஐ வளாகத்தில் தான் நடந்துள்ளது. போலி பணி நியமன ஆணைகளை எடுத்துக்கொண்டு சென்னை முதன்மை கல்வி அதிகாரி மார்க்ஸ்சை பட்டதாரிகள் சந்தித்தனர்.

அப்போதுதான் அது போலியான பணி நியமன ஆணை என்று தெரிய வந்தது.. எவ்வளவு துணிச்சலுடன் இந்த ஆபீசர்கள் டிபிஐ வளாகத்தையே பயன்படுத்திக் கொண்டு மோசடி செய்துள்ளனர். உண்மையை காப்பாற்ற பொய் கூறினால் தவறே இல்லை என்று பிதற்றி திரியும் உத்தமர்களை இந்த உலகம் இன்னமும் நம்பிக் கொண்டு தான் உள்ளது.

அதே தினகரனில் 43 லட்சம் பண மோசடி செய்த போலி வழக்கறிஞருக்கு 6 ஆண்டு சிறை திண்டுக்கல் நீதிமன்றம் அதிரடி என்ற செய்தியும் கவனத்தை ஈர்க்கவே அதையும் சிறிது படித்துப் பார்க்க நேர்ந்தது. திண்டுக்கல் ஆர்.எம் காலனியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் உமையன். இவரது மகன் சிவநாத் 2015ஆம் ஆண்டு குற்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமீனில் வந்தார்.

இந்த நிலையில் முருகபவனத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் தன்னை ஒரு வழக்கறிஞர் என்று கூறிக்கொண்டு உமையனிடம் அறிமுகமாகியுள்ளார். உங்கள் மகன் சிவநாத்தோடு சேர்ந்து என் தம்பி சிவாவும் இந்த வழக்கில் தொடர்புடையவர் என வழக்குப் பதியப்பட்டுள்ளது. எனவே இருவரையும் நீதிமன்ற ஜாமீனில் வெளியே கொண்டு வருவதோடு வழக்கிலிருந்து விடுவித்து கொடுக்கிறேன் என அவர் உத்தரவாதம் கொடுத்துள்ளார்.

இதற்காக உமையனிடமிருந்து 2015 முதல் 2017ஆம் ஆண்டு வரை 15 தவணையாக ரூபாய் 43 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார். இதற்கிடையில் கடந்த ஆறு வருடங்களாக வழக்கிலிருந்து விடுவிக்க காலம் தாழ்த்தியும் வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கிலிருந்து சிவநாத் விடுவிக்கப் பட்டதாக கூறி அதற்கான நீதிமன்றத் தீர்ப்பு ஆவணத்தை ஜனவரி மாதம் உமையன் மற்றும் சிவநாத்திடம் வழங்கியுள்ளார். ஆனால் தீர்ப்பு ஆவணத்தின் மீது சந்தேகம் அடைந்த உமையன் சட்டத்துறை சார்ந்தவர்களிடம் விசாரித்தபோது அது போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணம் என்பதும் கார்த்திக் வழக்கறிஞரே அல்ல என்றும் நிரூபணமானது.

இந்த இரண்டு சம்பவங்களையும் பார்க்கும்போது ’உண்மை ஓய்வெடுக்கும்போது பொய் ஊர் சுற்றக் கிளம்பி விடும்’ என்ற பழமொழி நினைவுக்கு வந்தது. ஒரு பொருள் அல்லது ஒரு நிறுவனம் அல்லது ஒரு அமைப்பு பிரபலமானவுடன் அதன் பெயரை பயன்படுத்திக்கொண்டு அதே பாணியில் பலர் பதிலியாக துவங்குவது அல்லது பிராண்டை பயன்படுத்துவது புது விஷயம் அல்ல என்றாலும், இப்போது அதிகரித்து விட்டது. ஒரு சோப்பையோ, ஒரு பவுடரையோ அல்லது அது போன்ற ஒரு கன்சுயூமர் பொருளும் பிரபலமானால் உடனே அதனை பயன்படுத்திக்கொண்டு போலிகள் நடமாட கிளம்பிவிடுவார்கள்.

இன்று அரசு அலுவலகங்கள், நீதிமன்ற ஆணைகள், வங்கி கணக்குகள் போன்ற இடங்களில் துவங்கி போலி பத்திரங்கள், போலி மருந்துகள், போலி செய்திகள், போலி ஊடகங்கள், போலி கணக்குகள், அப்பப்பா எங்கும் நிரம்பி வழியும் போலிகள் கூட்டம். சாதியில்லை என்று முழங்கும் போலியர்களின் கூடாரம் சாதி புத்தியுடன், வாய் வழியாக சாதியை சொல்லி இழிவு படுத்துவது தொடங்கி எமது அமைப்பின் பெயரை கூட போலியாக மோசடி செய்ய துவங்கிவிட்டனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

எடுத்துக்காட்டாக மக்கள் அதிகாரம் என்று இணையதளத்தில் தேடினால் பத்து பெயர்கள் வந்து நிற்கிறது. ஆனால் 2015ஆம் ஆண்டு துவக்கப்பட்டது முதல் பல வழக்குகளை சந்தித்து அடக்குமுறைகளுக்கு ஆளாகி செயல்படுகின்ற அமைப்பு மற்றும் அதன் நிர்வாகிகளின் பெயர்கள் உயர் நீதிமன்ற வழக்கு ஏடுகளிலும், காவல்துறை ஆவணங்களிலும் பதியப்பட்டுள்ளது. ஆனால் போலியாக சிலர் அந்தப் பெயரை பயன்படுத்தி பிழைப்பு வாதத்தில் இறங்கியுள்ளது கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்து இருப்பது போலவே எனக்கும் அதிர்ச்சியாக தான் உள்ளது.
. ஆனால் ஒரு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்துவது எத்தகைய மோசடியானது என்பதை திருடர்கள் சிந்திப்பதே கிடையாது. இணையதளத்தில் யாரோ ஒருவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையை அங்கும் இங்கும் மொழிமாற்றம் செய்து தனது பெயரில் வெளியிடுவது. அல்லது அதேபோல கருத்து திருட்டு (Plagiarisam) செய்து செய்தி கட்டுரை எழுதுவது, அதனை தன்னுடைய படைப்புகள் போல வெளியிடுவது போன்ற மோசடி பெருத்துவிட்டது.

அதன் உச்சகட்டமாக ஆய்வுகளை கூட தனது பெயரில் வெளியிடுகின்ற அளவிற்கு மோசடிப் பேர்வழிகள் நிரம்பி வழிகின்றனர். எனினும் கட்டமைப்பு தோற்று விட்டது என்பதால் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்று மனம் பதைத்தது. இதை ஒப்பிட்டு பார்க்கும் போது வயிற்று பிழைப்புக்காக போலியாக நடிப்பவர்கள் மேல்தானோ என்ற கவலையுடன் இன்றைய மாலை பொழுதை முடித்துக் கொண்டேன்.

  • சண்.வீரபாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here