விழுப்புரம் மாவட்டத்தில் கெடார் அருகில் உள்ள பூங்குணம் கிராமத்தில் இயங்கி வந்தது அன்பு ஜோதி ஆசிரமம்.  இந்த ஆசிரமத்தில் பல்வேறு கிரிமினல் குற்ற செயல்கள் நடந்துள்ளதாக அன்றாடம் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஆசிரமம் ஆதரவற்றவர்கள், முதியவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சாலையோரத்தில் அலைந்து திரிகின்ற அனாதைகள் ஆகியோர்களை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு துவங்கப்பட்டது.

துவங்கிய நாள் முதல் இன்று வரை சட்டப்பூர்வமாக அனுமதி பெறவில்லை என்பதை போலீசு, ஆசிரமத்தை கண்காணிக்கின்ற தகுதி பெற்ற  உரிய துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மனசாட்சியற்ற அதிகார வர்க்க திமிர் எடுத்த கும்பல் தற்போது கண்டுபிடித்துள்ளது.

சாலையோரத்தில் சுண்டல் விற்பவர்களிடம் ஒரு கைப்பிடி சுண்டலை லஞ்சமாக அள்ளி வாயில் போட்டுக் கொள்ளும் சாதாரண போலீசு கான்ஸ்டபிள் முதல் மேல்மட்ட அரசியல்வாதிகளுக்கும், கார்ப்பரேட் கொள்ளை கூட்டத்திற்கும் ஏவல் நாயாக செயல்படுகின்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பட்டப்படிப்புகளை படித்து விட்டு நாட்டை நிர்வாகம் புரிவதாக கூறிக்கொள்ளும் மெத்த படித்த அதிகாரிகள் வரை இது போன்ற ஆசிரமங்கள், பள்ளி, கல்லூரிகள் போன்றவற்றில் பொறுக்கி நிற்பதை வேலையாக வைத்துள்ளனர். பிரச்சனை வந்த பிறகு அதை நோக்கி படையெடுப்பதும் தாங்கள் கடமையை கறாராகவும், கண் அயராமலும் செயல்படுவதைப் போன்று அன்றாடம் பரபரப்பான செய்திகளை ஊடகங்கள் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.

இதுபோன்ற நடவடிக்கைகளை புதிதாக கண்டுபிடித்தது போல பரப்புகின்றனர்.

தமிழகம் முழுவதும் காவி உடை தரித்த சாமியார்கள், கார்ப்பரேட் பார்ப்பன சாமியார்கள், கிருத்தவ, இஸ்லாமிய சாமியார்கள் செய்கின்ற தில்லுமுல்லு சதிராட்டங்களை அன்றாடம் ஏதாவது ஒரு வகையில் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இரண்டு கை கால்களும் கொண்ட மனிதர்களே இப்படிப்பட்ட ‘போலி அல்லது அசல் சாமியார்களை’ நம்பி தனது வாழ்க்கை பிரச்சனைகளை தீர்ப்பதற்கு குறுக்கு வழியை தேடி அலைகின்ற போது, உடல் மற்றும் மன வளர்ச்சி குன்றிய மக்கள் இவர்களை நம்பி செல்வதும், திக்கு திசையற்ற அந்த மக்கள் இவர்களால் ஏமாற்றப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.

70 வயது கொண்ட முதியவர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து காணாமல் போன பிறகுதான் அந்த ஆசிரமத்தை குறித்த விசாரணை துவங்கி உள்ளது. அதுவும் ஓர் ஆண்டுக்கு மேல் நடையாய் நடந்த பின்னரும் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போட்ட பிறகு தான் எரும மாட்டு தோல் படைத்த போலீஸ் உள்ளிட்ட அதிகார வர்க்கம் ஆசிரமத்தின் கிரிமினல் குற்ற நடவடிக்கைகளை ஆராய துவங்கியது.

இந்த சம்பவம் அம்பலமாகின்ற வரை போலீசு மற்றும் சொல்லிக் கொள்ளப்படும் சமூக ஆர்வலர்கள் மேலே விவரித்த சாலையோர அனாதைகள், மனவளர்ச்சி குன்றியவர்கள், வயது முதிர்ந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளை கண்டால் அவர்களை அழைத்துச் சென்று இந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் தான் ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பு ஜோதி ஆஸ்ரமம்

ஆசிரமத்தின் மீது குற்றச்சாட்டு வந்த பிறகும் ஆசிரம நிர்வாகிகள் போலீசுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்ற செய்தியும் வெளியாகி உள்ளது. இத்தகைய பாலியல் வன்கொடுமை, கிரிமினல் கூடாரமான அன்பு ஜோதி ஆசிரமத்தை ஜுபின் பேபி-மரியா என்ற தம்பதியினர் நடத்தி வந்துள்ளனர்.

ஆசிரமத்தில் 150 பேர் தங்க வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் 2021 டிசம்பர் மாதம் ஆறாம் தேதி 53 பேரை அழைத்துக் கொண்டு பெங்களூரு, தொட்டகுப்பியில்  ஜுபின் பேபியின் நண்பரான ஆட்டோ ராஜா என்பவருக்கு சொந்தமான ஆசிரமத்திற்கு கருணை பயணம் என்ற பெயரில் சென்றுள்ளனர். அதில் பெரும்பான்மையானவர்களை அங்கேயே தங்க வைத்து விட்டு வந்துள்ளனர்.

அவ்வாறு தங்க வைக்கப்பட்டவர்களில் சுமார் 16 பேர் காணாமல் போய் உள்ளதாகவும் விசாரணை அறிக்கை வெளியாகி உள்ளது.

பெயர்தான் அன்பு ஜோதி!
நடைமுறையோ வன்முறை!

இந்த ஆசிரமத்தை நம்பி வந்த ஏதுமற்ற மக்கள் மீது பாலியல் வன்கொடுமை முதல் குரங்குகளை விட்டு கடிக்க வைப்பது வரை பல்வேறு வக்கிரமான வன்முறையை ஏவி விட்டுள்ளது பேபி-மரியா தம்பதி உள்ளிட்ட நிர்வாக கும்பல்.

அன்பு ஜோதி ஆஸ்ரமம் நிர்வாகிகள் பேபி – மரியா தம்பதி

திரைப்பட இயக்குனர் பாலா தயாரித்த நான் கடவுள் படத்தில் வருவதைப் போல அவர்களை சித்திரவதை செய்ததற்கு ஆதாரமாக ரத்தக்கரை படிந்த பாய், இரும்பு சங்கிலி மற்றும் குண்டாந்தடிகள் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள்: குடியும் கூத்தும் கும்மாளமும் தான் ஈஷாவின் சிவராத்திரி!

நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. குடும்பத்தினராலும், சமூகத்தாலும் வெறுக்கப்படும் இத்தகைய மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதற்கு வக்கற்ற அரசு கட்டமைப்பு தனது பொறுப்பை தட்டிக் கழித்து விட்டு போலி சாமியார்கள் மற்றும் தன்னார்வக் குழுவினரிடம் ஒப்படைக்கின்றனர்.

அவர்கள் ஆசிரமங்கள் என்ற பெயரில் ‘சேவை நிறுவனங்களை’ துவங்குவதற்கு சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமான முறையிலும் அனுமதி அளித்துக் கொண்டிருக்கிறது.

இத்தகைய பிணம் புடுங்கி கூட்டத்தை இவற்றைக் கண்காணிப்பதற்கென்று எந்தவிதமான வழிமுறைகளும் இல்லாததால் பொதுவாக மக்களிடம் இருந்து பல லட்சங்களை திரட்டி கொண்டு, கிரிமினல் கும்பலை அடியாளாக கொண்டு ஆசிரமங்களை குட்டி சாம்ராஜ்யங்களைப் போல நடத்தி வருகின்றனர் மேற்கண்ட ‘மனிதாபிமானிகள்’

கடந்த 21 ஆண்டுகளாக எந்த அனுமதியும் இல்லாமல் இப்படிப்பட்ட ஆசிரமம் நடத்தியதே மிகப்பெரிய கிரிமினல் குற்றமாகும். அதை கண்டு கொள்ளாமல் அனுமதித்த அரசு அதிகாரிகள் அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும்.

அவர்களின் பெயர்களை புகைப்படத்துடன் அறிவித்து அவர்கள் தங்கியிருக்கும், குடியிருக்கும் இடங்களில் அவர்களின் யோக்கியதையை அம்பலப்படுத்த வேண்டும். ஆசிரம நிர்வாகிகள் மீது விசாரணை நடத்துவதை போன்று இதுவரை கண்டு கொள்ளாமல் துணை நின்ற அதிகார வர்க்கத்தின் மீதும் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

அன்பு ஜோதி ஆசிரமத்தின் மீது குற்றச்சாட்டுகள் வந்தவுடன் பிப்ரவரி 14-ஆம் தேதியே ஆசிரமத்தை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். அதன் பிறகு தேசிய மகளிர் ஆணையம், மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மற்றும் போலீஸ் அதிகாரிகள், சிபிசிஐடி விசாரணை உள்ளிட்ட அனைத்தையும் இறக்கிவிட்டு குற்றவாளிகளை தப்ப விடாமல் விசாரணை நடத்துவதாக நம்பிக்கையூட்டுகின்றனர்.

திருச்சியில் பிரேமானந்தா என்ற கிரிமினல் சாமியார் நடத்தி வந்த ஆசிரமத்தில் இது போன்ற பல்வேறு பாலியல் கிரிமினல் குற்றங்கள் நடைபெறுவதாக செய்தி வந்தவுடன் அந்த ஆசிரமத்தை இழுத்து மூடச் சொல்லி போராடியது மக்கள் கலை இலக்கிய கழகம்.

அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு ஆசிரமங்கள் தொடர்ந்து அம்பலப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.

நாட்டின் ஜனாதிபதியே ஜெகதீஷ் வாசுதேவ் என்ற ஜக்கி கார்ப்பரேட் சாமியாரின் கைப்பிடிக்குள் இருக்கும்போது இது போன்ற உள்ளூர் சாமியார்களை, ஆசிரம நிர்வாகிகளை சட்டப்பூர்வமாக ஒன்றும் ஆட்டவோ அசைக்கவும் முடியாது.

இதையும் படியுங்கள்: ஈஷாவின் மஹாசிவராத்திரி! கார்ப்பரேட் சாமியார் ஜக்கி விரிக்கும் சதிவலை!

வேறொரு பிரச்சனை வரும் வரை அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கிரிமினல் குற்ற செயல்கள் கிசுகிசு ஊடகங்களுக்கு நல்ல தீனியாக அமையும்.

அதாவது பெங்களூரு பிடதி, சென்னை திரிசூலம், புதுச்சேரி ஏம்பலம் போன்ற பகுதிகளில் நித்தியானந்தா ஆசிரமத்தில் நடந்த பல்வேறு கிரிமினல் குற்ற செயல்கள் பற்றிய விசாரணைகள், ஊடகங்களின் புலனாய்வு கிசுகிசுக்கள் போன்ற அனைத்தும் நித்யானந்தா நாட்டை விட்டு ஓடி கைலாசாவை துவங்கிய பிறகு படிப்படியாக குறைய தொடங்கியது போல சிறிது காலத்திற்குப் பிறகு அடங்கிவிடும். உண்மை குற்றவாளிகள் சில காலம் சிறையில் இருந்தாலும் வெளியில் வந்து வேறொரு பெயரில் இதேபோன்று மோசடியை நடத்த துவங்கி விடுவார்கள்.

எனவே நாட்டில் குறிப்பிட்ட சதவீதம் உள்ள மாற்றுத்திறனாளிகள், சாலையோர அனாதைகள், மனவளர்ச்சி குன்றியவர்கள், மற்றும் வயது முதியோர்கள் ஆகியோரை பாதுகாப்பதற்கு பொருத்தமான அரசு கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்.

சக மனிதர்களின் அவலங்களை புரிந்து கொள்ளக்கூடிய மனிதாபிமானம் கொண்ட, அதற்கு மேலாக இத்தகைய கேடுகெட்ட அவலங்களை உருவாக்குகின்ற ஆளும் வர்க்கத்திற்கு எதிராக கோபாவேசம் கொண்ட புதிய சமூக அமைப்பு ஒன்றை உருவாக்குவதை நோக்கி தொடர்ந்து போராடுவதும் அதுவரையில் அரசு கட்டுப்பாட்டில் பொருத்தமான பாதுகாப்பகங்களை உருவாக்கி முறையாக கண்காணிப்பதும் உடனடி தேவையாகும்.

  • சண்.வீரபாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here