பகுதி – 4


இரு வல்லரசுகளின் ஏகாதிபத்திய மேலாதிக்கப்

போட்டிக்காக நடைபெறும் போர்:

ஒற்றை துருவ மேல்நிலை வல்லரசான அமெரிக்காவும், ராணுவ மேல்நிலை வல்லரசான ரசியாவும் உலக வளங்களைக் கொள்ளையிடுவதற்கு ஏற்பவும், தங்களது பொருளாதார நடவடிக்கைகளை ஸ்திரப்படுத்துவது, அதற்கேற்ப இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது என்ற வகையில் தங்களது உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முயன்று வருகின்றன.

அதற்கேற்ப உலக நாடுகளை, அரசியல், பொருளாதார, இராணுவ நடவடிக்கைகள் மூலம் பணிய வைப்பது என்பதுடன், தங்களது ஆயுதங்களை விற்பதற்கான சந்தையாகவும் இந்தப் போரைப் பயன்படுத்துகிறது. எனவே, மேலாதிக்கத்தை நிறுவ முயலும் எந்தவொரு நாடும், உலக மக்களைப் பற்றியோ, போரால் ஏற்படும் இழப்புகள், துன்ப துயரங்களைப் பற்றியோ சிந்திக்காது. மாறாக, அது நாட்டு மக்களுக்காக செய்யப்படும் சாகச நடவடிக்கையாக பறைசாற்றிக் கொள்ளும்.

“போர் என்பது ஏகபோக முதலாளித்துவத்தின் தவிர்க்கவியலாத வளர்ச்சியாகும்…. ஏக போகங்களின் சூரையாடலுக்கான கொள்கையின் வெளிப்பாடுதான் போர்… பிரதேச இணைப்புகள் ஒப்பந்தங்களின் உண்மை நோக்கம் இதுதான்… நமக்கு முன்னே உலகின் மிகப்பெரிய முதலாளித்துவ சக்திகளாக பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி ஆகியன உள்ளன. உலகை மேலாதிக்கம் செய்வதில் அவற்றுக்கிடையே பொருளாதார நாய்ச்சண்டை எனும் கொள்கையை அவை பின்பற்றுகின்றன…. சிறிய நாடுகளை அடிமைப்படுத்தும் கொள்கையை பின்பற்றுகின்றன… ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையிலான மோதல்களும் போர்களும் அவற்றுக்கிடையிலான அரசியல், பொருளாதாரப் போராட்டங்களின் விளைவேயாகும். எல்லா போர்களையும் ஏகாதிபத்திய அரசியல் கட்டமைவிலிருந்து பிரிக்கவே முடியாது” என்று போரும் புரட்சியும் என்ற தலைப்பில் ஆற்றிய நீண்ட உரையில் குறிப்பிடுகிறார் தோழர் லெனின். (லெனின் தொகுப்பு நூல்கள், தொகுதி 24, பக்கம் 398 – 421 ஆங்கிலம் முன்னேற்றப் பதிப்பகம் மாஸ்கோ)

தோழர் லெனின் கூற்றுப்படி ஏகாதிபத்தியங்கள் நீடிக்கும் வரை போர் அபாயமும் நீடிக்கும். போரற்ற உலகைப் படைக்க சோசலிசமே தீர்வு. அதற்கு ஏகாதிபத்தியங்களை நாம் வீழ்த்தியாக வேண்டும்.

உக்ரைன் மீதான ரஷ்ய ஏகாதிபத்தியத்தின் தாக்குதலில்

நமது அணுகுமுறை என்ன?

தற்போது நடக்கும் உக்ரைன் போரால் இதுவரையில் 13,000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல நூற்றுக்கணக்கான உக்ரைன் குடும்பங்கள் குண்டு வீச்சினால் உயிரிழந்து உடமைகளை இழந்து நடுவீதிகளில் நிற்கின்றனர். உக்ரைனில் நடக்கும் போர் நடவடிக்கைகள் அடங்கிய சிறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி, மக்கள் மத்தியில் நடுக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

போரினால் உருக்குலைந்த உக்ரைன் மக்களும், அம்மக்களைக் கொல்லும் தனது இராணுவத்திற்கு எதிராக ரசிய மக்களும் போரை நிறுத்தக் கோரி போராடி வருகின்றனர். இந்தப் போரை நடத்தும் ரசியாவும், தொடர்ந்து போரை நடத்தும் நிலையில் இல்லை. உக்ரைனை அமெரிக்க சார்பு நிலை எடுக்காத வண்ணம், நேட்டோ-வில் இணையா வண்ணம் மிரட்டிப் பணிய வைப்பது என்ற செயல்திட்டத்துடன் இப்போரை நடத்தி வருகிறது. அதனால்தான், போர் துவங்கிய இரு நாட்களிலேயே, பேச்சுவார்த்தைக்குத் தான் தயாராக இருப்பதாகவும், உக்ரைன் அரசாங்கம்தான் பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்காமல் இருந்து வருவதாக ரசியா உக்ரைன் மீது பழி போடுகிறது.

ரசியாவின் இந்த அடாவடியான போர் நடவடிக்கையை, உலகின் 86 நாடுகள் கண்டித்திருக்கின்றன. அதனால் சர்வதேச அளவில் ஒரு நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. உலக வரலாற்றில் முதல் முறையாக போரை நடத்தும் நாடு சர்வதேச அரங்கில் தனிமைப் படுவது இதுவே முதன் முறையாகும். அமெரிக்கா தந்த ஊடக பிரச்சாரம் மற்றும் அரசியல் ரீதியாக ரசியாவை தனிமைப்படுத்தும் நோக்கில் வெற்றியை கண்டுள்ளது. இதன் விளைவாக ரசியா மோசமான போர் வெறியனை போல சித்தரிக்கப்படுகிறது.

ரசியா தனது வர்த்தகத்தை – பரிவர்த்தனையை, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி தகவல் சேவையான ஸ்விஃப்ட் சேவை மூலமாகவே நடத்தி வருகிறது. இந்த சேவையிலிருந்து ரசிய வங்கிகளை நீக்குவதற்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் இசைவு தெரிவித்துள்ளன. கடந்த வாரத்தில் இந்த ஸ்விஃப்ட் சேவையிலிருந்து ரசிய வங்கிகள் நீக்கப்பட்டுள்ளது. ரசிய மத்திய வங்கியின் சொத்துக்கள் முடக்கப்பட்டு. ரசியாவின் வெளிநாட்டுக் கையிருப்புக்களை அணுகும் திறன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரசியா சர்வதேச நிதி அமைப்பிலிருந்து மேலும் தனிமைப்படுத்தப்படும் என்ற நிலைக்கு மாறியுள்ளது.

இந்தப் போரினால் ரசியாவிற்கு ஏற்பட்டு வரும் போர்ச் செலவுகள் ஒருபுறமிருக்க, சர்வதேச அரசியல் நெருக்கடியும், வெளிநாட்டு கையிருப்பை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும், ரசியாவை இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நிலைக்குத் தள்ளியுள்ளது. அதை வேறு வார்த்தைகளில் உக்ரைன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லை என கூறி வருகிறது.

எப்படி இருந்தாலும், தனது மேலாதிக்க நோக்கத்திற்குத் தடையாக இருக்கும் நாடுகளை பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் ஒடுக்குவதுதான் ஏகாதிபத்திய வல்லரசுகளின் தன்மை. ரத்தம் குடிக்கும் இந்த ஓநாய்களிடம் இரக்கத்தை எதிர்பார்ப்பது ஆகாத காரியம்.

அந்த வகையில் பாட்டாளி வர்க்கம் ரசியாவின் பக்கம் நிற்பதா? அமெரிக்கா பக்கம் நிற்பதா? உக்ரைன் பக்கம் நிற்பதா? என்ற கேள்வி எழும் போது, ரசியாவே ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு போரை நிறுத்து என்று குரல்கொடுப்பதும், நேட்டோ மூலம் தனது உலக மேலாதிக்க போட்டிக்கு வெறி கொண்டு அலையும் அமெரிக்காவை தனிமைப்படுத்துவதும், NATO அமைப்பை கலைக்க கோரி போராடுவதும் போரை எதிர்த்து போராடும் உக்ரைன் – ரசிய மக்கள் பக்கம் நிற்பதும் உடனடிக் கடமையாகும்.

உலகை சூறையாடும் ஏகாதிபத்திய முதலாளித்துவ சுரண்டல், போர்வெறியில் இருந்து மக்களை விடுவிக்கவும், மக்களின் சுதந்திர வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கவும், மக்களின் நலன் ஒன்றையே தனது கொள்கையாகக் கொண்ட சோசலிச அரசு அமைந்தால் ஒழிய சுரண்டலற்ற, போர் அபாயமற்ற, அமைதியான நல்லுலகை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. எனவே, சோசலிச உலகத்தைப் படைப்பதே ஒரே மாற்று!

முற்றும்…

முந்தைய பதிவுகள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
பகுதி 1
பகுதி 2
பகுதி 3

1 COMMENT

  1. கடைசி இரண்டு பத்திகளில் ரஷ்ய-உக்ரைன் போர் சம்பந்தமாக மக்கள் அதிகாரத்தின் நிலைப்பாடுகளையும், போர் நடக்காமல் இருப்பதற்கு சோசலிசம் தான் தீர்வு என விளக்கியிருப்பது அருமை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here