“எங்களுக்கு விவசாயம் செய்ய மட்டுமல்ல எங்கள் நிலத்தை காப்பாற்றவும் தெரியும்.” டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகள் சங்கத் தலைவர் ஒருவரின் கூற்று இது. “நாங்கள் மீண்டும் மீண்டும் போராடுவோம், தலைமுறை கடந்தும் போராடுவோம், ஆனால் எங்கள் நிலங்களை விட்டுத்தர மாட்டோம்” என்ற முழக்கம் போராட்ட முகாம்களில் கடந்த நவம்பரில் இருந்து காணப்படுகிறது. செப்டம்பர் 2020-இல் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை விவசாயிகள் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். இந்த சட்டங்கள் சிறு விவசாயிகளை நஷ்டம் அடைய செய்து அவர்களை கார்ப்பரேட்டுகளின் கூலிஅடிமைகளாக அல்லது ஒப்பந்த தொழிலாளிகளாக மாற்றும் என்றும், விவசாயத்தை கார்ப்பரேட்களுக்கு திறந்துவிடுவதாகவும், அரசு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதைப் படிப்படியாக நிறுத்திவிடும் என்றும் உணர்ந்து அதற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

இந்திய பொருளாதாரம் விவசாயத்தை சார்ந்துள்ளது. 48 கோடி உழைக்கும் மக்களில் பாதிபேருக்கு மேல் விவசாயத்தை சார்ந்து உள்ளார்கள். அதிலும் 45% பேர் நிலவுடைமையுள்ள விவசாயிகளாகவும் மீதியுள்ள 55% பேர் நிலமற்ற விவசாயக் கூலிகளாகவும் உள்ளார்கள். நிலமுள்ள விவசாயிகளில் 84 சதவீதம் பேர் இரண்டு ஏக்கர் பரப்பளவிலான நிலமுடைய சிறு விவசாயிகள் ஆகும். மீதம் 16% பேர் பெருநில உடையவர்களாகவும் இருக்கிறார்கள். இது தவிர நிலம் சொந்தமாக இல்லாத விவசாய பெருநிறுவனங்களும் விவசாய உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கிறார்கள். அந்நிறுவனங்களே விதை, உரம், தொழில்நுட்பம், மற்றும் சேமிப்பு ஆகியவற்றில் பெரும்பங்கு வகிக்கிறார்கள். இப்புதிய வேளாண் சட்டங்கள் இதைப்போன்று பெருநிறுவனங்களுக்காகத்தான் கொண்டு வரப்பட்டுள்ளன.

முதலாவதாக, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம். இச்சட்டம் விளைபொருள் சந்தைப்படுத்துதல் கமிட்டிகள் மீதான மாநில அரசுகளின் கண்காணிப்பை மட்டுப்படுத்தும் அதேநேரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்தவித கட்டணமும் வரியும் செலுத்தாமல் புதிய சந்தைகளை உருவாக்கவும், விதைப்புக்காலத்துக்கு முன்னரே அரசால் நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு அல்லாமல் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அந்நிறுவனங்கள் சொல்லும் விலைக்குத்தான் விற்க வேண்டும்படியான நிலையை ஏற்படுத்தும்.

இரண்டாவதாக, விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் (ஒப்பந்த விவசாயம்). இச்சட்டம் விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபட ஊக்குவிக்கிறது. அதேசமயத்தில் இச்சட்டம் ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனத்துடன் ஏதாவது பிரச்சனை என்றால் விவசாயிகள் சட்டப்படியான தீர்வை நாடுவதை தடுக்கின்றன. ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட கார்ப்பரேட் நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டால் அதனை எதிர்த்து விவசாயி நீதிமன்றத்தை நாட முடியாது.

மூன்றாவதாக, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம். இச்சட்டம் உணவுப் பொருட்களை சேமித்துவைக்க இருக்கும் கட்டுப்பாடுகளை தகர்த்து, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் உணவு தானியங்களை சேமித்து வைக்கவும், செயற்கையான தட்டுப்பாடு உண்டாக்கி விலை அதிகரிக்கச் செய்வதையும் தடுக்காமல் இந்நிறுவனங்கள் உணவு தானியங்களை பெருமளவு சேமித்து வைக்கவும், சேமிப்பு கிடங்கு மற்றும் விநியோகத்தில் ஈடுபடவும் வழிவகை செய்கிறது.

வேளாண் சட்டங்களை கொண்டுவந்த அதே கூட்டத்தொடரில் 44 தொழிலாளர்நல சட்டங்களை நான்கு தொகுப்புகளாக சுருக்கி, தொழிலுறவு சட்டத் தொகுப்பு, சமூக பாதுகாப்பு சட்ட தொகுப்பு, தொழில்துறை பாதுகாப்பு, உடல்நலம், வேலை நிலைமைகள் குறித்த சட்டத் தொகுப்பு ஆகிய சட்டங்களை பாராளுமன்றம் நிறைவேற்றியது. இவற்றை அனைத்துத் தொழிலாளர் சங்கங்களும் தொழிலாளர் எதிர்ப்பு சட்டங்கள் என கூறின. இச்சட்டத்தின்படி நூறு தொழிலாளிகள் வரை வேலைசெய்யும் நிறுவனங்களை மூடுவதற்கு முன் அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை மாறி, 300 தொழிலாளர்கள் வரை வேலைசெய்யும் நிறுவனங்கள் எந்தவித அனுமதியும் கேட்காமலேயே தொழிலாளர்களை வேலையை விரட்டிவிட்டு நிறுவனத்தை மூடிக்கொள்ள வழிவகை செய்கிறது. இதன் மூலம் நிறுவனங்கள் எப்போது வேண்டுமானாலும் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கவும் தொழிலை நிறுத்திக் கொள்ளவும் வசதி செய்து கொடுக்கிறது. மேலும் ஒரு நிறுவனத்தில் ஒரே ஒரு தொழிற்சங்கம் இயங்கும் பட்சத்தில் அத்தொழிற்சங்கத்தில் 51% மேற்பட்ட தொழிலாளிகள் உறுப்பினர்களாக இருந்தால் மட்டுமே தொழில் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு அச்சங்கம் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று கூறுகிறது. அதுமட்டுமில்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்களை காலவரையின்றி சிறையில் அடைக்கவும் இச்சட்ட தொகுப்பு வழிவகை செய்கிறது.

இந்தியாவின் முக்கியமான விவசாய மற்றும் பெரும்பாலும் அமைப்பாக்கப்பட்ட விவசாயிகளும் நிறைந்த மாநிலமான பஞ்சாப் இந்த ஆபத்துக்களை முதல்முறையாக தெரிந்து கொண்டது. பஞ்சாபில் மட்டும் ஏறக்குறைய 32 பெரிய மற்றும் சிறிய அளவிலான விவசாய சங்கங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரிவினரைக் கொண்டதாகவும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்குபவையாகவும் உள்ளன. பெரும்பாலன சங்கங்கள் இடதுசாரி சங்கங்களாகும். சிலவை ஏறக்குறைய 1,50,000 விவசாயிகளை உறுப்பினர்களால் கொண்டுள்ளன. சிலவை சில நூறு விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளன. ஏற்கனவே பல போராட்டங்களில் மிகப் பெருமளவிலான விவசாயிகளை அணி திரட்டி உள்ளன. இந்த வேளாண் சட்டங்கள் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு 2020 நவம்பர்-ல் விவசாய சங்கங்கள் அனைத்தும் இணைந்து சம்யுக்த் கிஷான் மோர்ச்சா (SKM – விவசாயிகள் ஐக்கிய முன்னணி)-யைக் கட்டி அனைத்து விவசாயிகளையும் டெல்லியை நோக்கி செல்லக்கோரின.

விவசாய சங்கங்கள் வழிநடத்த பஞ்சாப்பை சேர்ந்த விவசாய சங்கங்கள் முன்னணியாக ஆயிரக்கணக்கான டிராக்டர்கள், ட்ராலிகள், மற்றும் லாரிகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியை நோக்கி படையெடுத்தனர். நவம்பர் 26, 2020-ல் அவர்கள் தங்கள் விவசாய சங்கக் கொடிகளை ஆட்டியபடி பல மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், அடுப்புகள், பாத்திரங்கள், போர்வைகள் முதலிய பொருட்களுடன் டெல்லியின் எல்லைகளில் வந்து குவிந்தனர். “நாங்கள் இங்கு தங்குவதற்காக வந்துள்ளோம், ஒன்றிய அரசை இந்த கருப்புச் சட்டங்களை திரும்பப் பெறவைக்காமல் திரும்பி போக மாட்டோம் என்று கூறினர்.”

டெல்லி எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்திய இடங்களிலேயே தற்காலிக முகாமிடுவதாக விவசாயிகள் முடிவெடுத்தனர். வெகு சீக்கிரத்திலேயே அங்கு சிறிய அளவிலான நகரங்களை உருவாகின. அவ்விடங்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்களையும், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நில சீர்திருத்தத்திற்காகப் போராடிய தியாகிகளின் பெயர்களையும் வைத்தனர். தங்கள் கிராமங்களை அழகிய ஓவியங்களாக தீட்டி காட்சிப்படுத்தினர். தங்கள் கைகளிலேயே சிறிய வீடுகளையும் அமைத்தனர். சில நாட்களிலேயே அவர்கள் நூலகங்களையும் படிக்கும் அறைகளையும், மருத்துவ வசதிகளையும், துணி துவைக்கும் இடங்களையும், சுடுநீர் தயாரிக்கும் இடங்களையும், டிராக்டர்களை சரி செய்வதற்கான சிறு தொழிற்கூடங்களையும், போன்களை சார்ஜ் செய்வதற்கான இடங்களையும் அமைத்தனர். தினமும் காய்கறிகளும், பாலும் பக்கத்து மாநிலமான ஹரியானாவிலிருந்து வரவழைத்தனர். சமூக சமையலறைகள் அமைத்து அங்குள்ளவர்களுக்கு குறைவில்லாமல் உணவுகளை வழங்கினர்.

விவசாயிகளின் இந்தப் பேரணி டெல்லி மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. ஏனென்றால் அவர்களுடைய வேர் கிராமங்களில் இருந்தன. மக்கள் புத்தகங்களை தானமாக வழங்கினர். மருத்துவர்கள் தங்கள் மருத்துவமனைகளில் விடுப்பு எடுத்துக்கொண்டு போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து அங்கு தங்கள் கிளினிக்குகளை அமைத்தனர். மருந்து கம்பெனிகள் மருந்துகளை இலவசமாக வழங்கின. இளைஞர் கழகங்கள் சேவை மையங்களை நிறுவினர். அதுமட்டுமில்லாமல் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்த சிறு-குறு முதலாளிகள் குவியல் குவியலாக போர்வைகளையும், கால்மிதியடிகள், தண்ணீர் பாட்டில்களையும் வழங்கினர். சீக்கிய கோயில்கள் சமூக சமயலறைகளை அமைத்து அங்கு வரும் ஒவ்வொருவருக்கும் உணவுகளை வழங்கினர். தற்போது டெல்லியை சுற்றி நான்கு இடங்களில் இம்மாதிரியான போராட்டக் களங்களை விவசாயிகள் உருவாக்கியுள்ளனர்.

ஒவ்வொரு விவசாய சங்கமும் தங்களின் சார்பில் மேடைகளை அமைத்துள்ளனர். அவற்றின் மொத்த நீளம் சுமார் 25 மைல். மேடைகளில் விவசாய சங்க தலைவர்களின் உரை மட்டுமல்லாது, ஒவ்வொரு மாலை நேரங்களிலும் விவசாயத்திலுள்ள பிரச்சினைகள், கிராமப்புற கடன் சுமை, அரசு அதிகாரிகளின் அக்கறையின்மை, அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் நிலை, பெண்களின் பிரச்சினைகள் பற்றிய இசை, நாடகம், கவிதை, நாட்டுப்புற பாட்டு போன்ற கலாச்சார நிகழ்வுகள் நடக்கின்றன.

மூன்று வாரங்களில் விவசாய செயற்பாட்டாளர்களும், பத்திரிக்கையாளர்களும் இணைந்து “டிராலி டைம்ஸ்” என்ற செய்தித்தாளை ஆரம்பித்தனர். அது இரண்டு வட்டார மொழிகளில் வெளிவந்தது. அதில் விவசாயிகளின் கோரிக்கைகளை விளக்கும் விதத்தில் கட்டுரைகள் வெளிவருகின்றன. பிப்ரவரி 2021-ல் பெண்கள் மட்டும் நடத்தக்கூடிய “கார்த்தி தார்த்தி” என்ற பத்திரிக்கை மூன்று மொழிகளில் வெளிவந்தது. பெண் விவசாயிகளின் பிரச்சினைகளையும், நிலமற்ற விவசாயிகளின் பிரச்சினைகளையும் அது பேசியது. அதுமட்டுமன்றி பல்வேறு சிறப்பு நாட்களையும் அவர்கள் கொண்டாட தொடங்கினர். ஜனவரி 18, 2021-ல் இந்த போராட்டத்தில் பெண் விவசாயிகளின் பங்கையும், மார்ச் 8-ல் சர்வதேச பெண்கள் தினத்தையும் கொண்டாடினர். அதில் சுமார் 50 ஆயிரம் பெண் விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களை வரவழைத்தது வரவழைத்தனர்.

டெல்லியில் இருக்கும் பெண்கள் அமைப்புகளுக்கும் அழைப்பிதழ் அழைப்புக் கொடுக்கப்பட்டது அவர்களும் கலந்து கொண்டனர்.

பிப்ரவரி 27 அன்று தாழ்த்தப்பட்ட மக்களால் கொண்டாடப்படும் குரு ரவிதாஸ் என்ற கவிஞரின் பிறந்தநாளைக் கொண்டாடினர். பெரும்பாலான மக்களை நெருங்கவும், பெண்களை கவுரவிக்கும் விதமாகவும், பெருவாரியான நிலங்களை வைத்திருக்கும் ஜாட் சாதி விவசாயிகளையும், நிலமற்ற தாழ்த்தப்பட்ட விவசாய கூலிகளையும் வர்க்க/சாதி வேறுபாடுகளைக் கடந்து இணைக்கும் விதமாகவும் இந்நாட்களை விவசாய சங்கங்கள் பயன்படுத்தி வருகின்றன.

சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 அன்று விவசாயிகளின் மிகப் பெரிய சங்கமான பஞ்சாப்பின் BKU, விசாரணையின்றி சிறைபடுத்தப்பட்டுள்ள மனித உரிமை செயல்பாட்டாளர்கள், மாணவர்கள், மற்றும் அறிவு ஜீவிகளின் படங்களை காட்சிக்கு வைத்து அவர்களின் விடுதலையை கோரிக்கையாக முன்வைத்தது.

போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கையில் பெரும் எண்ணிக்கையிலான கலைஞர்கள், எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள், மற்றும் ஓய்வுபெற்ற ராணுவத்தினர் தங்களுடைய அரசு விருதுகளை திருப்பி தந்ததோடு மட்டுமல்லாமல் போராடும் விவசாயிகளுடன் இணைந்துகொண்டு உடனடியாக இந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுமாறு கோரினர். இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் உலகின் பல பாகங்களிலிருந்தும், குறிப்பாக கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து சர்வதேச கார்ப்ரேட் மூலதன கொள்ளைக்கு எதிரான இந்த போராட்டத்தை ஆதரித்து பல தொழிற்சங்கங்கள் அறிக்கைகள் வெளியிட்டன.

தற்போது நடந்து வரும் இந்த போராட்டம் தான் உலகிலேயே மிகவும் நீண்ட நாட்களாக மிகப்பெரும் எண்ணிக்கையில் விவசாயிகள் கலந்து கொண்ட ஒரு போராட்டமாக இருந்து வருகிறது. இப்போராட்டம் பசுமை புரட்சி என்ற போர்வைக்கு உள்ளே புதைக்கப்பட்டுள்ள ஆழமான விவசாயிகள் பிரச்சினையை வெளிக்கொண்டு வருவதாகவும் உள்ளது. 1960களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சி என்பது பெரும் விளைச்சலைத் தரும் கலப்பினவிதைகளையும், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தப்படுவதும், அடிப்படை விவசாயக் கட்டமைப்பை மேம்படுத்துவதும், விவசாயத்தில் நவீன உபகரணங்களை பயன்படுத்துவதுமாக இருந்தது. பஞ்சாப் மாநிலம் தான் இந்தியாவிலேயே முதன்முதலாக இந்த பசுமைப் புரட்சியை உள்வாங்கிக்கொண்டு அதன் மூலம் கோதுமை மற்றும் அரிசி விளைச்சலை இரண்டு, மூன்று, நான்கு மடங்குகளாக 1960 மற்றும் 1970 களில் அதிகரித்தது. குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற அரசின் ஆதரவும் விவசாயிகளை மேலும் மேலும் இப்பயிர் இனங்களை தொடர்ந்து விளைவிக்கத் தூண்டியது.

பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் அபரிமிதமான விவசாய உற்பத்தியின் காரணமாக இந்தியா விரைவிலேயே உணவு பொருள் உற்பத்தியில் தன்னிறைவு என்ற நிலையை எட்டியது. அதனால் நியாயவிலைக் கடைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு உணவு தானியங்களை வழங்க முடிந்தது. ஆனால் 1970களின் மத்தியில் இறக்குமதி செய்யப்பட்ட உரங்கள், பூச்சிக்கொல்லிகள், மற்றும் கலப்பின விதைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் பெருநிறுவனங்கள் அவற்றின் விலைகளை ஏற்றினர். பணக்கார மற்றும் ஏழை விவசாயிகளுக்கான இடைவெளி மீண்டும் பெரிதாக ஆரம்பித்தது. அதுமட்டுமில்லாமல் தண்ணீர் பற்றாக்குறை, ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளைத் தொடர்ந்து பயன்படுத்தியதன் விளைவாக விவசாய நிலங்களின் மலட்டுத்தன்மை அதிகரித்தது. மேலும் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விளைவாக ஏற்பட்ட நோய் பாதிப்புகள் வெளிப்படத் தொடங்கின. ஏழை விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை தக்கவைத்துக்கொள்ள போராட வேண்டியிருந்தது.

1980-களில் பசுமை புரட்சியின் பலன்கள் மங்கத்தொடங்கின. 1990-களின் முற்பகுதியில் பஞ்சாபில் தொடர்ச்சியாக பல சிக்கல்கள் ஏற்பட்டன. விவசாய உள்ளீட்டு செலவுகள் அதிகரித்ததாலும், உணவுப் பொருட்களின் விலைகள் சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் குறையத் தொடங்கியதால் பல நடுத்தர விவசாயிகள் கடனின் பிடியில் சிக்கினர். சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் வேளாண் பழ்கலைக்கழகங்களின் ஆலோசனைப்படி கடனில் வாங்கிய ட்ராக்டர்கள், உரங்கள், விதைகள் ஆகியவை விவசாயிகளின் கழுத்தை நெறுக்கின. 89 சதவீத நடுத்தர மற்றும் 91 சதவீத சிறு விவசாயிகள் கடன் வலைக்குள் விழுந்தனர். 2012-13 புள்ளிவிவரம் 52 சதவீத விவசாயிகள் தங்கள் மாதாந்திர வீட்டு செலவைவிட குறைந்த அளவே சம்பாதித்தனர் என்று கூறுகிறது. அதுவும் வருமானத்திற்காக வேறு நிலங்களில் கூலிவேலை அல்லது வேறு வேலைகளுக்குச் சென்றாலும் இதுதான் அவர்களின் நிலையாக இருந்தது.

வாங்கிய கடனை திருப்பிச்செலுத்த வழியில்லாததால், விவசாயிகள் தங்களை மாய்த்துக்கொள்ள தொடங்கினர். தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் புள்ளிவிவரத்தின்படி 2000-2015காலகட்டத்தில் நாடு முழுவதும் விவசாயத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக ஏறக்குறைய 3,00,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

பஞ்சாபில் 16,600விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இதற்குப்பின் ஒன்றியஅரசு விவசாயிகளின் தற்கொலை சம்பந்தப்பட்ட புள்ளிவிவரங்களை வெளியிடுவதை நிறுத்திக்கொண்டது. ஆனால் பல்வேறு விவசாய சங்கத்தினரும் விவசாயிகளின் தற்கொலைகள் அபாயகட்டத்தை தாண்டி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். பஞ்சாபிலுள்ள விவசாய சங்கங்கள் மாநிலம் முழுவதும் விவசாயிகளைத் திரட்டி விவசாயிகளின் தற்கொலைக்கு அரசே பொறுப்பேற்கவேண்டும் என்று வலியுறுத்தின. விவசாயிகளின் கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்யவும், தற்கொலைசெய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கும், பொய்த்துப்போன விளைச்சலுக்கும் நிவாரணம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தின. இந்தப் பின்னணியில்தான் விவசாயத்திலுள்ள நெருக்கடிகளையும், இந்த வேளாண் சட்டங்களையும் அவற்றை விவசாயிகள் எதிப்பதையும் நாம் பார்க்கவேண்டும்.

விவசாய சீர்திருத்தங்கள் என்பது அரசின் நிழ்ச்சிநிரலாக பலவருடங்களாக இருந்துவந்துள்ளது. பல்வேறு பொருளாதார நிபுணர்கள் விவசாயத்திலிருந்து கணிசமான மக்களை விடுவித்து நகர்ப்புறங்களில் உள்ள தொழில்துறை உற்பத்தி நிறுவனங்களுக்கு வேலையாட்களாக அனுப்பவேண்டும் என்று பலவருடங்களாக அரசுக்கு ஆலோசனை கூறிவருகிறார்கள். ஆனால் இந்த முயற்சிக்கு விவசாயிகளும் சில சமயங்களில் மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏனென்றால் நகர்ப்புற தொழில்துறை நிறுவனங்களும், சேவை நிறுவனங்களும் எதிர்பார்த்த அளவுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. அவ்வாறு விவசாயத்திலிருந்து மக்கள் விரட்டப்படும்போது, அவர்கள் வெறும் அத்துக்கூலிகளாக நகர்ப்புறங்களில் அலையவேண்டியிருக்கும் என்பது பலருக்கும் புரிந்துள்ளது. ஆனால் இந்த பெருந்தொற்று ஊரடங்கை, தற்போதைய ஒன்றியஅரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி இத்தகைய சட்டங்களை கொண்டுவந்துள்ளது.

விவசாயிகள் இம்மூன்று வேளாண் சட்டங்களையும் தங்களுக்கான மரண சாசனமாகவே பார்க்கிறார்கள். இச்சட்டங்களால் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டு விரட்டியடிக்கப்படுவார்கள் என்றும், பெரிய கார்பொரேட் நிறுவனங்கள்தான் இனிமேல் நிலங்களையும் விவசாயத்தையும் கட்டுப்படுத்துவார்கள் என்பதையும் புரிந்துகொண்டுள்ளார்கள். இச்சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் இரண்டு வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிட்டது. அவற்றை பஞ்சாபின் எழுத்துமொழியான குர்முகி மொழியில் பெயர்த்து அவற்றை ஒவ்வொரு கிராமம் கிராமமாக விவசாய சங்கங்கள் கொண்டு சென்றன. இச்சட்டங்களைக் குறித்து ஆண்களும் பெண்களுமாய் நீண்ட விவாதங்களை கட்டியமைத்தன. விவசாயிகளை இச்சட்டங்கள் கமிஷன் மண்டிகளின் பிடியிலிருந்து விடுவித்து அவர்கள் எங்கு வேண்டுமானாலும் தங்கள் விளைபொருட்களை அதிக விலைக்கு விற்கலாம் என்று அரசு கூறிக்கொண்டது. தற்போது அனைத்து விவசாயிகளும் அரசு கொள்முதல் நிலையங்களில் தாங்கள் விளைவித்த குறிப்பாக அரிசி மற்றும் கோதுமையை குறைந்தபட்ச ஆதரவு விலையில் விற்றுவருகின்றனர்.

இந்த வேளாண் சட்டங்களின் மூலம் மண்டிகளை ஒழித்துவிட்டு, தங்கள் வாழ்வாதாரமான நிலங்களை விட்டு விரட்டி விவசாயத்தில் நுழையும் பெரும் கார்பொரேட் நிறுவனங்களின் விவசாய கூலிகளாக தங்களை மாற்றிவிடும் என்று விவசாயிகள் அறிந்துள்ளார்கள். அரசானது குறைந்த பட்ச ஆதரவு விலை, கொள்முதல், மானியங்கள், இலவச மின்சாரம் போன்ற விவசாயிகளின் உரிமைகளை படிப்படியாக கைவிட்டு விலகிவிடும் என்று கருதுகிறார்கள்.

2020 செப்டம்பர் மாதத்தில் விவசாயிகளிடம் எந்த ஒரு ஆலோசனையையும் கேட்காமலும், பாராளுமன்றத்தில் எந்தவித விவாதமுமில்லாமல் மூன்று வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டபோது, விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து போராடவும், ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கும் அறைகூவல் விடுத்தன. தனித்தனியாகவும், ஒன்றாக இணைந்தும் மிகப்பெரிய பேரணிகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று விவசாயிகளை மட்டுமல்லாமல் மக்களின் அனைத்து தரப்பினரையும் திரட்டின. போராட்டங்கள் பஞ்சாபில் மட்டுமல்லாது அதன் பக்கத்து மாநிலங்களனான ராஜஸ்தான், ஹரியானா, மேற்கு உத்திரபிரதேசம், மஹாராஷ்டிரா, மற்றும் தெலுங்கானாவிலும் வெடித்தன. நாடு முழுவதுமுள்ள சிறு மற்றும் பெரிய விவசாய சங்கங்களும் தங்களை போராட்டத்தில் இணைத்துக்கொண்டன. நவம்பர் 25-26தேதிகளில் டெல்லியை நோக்கி பேரணி தொடங்கியது.

சந்தையை கட்டுப்படுத்தும் பெருநிறுவங்களின் கீழ் விவசாயத்தை கொண்டுவருவதும், சிறு, குறு, நடுத்தர விவசாயிகளை நிலங்களை விட்டு விரட்டியடிப்பதும் என்ற அரசின் கொள்கைக்கு விவசாயிகளின் பெருந்திரட்சியான இந்த போராட்டம் பெரும் சவாலாக விளங்குகிறது. விவசாயத்தில் காலடிவைக்கும் அதானி மற்றும் அம்பானி கும்பல்களை போராடும் விவசாயிகள் குறிவைக்கிறார்கள். இதில் அதானி கும்பல் சர்வதேச நிதியாதிக்க கும்பலுடன் கூட்டுவைத்து விவசாய விளைபொருட்கள் சேமிப்பு, போக்குவரத்து, மற்றும் சந்தைப்படுத்தலில் ஈடுபடவுள்ளது.

அம்பானி கும்பலோ, விவசாயத்திற்கு தேவையான தொழில்நுட்பம் மற்றும் விவசாயக்கருவிகளின் மேம்பாட்டில் ஈடுபடுவதாக உள்ளது. விவசாயிகள் தங்கள் நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் விழுங்க வரும் இந்த இரண்டு தரகு முதலாளிகளைக்குறித்து கவலை கொண்டுள்ளனர். இந்த இரண்டு தரகு முதலாளிகளும் ஆளுங்கட்சி மற்றும் அரசுடன் உள்ள தங்கள் நெருக்கத்தைப் பயன்படுத்தி தங்களுக்கு சாதகமான சட்டங்களையும் திட்டங்களையும் கொண்டுவருவதை விவசாயிகள் நன்கு அறிந்துள்ளனர். அதனால் தான் விவசாயிகள், குறிப்பாக பெண்கள் கிலா ராய்ப்பூர் என்ற இடத்தில் அதானிக்குச் சொந்தமான தரை துறைமுகத்தை முற்றுகையிட்டுள்ளனர். அதேபோல அம்பானியின் சுங்கச்சாவடிகளை ஆக்கிரமித்து, வாகனங்கள் இலவசமாக கடந்துசெல்ல வைத்துள்ளனர்.

இந்த சிறப்புமிக்க போராட்டத்தில் மிகவும் அதிசயிக்கத்தக்க விடயம் என்பது இதில் பங்கேற்றுள்ள பெண்களின் எண்ணக்கைதான். முகாமிட்டுள்ள பெண்களில் பெரும்பாலானோர் சாதாரண பின்னணி கொண்டுள்ளவர்கள் மற்றும் விவசாயக் கூலிகளான தாழ்த்தப்பட்டவர்கள். இவர்களில் பலர் முதல்முறையாக இப்படிப்பட்ட போராட்டத்தில் பங்கேற்றுஇருந்தாலும், பல பத்துவருடங்களாக விவசாயிகளில் தற்கொலைக்கும், பொய்த்துப்போன விளைச்சலுக்காகவும் நிவாரணம்கோரியும், நில ஆர்ஜித்துக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகவும், பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளை எதிர்த்தும் குரல் கொடுத்தவர்கள். இவர்களில் பலரும் விவசாய சங்களின் உறுப்பினர்கள். விவசாய சங்கங்கள், குறிப்பாக இடதுசாரி சங்கங்களின் முயற்சியால் தான் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் இப்போதைய போராட்டத்தில் பங்குபெறமுடிந்திருக்கிறது.

வயதில் மூத்த ஆண் விவசாயிகளே தற்போதைய போராட்டத்தை தலைமையேற்று நடத்திவருகின்றனர். சில விவசாய சங்கங்கள் பெண்கள் அணியை வைத்திருந்தாலும் பெண்கள் யாரும் தலைமைப்பொறுப்பில் இல்லை. ஆனால் அவர்கள் பின்னிருந்து போராட்டத்துக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் நிதி திரட்டுவது, பத்திரிக்கையாளர் சந்திப்பு, சுற்றுவட்டார குடும்பங்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது போன்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வேலைகளை செய்துவருகின்றனர். டெல்லியை நோக்கி பேரணி ஆரம்பித்த நேரத்தில், பெண்கள் இரவு நேரங்களில் பல கிராமங்களுக்கும் சென்று “ஜாகோ (விழித்திரு)” என்ற பாடலைப்பாடி மக்களைத் திரட்டினர். பொதுவாக திருமணத்தின்போது மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தாரை விழித்திருக்கச் சொல்லும் இப்பாடல் தான் சுதந்திரப்போராட்ட காலத்தில் பிரிட்டிஷாருக்கு எதிராக மக்களைத் திரட்டவும் பயன்பட்டது.

பெண்களின் போராட்ட அனுபவங்கள் போராடும் விவசாயிகளின் கோரிக்கையுடன் இணைந்து நிலமில்லாதவர்களுக்கு நிலம், குறைந்தபட்ச கூலி உத்திரவாதம், மற்றும் பாலின பாகுபாடு இல்லாமல் சமமான கூலி என்று விரிந்திருக்கின்றன.

இந்நெடும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பெண்களால் இப்போராட்டத்திற்கு ஒரு புதிய கோணம் ஏற்பட்டுள்ளது. நிலமில்லாத கூலிகளாகவும், கணவனை மற்றும் மகன்களை தற்கொலைகளுக்கு பறிகொடுத்தவர்களாகவும், கடனை சுமப்பவர்களாகவும், அரசின் நிவாரணத்தை கோருபவர்களாகவும், பலவந்தமாக நிலத்திலிருந்து விரட்டப்பட்டவர்களாகவும், பாலியல் வன்முறைகளுக்கு எதிராக போராடுபவர்களாகவும் இருப்பதால், நடைபெறும் இந்தப் போராட்டம் வெறும் அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பானதாக சுருங்கிவிடாமல், அதன் கோரிக்கைகள் மேற்கண்டவாறு விரிந்துள்ளன. பெண்களின் கடந்தகால பணிகள் மற்றும் செயல்பாட்டை “விவசாயிகள் மற்றும் தொழிலாளர் தற்கொலையால் பாதிக்கப்பட்டோர் கமிட்டி” என்ற அமைப்பின் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.

பசுமைப் புரட்சி பஞ்சாபில் உச்சத்தில் இருந்தபோது, தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எந்த வேலைவாய்ப்பும் இருக்கவில்லை. ஆண்களால் கைவிடப்பட்ட வேலைகூட அவர்களுக்கு கிடைக்கவில்லை அப்படியே வேலைகிடைத்தாலும் எந்தவித உயர்வும் இல்லாத கூலியே கிடைத்தது. விவசாயத்தில் பாலின பாகுபாடு என்பது ஒரு பொதுவான பண்பாகவே உள்ளது. பெண்களுக்கு கோதுமை பயிரிடும் காலங்களில் எந்தவிதமான வேலையும் கிடைக்காது, அதுவே நெல் மற்றும் பழங்கள் பயிரிடப்பட்டால் அதுவும் வருடத்தில் சில நாட்கள் மட்டுமே கூலி வேலை கிடைக்கும். மற்ற நாட்களில் பருத்தி சேகரித்தல் வேலை கிடைக்கும். அதுவும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ்தான். வருடத்திற்கு 150 நாட்களுக்குமேல் வேலை என்பது இருக்காது.

கிராமப்புறங்களில் குறிப்பாக பெண்களின் வேலை முறையும் வெகுவாக மாறியுள்ளது. கூலி என்பது ஒரு ஹெக்டருக்கு நடப்பட்ட நெல், பருத்தி குவிண்டால், ஹெக்டருக்கு அறுக்கப்பட்ட பேல்கள் என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. பழம் மற்றும் காய்கறித் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களின் கூலி அவர்களால் ஆண்களுக்கு நிகராக வேலை செய்யமுடியாது என்ற எண்ணத்தில் மூன்றில் ஒரு பங்கு தான் கொடுக்கப்படுகிறது.

ஆண்கள் வேலைதேடி பக்கத்துக்கு நகரங்களுக்கு செல்லும்போது, ஊரிலேயே தங்கி தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் பெண்கள் கூலி வேலைக்கான வாய்ப்புகளை தேடுகிறார்கள். விவசாய வேலைகள் அரிதாகும்போது, விவசாயம் அல்லாத வேலைகளும் அரிதாகின்றன. பெண்கள் நிலமில்லாதவர்களாகவும், சொத்து இல்லாதவர்களாகவும் இருப்பதால் பஞ்சாபின் விளிம்புநிலையில் உள்ளவர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக உள்ளனர்.

சிறு அளவிலான நிலங்களை வைத்திருக்கும் பெண்கள் ஆண்களைவிட துயரங்களை சுமப்பவர்களாகவும், இன்னும் தீவிரமான சிக்கலில் உள்ளவர்களாகவும் உள்ளனர். 2020டிசம்பர் மாதத்தின் மத்தியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளோடு பஞ்சாபின் மால்வா பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் இணைந்துகொண்டனர். அவர்கள் பேருந்துகளிலிருந்து இறங்கியபோது அவர்கள் தங்கள் கைகளில் சங்கத்தின் கொடிகளுடன் வேறு சில புகைப்படங்களையும் கொண்டுவந்திருந்தனர். அவை கடனை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலைசெய்து இறந்துபோன தங்கள் கணவர் மற்றும் மகன்களின் புகைப்படங்கள். அதில் பெரும்பாலான பெண்கள் தங்கள் கைகளில் இரண்டு புகைப்படங்களையும் வைத்திருந்தனர். தங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் நிலங்களை விட்டுத்தர மாட்டோமென முழங்கினர்.

கடந்த பல வருடங்களாக பஞ்சாபின் நிலமற்ற தாழ்த்தப்பட்டவர்கள் தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களுக்காக பலகட்ட போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர். தற்போது தாழ்த்தப்பட்டவர்களின் மக்கள்தொகை 32 சதவீதமாக இருந்தபோதும் தனியார் வசமுள்ள நிலங்களில் 3.5 சதவீதம் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களின் உடைமையாக உள்ளது. தேசியஅளவில் இது 8.6 சதவீதமாகவும், அவர்களின் மக்கள் தொகை 16.6சதவீதமாகவும் உள்ளது. நிலஉரிமைக்காக குரல் கொடுப்பவர்களில் பெண்கள் முன்னணியில் உள்ளனர். கடந்த சில வருடங்களில் பெண்கள் அமைப்பாக திரண்டு இவ்வாறு பறிக்கப்பட்ட நிலங்களை மீட்டுள்ளனர்.

விவசாயிகளின் இந்த போராட்டம் கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்துடன் ஒன்பது மாதங்களை கடந்துள்ளது. ஒன்றிய அரசு நடத்திய 11 சுற்று பேச்சுவார்த்தைகள் எந்த ஒரு முடிவும் இல்லாமல் முடிவுற்றது. அதுமுதல் ஒன்றிய அரசின் அணுகுமுறையானது போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, போராட்டத்தையும் போராட்டக்காரர்களையும் இழிவுபடுத்துவது, போராடும் விவசாயிகள் விவசாயம் செய்யாமலும், கூலி பெறாமலும் போராட்டக் களத்தில் இருப்பதால் அவர்களின் செலவினங்கள் அதிகரிக்கச் செய்வதன்மூலம் போராட்டத்தை கலையச் செய்வது, மற்றும் விவசாயிகளை அப்படியே போராடவிட்டு சோர்ந்துபோகவிடுவது என்பதாக மாறியுள்ளது. ஆனால் தலைநகரின் எல்லையில் கூடியிருக்கும் விவசாயிகள் நம்பிக்கையுடனும், உத்வேகத்துடனும் இந்தியாவின் நீண்டகால வன்முறையற்ற இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கின்றனர்.

இந்த ஒன்பது மாதங்களில் விவசாயிகளின் போராட்டமானது பெரும் முக்கியத்துவத்தை பெற்று வருகிறது. தற்போது அவர்களுடைய குரல் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பபெறவேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளின் நலனுக்காகவும் ஒலிக்கிறது. அனைத்து விவசாய சங்கங்களும் பொதுவிநியோக முறையை நாடு முழுவதும் விரிவுபடுத்தவேண்டும் என்றும் அனைத்து மக்களின் உணவு உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோருகின்றன. பெருநிறுவனங்கள் விவசாயிகளை சுரண்டுவதை நிறுத்தும் வகையிலான கட்டுப்பாடுகளை கொண்டுவரவேண்டும் என்றும் ஒன்றியஅரசிடம் வலியுறுத்துகின்றன.

இந்திய ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் சர்வதேச நிதி ஆணையம், சர்வதேசிய வங்கிகள், மற்றும் தேசம்கடந்த கார்பொரேட் நிறுவனங்கள் என்று இதற்குப்பின்னால் இருப்பவர்கள் யார் என்று தெளிவாகத் தெரிகிறது. டெல்லியின் எல்லைகளில் அமைதியாக அதேசமயம் உறுதியாக ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள் என்பதும் நமக்குத் புரிகிறது. இச்சட்டங்கள் திரும்பப்பெறப்படுகிறதோ இல்லையோ, விவசாயிகளின் இப்போராட்டம் வெற்றியடைந்துள்ளது. இப்போராட்டம் பல புதிய இணைவுகளை உருவாக்கியும், பழைய தவறுகளையும் கலைந்துள்ளது. இந்தியாவுக்கு ஒரு புதிய நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. விவசாயிகளின் நீண்ட நெடிய இந்த போராட்டம் வேளாண் சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்லாமல் நீதிக்காகவும், சுயமரியாதைக்காகவும் நடக்கும் ஒரு போராட்டமாகத் திகழ்கிறது.

நன்றி: countercurrents

தமிழில்: செந்தழல்

https://countercurrents.org/2021/08/agrarian-crisis-and-the-longest-farmers-protest-in-indian-history/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here