கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்று 20 ஆண்டுகள் கடந்துவிட்டது. இது ஏற்படுத்திய பாதிப்பு நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நடந்த கலவரங்கள், மற்றும் குஜராத் இனப்படுகொலை.
2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27, உ.பி அயோத்தியில் இருந்து புறப்பட்ட சபர்மதி எக்ஸ்பிரஸ் குஜராத் கோத்ரா வந்தடைந்தபோது கரசேவகர்கள் இருந்த 2 பெட்டியை மர்ம நபர்கள் (குஜராத் படுகொலைக்கு பின்னால் இந்த மர்ம நபர்கள் யார் என புரிந்து கொண்டவர்கள் பலர்) தீயிட்டு கொளுத்தினார்கள். இதனால் குஜராத்தில் நடந்த கலவரத்தில் பல ஆயிரம் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள். இதில் அகமதாபாத் ரந்திக்பூர் பில்கிஸ் பானோவின் குடும்பத்தினர் 13 பேரை தாக்கி பெண்களை பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்தது ஒரு கும்பல்.
பில்கிஸ் பானோவும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். அவரது 5 வயது குழந்தையை பாறையில் வீசி எறிந்து கொன்றது அந்த கொடூர மதவெறி கும்பல். அதிலிருந்து தப்பி பிழைத்த பில்கிஸ் பானோ நீதிக்காக போராடியதன் முடிவில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதில் ஒருவன் வழக்கின் போது இறந்து விட்டதால் மற்ற 11 பேரும் தண்டனையை அனுபவித்து வந்த நிலையில் கடந்த மாதம் குஜராத் அரசு அவர்களை ‘நன்னடத்தை’ காரணம் கூறி விடுதலை செய்தது.
அவர்களை விடுதலை செய்வதற்காக குஜராத் அரசு அமைத்த குழுவில் இருந்த ஒருவர் கர்மவினையின் அடிப்படையில் இவர்கள் நல்ல விஷயங்களை செய்து இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: பில்கிஸ் பானு வழக்கு: பார்ப்பனருக்கு ஒரு நீதி, சூத்திரனுக்கு ஒரு நீதி அப்பட்டமாக அரங்கேறும் மனுநீதி!
அவர்களின் விடுதலை குறித்து பேட்டி அளித்த குஜராத் பாஜக எம்எல்ஏ சி.கே. ரவுல்ஜி; விடுதலை செய்யப்பட்டவர்கள் பிராமணர்கள். பிராமணர்கள் நல்ல சன்ஸ்கார்( மதிப்பு) உடையவர்கள் என்றும் கூறியுள்ளார்.
இதைத்தான் மனுதர்மம் சொல்கிறது.
மனுதர்மம் 11 சுலோகம் 65 : பிராமணர்களைத் தவிர மற்றவர்களை பெண்கள் உட்பட கொல்லுவது பாவம் இல்லை.
பிராமணர்களை தவிர்த்து யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்றால், பிராமணர்கள் பெண்களை கொன்றது தவறு இல்லை என பார்ப்பனர்கள் வேதம் மனுதர்மம் சொல்கிறது. அவர்களின் சட்டப்படி கொலை செய்யலாம், பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யலாம். அதனால்தான் பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பிராமணர்கள் கொலை செய்தால் அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை குறித்த ஸ்லோகத்தை படித்து பாருங்கள்…
மனுதர்மம் அத் 8 ஸ்லோகம் 349: கொலை தொழில் புரிந்த மற்ற சாதியினரை தூக்கில் போடவேண்டும். பிராமணன் கொலை குற்றம் செய்தால் அவனது தலைமயிரை மொட்டை அடித்தலே தண்டனையாகும்.
பார்ப்பனர்களை பொறுத்தவரையில் பெண்களை பாலியல் பொருளாகத்தான் பயன்படுத்தினார்கள் என்பதை அவர்களின் மனுதர்மம் சொல்கிறது. குறிப்பான சிலவற்றைப் பார்ப்போம்.
மனுதர்மம் அத் 5 ஸ்லோகம் 148 : பெண் சுயவிருப்பத்தில் வாழக்கூடாது, சிறுவயதில் தந்தை கட்டுப்பாட்டிலும் பிறகு கணவன் கட்டுப்பாட்டிலும் கணவன் இறந்த பின்பு பிள்ளைகள் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும். எப்போதும் தன் விருப்பத்தின் பேரில் வாழக்கூடாது.
மனுதர்மம் அத் 9 ஸ்லோகம் 19 : பெண்கள் பெரும்பாலும் விபச்சாரிகள் என அநேக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மனுதர்மத்தின் இந்த கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் RSS ன் தலைவர் மோகன் பகவத் முத்தான வார்த்தைகளை உதிர்த்திருந்தார். “பாலியல் வன்புணர்வு நகர்புறங்களில் தான் அதிகம் நடக்கிறது எனவும் ஒரு பெண் தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் எனவும், வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டு வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும், அதை மீறினால் கணவன் மனைவியை நிராகரிக்கலாம் என்றும் கூறியிருந்தார்.” இது மோகன் பகவத்தின் கருத்து மட்டுமல்ல. மனுதர்ம அடிப்படையிலான அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் என விரும்பும் ஆர்எஸ்எஸின் கருத்து.

மனுதர்மத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த பாசிச கும்பல் தான் பெண்களை கொலை செய்தவர்களுக்கும் பாலியல் வன்புணர்வு செய்தவர்களுக்கும் ஆதரவாக கொடி பிடிக்கிறது.
உன்னாவ் பாலியல் வன்கொடுமை கொலையில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்எல்ஏ விடுதலை செய்துள்ளது.
கத்துவா சிறுமி ஆசிஃபா படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தியது.
ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை கொலையாளர்களுக்கு ஆதரவாக உ.பியின் யோகித்தியநாத் அரசு செயல்பட்டது.
தற்போது பில்கிஸ் பானோ வழக்கில் 13 பேரை கொன்று பாலியல் வன்கொடுமை செய்த கொலை குற்றவாளிகளை விடுதலை செய்தது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது அரசியல் சாசனம். ஆனால் பார்ப்பானின் மனுதர்மமோ பார்ப்பனனுக்கு ஒரு நீதி பாமரனுக்கு ஒரு நீதி இதுவே மனுநீதி என்கிறது. நாளை பாசிஸ்ட்டுகள் மனுதர்மத்தையே இந்திய அரசியலமைப்பு சட்டமாக மாற்றலாம். அதற்கான பாதைகளை செப்பனிட ஆரம்ப்பித்து விட்டார்கள். நாம் தடுக்கவில்லையென்றால் 2000 ஆண்டு பின்னோக்கி இழுத்து செல்லப்படுவோம்.
- நந்தன்