இன்று நாடு முழுவதும் கொரானாவின் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டு நாம் அதற்கு எதிராக பல்வேறு சிக்கல்களையும், அன்றாட வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களையும் எதிர்கொண்டு போராடி இருக்கிறோம். நமது நேசத்துக்குரிய சிலரை இழந்தும் இருக்கிறோம். மரணம் என்பது மனிதனின் வாழ்க்கையில் தவிர்க்க இயலாத ஒரு இயற்கை நிகழ்வு என்றபோதிலும், இந்த காலகட்டத்தில் நமது அன்புக்கு உரியவர்கள் முறையான மருத்துவ சிகிச்சை இல்லாமலும் அல்லது காலதாமதமாக மருத்துவ சிகிச்சைக்கு செல்வதாலும், உயிரை இழக்கும் அபாயம் நேரிட்டுள்ளது என்பது ஒரு வேதனையான விடயமாகும். இதில் மீள்வதற்குள் மூன்றாம் அலையின் அபாயம் குறித்து உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையும், இந்திய, தமிழக அரசுகளின் எச்சரிக்கையும் மக்களுக்கு வரப்போகும் ஆபத்தை புரிய வைத்துள்ளது.
இந்த இடத்தில் இந்திய அரசின் கொரானாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய அண்டப்புளுகுகள் அம்பலமாகி உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் மற்றும் சென்டர் பார் குளோபல் டெவலப்மெண்ட் (Centre for Global Development) என்ற அமைப்பின் ஆய்வாளர்களும் இணைந்து நடத்திய ஆய்வில் அரசு அறிவித்த புள்ளி விவரங்கள் மோசடியானவை. அதாவது 4,21,000 பேர் மட்டுமே இறந்துள்ளதாக கூறும் விவரங்கள் தவறானவை உண்மையில் 8 முதல் 10 மடங்கு அதிகமாக அதாவது 34 லட்சம் முதல் 47 லட்சம் வரை இறந்து இருக்கலாம் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இதை விவரிக்கும் அரவிந்த் சுப்பிரமணியன் “உண்மையான பேரிழப்புகள் பல லட்சங்களாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்தியப் பிரிவினை மற்றும் சுதந்திரத்துக்கு பின் ஏற்பட்ட மிகப் பெரிய மனித பேரவலமாக இது இருக்கலாம்” என்று கூறுகிறார்.
தடுப்பு மருத்துவம் என்ற பெயரில் மொத்த மக்கள் தொகையில், 20% பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தினால் போதும் என்ற கணக்கீடு செய்யப்படுகிறது. இது தடுப்பூசி உற்பத்தி செய்வதில் மோடி அரசின் கையாலாகாத தனத்தினால் உருவான மருந்துவக் கொள்கையாகும். தனக்கு வேண்டிய சீரம் நிறுவனம் (Serum Institute) உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளுக்கு மொத்த லாபத்தையும் விள்ளாமல், விரியாமல் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீர்மானிக்கப்பட்ட இலக்காகும். 135 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் அனைவருக்கும் உரிய நாட்களுக்குள் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடுகள் இல்லாமல் இருப்பதால் வைக்கப்படும் இலக்கு ஆகும்.
இன்று வரை 43 கோடி பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள நிலையில், இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 5% மட்டுமே ஆகும். பல விமர்சனங்களுக்கு பிறகு ஜூலை மாதம் மூன்றாம் வாரத்தில் 66 கோடி தடுப்பூசிகளை சீரம், பாரத் பயோடெக் (Bharat Biotech) இருவரிடம் புதிய விலை நிர்ணய அடிப்படையில் பெற ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது பாசிச மோடி அரசு. தடுப்பூசிகள் மூலம் கார்ப்பரேட்டுகள் கொள்ளையிட வழிவகுக்கும் மோடியின் தடுப்பூசி கொள்கை பற்றி நிறைய விவாதிக்கப்பட்டு மோடியின் கார்ப்பரேட் ஆதரவு முகமூடி கிழிந்து தொங்குகிறது. 33.30 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் 16.30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மக்கள் தொகையில் 49% ஆகும். இந்த வீதம் உள்ளதையே அமெரிக்காவின் தலைமை மருத்துவ ஆலோசகர் அன்டனி ஃபெளச்சி (Anthony Fauci), அரசு தடுப்பூசி கொள்கையில் தவறான திசையில் செல்வதாக விமர்சித்துள்ளார். இந்தியாவை இதனுடன் ஒப்பிட்டால் நிலைமையின் விபரீதம் புரியும்.
இந்த நிலையில் கொரானாவால் பாதிக்கப்பட்ட மக்களை உயிர் காக்கும் தடுப்பூசிகள் வீணாகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் தகவலாகும். மொத்த ஊசிகளில் குறிப்பிட்ட சதவீதம் வீணாவது அனுமதிக்கப்பட்டுள்ளது என்றாலும் தமிழகத்தில் 4% முதல் 6% வரை வீணடிக்கப்பட்டு வருகிறது என்பது ஏற்க முடியாத அம்சமாகும். பொதுவாக தடுப்பூசிகள் கார்ப்பரேட் மருந்துக் கம்பெனிகளின் விற்பனை நோக்கில் இருப்பதால், கொரானா தடுப்பூசியும் அது போன்ற ஒன்றாக இருக்குமோ என தயங்கும் சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுக்கின்றனர். ஆனால் இந்த கொரானாவை பொருத்தவரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 99% பேர் கொரானா மரணத்தில் இருந்து தப்பித்துள்ளதாக மத்திய தீநுண்ணியல் துறை (Virology) அறிவித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அறிவியல் உலகத்தில் கொரானா போன்ற பெரும் தொற்றுகளுக்கு எதிராக ஒருபுறம் மனிதகுலம் போராடிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் சிலர் குறைந்தபட்சம் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு கூட அச்சப்பட்டு கொண்டு அறிவியலுக்கு புறம்பான பல்வேறு அனுபவவாதங்களை முன்வைக்கின்றனர். நீண்டகாலம் பழமைவாதம், மூடநம்பிக்கை, அறிவியல் பூர்வமற்ற அனுபவவாதக் கண்ணோட்டம் போன்றவற்றின் காரணமாக நமது நாட்டில் பெருந்தொற்றை எதிர்கொள்வதில் ஒரு தேக்க நிலை நிலவுகிறது. இத்தகைய அறியாமையில் உள்ளோர் மொத்த மக்கள் தொகையில் மிக மிகக் குறைந்த அளவேயாகும்.
அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும், அந்த தடுப்பூசிகளை, மருந்துகளை தயாரிப்பதற்கு அரசு உரிய மருத்துவ கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. அதே சமயம் தமிழகத்தில் தடுப்பூசி வீணாகிறது என்று ஏப்ரல் மாதம் விகடனில் வெளிவந்த செய்தி அவமானகரமானது ஆகும். இந்த நிலைமையை விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் ஒரளவு தமிழக அரசும், சுகாதாரத் துறையும் மாற்றியுள்ளது. தற்போதைய சூழலில் அனைவரும் தடுப்பூசி பெற முனைப்பு காட்டி வருகின்றனர். ஆனால் மோடி அரசின் தமிழக புறக்கணிப்பு கொள்கை காரணமாக போதுமான தடுப்பூசி கிடைக்கவில்லை என்பது தான் நிலைமையாகும். தமிழகத்தின் உடனடி தேவை 1 கோடி டோஸ்கள் என்ற கோரிக்கை இந்திய அரசிடம் எழுப்பப் பட்டுள்ளது.
ஒரளவு மருத்துவ கட்டமைப்பு வசதி கொண்ட தமிழகம், இந்தியாவின் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவே திரும்பிப் பார்க்கின்ற அளவிற்கு மருத்துவ தலைநகரமாக சென்னை விளங்குகிறது. ஆனால் இதில் முக்கியமாக கவனத்தை ஈர்க்கும் மலர், குளோபல், ராமச்சந்திரா, அப்பல்லோ, மியாட், விஜயா போன்ற நட்சத்திர, உயர்தர மருத்துவமனைகள், அங்கு செல்லும் நோயாளிகளின் சேமிப்பு பணத்தை உறிஞ்சுகின்ற கார்ப்பரேட் மருத்துவமனைகள் ஆகும்.
குடியிருக்க பங்களா, ஊர் சுற்ற கார், மாலை நேரத்தில் காலார நடப்பதற்கு மொட்டை மாடி, குறைந்தபட்சம் பாதாம் கொட்டை– அதிகபட்சம் அக்ரூட் பருப்பு, சத்தான காய்கறிகள், கீரை வகைகள், அன்றாடம் முட்டை, மூன்று வேளை பால், வாரத்திற்கு மூன்று முறை மட்டன் – சிக்கன், மீன் என்று வாழ்க்கையை கழிக்கும் மேட்டுக்குடிகள் தான் இந்த நட்சத்திர மருத்துவமனைகளில் கிடைக்கும் மருத்துவத்தை அனுபவிக்கின்றனர். கொரானா தாக்குவதில் வர்க்க வேறுபாடு இல்லை. ஏழை, பணக்காரன் வித்தியாசம் இன்றி தாக்குகிறது. ஆனால் மருத்துவ சிகிச்சையில் ஏழைகள் அரசு மருத்துவமனையிலும், பணக்காரர்கள் நட்சத்திர மருத்துவமனைகளிலும் சிகி ச்சை பெறுகின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் ஆகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் அரசு மருத்துவ கட்டமைப்பையே நம்பி வாழ்கின்றனர். அரசு மருத்துவமனையில் இலவசமாக அனைத்து வசதிகளும் கிடைப்பதாலும், அங்கு மட்டுமே கிடைக்கும் தரமான சிகிச்சையும் கூட தமது வரிப்பணத்தில் இருந்து அளிக்கப்படுகிறது என்பது கூட இந்த மக்களுக்கு தெரியாது. ஆரம்ப சுகாதார நிலையங்களை தாண்டாத அவல நிலையிலேயே நமது நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்க்கையை கடக்கின்றனர்.
அன்றாடம் உடல் வலி, தலைவலி, காய்ச்சல், சளி, வறட்டு இருமல், சளி இருமல், கை, கால் குடைச்சல் போன்ற எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவற்றை சகித்துக்கொண்டு தனது ஊரில் இருக்கின்ற நாட்டு மருத்துவர்களிடம் மருத்துவம் பார்ப்பதும் அல்லது மருந்து கடைகளில் நேராக பிரச்சினையை சொல்லி இரண்டு வேளை, மூன்று வேலைக்கு மருந்து மாத்திரைகளை வாங்கி போட்டுக்கொண்டு உழைப்பின் ஈடுபடுவதற்கு சென்றுவிடுகின்றனர். இது அவர்களின் விருப்ப பூர்வமான தெரிவு அல்ல என்றபோதிலும், வேறு வழி அவர்களுக்கு கிடையாது என்பதே நிதர்சனம்.
வறுமையும், வாங்கிய கடன்களும், நுண் கடன்களும், வாழ்க்கைக்கான தேவைகளும் அவர்களை வீடுகளுக்குள் முடங்கி விடாமல் வீதியில் இறங்கி வேலை செய்ய தூண்டுகிறது. இதுதான் அவர்களின் வாழ்க்கை நிலைமையாக உள்ளது. ஆனால் இது ஒன்றையும் அறியாத ’விகடன்’ போன்ற ஊடகங்கள் அபத்தமான கருத்துக்களை, அதாவது தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுக்கின்றனர் என்ற அவதூறுகளை பரப்புகிறார்கள்.
அனைத்தையும் அனுபவிக்கும் வாய்ப்புள்ள மேட்டுக்குடி, தனக்கு தெரிந்த அரைகுறை, அறிவியல் உண்மைகளை கதாகாலட்சேபம் நடத்த கிளம்பிவிடுகிறார்கள். அரசு மருத்துவமனையை அதிகரிப்பது எப்படி? தரமான மருத்துவ வசதி கட்டமைப்பை இலவசமாக வழங்குவது எப்படி? மருத்துவம் உள்ளிட்ட உயிர்காக்கும் அம்சங்கள் அரசாங்கத்தின் பொறுப்பு என்ற முறையில் வலியுறுத்தி அதை செய்ய வைப்பது எப்படி? அதற்கான ஒரு சமூகச் சூழலை உருவாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் இவர்கள் வாயைத் திறப்பதே கிடையாது.
மாறாக ஆங்கில இதழ்களிலும், அறிவியல் ஏடுகளிலும் வரும் கட்டுரைகளை தனது ’மூளைவீக்கத்தால்’ படித்துவிட்டு, உழைக்கும் மக்களுக்கு இலவச ஆலோசனைகளை அள்ளி வழங்குகின்றனர். ஆளும் வர்க்கத்தின் மீதும் கையாலாகாத மோடி கும்பலின் மீதும் ஆத்திரம் வராமல் மக்களின் மீதே பழியை போட்டு தனது ஆளும்வர்க்க சேவையை செய்கின்றனர். அரசு தவறிழக்கிறது என்று விமர்சித்தால், நம்மிடமும் தவறு இருக்கிறது என்று பிரச்சாரம் செய்யும் அடிமைகளின் வாயை மூட வைக்கவும் நாம் போராட வேண்டியுள்ளது.
இன்று இரண்டாம் அலையில் உருமாற்றம் பெற்ற கொரானா டெல்டா வைரஸ் அல்லது டெல்டா பிளஸ் என்று வீரியமடைந்து உள்ளதற்கு பொருத்தமாக எதிர்த்து போராடுவதற்கு ஒரே வாய்ப்பு தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே என்பதை பெரும்பான்மை மக்கள் உணர்ந்து கொண்டு வருகின்றனர். பல ஊர்களில் ஊசி போடுவதற்கு வரிசையில் காத்திருந்து கிடைக்காமல் திரும்பி செல்வதே அதற்கு சாட்சியமாகும்.
தமிழகத்தை பொருத்தவரை அம்மை தடுப்பூசி குத்துவதற்கு இந்திய அளவில் தமிழகம் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்தது என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. மூன்றாவது அலை வருவதற்குள் தமிழகத்தில் 10 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு இருந்தால் மட்டுமே முழுமையாக நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். கொரானாவின் அலைகள் ஓயாது என்பதே இன்றைய நிலைமையாகும். எனவே அனைவருக்கும் தடுப்பூசி என்று போராடுவது மட்டுமின்றி, அனைவரும் தயங்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் தான் அறிவியல் பூர்வமான வழியாகும்.
26-07-2021 — பா. மதிவதனி.