வம்பர் 8, 2016 இரவு 8 மணி: உழைத்துக் களைத்த இந்திய மக்கள் ஒவ்வொருவராக வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வைச் சூறையாடும் பல திட்டங்களுடன் பிரதமர் பதவிக்கு வந்துள்ள மோடி அப்போது திடீரென டிவியில் தோன்றி தனது வரிசையில் முதல் திட்டமான 500/1000 ரூபாய் நோட்டுக்கள் அன்றிரவு 12 மணி முதல் செல்லாது என அறிவித்தார்.

மொத்த பணப்புழக்கத்தில் 86 சதவீதம் இருந்த ரூபாய் நோட்டுகளை எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் தடாலடியாக செல்லாது என்று அறிவித்ததை பார்ப்பனர்கள், பணக்காரர்கள், மேல்தட்டு வர்க்கத்தை உள்ளடக்கிய சிறு கூட்டம் துள்ளிக்குதித்து வரவேற்றது. அன்றாட கூலி வேலை செய்பவர்கள், சிறு வியாபாரிகள், சிறு/குறு முதலாளிகள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட பெரும்பான்மை மக்கள் குழப்பத்திலும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

அன்றிரவே 500/1000 ரூபாய் நோட்டுகளை வீடுகளில் அடுக்கி வைத்திருந்த பணக்காரர்கள் நகைக் கடைகளில் வரிசை கட்டி நின்றனர். ஆனால் தங்கள் அவசர தேவைகளுக்காகவும், சேமிப்பாகவும் கடுகு டப்பாக்களிலும், உண்டியல்களிலும், சுருக்குப்பைகளிலும் சேமித்து வைத்திருந்த சாமானிய மக்கள் அந்நோட்டுகளை மாற்ற ATM வாசல்களிலும், வங்கி வாசல்களிலும் தங்கள் வேலை/தொழில்களை விட்டுவிட்டு மாதக்கணக்கில் தவம் கிடந்தனர்.

தங்கள் கைகளிலிருந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிர்ச்சியிலும், வரிசைகளில் நீண்ட நேரம் நின்றதாலும், தற்கொலை செய்துகொண்டும் ஏறத்தாழ 150-க்கும் மேற்பட்டவர்கள் உயிரை விட்டனர். மருத்துவ கட்டணங்களை கட்ட முடியாததாலும் மருந்துகளை குறித்த நேரத்தில் வாங்க முடியாததாலும் இறந்தவர்கள் தனி. ஆனால் வெளிப்படையாக மக்கள் கண்ணெதிரே உயிரை விட்டவர்களுக்குக்கூட இந்த மரண தூதுவர்கள் எந்தவிதமான நிவாரணமும் வழங்காதது மட்டுமன்றி அத்தகைய மரணங்களைப் பற்றி எந்தவித புள்ளிவிவரம் அரசிடம் இல்லை என்று முடித்துக் கொண்டனர்.

உலகின் மிக மோசமான, முட்டாள்தனமான பொருளாதார நடவடிக்கையான இந்த பணமதிப்பிழப்பால் நாடு முழுவதும் ஏற்பட்ட கடுமையான விளைவுகளையும், உள்நாட்டில் எழுந்த எதிர்ப்புகளையும், பொருளாதார அறிஞர்களின் விமர்சனங்களையும் மடைமாற்ற “50 நாட்களில் நிலைமை சரியாகிவிடும். அப்படி இல்லை என்றால் 51-வது நாளில் என்னை முச்சந்தியில் எரித்துக்கொன்று விடுங்கள்” என்று நாடகமாடினார் மோடி.

கருப்பு பண ஒழிப்பு, கள்ளப் பணம் ஒழிப்பு, மற்றும் தீவிரவாத செயல்களுக்கான நிதி ஆதாரத்தை தடுப்பது என்று இந்த மூன்று முக்கிய நோக்கங்களுக்காக கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை இவற்றில் எந்த ஒரு நோக்கத்தையும் நிறைவேற்றவில்லை என்பது ஏற்கனவே அம்பலமாகிவிட்டது.

கருப்பு பணத்தை ஒழிக்க என்று கொண்டுவரப்பட்ட இந்நடவடிக்கை எந்தவொரு கருப்புப்பண முதலையையும் ATM வாசல்களிலும், வங்கி வாசல்களிலும் இரவுபகலாக நிற்கவைக்கவில்லை. கிரெடிட் கார்டுகள், டிஜிட்டல் பரிவர்த்தனை வசதிகளை ஏற்கனவே பெற்றிருந்த பணக்காரர்களும் நிற்கவில்லை. மாறாக கருப்புபணம் என்றால் என்னவென்றே தெரியாத உழைக்கும் மக்களைத்தான் இந்நடவடிக்கை வேட்டையாடியது.

மக்களிடையே டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரித்து நேரடி பண பரிவர்த்தனைகளை குறைப்பதன் மூலம் கருப்புப்பணத்தை ஒழிப்பது என்று வலதுசாரி பொருளாதார நிபுணர்களும், பத்திரிக்கையாளர்களும், அரசியல் விமர்சகர்களும், மற்றும் வெளிப்படையான சங்கிகளும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு வியாக்கியானம் கொடுத்துக்கொண்டிருந்தனர்.

இதையும் படியுங்கள்:பணமதிப்பிழப்பும் பரிதாபமான பத்து ரூபாய் காயினும்!

கருப்புப்பண ஒழிப்பின் லட்சணத்துக்கு குஜராத் பாஜக நிர்வாகிகளின் வீடுகளிலும், தமிழ்நாட்டில் சேகர் ரெட்டியின் வீட்டிலும் புழக்கத்துக்கே வராத புத்தம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பிடிபட்டதும், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் ஏறக்குறைய 99 சதவீதம் திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கையும் ஒரு சில சான்றுகள் என்றால் டிஜிட்டல் பரிவர்தனையைக் குறித்த சங்கிகளின் வியாக்கியானமும் சமீபத்தில் சந்திக்கு வந்திருக்கிறது.

நாட்டிலிருந்த மொத்த நேரடி பணப்புழக்கத்தின் மதிப்பு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன் அதாவது நவம்பர் 7, 2016-ல் 17.96 லட்சம் கோடிகளாக இருந்ததென்றும் தற்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் 6 ஆண்டுகளுக்குப் பின் அக்டோபர் 27, 2022 வரை மொத்த நேரடி பணப்புழக்கம் 70 சதவீதம் அதிகரித்து 30.82 லட்சம் கோடிகளாக அதிகரித்துள்ளது என்ற புள்ளிவிபரம் வெளிவந்துள்ளது.

பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்ட காலமான நவம்பர் வடமாநிலங்களில் அறுவடைக்காலமாக இருந்ததால் தங்கள் விளைபொருட்களுக்கான பணம் கிடைக்காமல் விவசாயிகள் பட்ட அவதியும், நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள நாள்தோறும் என்று சுமார் 74 தடவைகள் மாற்றப்பட்ட விதிகளும், கிராமப்புற மக்கள் உடனடியாக அணுகக்கூடிய கூட்டுறவு வாங்கிகளில் செல்லாத நோட்டுகளை மாற்றமுடியாது என்ற பலமுனை தாக்குதலால் மக்கள் பட்ட வேதனைகளை சொல்லிமாளாது.

அதேவேளையில் பணமதிப்பிழப்பு என்ற இந்த படுபாதக துல்லியத் தாக்குதல் மூலம் கமிஷனுக்கு கறுப்பை வெள்ளையாக மாற்றி பாஜக-வின் நிதியை அதிகரித்துக்கொண்டதும், PayTM முதலாளி இந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்ததும், கடைசி நேரத்தில் கல்லா கட்டியதால் நகைக்கடை முதலாளிகளுக்கு அபரிமிதமான லாபம் என்று விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலருக்கு மட்டுமே வாழ்வையும், பெரும்பாலான மக்களுக்கு மரணங்களும், வேலை இழப்பு, வறுமை, பசி, பட்டினி, முறையான மருத்துவம், மருந்துகள் கிடைக்காதது, மூலப்பொருள்கள் கிடைக்காதது, தொழில் முடக்கம் போன்ற எண்ணிலடங்கா பாதிப்புகளைத்தான் கொண்டு வந்தது.

ஆகமொத்தம் மோடி தலைமையிலான முட்டாள் கூட்டத்தின் பணமதிப்பிழப்பு ஏற்படுத்திய மேற்கண்ட பாதிப்புகள் 6 ஆண்டுகளாகத் தொடர்கிறது என்றாலும் “எரித்துக்கொன்று விடுங்கள்” என்று சொன்ன மோடி ஓட்டுப்பொறுக்கத்தான் பலமுறை சந்திக்கு வந்துள்ளார். அப்படியே மோடி வந்து நின்று “பணமதிப்பிழப்பின் தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு முழுப்பொறுப்பு ஏற்கிறேன். நான் கேட்டுக்கொண்டதுபோலவே என்னை எரித்துக் கொன்று விடுங்கள்” என்று சொன்னாலும் இளகிய மனம் படைத்த இந்திய மக்கள் ஒருபோதும் இக்காரியத்தை செய்யமாட்டார்கள். ஆகவே மோடியே தன்னைத்தானே கொளுத்திக்கொண்டால்தான் உண்டு, மானமுள்ளவன் அப்படிதான் செய்வான்.

  • ஜூலியஸ்

2 COMMENTS

  1. பணமதிப்பிழப்புக்கு மோடி கும்பல் ஒரு காரணத்தை பந்தாவாக வெளியே சொன்னாலும்… அவர்களுக்கு மறைமுகமான திட்டங்கள் இருந்ததாக தான் நான் புரிந்துகொள்கிறேன்.

    வங்கிக்கு மக்கள் வைத்திருந்த பணம் வந்து சேர்ந்துவிட்டது. மோடியின் நண்பர்கள் வங்கி மூலதனத்தை தான் கடந்த சில ஆண்டுகளாக கடன் என்ற பெயரில் வாங்கி… வராக்கடனாக மாற்றி வங்கிகளை திவால் நிலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.

    • உண்மைதான் நண்பரே… மக்கள் சேமிப்பு பணத்தை திட்டம் போட்டு திருடிய கும்பல், அம்பானிக்கும் அதானிக்கும் வாராக் கடனாக வாரி இறைக்கிறது. பண மதிப்பு நீக்கத்தால் கருப்பு பணம் ஒழிந்து விடும் என்று சொன்னதெல்லாம் அப்பாவி மக்களை ஏமாற்றும் மோடி வித்தை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here