சிறைக் கைதிகளுக்கான நீதியின் குரல்!!!
திருமதி எஸ் எதிர் சிறைக் கண்காணிப்பாளர்!!!
சிறையில் கைதிக்கு தண்ணீர் வழங்க தாமதமானதை எதிர்த்து வரலாற்றில் பதிவான முதல் கலகக்குரல் இரண்டாம் நூற்றாண்டின் தமிழ்நாட்டின் புறநானூற்றுப் பாடல்தான் எனக் கூறினால் மறுப்பது கடினம் .
என்னை நாயைச் சங்கிலியில் பிணைத்து வருவதைப் போல இழுத்துக் கொண்டு வந்ததையும், வயிற்றுப் பசியை அடக்கக் கேட்ட தண்ணீரைக் கூட தாமதமாக கொண்டு வந்ததையையும் பொறுத்துக்கொண்டு எப்படி உயிர் வாழ்வேன் என உரைத்த கணைக்கால் இரும்பொறையின் பாடல் தமிழகத்தில் சிறைவாசிகளின் முதல் உரிமைக்குரல்.
‘குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத்தணிய
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ இவ் உலகத்தானே?’
கணைக்கால் இரும்பொறைக்குப் பின் 1800 வருடங்களாகியும் திகார் சிறையில் சிறை உரிமை கேட்ட சுனில் பத்ரா சித்திரவதைக்குள்ளான வழக்கில் சிறையில் வாடும் மனிதர்களும் மனிதத்தன்மையுடன் நடத்தப்பட வேண்டுமென தனது தீர்ப்பில் மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி ஆர் கிருஷ்ணய்யர் கவிதை நடையில் பதிவு செய்தார்.
16.11.2021 ஆம் நாள் தீர்ப்பளிக்கப்பட்ட திருமதி எஸ் எதிர் சிறைக்கண்காணிப்பாளர் என்ற வழக்கில் கைதிகளின் மன நலன் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்ற கடமை குற்றவியல் நடுவர்களுக்கும் சிறை நிர்வாகத்திற்கும் உண்டு என்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அவர்களது உத்தரவு காலனிய கால கைதிகள் சட்டம் 1900 -த்தில் சொல்லப்பட்ட மனநோயாளி என்ற கோட்பாட்டை புரட்டிப் போட்டதுடன் 2017 ஆம் மனநலம் பேணல் சட்டப்படி குற்றவியல் நடுவர்கள் தாங்கள் காவல் அடைப்பிற்கு உத்தரவிடும் கைதிகள் மனநோயுற்றவர்களாக இருக்கின்றார்களா என உரிய மருத்துவரைக்கொண்டு பரிசோதிப்பது அவசியமெனக் கூறி, மேலும் அவ்வழக்கில் மன நலனுக்காக சிகிட்சை பெறும் கைதியை திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றவும் கூறியது.
திருமதி எஸ் தீர்ப்பை படிக்கும்போது அதில் சொல்லப்பட்ட சில்வியா நாசரின் பியூட்டிஃபுல் மைண்ட் திரைப்படத்தை ஏற்கனவே பார்த்த நிறைவு இருந்தாலும் அதில் பரிந்துரைக்கப்பட்ட ஜெரி பின்டோவின் ‘எ புக் ஆஃப் லைட்’ நூலை படிக்காத குறையும் வந்து போகிறது.
சிறைவாசிகளின் மனித உரிமைகளைப் பற்றி அழுத்தமாகச் சொல்லும் நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்பில், பார்க்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தான் அருந்தும் கோப்பையை கையில் பிடிக்க இயலாமல் போனால் அவருக்கு உறிஞ்சு குழல் கோப்பையை வழங்க வேண்டுமெனவும் அது மறுக்கப்படுவது அவரை
மனிதத்தன்மையற்று கொடுமைப் படுத்துவதற்கு சமம் என 12 ஆவது பத்தியில் குறிப்பிட்டிருப்பது பழங்குடிகளுக்காக போராடி பொய்யான தீவிரவாதக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 84 வயது முதியவரான ஸ்தனிஸ்லாஸ் லூர்து சாமி என்ற ஸ்டான் சாமிக்கு பிணையும் அடிப்படை வசதிகளையும் மறுத்த பாம்பே உயர்நீதிமன்றம் இழைத்த நீதித்துறை படுகொலைக்கு எதிரான நீதியின் குரலாகவே கொள்ளலாம்.
சிறைவாசிக்கு நீருக்காகவும் நீரருந்தும் கோப்பைக்காகவும் எழுந்த முதல் உரிமைக்குரல் தெற்கிலிருந்து என்பது மகிழ்ச்சியூட்டுகிறது.
தி.லஜபதி ராய்
மதுரை-20
28.11.2021