இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் நடந்து வரும் அரசு படைகளுக்கு எதிரான தாலிபான்களின் தாக்குதல்கள் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மே ஒன்றாம் தேதி முதல் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை அமெரிக்கா விலக்கிக் கொள்ள தொடங்கியது. அதன் பிறகு தாலிபன்கள் ஆப்கன் முழுவதையும் ஆக்கிரமித்து முன்னேறி வருகின்றனர். கடந்த சில வாரங்களில் மட்டும் ஆப்கானில் உள்ள பல மாகாணங்களில் தாலிபன்கள் தன்னுடைய கட்டுப்பாடின்றி கொண்டு வந்துவிட்டனர். தற்போது ஆப்கனின் தலை நகரத்தை கைப்பற்றியுள்ளதுடன் புதிய அரசமைக்க போவதாக அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதைக் கண்டு இந்தியாவில் உள்ள நூலிபன்கள் மகிழ்ச்சி அடைவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் முன்னேறிய ஜனநாயக சமூகத்தை காட்டுமிராண்டி காலத்திற்கு பின்னோக்கி தள்ளுவதில் இருவரும் ஒரு புள்ளியில் ஒன்றிணைகின்றனர்.

கடந்த மே மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு ஏறக்குறைய 35 லட்சம் அகதிகள் ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்கு வந்துள்ளனர். தாலிபன் காட்டுமிராண்டிகளுக்கு பயந்து ஆப்கனில் இருந்து தொடர்ந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். அரசுக்கு எதிராக தாலிபான்களின் தாக்குதல்களும், கலவரங்களும் வன்முறைகளும் தொடர்ந்து நீடித்தால் பாகிஸ்தானின் எல்லையை மூடப் போவதாக ஜூன் மாதத்திலேயே அதன் வெளியுறவு அமைச்சர் ஷா முஹம்மத் ஆஷிக் தெரிவித்தார்.

அது மட்டுமின்றி தாலிபன்கள் போலவே பாகிஸ்தானிலும் பிக்ரிக் தாலிபன் என்ற தீவிரவாத குழு வளர்சியடைந்து வருவதால் பாகிஸ்தான் அரசுக்கு தலைவலியாக மாறியுள்ளது. உலக அரங்கில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஆதரிக்கும் நாடு என்ற பெயரை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் இந்திய நூலிபன்களுக்கு இது நல்ல வாய்ப்பாக மாறியுள்ளது.

நேரடி ஆக்கிரமிப்பில் இருந்து
வெளியேறிய அமெரிக்கா!

ஆப்கானிஸ்தானத்தில் கடந்த 20 ஆண்டுகளாக தனது ராணுவத்தை நிறுத்தி வைத்திருந்த அமெரிக்கா, பிற்போக்குவாதிகளான தாலிபன்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சில நிபந்தனைகளுடன் தனது படைகளை அங்கிருந்து விலக்கிக் கொள்ளத் தொடங்கியுள்ளது. 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகளை முழுமையாக ஆப்கானில் இருந்து வெளியேற்றி விடுவதாக அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

2001-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்த இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட பிறகு, இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான அல் கொய்தாவிற்கு பாதுகாப்பும், தங்குமிடமும் அளித்து வந்ததாக குற்றம் சுமத்தி உலகின் பெரியண்ணன் அமெரிக்கா தனது படைகளுடன் 2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானத்தில் புகுந்தது. அதிலிருந்து அங்குள்ள இஸ்லாமிய பழமைவாத, தீவிரவாத அமைப்புகளான தாலிபன்களை எதிர்கொள்வதற்கும், மறைமுகமாக வளர்த்து விடுவதற்கும் அமெரிக்கா லட்சக்கணக்கான டாலர்களை வாரியிறைத்து உள்ளது.

அமெரிக்கா ஆப்கனில் தான் காலடி வைத்த 2001 முதல் 2021 தற்போது வெளியேறியது வரை சுமார் 60 லட்சம் கோடி ரூபாய்களை ராணுவத்திற்காக செலவு செய்துள்ளது. ஏன் இவ்வளவு செலவு செய்து ஆப்கானிஸ்தானத்தை அமெரிக்கா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது என்று பரிசீலனை செய்தால் தான் அமெரிக்காவின் உலக மேலாதிக்க வெறியும், யோக்கியதையும் புரியும்.

உலக அளவில் போர்த் தந்திர ரீதியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ள மத்திய கிழக்கு ஆசிய பிராந்தியத்தில், ஏறக்குறைய பல நாடுகளில் பாசிச சர்வாதிகாரிகள், இசுலாமிய பிற்போக்கு வாதிகள், கம்யூனிச எதிர்ப்பாளர்கள் தான் ஆட்சியில் உள்ளனர். இந்த வகையில் ஆப்கானிஸ்தானத்திலும் இஸ்லாமிய பயங்கரவாத குழுக்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.. இத்தகைய பயங்கரவாத குழுக்களை கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் அமெரிக்கா தொடர்ந்து ஆதரித்து வந்தது.

இஸ்ரேலில் உள்ள யூத – ஜியோனிச வெறியர்களை எவ்வாறு தொடர்ந்து ஆதரித்து வருகிறார்களோ அதுபோல சோவியத் ஒன்றிய சிதைவுக்கு பிறகு துண்டு துண்டாக உடைந்த கசகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், அஜர்பைஜான், ஆர்மீனியா போன்ற நாடுகள் அனைத்திலும் இயங்கும் மத அடிப்படைவாத, தீவிரவாத குழுக்களை அமெரிக்கா தொடர்ந்து ஆதரித்து வருகிறது.

1990-களில் முழுமையாக சிதைவடைந்த முன்னாள் சோவியத் யூனியன் நகரங்களில் ஒன்றான எண்ணெய் வளம் நிறைந்த உஸ்பெகிஸ்தான், ஆப்கன் எல்லைக்கு அருகில் உள்ளது. புவிசார் அரசியல் ரீதியாக இதனை கணக்கில் கொண்டும், அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போட்டியில் இருந்து தற்காலிகமாக பின்னடைந்த ருசியா மீண்டும் விழித்து விடும் என்ற அச்சத்திலும், அரேபிய நாடுகளில் அமெரிக்கா இலட்சக்கணக்கான டாலர்களை செலவழித்து தனது படைகளை, நிலைநிறுத்தி வந்தது.

மத பிற்போக்குவாதிகள்!
ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் அடியாட்கள்!

அரேபிய நாடுகளில் உள்ள எண்ணெய் கிணறுகளை தன் வசத்தில் வைத்துள்ள அரேபிய ஷேக்குகள், பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து எண்ணெய் வளத்தை கொள்ளையடித்து வருகின்றனர். இவர்களின் கொள்ளைக்கு தாலிபன் போன்ற மதவாத குழுக்கள் எப்போதும் எதிராகவோ, தடையாகவோ இருந்தது இல்லை.

1979 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிபர் ஜிம்மி கார்ட்டர், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.எஸ் மூலம் கம்யூனிச எதிர்ப்பு, முஜாகிதின்களை ஆதரித்து உருவாக்கினார். இந்த முஜாகிதின்களின் தொடர் தாக்குதல்களினாலும், ரசியாவின் உள்நாட்டு நெருக்கடிகளாலும் ஆப்கானிஸ்தானில் இருந்து 1989 ஆம் ஆண்டு ரசியாவின் படைகள் பின்வாங்கியது. இதன் பிறகு பாகிஸ்தானில் வடக்கு பகுதியில் இருந்த பஷ்தூ என்ற மொழியை பேசுகின்ற, எல்மண்ட், கந்தகார் நிலப்பகுதிகளை சேர்ந்த பட்டாணியர்கள் மத்தியில் இருந்து தாலிபன்கள் உருவானார்கள். பஷ்தூ மொழியில் இருந்து உருவான சொல்தான் இந்த தாலிபன் ஆகும். இந்த தாலிபன்கள் கடுமையான சன்னி பிரிவு இஸ்லாத்தை போதிக்கின்றனர். இதனால் OPEC எண்ணை வள நாடுகளில் ஆதிக்கம் செலுத்துகின்ற சவுதி அரேபியாவில் இருந்து நிதி உதவி தாராளமாக கிடைத்து வருகிறது.

இந்த வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொண்டு தாலிபன்கள் அதிகாரத்திற்கு வந்தனர். அதிகாரத்திற்கு வந்தவுடன் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பரவிக்கிடக்கும் பஷ்தூ இன நிலப்பிரபுக்களின் நம்பிக்கையை பெற்றனர். சன்னி பிரிவின் கடுமையான சட்ட விதிகளை அமுல்படுத்துவதன் மூலம் நிலப்பிரபுக்களின் நம்பிக்கையை உறுதி செய்தனர்.

தொடக்க காலத்தில் தாலிபான்களின் ஆட்சியை மக்கள் வரவேற்றனர். ஏனென்றால் அதுவரை நாட்டில் புரையோடிக் கிடந்த ஊழலை ஒழித்தனர். நாட்டிற்கு பொதுவான அரசியல் சட்டம் கிரிமினல், சட்டம் இல்லாத நிலைமையை மாற்றி சட்டத்தை கொண்டுவந்தனர். நாடு முழுவதும் உள் கட்டமைப்பை மேம்படுத்தி சாலை வசதிகளை ஏற்படுத்தினர். இதனால் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் அனைத்தும் கஞ்சா வணிக ரீதியாக முன்னேறியது.

தாலிபன்கள் முக்கியமான தொழில் போதை மருந்து உற்பத்தி செய்வது என்பது தான், நாடு முழுவதும் கட்டுப்பாடின்றி அதிகபட்சமாக போதைப் பொருட்களை உற்பத்தி செய்ததால் இந்த போதைப் பொருள்களை விற்பனை செய்து பல லட்சம் கோடிகளை தாலிபன்கள் ஈட்டினர். இது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய அளவு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால் போதை மருந்து அமெரிக்காவின் செல்லப்பிள்ளை ஆகும். உலகம் முழுவதும் தேவையான போதை பொருட்கள் ஆப்கனில் இருந்து ஏற்றுமதியானது.

இந்த தாலிபன்கள் நாட்டில் மக்களுக்கு கல்வி கிடைக்காமல் பார்த்துக் கொண்டனர். மத அடிப்படையிலான கோட்பாடுகளையும், பிற்போக்குத் தனங்களையும் கடைபிடிப்பதை தவிர நவீன அறிவியலைப் பற்றி ஒரு துளியும் அறியாத தற்குறிகளை தொடர்ந்து உருவாக்கி வந்தனர். இதனால் ஒரளவு படித்தவர்களும், முற்போக்கு சக்திகளும் ஆப்கனை விட்டு வெளியேறினர்.

தாலிபன்கள் காட்டுமிராண்டிகளை போல செயல்படும் பிற்போக்கு மதவாத கும்பல் ஆவர். நவீன முதலாளித்துவ சட்ட திட்டங்களை அமல்படுத்துவதில் பெயரளவிலான விருப்பம் கூட இல்லாதவர்கள். முழுக்க இஸ்லாமிய ஷரியத் விதிகளுக்கு கட்டுப்பட்டு, சட்டத் திட்டங்களை அமல் படுத்தி வருகின்றனர். இந்த இடத்தில் நீங்கள் பார்ப்பன மத வெறியர்களுடன் ஒப்பிட்டு புரிந்துக் கொள்ளலாம். லவ் ஜிகாத், புராண – இதிகாச மூடநம்பிக்கைகளை அறிவியல் என்று முன்வைப்பது, மக்களை தற்குறிகள் ஆகவே வைத்திருப்பது, தனது மத பழக்கவழக்கங்களை எதிர்ப்பவர்களை கைகால்களை வெட்டுவது போன்ற கடும் வழிமுறைகளை கையாள்வதை புரிந்து கொண்டால் தாலிபன்களை எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.

அதாவது குற்றவாளிகள் என்று இவர்கள் முடிவு செய்தவர்களை பொது வெளியில் நிற்க வைத்து கொலை செய்வது, திருடுபவர்களின் கைகால்களை வெட்டுவது போன்ற கொடூரமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. ஆண்கள் கட்டாயம் தாடி வளர்க்க வேண்டும். பெண்கள் தங்கள் உடலை முழுமையாக புர்க்காவைக் கொண்டு மூடிக்கொள்ள வேண்டும். டிவி, இசை, சினிமா போன்றவை தடை செய்யப்படும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளிக்குச் செல்வதை அனுமதிக்க முடியாது. சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமை அனைத்தும் இஸ்லாமிய கடும் கோட்பாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதே ஆகும் என்பதே தாலிபான்களின் கொள்கை மற்றும் நடைமுறையாக உள்ளது.

தண்டனை கொடுக்கும் முறை

2001ஆம் ஆண்டு தாலிபன்கள் நாட்டை கைப்பற்றியவுடன் உலகப் புகழ்பெற்ற பாமியன் புத்தர் சிலையை பீரங்கிகளையும், குண்டுகளையும் வைத்து தகர்த்து எறிந்தனர். இவை பிற்போக்கின் அடையாளம் என்று அதற்கு சப்பை கட்டினார். இந்த காட்டு மிராண்டிகள் ஆப்கனை கைப்பற்றுவதை மனித தன்மையுள்ள யாரும் வேடிக்கை பார்க்க முடியாது. அமெரிக்காவின் உலக மேலாதிக்க நோக்கங்களை அமுல் படுத்தும் போக்கில், பகடைக்காயாக மாற்றப்பட்டுள்ள ஆப்கனில் நடக்கும் மனிதப் படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் அனுமதிக்க கூடாது. கடும் கண்டனத்தை எழுப்புவோம். ஆப்கன் உடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்கும் படி மோடி கும்பலை நிர்பந்திப்போம்.

ஆப்கனின் ஆட்சியை மீண்டும் பிடிக்க எத்தணிக்கும், நவீன சமூகத்தின் அடையாளம் இல்லாத இந்த தாலிபன்கள் இந்தியாவின் நூலிபன்களுடன் நெருங்கி வருவதற்கும் பாசிச காட்டாச்சியை நடத்துவதற்கும் தூரம் அதிகம் இல்லை. ஏனென்றால் இருவரும் “ஜெய் தாலிபன்!” “ஜெய் ஸ்ரீராம்!” என்று கூச்சலிட்டுக் கொண்டே செயல்படும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் நம்பகமான அடியாள்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் அடிமைகள். என்பதை மக்களுக்கு கொண்டு செல்வோம்.

 பா.மதிவதனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here