யுஸ்ரா மார்தினி என்ற 21 வயது சிரிய இளம்பெண் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் அகதிகள் அணி சார்பாக கலந்துகொள்கிறார். சிரியாவில் உள்நாட்டு போர் நடந்த 2014 ஆம் ஆண்டு அந்நாட்டிலிருந்து குடும்பத்தினருடன் அகதியாக வெளியேறி இருக்கிறார்; அப்படி வெளியேற பயன்படுத்திய படகு உடைந்த நிலையில் அதனை அவரும் அவரது சகோதரி சாராவும் 3 மணி நேரம் இழுத்து கொண்டு நீச்சலடித்து அந்த படகில் இருந்த 18 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

23 வயது இறகு பந்துவீரர் அராம் மகமுத், தன் (சிரியா) நாட்டை விட்டு வெளியேறிய பிறகு ஆறு ஆண்டாக தனது குடும்பத்தினரை சந்திக்க முடியாமல் தவித்து வருகிறார். அந்த துன்பத்திலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஒலிம்பிக் அணிக்கு தகுதி பெற்றுள்ளார்.   இதுபோல் ஒலிம்பிக்ஸ் அகதிகள் அணியில் உள்ள 29 வீரர்கள் ஒவ்வொருவரும் சோகங்களை கடந்து தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது கனவை மெய்பித்து கொண்டனர்.  “நாங்கள் எங்களுக்காக மட்டுமல்ல, நாடற்று அகதிகளாக இருக்கும் அனைவருக்காகவும் விளையாடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர். அகதிகள் அணி எனும் இந்த முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

2016ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தான் அகதிகள் அணி முதன்முறையாக கலந்து கொண்டது. அப்போது 10 பேர் மட்டுமே அந்த அணியில் இருந்தனர். இம்முறை அது 29 பேர் கொண்ட அணியாக பெரிதாகி உள்ளது.

Aunt of Syrian toddler Alan Kurdi calls for compassion | News | DW | 06.09.2018
சிறுவன் ஆலன் குர்தி

சிரியாவில் உள்நாட்டு நடந்த போர் சமயத்தில் அந்த நாட்டில் இருந்து வெளியேறி லட்சக்கணக்கானோர் ஐரோப்பாவை நோக்கி புலம்பெயரத் தொடங்கினர். அப்படி 2015ஆம் ஆண்டு கிரீஸை நோக்கி அகதிகளாக இடம்பெயர்ந்த சிரிய மக்களை ஏற்றி சென்ற கப்பல் கூடுதல் எண்ணிக்கையில் நபர்களை ஏற்றி சென்றதால் மத்திய தரைக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் இறந்த ஆலன் குர்தி என்ற 3 வயது சிறுவனின் உடல் துருக்கியில் கரை ஒதுங்கியது. கரை ஒதுங்கிய அந்த சிறுவனின் புகைப்படம் சர்வதேச சமூகத்திடம் பெரும் சலனத்தை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வே சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ’அகதிகள் அணி’ என்ற ஒன்றை உருவாக்க காரணமாக அமைந்தது. நாடற்றவர்களாக, அகதிகளாக வாழும் மக்களின் நம்பிக்கையற்ற இருள்சூழ்ந்த உலகில் சிறு ஒளியை பாய்ச்சக் கூடிய நடவடிக்கை. அந்த கமிட்டியின் இந்த முயற்சி பாராட்டுக்குரிய ஒன்று.

இலங்கை உள்ளிட்ட அகதிகளின் கணக்கு இதில் வரவில்லை.

அகதிகள் அணி என்று பார்த்ததும் உலகெங்கும் பரவியுள்ள அகதிகள் பற்றிய தரவுகளை தேடிப்பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. அப்படி தேடிப்பார்த்ததில் 2020ஆம் ஆண்டு UNHCR கணக்குப்படி 2.64 கோடி மக்கள் அகதிகளாக உள்ளனர். மேலும் 40 லட்சம் பேர் தஞ்சம் கோரிய நிலையில் உள்ளனர்.   அகதிகளில் சிரியா (68 லட்சம்), வெனிசுலா (49 லட்சம்), ஆப்கானிஸ்தான் (28 லட்சம்), தெற்கு சூடான் (22 லட்சம்), மியான்மர் (11 லட்சம்) ஆகிய இந்த ஐந்து நாடுகளை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மொத்த அகதிகள் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பகுதிக்கும் மேற்பட்டதாகும்.  இவை அதிகாரப்பூர்வமான கணக்குகள் மட்டுமே, உண்மை நிலவரம் இன்னும் மோசமாக இருக்கும் என கணிப்பது எளிது.

இப்படி கோடிக்கணக்கில் அகதிகள் உருவாக்கப்படுவதில் உள்நாட்டுப் போர், பொருளாதார சீர்குலைவு, பேரினவாத தாக்குதல் ஆகிய மூன்று பிரச்சினைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. இவற்றில் ஜனநாயகத்தை நிலைநாட்டப்போவதாகவும் பேரழிவு ஆயுதங்களில் இருந்து உலகை காப்பதற்கான நடவடிக்கை என்ற பெயரிலும் அமெரிக்காவின் மேலாதிக்கவெறியின் காரணமாகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் மிகவும் நீளமானது. சிரியா, வெனிசுலா, ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகியவை துலக்கமான உதாரணங்கள். தற்போது கியூபா மீதும் தனது ஆதிக்கத்தை நிறுவப் பார்க்கிறது; கியூபா நாட்டு மக்களின் அமெரிக்க எதிர்ப்புணர்வு அதற்கு சவாலாக நிற்கிறது.

அகதிகள் உருவாக்கம்:

அமெரிக்க மேலாதிக்க போர்வெறியின் விளைவே!

2020 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் 29 பேர் கொண்ட அகதிகள்‌ அணியில் 9 பேர் சிரியா நாட்டை சேர்ந்தவர்கள். பெரும்பாலானவர்கள் 2011-ஆம் ஆண்டு தொடங்கி நடந்த உள்நாட்டு போரின் போது நாட்டை விட்டு வெளியேறியவர்கள்.

கடந்த பத்தாண்டுகளில் உலகின் அகதிகளாக மாற்றப்பட்ட மக்களில் பெரும்பகுதி சிரியா நாட்டின் மக்கள் தான். UN refugees agency கணக்கின்படி 66 லட்சம் சிரிய மக்கள் அகதிகளாக உலகம் முழுவதும் இருக்கின்றனர்.  சிரியா என்பது அரபு ஷேக்குகள் ஆளும் நாடல்ல. இதர அரபு நாடுகளை ஒப்பிடும்போது கல்வியறிவிலும் நாகரிகத்திலும் மேம்பட்ட நாடு. ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சியாகவும் ஏகாதிபத்தியங்களுடனான உறவில் இரட்டைத் தன்மை கொண்டதாகவும் இருந்தபோதிலும், சிரியாவின் அல் அசாத் அரசு ஒரு மதச்சார்பற்ற அரசாகவே இருந்து வருகிறது. பல்வேறு மத, இன குழுக்கள் இருந்த போதிலும், அந்நாட்டில் மத, இன மோதல்கள் நடந்ததில்லை.

How the world reacted to UAE, Israel normalising diplomatic ties | Conflict News | Al Jazeera

ஆனால், அந்நாட்டில் கைக்கூலி இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களைக் கொண்டு, அந்நாட்டு அரசுடன் மோதலைத் தீவிரப்படுத்தி அந்நாட்டை குருதிச் சேற்றில் மூழ்கடித்ததே அமெரிக்காதான். இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களைக் கைக்கூலிகளாகக் கொண்டு மேற்காசியாவைத் தனது மேலாதிக்கத்துக்கேற்ப மாற்றியமைக்கும் அமெரிக்காவின் திட்டத்தின் விளைவாக, இன்று பல்வேறு இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் மேற்காசிய நாடுகளின் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டன. அமெரிக்காவாலும், சவூதி அரேபியா, கத்தார் முதலான நாடுகளாலும் ஊட்டி வளர்க்கப்பட்ட பல்வேறு இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் இணைந்து இன்று ஐ.எஸ்.(ISIS) என்ற மிகப்பெரிய சன்னி பிரிவு இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமாக வளர்ந்து, அதன் அட்டூழியங்களும் கொலை வெறியாட்டங்களும் தலைவிரித்தாடுகின்றன.

ஊட்டி வளர்த்த அந்த தீவிரவாத குழுக்கள் தன்னை மீறி சென்ற நிலையில் தீவிரவாதத்தை ஒழிப்பதாகவும் சிரிய அரசு அந்நாட்டு மக்களுக்கு எதிராக வேதிகுண்டுகளை பயன்படுத்துவதை தடுப்பதாகவும் கூறிக்கொண்டு அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் சிரியாவில் வான்வழித் தாக்குதலை ஏவின. ஜனநாயகத்தை ஏற்காத சவூதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகள் சிரியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட உதவுவதாகக் கூறிக்கொண்டு அமெரிக்காவின் இத்தாக்குதலுக்கும் துணை நின்றன. இதனால் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக அந்நாட்டு மக்களில் மூன்றில் ஒருவர் அகதியாக்கப்பட்டனர்.

For Children Caught in Syria's War, 2016 Was Worst Year Yet, U.N. Says - The New York Times

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆப்கனில் இருக்கும் தனது போர் விமான தளத்தில் இருந்து சத்தமின்றி இரவோடு இரவாக அமெரிக்க படை காலி செய்துவிட்டு சென்றதாக செய்திகளில் பார்த்திருப்பீர்கள். 1990-களில் அதே ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ஆதரவில் வளர்ந்த தாலிபன் குழு கை ஓங்கியது. அந்த கால கட்டத்தில் 63 லட்சம் ஆப்கன் மக்கள் அகதிகளாக பாகிஸ்தானுக்கும், ஈராக்கிற்கும் வேறு சில நாடுகளுக்கும் புலம்பெயர்ந்தாக UNHCR அறிக்கை கூறுகிறது. ஆனால் அந்த அறிக்கை அகதிகள் புலம்பெயர்வை சோவியத் ரஷ்யா வெளியேறியதால் எனக் கூறுகிறது; ஒரு நாட்டின் மீதான ஆக்கிரமிப்பு முடிவுக்கு வருவது எப்படி அகதிகளை அதிகரிக்கும். உண்மை என்னவெனில் அமெரிக்க ஆதரவுபெற்ற தாலிபன் அராஜகத்தை அந்த அறிக்கை மறைக்கிறது. பின்னர், செப்டம்பர் 11, 2001 இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் ஆப்கனிஸ்தானை ஆக்கிரமிக்க அதே தாலிபன்களுக்கு எதிராக அமெரிக்க படை களமிறங்கியது. அப்படி நடத்தப்பட்ட நீண்ட ஆக்கிரமிப்பு தான் தற்போது தற்காலிக முடிவுக்கு வந்துள்ளது. தாலிபன் கை மீண்டும் ஓங்கியுள்ளது, ஆப்கன் மக்கள் அகதிகளாக வெளியேறுவது நீடிக்கிறது.

வெனிசுலாவில் 1999 ஆம் ஆண்டில் ஹூகோ சாவேஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்தார். அவர் தன் நாட்டின் எண்ணெய் வளத்தின் மீது அமெரிக்க நிறுவனங்கள் கொண்டிருக்கும் ஏகபோக உரிமையை முடிவுக்கு கொண்டுவந்தார்; எண்ணெய் வயல்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்; மேலும் கல்வி, மருத்துவம் என பலவற்றிலும் மக்களுக்கு ஆதரவான சீர்திருத்தங்களை (Bolivarian Mission) செய்து ஒரு மக்கள் நல அரசாக கட்டமைக்க முயன்றார். வெனிசுலாவில் ஏற்பட்ட இந்த மாற்றம் தென் அமெரிக்க நாடுகள் முழுவதும் பரவிவிடும் என்று அஞ்சி நடுங்கியது அமெரிக்க அரசு. வெனிசுலா நாட்டின் இராணுவத்திலும் அதிகார வர்க்கத்திலும் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி சாவேஸ் ஆட்சிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தது; சாவேஸுக்கு இருந்த மக்கள் ஆதரவு அவற்றை முறியடிக்க உதவியது.

Chávez, Like Castro, Has Brother at the Ready - The New York Times
வெனிசுலா முன்னாள் அதிபர் சாவேஸ்

2013 ஆம் ஆண்டு சாவேஸ் இறப்புக்கு பிறகு அதிபராக பதவியேற்ற நிகோலஸ் மதுரேவுக்கும் அந்த தொல்லை தொடர்கிறது; மேலும் பொருளாதார தடைகள் மூலம் அந்நாட்டு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுத்தியது; அந்த தட்டுப்பாட்டை எதிர்த்து தானே தனது ஆதரவாளர்களை கொண்டு கலகங்களை நடத்தியது. அதன் விளைவாக அந்நாட்டிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.  2017ல் மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மதுரேவை அதிபராக ஏற்க முடியாது என அறிவித்த கொய்டோ தன்னையே அதிபராக அறிவித்து கொண்டார்; அதனை அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகள் ஆதரிக்கின்றன. அமெரிக்காவின் சதி வேலை காரணமாக வெனிசுலா மக்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறுவது தொடர்கதையாக நீடிக்கிறது.

சிரியா, ஆப்கன், ஈராக், வெனிசுலா போன்று அமெரிக்காவால் சிதைக்கப்பட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக மாற்றப்பட்ட மக்கள் தொகை கோடிக்கணக்கில் இருக்கும். அவர்களுக்கு இஸ்ரேலை போல ஒரு நாடு ஒதுக்க வேண்டுமெனில் கலிபோர்னியா மாகாண அளவுக்கு ஒரு நாட்டையே ஒதுக்க வேண்டி இருக்கும்.

நாடோடியாகும் அகதிகள்:

பேரினவாதம், மதவாதத்தின் கைவரிசை!

பௌத்த பேரினவாதம், இராணுவ அடக்குமுறை ஆகியவற்றால் மியான்மரிலிருந்து விரட்டப்பட்டு சுமார் 11 லட்சம் ரோஹிங்கிய முசுலிம் மக்கள் அகதிகளாக மாறினர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் வங்கதேச அகதிகள் முகாம்களில் வதைப்பட்டு வருகின்றனர். அவர்கள் இந்தியா நோக்கி வர முயன்றபோது இஸ்லாமிய அகதிகள் என்ற ஒரே காரணத்துக்காக பாசிச மோடி அரசால் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இலங்கையில் விடுதலை புலிகளுடனான இறுதிபோரில் சிங்கள இராணுவத்தால் ஈழத்தமிழ் மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர். அங்கு இருந்து தப்பிப் பிழைக்க இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இரகசியமாக படகேறி செல்லும் நிலைக்கு ஈழத்தமிழ் மக்கள் தள்ளப்பட்டனர். பத்தாண்டுகளுக்கு மேலாக தொப்புள்கொடி உறவு என சொல்லிக்கொள்ளும் தமிழ்நாட்டிலேயே அகதி முகாம்களில் எந்தவித உரிமையும் அற்று மோசமான வாழ்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Anti-CAA protests gave us poetry to resist, but hard plumbing of alternative politics yet to be worked out | The Indian Express
சிஏஏ-வுக்கு எதிரான மக்களின் போராட்டம்

இந்தியாவிலோ CAA, NRC மூலம் அசாம் மாநிலத்தில் மட்டும் லட்சக்கணக்கான மக்களை குடியுரிமையற்றவர்களாக, அகதிகாளாக மாற்றியது. அவர்களை அடைத்து பல்வேறு மாநிலங்களில் முகாம்களையும் கட்டியது. அதோடு நாடு முழுவதும் CAA, NRC, NPR ஐ விரிவுபடுத்துவதன் மூலம் கோடிக்கணக்கான இஸ்லாமிய மக்களை அகதிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இவை மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் 1973க்கு பிறகு அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளால் அமல்படுத்தப்பட்ட புதிய தாராளவாத கொள்கைகள் ஏற்படுத்திய ஏற்றத் தாழ்வாலும் வறுமையினாலும் அகதிகளான மக்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் இருக்கும்.

உலக ஒழுங்கை உடைத்தெறி!

புதிய உலக ஒழுங்கை படைத்தளி!

ஹிட்லரின் நாஜி பாசிசம் யூதர்கள் மீது தாக்குதல் நடத்திய, போர்வெறியுடன் ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்திய காலகட்டத்தில் உலக மக்களை இறுதியாக தாங்கி பிடிக்க சோவியத் ரஷ்யா தலைமையில் சோசலிச முகாம் ஒன்று இருந்தது. இன்று அமெரிக்க ஒற்றைத் துருவ ஆதிக்கத்தின்கீழ் ஒடுக்கப்பட்ட நாடுகளும் மக்களும் கேட்பாரற்ற நிலையில் இருக்கின்றனர். அகதி வாழ்க்கை எனும் துயர்மிகுந்த நிலைக்கு இனி யாரும் தள்ளப்படக்கூடாது; ஏற்கனவே தள்ளப்பட்டவர்களுக்கு மீள்குடியேற்றம் உறுதி செய்யப்பட வேண்டுமெனில் அமெரிக்கா தலைமை தாங்கும் இந்த உலக ஒழுங்கு மாற்றியமைக்கப்பட வேண்டும். அந்த மாற்று மற்றொரு ஏகாதிபத்திய முதலாளித்துவ நாட்டின் தலைமையிலானதாக இருக்க முடியாது.

  • சதாம் ஹூசேன்.

 

விவரங்களுக்கு உதவியவை:

https://publicpolicy.wharton.upenn.edu/live/news/1696-the-legacy-of-hugo-chavez-and-a-failing-venezuela

https://thebridge.in/badminton/badminton-syria-tokyo-olympics-refugee-aram-mahmoud-journey-22320

https://thebridge.in/badminton/badminton-syria-tokyo-olympics-refugee-aram-mahmoud-journey-22320

https://www.unhcr.org/flagship-reports/globaltrends/

https://www.trtworld.com/magazine/yusra-mardini-from-rescuing-refugees-at-sea-to-competing-in-the-olympics-48709

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here