ஜீலை 10, கியூபாவின் சாண்டியாகோ (Santiago) நகரில் துவங்கி, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடக்கும் அரசுக்கு ஆதரவான போராட்டங்களும், அரசை எதிர்த்து அமெரிக்க அடிவருடிகள் நடத்தும் போராட்டங்களும் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கியூபா, பிடல் காஸ்ட்ரோ (Fidel Castro), சேகுவாரா (Che Guevara) போன்ற கம்யூனிச ஆதரவு தலைவர்களால் உருவாக்கப்பட்ட நாடு என்பதால் கியூபாவில் நடக்கும் அரசியல், பொருளாதார மாற்றங்கள் உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகளால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அதேபோல ஏகாதிபத்தியவாதிகள் கியூபாவில் நடக்கும் மாற்றங்களைத் தொடர்ந்து கம்யூனிசத்தின் தோல்வி என்றும், கம்யூனிச பொருளாதாரக் கொள்கைகள் தான் இன்று கியூபா அனுபவிக்கும் அனைத்து துயரங்களுக்கும் காரணம் என்றும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். உலக மேலாதிக்க வெறியன் – அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தாக்குதல் இலக்கில் பாலஸ்தீனம், சிரியா வரிசையில் இன்று கியூபா முன்னிலைக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் “அடிவயிற்றில் குத்திய முள்” என்று வர்ணிக்கப்படும் கியூபா முழுமையான ஒரு சோசலிச நாடு அல்ல என்ற போதிலும், ஏகாதிபத்திய முதலாளித்துவம் முன்வைக்கின்ற சந்தை பொருளாதாரத்தை முழுமையாக அமல்படுத்தாமல் கியூபா மக்களுக்கு பொருத்தமான ஒரு பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடித்து வருகிறார்கள். இந்த பொருளாதாரம் அமெரிக்காவை சாராத ஒரு சுயசார்பு பொருளாதாரம் என்பதால் அமெரிக்கா தொடர்ந்து கியூபாவின் மீது தடைவிதித்து பொருளாதார ரீதியான நெருக்கடியை கொடுத்து வருகிறது.
1962 முதல் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கியூபாவில் “ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக” இத்தகைய பொருளாதார தடைகளை விதிப்பதாக அமெரிக்க கூறிக்கொள்கிறது. அமெரிக்கா ஒரு நாட்டில் ஜனநாயகத்தை நிலை நாட்ட போகிறது என்றால் எப்படி இருக்கும் என்பதற்கு ஈராக் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஒழிப்பதற்காக ஈராக் பயங்கர உயிரியல் இரசாயன ஆயுதங்கள் வைத்திருப்பதாக கதையளந்து ஈராக் மேல் படைஎடுத்தது. ஈராக் மக்களால் போற்றப்பட்ட சதாம் ஹூசெனைக் கொன்ற பின்னர் தனது கைக்கூலி ஆட்சியை நிறுவியது. அது போல கியூபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோவை கொல்ல தனது உளவு அமைப்பான CIA மூலம் 638 முறை முயற்சி செய்தது ஆனால் முடியவில்லை. இந்த லட்சணத்தில் கியூபாவில் “ஜனநாயகத்தை நிலைநாட்ட” அமெரிக்கா அரும்பாடுபட்டு வருகிறதாம். வழக்கம் போல கம்யூனிச எதிர்ப்பு கூலிப்படைகளான முதலாளித்துவ ஊடக நரிகள், கியூபாவில் அரசுக்கு எதிராக நித்தமும் மிகப்பெரிய போராட்டங்கள் நடப்பதாகப் போலியான செய்திகளைக் காட்டி வாங்கிய காசுக்கு மேல் கூவி வருகின்றன.
அமெரிக்காவின் அதிபரான பாசிச ட்ரெம்ப் (Trump) நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்தப்பட்ட உடன் புதிதாக பதவியேற்ற ஜோ பைடன் (Jo Biden) அரசாங்கத்திடம் கியூபாவின் மீது பொருளாதார தடையை நீக்க வேண்டும் என்றும், தீவிரவாதப் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்க வேண்டும் என்றும் உள்நாட்டிலேயே அமெரிக்க எதிர்ப்பாளர்களால் குரல் எழுப்பப்பட்டது. உலகை ஆதிக்கம் புரியும் அமெரிக்காவின் கைப்பாவையான ஐ.நா.வில், 2021 – ஜூன் மாதம் பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக உலகில் 184 நாடுகள் வாக்களித்தனர் ஆனால் யூத ஜியோனிச நிறவெறி பிடித்த அமெரிக்காவின் அடிவருடி இஸ்ரேலும், அமெரிக்காவும் மட்டுமே இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர் இதனால் தீர்மானம் நிறைவேறவில்லை. அமெரிக்காவில் டிரம்புக்கு பதில் பைடன் என்று ஆட்சி மாறினாலும் அதன் உலக மேலாதிக்க வெறியும், போர் பொருளாதாரக் கொள்கைகளும் சற்றும் குறையவில்லை.
கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக கியூபாவில் அரசுக்கு எதிராக எந்த கலகங்களும் நடக்காத நிலையில் திடீரென்று மக்கள் வீதியில் இறங்கி போராடுவதற்கு காரணம் என்ன? கியூபாவில் அமெரிக்க அடிவருடி புல்கேன்சியோ படிஸ்டா (Fulgensio Batista) அரசு கொரில்லாப் போரின் மூலம் வீழ்த்தப்பட்ட பிறகு 1959 முதல் மக்கள்நல அரசு ஒன்றை நிறுவி பிடல் காஸ்ட்ரோ அரசாங்கம் அங்கு ஆட்சி செய்து வந்தது. 2008 வரை ஆட்சியில் இருந்த பிடல் காஸ்ட்ரோ தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் (Raul Castro) ஆட்சியை ஒப்படைத்தார். அதுவரை சோவியத் பாணியில் மேற்க்கொள்ளப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள் மாற்றப்பட்டு தாராளவாத பொருளாதார அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. 2018 ஏப்ரல் மாதம் வரை ஆட்சியிலிருந்த ரவுல் காஸ்ட்ரோ அதிபர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.
அதன் பிறகு மிகேல் டயஸ் கேனல் (Miguel Díaz-Canel) அதிபராக ஆகி உள்ளார். அதிபர் கேனல், பிப்ரவரி 2021 முதல் கியூபாவின் பொருளாதாரத்தை ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடிக்கின்ற வகையில் அகலமாக திறந்து விட்டுள்ளார். அதுவரை 127 தொழில்களில் மட்டும் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படிருந்த நிலையில் 2,000-க்கும் அதிகமான தொழில்களில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த 124 துறைகளைத் தவிர அனைத்து துறைகளையும் தாராளமயம் ஆக்கினார். விளைவு உலகின் ’சர்க்கரை கிண்ணம்’ என்று அழைக்கப்படும் கியூபாவின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி அடைந்தது. விலைவாசி உயர்வு கடுமையாக ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை அவதானித்து கியூபாவின் பொருளாதார நிபுணரான பாவெல் விடால் (Pavel Vidal) அடுத்த சில மாதங்களில் நாட்டின் அத்தியாவசியப் பொருட்களின் விலை 500, 600 மடங்கு அதிகரிக்கும் என்று அறிவித்துள்ளார்.
இத்தகைய சூழலில் கொரானாவின் இரண்டாவது அலையை கியூபா அரசாங்கம் எதிர்கொள்வதில் தோல்வி அடைந்து விட்டது. தொடர்ச்சியான பொதுமுடக்கத்தால் வேலை கிடையாது. நாட்டின் முக்கிய தொழிலான சுற்றுலா வருவாய் அறவே நின்று போனது. சர்க்கரை மற்றும் புகையிலை உற்பத்தி செய்யும் ஆலைகள் மின்தட்டுப்பாடு, கருவிகள் பழுது காரணமாக உற்பத்தி குறைந்து போனது. அதனால் விவசாயத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரானா முதலாம் அலையின் போதே கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவில் 11% பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், மேற்கண்ட காரணங்களும் சேர்ந்துக் கொண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விளைவு, உணவுக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்துக்கிடக்கிறார்கள். கொரானாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மருந்து கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் நாட்டில் நிலவும் கடுமையான மின்வெட்டு காரணமாக கியூபா பெரும்பாலான நாட்களில் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இறக்குமதி செய்யப்படும் கோதுமைக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பூசணிக்காய் மூலம் பிரட் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இவையெல்லாம் சேர்ந்து மக்களுக்கு அரசாங்கத்தின் மீது மிகப்பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அதிருப்தியின் காரணமாக தற்போது வீதியில் இறங்கி போராட துவங்கியுள்ளனர். இந்த அதிருப்தியை உருவாக்குவதில் அமெரிக்க ஐந்தாம் படையான அர்ஜெண்டினாவின் கம்யூனிச எதிர்ப்பு – பாசிசவாதியான அகஸ்டின் அண்டோனெட்டி (Agustin Antonetti) (நம்ம ஊர் போர்டுதாஸ் போல) என்ற நபருக்கும் முக்கிய பங்கு உள்ளது. கியூபா சமூக இணையதளம் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் காஸ்ட்ரோ காலத்தில் இருந்தே முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தற்போது கம்யூனிச எதிரிகள் பயன்படுத்துகிறார்கள்.
மற்றொருபுறம் கொரானாவுக்கு எதிரான தடுப்பு மருந்து தயாரிப்பதில் ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்பார்க்காமல் ஐந்து வகையான தடுப்பூசிகளை கியூபா கண்டுபிடித்துள்ளது. 1 கோடியே 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட கியூபாவில் முதல்கட்ட கொரானா அலையில் வெறும் 350 பேர் மட்டுமே மரணமடைந்தனர். கொரானாவை வெற்றிகரமாகத் தடுத்து உலகிற்கே முன்னுதாரணமாக மாறியது. ஏற்கனவே, கியூபாவின் 29,000 மருத்துவப் பணியாளர்கள் ஆப்ரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளில் இலவச சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தனது நாட்டிலிருந்து 593 மருத்துவர்களை இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைத்து கியூபா சாதனை நிகழ்த்தியது.
இரண்டாம் அலையில் அவர்கள் தயாரித்த தடுப்பூசிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே இந்தியவகை டெல்டா வைரஸ் வேகமாக கியூபாவில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் மருந்து தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்தும் மருத்துவ கார்ப்ப்ரேட்டுகளான அமெரிக்காவின் பைசர் (Pfizer), மடோர்னா (Moderna), ஜான்சன் அண்ட் ஜான்சன் (Johnson and Johnson) மற்றும் பிரிட்டனின் அஸ்ட்ரா சினேகா (Astrazeneca) போன்றவை இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கியூபா மக்களை தூண்டி விட்டு வீதிக்கு கொண்டு வந்துள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கியூபாவை அமெரிக்கா தொடர்ந்து தாக்குவது ஏன்? என்று புரிந்து கொண்டால்தான் அமெரிக்கா எதற்காக கியூபாவில் நடைபெறும் அரசுக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டி விடுகிறது, கம்யூனிச விரோத கருத்துக்களை உருவாக்குகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ ஆட்சிக்கு வந்த பிறகு முதல் வேலையாக வங்கிகள் மற்றும் அன்னிய தொழிற்சாலைகளை தேசிய உடமை ஆக்கினார். இதில் 979 நிறுவனங்கள் அமெரிக்க முதலாளிகளுக்கு சொந்தமானவை. அமெரிக்காவால் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டும் கியூப மக்களுக்கு கல்வி, மருத்துவம், சுகாதாரம் அனைத்தையும் இலவசமாக வழங்கி வந்தார். எடுத்துக்காட்டாக கியூபாவில் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் கிடையாது. 6 வயது முதல் 15 வரை வரை கட்டாயமாக இலவசக்கல்வி அனைவருக்கும் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்ல மாணவர்களுக்கும் வேறுபாடு வந்து விடக்கூடாது என்பதற்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான சீருடை வழங்கப்பட்டு இன்றுவரை அது நடைமுறையில் உள்ளது.
இந்தியாவில் ஒரு ஆசிரியருக்கு 40 மாணவர்கள், 60 மாணவர்கள் என்றெல்லாம் நிலைமை இருக்கும் போது கியூபாவின் 12 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் தரமான கல்வி வழங்கப்படுகிறது. இதனால் கியூபாவின் 99.8 சதவீத மக்கள் படிப்பறிவு பெற்றவர்களாக உள்ளனர். அதேபோல தனியார் மருத்துவமனைகள் கியூபாவில் கிடையாது. உலகில் இலவசமாக சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று 96–ம் ஆண்டு பிபிசி (BBC) அறிவித்தது. உலகில் மகப்பேற்றின் போது உயிரிழக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவான சதவீதம் கொண்ட நாடு, அதாவது 1000-க்கு 3 பேர் என்ற விகிதம் கொண்டது.
அதுமட்டுமின்றி கியூபாவின் தொழில்நுட்பத் துறைகளில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில் 70% பேர் பெண்கள் மட்டுமே. ஆண்களுக்கு நிகரான ஊதியம், சம வேலைக்கு சம ஊதியம் என்பது அமல்படுத்துவதில் கியூபா முன்னணியில் உள்ளது.
கியூபாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்த வீடு உள்ளது. 2015ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி கியூபாவில் உள்ள 95% பேர் சொந்த வீட்டின் உரிமையாளர்களாக உள்ளனர். இதனால் வீடு இல்லாத மக்கள் கிடையாது என்ற நிலைமையே கியூபாவில் உள்ளது. அது மட்டுமல்ல சொந்தமாக வீடு வைத்திருக்கும் யார் மீதும் சொத்து வரி கிடையாது. அதேபோல கடனுக்கு வீடு வாங்கியிருந்தால் வீட்டுக் கடனுக்கு வட்டியும் கிடையாது என்பது முக்கியமானதாகும். இவை அனைத்தும் முதலாளித்துவ ஊடகங்கள் தெரிவிக்கும் தரவுகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கியூபாவில் அமெரிக்க மாடல் போலி ஜனநாயகம் இல்லாத, மக்கள் நல அரசாங்கம் நடந்து வருகிறது. அனைத்தையும் பண்டமாக கருதும் ஏகாதிபத்திய முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தை கியூபா முழுமையாக கடைபிடிக்கவில்லை. இதனால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இந்த சூழலில் கொரானாவினால் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார நெருக்கடி கியூபாவிலும் எதிரொலித்துள்ளது. குறிப்பாக சுற்றுலா வருமானத்தை பிரதானமாக நம்பியிருக்கும் கியூபா கொரானாவால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது.
இந்த நெருக்கடிகளை தாங்கமுடியாமல் குமுறிக் கொண்டிருந்த மக்களின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடுத்த பொருளாதார தாக்குதல் தான் தற்போது கிளர்ச்சியாக வெளிப்பட்டுள்ளது என்றாலும், ஜூலை 10, 11 ஆகிய தேதிகளில் சாண்டியாகோ நகரில் நடைபெற்ற கிளர்ச்சியை தவிர பரவலாக ஒரு சில இடங்களில் மட்டுமே அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது. ஆனால் அரசை ஆதரித்து முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும், தற்போதைய அதிபர் மிகெல் டயஸ்-கேனலும் கலந்துகொண்ட லட்சக்கணக்கான மக்கள் திரண்ட பேரணி அமெரிக்காவிற்கு எதிரான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் கியூபா மக்கள் பின்வாங்கவில்லை என்பதையே உலகிற்கு பறைசாற்றி உள்ளது.
22-07-2021 -இளஞ்செழியன்