டந்த சில நாட்களுக்கு முன் ஜன கண மனஎன்ற மலையாளம் படம் பார்க்க நேர்ந்தது. போலி என்கவுண்டருக்கு எதிரான அந்த படம் பார்த்த போது என் கண் முன்னே பல போலி என்கவுண்டர்கள் வந்து போயின. இந்த போலி என்கவுண்டர்கள் யாருக்காக? எதற்காக? இந்த கேள்வி எல்லோருக்கும் இருக்கும்.

தற்போது தெலுங்கானா மாநிலத்தில் நடந்த போலி என்கவுண்டர் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போலிசு திட்டமிட்டு கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. கடந்த 2019 ஆம் வருடம்  தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் கும்பல் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடையவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டு  நான்கு பேர் (லாரி ஓட்டுநர்கள் முகமது ஆரிப், சிந்தகுண்டா சென்னகேசவலு மற்றும் கிளீனர்கள் ஜொள்ளு சிவா மற்றும் ஜொள்ளு நவீன்) கைது செய்யப்பட்டனர்.

போலீசால் கொலை செய்யப்பட்ட நான்கு பேர்

கைது செய்யப்பட்ட நால்வரையும் கொலை நடந்த இடத்தில், எப்படி நடந்தது என விசாரிக்க அழைத்துச் செல்லும் போது, அந்த நால்வரும் காவலர்களை தாக்க முற்பட்டதாகவும்., அதனால் தாங்கள் சுட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் நக்சல்களை வேட்டையாடுவதற்கு பல போலி என்கவுண்டர்களை நடத்திய ஆந்திர போலீசாருக்கு இது ஒன்றும் புதியதல்ல. 2019ல் நடந்த என்கவுண்டரில் சந்தேகம் இருப்பதாக மனித உரிமை அமைப்புகள் கூறிய நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி வி.எஸ். சிர்புர்கர் தலைமையில் ஒரு குழுவை டிசம்பர் 12, 2019 அன்று உச்சநீதிமன்றம் அமைத்தது. அந்த விசாரணைக் குழு கொடுத்த அறிக்கை தான் இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த என்கவுண்டர் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க முயன்றால் ஓடி தான் இருக்க வேண்டும் எனவும், அவர்கள் தாக்கியதாக கூறியதில் உண்மையில்லை எனவும் அறிக்கை கூறியுள்ளது.

ஆனால் இந்த ‘என்கவுண்டர்’ தெலுங்கானா போலீசால் நிகழ்த்தப்பட்ட செய்தி வந்தபோது துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் 2000 பேருக்கு மேல் கூடினார்கள். நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று போலீசாருக்கு நன்றிகளையும் அவர்கள் செய்த கொலையும் நியாயப்படுத்தும் விதமாக கோஷங்கள் எழுப்பினர். கொல்லப்பட்ட மருத்துவரின் தந்தை ‘என் மகளின் ஆத்மா தற்போது தான் சாந்தி அடையும்’ என்றும், போலீசாருக்கும் அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் மேலும் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜன கண மன படத்திலும் கிட்டத்தட்ட இதே கதைக்களம் தான் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதன் என்கவுண்டருக்கு பின்னால் படத்தில் நடக்கும் சம்பவங்கள் மூலம் நாட்டின் எதார்த்த நிலைமையை சாட்டையடியாக காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

♦  ஜன கண மன (2022) மலையாளம் – திரைப்பார்வை

“பாலியல் வன்புணர்வு செய்பவர்களை சுட்டுக் கொல்லனும் சார்” இது தான் மக்களின் கருத்தாக உள்ளது. பெரும்பாலும் மக்கள் என்கவுண்டர்களை ஆதரிக்கும் மனநிலையிலேயே உள்ளார்கள். இது தான் என்கவுண்டர் செய்யும் போலீசாருக்கு பலமே. சுட்டுக்கொன்றால் நீதி கிடைத்து விடுவது போலவும், இனிமேல் தவறுகள் நடக்காது என்பது போலவும் சமூகத்தில் ஒரு மூடநம்பிக்கை நிலவுகிறது. மருத்துவர் கொலை சம்மந்தமான என்கவுண்டரிலும் கூட போலிஸார் கதாநாயகர்கள் போல புகழப்பட்டார்கள்.

அவசர அவசரமாக செய்யப்படும் என்கவுண்டர்கள் உள்நோக்கம் நிறைந்தவையே. கடந்த 2014 ஆம் ஆண்டு என்கவுண்டர் செய்யும் முன் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பு. இது எந்த என்கவுண்டரிலும் பின்பற்றபடுவதில்லை. யாரை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்பதை அவர்களின் பின்புலம் தான் தீர்மானிக்கிறது. குற்றம் செய்தவர் அரசியல் பின்புலத்தில் இருந்தாலோ வசதி படைத்தவராக இருந்தாலோ அங்கு என்கவுண்டர் நடப்பதில்லை; மாறாக, அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் பொள்ளாச்சி பாலியல் வன்முறை. இதில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அதிமுக அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களின் மகன்கள். இவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும், இவர்களை யாரும் என்கவுண்டர்கள் செய்வதில்லை. காரணம் அவர்களின் அரசியல் பின்புலம் மற்றும் செல்வாக்கு.

என்கவுண்டர் செய்த போலீசாருக்கு இனிப்பு கொடுக்கும் பொதுமக்கள்

இதிலிருந்து நாம் புரிந்துக் கொள்ளக் கூடியது ஒன்று தான். ஒரு வழக்கை முடிப்பதற்காகவும், மக்கள் மத்தியில் ஏற்படும் கோவத்தை தணிப்பதற்காகவும் போலீஸின் தோட்டாக்கள் உழைக்கும் மக்களின் மீதும், கேள்விக் கேட்க ஆள் இல்லாதவர்கள் மீதுமே பாயும். காவல்துறைக்கும் அதன் தோட்டாக்களுக்கும் வர்க்க பேதம் நிச்சயம் தெரிகிறது. நாம்தான் என்கவுண்டர்களைப் பார்த்தும், ‘என்கவுண்டர்களைச்’ சிலாகிக்கும் படங்களை பார்த்தும் சில்லறையை சிதறவிடுவதற்கு முன் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

  • நந்தன்

1 COMMENT

  1. குற்றம் செய்பவர்களை கைது செய்து, விசாரணை செய்து, இவர்கள் நீதிமன்ற நடைமுறையில் இழு, இழு என ஜவ்வாக இழுத்து, தீர்ப்பு வரும் பொழுது பத்தாண்டுகள் கடந்துவிடுகின்றன. ஆகையால், மக்கள் இன்ஸ்டண்ட் காபி போல இன்ஸ்டண்ட் தீர்ப்பை எதிர்பார்க்கிறார்கள். இதுவே இந்த சிஸ்டத்தின் தோல்வி தான்.

    ஆளும் வர்க்கமும் மக்களின் மனநிலையை புரிந்துகொண்டு வினையாற்றுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here