திரிபுரா: தொடரும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களின் கலவரங்கள்!
பார்ப்பனப் பேரரசு விடுக்கும் எச்சரிக்கை!

ந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா 8 மாவட்டங்களையும், 527 பழங்குடியின மக்களின் கிராமங்களையும், 40 லட்சம் மக்கள் தொகையையும், மூன்று புறமும் பங்களாதேஷ் எல்லைப்பகுதிகளையும் உள்ளடக்கிய சிறிய மாநிலமாகும். 1947 ஆம் ஆண்டு இந்தியாவின் போலி சுதந்திரத்திற்கு பிறகும் மன்னர் கிரித் கிஷோர் வர்மன் ஆட்சியின் கீழ் இருந்து 1949 ஆம் ஆண்டு தான் அதிகாரப்பூர்வமாக இந்தியா ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. 1947-க்கு பின்னர் இடதுசாரிகள் செல்வாக்கு பெற்று வந்தனர். 1993 முதல் 2018 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.

1980- களில் துவங்கப்பட்ட பாஜக முதன் முதல் 1983 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது வெறும் 578 வாக்குகளை மட்டுமே பெற்றனர். 1983 முதல் 2013 வரை 7 சட்டமன்ற தேர்தல்களில் மொத்தம் 235 இடங்களில் போட்டியிட்டு, வெறும் 5 இடங்களில் மட்டுமே டெபாசிட் பெற்றனர். அந்தளவுதான் அவர்களின் செல்வாக்கு இருந்தது. திரிபுராவில் உள்ள பழங்குடிகளின் அமைப்பான திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி என்ற அமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு 2018 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது.

இடது சாரிகளின் ஆட்சியில் இந்தியாவிலேயே 97% கல்வியறிவு பெற்ற மாநிலமாக திரிபுரா விளங்கிய போதிலும், இந்திய ஒன்றிய அரசின் தொடர் புறக்கணிப்புகளினால் எந்த தொழிற்சாலைகளும் துவக்கப்படவில்லை. இதன் காரணமாக, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் இன்றி இருந்தனர். இந்த நிலைமையை பயன்படுத்திக் கொண்டு, தான் அதனை போக்க அவதரித்துள்ளதாக பாஜக கூறிக் கொண்டது. 2018 தேர்தல் வாக்குறுதிகளில் வெற்றி பெற்றால் 50,000 பேருக்கு வேலை, 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஊதிய உயர்வு என்று பிரமையூட்டி 25 ஆண்டுகால சிபிஎம் ஆட்சியை கவிழ்த்தது.

திரிபுராவில் ஆட்சியைக் கைப்பற்றியவுடன், தலாய் மாவட்டம் அம்பசாவில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் பிப்லப் குமார் தேவ் “2023 ஆண்டுக்குள் கம்யூனிஸ்டுகளை திரிபுராவில் இருந்து வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்” என்று வெறியூட்டும் வகையில் பேசினார். இந்து ராஷ்டிரக் கனவை நிறைவேற்ற வடகிழக்கு மாநிலங்கள் ஆர்.எஸ்.எஸ்-க்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்று திரிபுராவின் முன்னாள் தேர்தல் பொறுப்பாளரான சுனில் தியோடர் பிரகடனப்படுத்துகிறார். பிரிட்டன் காலனியாதிக்கத்தின் போது இறுதிவரை வீழாமல் இருந்த நாகா, திரிபுரா பழங்குடி மக்களை வீழ்த்த ஆபாச வீடியோக்களை இறக்கியது போலவே, இன்று மறுகாலனிய அரசு பார்ப்பன மதவெறி போதையை இறக்குகிறது,

தேர்தல் வெற்றியை தொடர்ந்து 48 மணி நேரத்தில் முதல் சுற்று வன்முறையை கம்யூனிஸ்டுகளின் மீது துவக்கிய பாஜக-ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் மேற்கு திரிபுராவின் சித்தாய் பகுதியிலும், வடக்கு திரிபுராவில் கதம்தலாவிலும் கட்சியினர் மீதும், அலுவலகங்கள் மீதும் தாக்குதல்களை நடத்தினர்.. பெலோனியா நகரில் இருந்த தோழர்.லெனின் சிலை உடைக்கப்பட்டது. சிபிஎம் கட்சியின் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. தீ வைத்து கொளுத்தப்பட்டது.

திரிபுராவில் நடைபெற்ற பாஜக ஆட்சி கொரானாவை சரியாக கையாளவில்லை என்றும், வாக்குறுதியளித்தபடி வேலை வாய்ப்பை உருவாக்க வில்லை என்ற நிலைமையை அம்பலப்படுத்தி  ’எங்கே எனது வேலை’ என்ற முழக்கத்துடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய பேரணியை திடீர் என அனுமதி மறுத்து, பாஜகவின் குண்டர் படை பேரணியின் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியது. மீண்டும் 2021 செப்டம்பர் 8-ஆம் தேதியன்று சிபிஎம் கட்சி ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை கட்டவிழ்த்து விட்ட சங்கப் பரிவாரம் சிபிஎம்க்கு சொந்தமான 42 கட்சி அலுவலகங்களையும், கட்சி ஊழியர்களின் வீடுகள், கடைகள் என 67 இடங்களையும், பிரதிவாதி கலாம் என்ற பத்திரிக்கை மீது தாக்குதல்களும், அலுவலகத்தை தீ வைத்து எரித்தும் உள்ளது.

பாஜக பதவியேற்ற மார்ச் 2018 முதல் ஜூன் 2021 வரை சிபிஎம் கட்சியின் 662 அலுவலகங்கள், DYFI, SFI போன்ற அமைப்புகளின் 204 அலுவலகங்கள், CPM கட்சியின் ஊழியர்களுக்கு சொந்தமான 3363 வீடுகள் CPM கட்சி ஆதரவாளர்களுக்கு சொந்தமான கடைகள், 1500 மீன்பிடிக் கலன்கள் மற்றும் ரப்பர் மரங்கள் ஆகியவற்றை தாக்கி ஆர்.எஸ்.எஸ் குண்டர் படை வெறியாட்டம் போட்டு சேதப்படுத்தி உள்ளது

சேதபடுத்தப்படும் சிபிஎம் கட்சி அலுவலகம்

திரிபுராவில் பாசிச ஆர்எஸ்எஸ்-பாஜக குண்டர் படை இரண்டாம் சுற்று தாக்குதலை இசுலாமியர்கள் மீது துவக்கியுள்ளது. அண்டை நாடான வங்க தேசத்தில் துர்கா பூசையை ஒட்டி இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதற்கு எதிர்வினையாக இசுலாமியர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் பகிரங்கமாக அறிவித்துள்ளது. மற்றொரு வானரப் படையான விசுவ இந்து பரிசத் 3500 பேர் கொண்ட மிகப்பெரிய பேரணியை நடத்தி கலவரத்தை துவக்கியுள்ளது.

திரிபுராவில் உள்ள மொத்தம் 42 லட்சம் மக்களில் இசுலாமியர்கள் ஒன்பது சதவீதத்திற்கும் குறைவானவர்களே உள்ளனர். இவர்களின் மீது திட்டமிட்ட தாக்குதலை ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஎச்பி குண்டர் படை நடத்தியதன் மூலம் இந்தியாவில் உள்ள மதச் சிறுபான்மையினரின் மீது ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி திரிபுரா எல்லைப் பகுதியில் உள்ள பனி சாகர் நகரத்தில் மசூதி ஒன்று தாக்கப்பட்டுள்ளது. ரோவா பஜார் கடைத்தெரு பகுதிகளில் இருந்த இசுலாமியர்களின் வீடுகள், கடைகள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளது. அவர்களின் வீடுகளை தாக்கிய கும்பல் காவி கொடியை நட்டு வைத்துள்ளது.

வடக்கு திரிபுரா பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பாசிச தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன, வழக்கம் போலவே இந்த சூழ்நிலையை பதற்றமான சூழ்நிலை என்று அறிவித்து பவானிசாகர் பகுதியில் மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டு இந்த வன்முறையை நடத்தி விட்டு விசுவ இந்து பரிசத் பேரணியில் நடந்த வன்முறையை பற்றி பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நா பெண்ட் பட்டாச்சாரியா “இது ஒரு அரசியல் சதி! விசுவ இந்து பரிசத் ஒரு சமூக இயக்கம் உரிய அனுமதி பெற்று தான் இந்த பேரணி நடத்தினார்கள் ஆளும் பாஜக கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காகவும் மாநிலத்தின் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துவதற்காகவும் ஒரு மிகப்பெரிய அரசியல் சதி இதற்கு பின்னால் இருக்கிறது” என்று புதிய சதிக் கோட்பாடு ஒன்றை அவிழ்த்து விட்டுள்ளார். இது மிகவும் அருவெறுப்பானது மட்டுமின்றி கண்டிக்க தக்கதாகும்

திரிபுராவில நடந்த விஸ்வ ஹிந்து பரிஷத் பேரணி

 

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மறுகாலனியாக்க-கார்ப்பரேட் அடிமைத்தனத்தை உள்கிடக்கையாக கொண்டு, பார்ப்பன பேரசை (இந்து ராஷ்டிரா) அமைக்கத் துடிக்கும் சங் பரிவார அமைப்புகளை எதிர்த்து முறியடிப்பதில், சித்தாந்த ரீதியான அதன் அடித்தளத்தை புரிந்து கொள்ளாமல், பாஜக என்ற கட்சி சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்தை கடைபிடிக்கும், ஏற்கும் ஒரு அரசியல் கட்சி என்பதைப் போல கையாள்வதும் அது எதேச்சதிகாரமாக செயல்படுகிறது என்றும், அதன் பாசிச செயல்பாடுகள் தாழ்நிலையில் உள்ளது என்றும், அதன் கொடூரமான பாசிச தன்மையை குறைவாக மதிப்பிடுவதும், பாசிச ஆர்.எஸ்.எஸ்-குண்டர் படையை முறியடிப்பதற்கு உதவாது.

அரசு நிர்வாகத்தில் மட்டுமன்றி இராணுவம், நீதித்துறை, ஐஏஎஸ், ஐபிஎஸ் என்று அனைத்துத் துறைகளிலும் நாக்பூர் தயாரிப்புகளை படிப்படியாக புகுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் அதனை எதிர்த்துப் போராடுவதற்கு பொருத்தமான எதிர்க்கட்சிகள் இல்லை என்ற எண்ணத்துடன் பாசிச வெறியுடன் ஏறித் தாக்கி வருகிறது..

இந்தியாவில் அரசியல் கட்சிகளின் கொள்கைகளை வடிவமைக்கும் ஐபேக் நிறுவனத்தைச் சார்ந்த பிரசாந்த் கிஷோர் முன்வைத்துள்ள PK தியரியின் படி, பாஜக தேர்தல் அரசியலில் இருந்தாலும் இல்லை என்றாலும் இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நிலைபெற்று நிற்கும் என்று எச்சரித்துள்ளது கவனிக்கத் தக்கதாகும் ஏனென்றால் டேட்டாக்களை முன்வைத்து இந்திய மக்களின் மனநிலையை துல்லியமாக அறிந்து வைத்துள்ள குஜராத் பார்ப்பனரான பிரசாந்த் கிஷோர் முன் வைக்கும் எச்சரிக்கை அலட்சியப்படுத்துவதற்கல்ல.

இந்த சூழலில் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு பல்வேறு தேசிய இனங்களில் உள்ள பார்ப்பன-இந்து மத எதிர்ப்பு மரபுகளைக் கொண்டவர்களின் ஒற்றுமையை கட்டி அமைப்பதும், ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவையும் இணைத்துக்கொண்டு போராடுகின்ற ஜனநாயக சக்திகள், புரட்சிகர அமைப்புகள் அனைத்தையும் ஓரணியில் திரட்டுகின்ற வகையில் பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணியை உடனடியாக கட்டியமைக்க வேண்டியுள்ளது இந்த திசை வழியைப் புறக்கணித்து காற்றில் கம்பு சுற்றுவது, வாய்ச்சவடால் அடிப்பது, வெற்று அறிக்கைகளை வெளியிடுவது போன்றவற்றின் மூலம் பாசிசத்தை விழ்த்த இயலாது.

  • சண். வீரபாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here