சென்னையில் காணாமல் போன பொதுக்கழிப்பிடங்கள்
சுகாதரமாற்ற கழிப்பிடங்களால் நோய்தொற்றுக்கு ஆளாகும் பெண்கள்


உலகின் நீளமான கழிவறை எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு இந்தியன் ரயில்வே தான் அது என்றாராம் ஒரு குடிசைவாசி. இது நகைச்சுவையல்ல, உண்மைதான்.
சென்னை போன்ற பெருநகரங்களில் பொது இடங்களுக்கு செல்லும் போது அவசரத்திற்கு சிறுநீர் மற்றும் மலம் கழிக்க பொதுமக்கள் படும் அவஸ்தையை வார்த்தைகளால் சொல்லி மாளாது. இதுபோன்ற நேரங்களில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்களே. ஆண்களைப் போல எந்த இடத்தையும் பொதுக் கழிப்பிடமாக்கிக் கொள்ள முடியாமல், நல்ல, பாதுகாப்பான, பொதுக் கழிப்பிடங்களுக்காக பெண்கள் காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்படியும் நிலைமை கை மீறிப் போனால் வேறு வழியில்லாமல் ஏதேனும் அங்காடிகளிலோ, உணவகங்களிலோ சென்று உபாதையைக் கழிக்க வேண்டிய நிலை பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. அப்படி தேடிச் சென்று சிறுநீர்கழிக்க ஒரு ஓட்டலுக்கு சென்றபோது 150 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருந்தது என்று ஒரு குடும்பப் பெண் புலம்பிக் கொண்டிருந்தார். சிங்கார சென்னையில் சீரழிந்து கிடக்கிறது பொதுக்கழிப்பிடங்கள்.

கடந்த மாதம் கேரளாவில் உள்ள வயநாட்டுக்கு சென்றிருந்த போது அந்த பயணத்தில் ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் பொதுகழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு சுத்தமாக வைத்திருப்பதை காணமுடிந்தது. ஆனால் சென்னையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பிராட்வே பேருந்து நிலையத்தின் ஒருபகுதி திறந்துவெளி கழிப்பிடமாக மாறி தூர்நாற்றம் வீசுகிறது. அங்குள்ள கழிப்பறை சுத்தமாக பராமரிக்கப்படாத காரணத்தால் உள்ள செல்ல பொதுமக்களும் பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் அச்சப்படுகிறார்கள்.
அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அடையாறு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ராதாகிருஷ்ணன் சாலை என முக்கியான சாலைகளிலும் கழிப்பிடஙகளை காணமுடியவில்லை. சென்னை கொளத்தூரிலும் அயனாவரம், திருவிக நகர், பெரியார் நகர், குமரன் நகர் பேருந்து நிலையங்களிலும் கழிவறைகள் இல்லை. அன்றாடம் பயணிக்கும் மக்கள் கழிவறை இல்லாததால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் நீரிழிவு நோயாளிகளின் நிலை இன்னும் மோசமாக உள்ளது.

சென்னை மாநகரத்தில் 1கோடியே 12லட்சம் பேர் வசிக்கின்றனர். பல ஊர்களில் இருந்து சென்னைக்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்துச் செல்கின்றனர். இயற்கை உபாதையை கழிக்க தினக்கூலி தொழிலாளர்கள், ஆட்டோ, ரிக்க்ஷா, டாக்சி ஓட்டுநர்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் பொது கழிப்பிடத்தை தான் நம்பியுள்ளனர். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக பொதுகழிப்பிடங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டு விட்டது. பல இடங்களில் இருந்தும் அவை பராமரிக்கப்படாமல் உள்ளன. மாநகராட்சி அறிமுகப்படுத்திய இ டாய்லெட் தகர டப்பாவாக காட்சியளிக்கிறது.

சென்னை போன்ற பெருநகரத்தின் நிலையே இப்படி என்றால் 2 ஆம் 3ஆம் நிலை நகரங்களில் நிலை குறித்து கேட்கவே வேண்டாம்,. அங்குகெல்லாம் திறந்தவெளிகள் கழிப்பிடமாக மாற்றப்பட்டுள்ளன. பிரதமர் மோடி கடந்த 2014 இல் தொடங்கப்பட்ட ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு 500 மீட்டருக்கும் ஒரு பொதுக் கழிப்பறையை நகரத்தில் உருவாக்குவோம் என அறிவித்திருந்தது. அதன்படி சென்னையின் பரப்பளவு 426 சதுர கிலொ மீட்டர் அப்படி என்றால் 8 லட்சத்து 52 ஆயிரம் கழிவறைகள் கட்டப்பட வேண்டும். ஆனால் சிங்கார சென்னை 2.0 வில் 816 பொதுக் கழிப்பறைகள் மட்டுமே உள்ளன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அவற்றில் பெரும்பாலான கழிப்பறைகள் பூட்டிக் கிடக்கிறது, சில கழிப்பிடங்கள் சேதமடைந்துள்ளன.

சுகாதாரமற்ற பொதுக் கழிவறைகளை பயன்படுத்துவதால் பெண்களுக்கு சிறுநீர் பாதையில் நோய்த் தொற்று ஏற்படுகிறது. இருக்கும் கழிவறைகளில் போதிய வெளிச்சமின்மை, பாதுகாப்பின்மை, சமூக விரோதிகளின் நடமாட்டம் உள்ளிட்ட பெரும் பிரச்சினைகளை பெண்கள் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. பொது இடங்களில் அமைந்திருக்கும் கழிவறைகளில் பெரும்பாலானவை இரவு நேரங்களில் பூட்டப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் அவற்றை பயன்படுத்த முடியாமல், திறந்தவெளி கழிப்பிடத்தை தேர்வு செய்கின்றனர். இதனால் நகரின் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

1967ல் சென்னையில் 400 கழிவறைகள் இருந்ததாக கூறப்படும் நிலையில் 55 ஆண்டுகள் கழித்து 2022ல் தற்போது சுமார் 800 கழிவறைகள் தான் உள்ளன. மாநகராட்சியின் ஆய்வின் படி, நகரில் உள்ள 800க்கும் மேற்பட்ட பொதுக் கழிப்பறைகளில் 290 பொதுக் கழிப்பறைகள் மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில் உள்ளன. பராமரிப்பில்லாத கழிவறைகளை தனியாரிடம் ஒப்படைக்க முதற்கட்டமாக 142 கழிவறைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் ஆண்களுக்கு ஒரு கழிப்பிடம் என்றால் பெண்களுக்கு இரண்டு கழிப்பிடங்கள் என்கிற விகிதத்தில் கட்டப்படுகின்றன. இன்னும் சொல்ல போனால் பல நாடுகளில் நாய், பூனைபோன்ற செல்லப்பிராணிகளுக்கு கூட கழிபிடங்கள் உள்ளன.பொருளாதாரத்தில் பின்தங்கிய இலங்கையில் சாலை ஓரத்தில் சிறுநீர் கழித்தலை அவமானமாகப் கருதும் எண்ணம் உள்ளது. நமது நாட்டில் மக்களிடத்திலும் மாற்றம் வரவேண்டும். அரசும் அதற்கேற்ப விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தமிழக சட்டமன்றத்தில் சமர்பித்த அறிக்கையில் நகரில் உள்ள திறந்த வெளிகளை பசுமை பகுதியாக மாற்றுதல், வாழ்வாதாரத்தை இடையூறு செய்யாமல் வீடுகளை வழங்குதல், அடிப்படை வசதிகளோடு தங்குமிடம், குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என நகர வளர்ச்சிக்கான பலவற்றை கூறியுள்ளது பாராட்டுக்குறியது.
விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிகளை கொண்ட மாமன்றம் அமைய உள்ளது. அந்த மாமன்றம் மக்கள் சந்திக்கும் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பாக ஆக்கப்பூர்வமாக விவாதம் நடத்தி உரிய தீர்வை காணவேண்டும். இலவச கழிப்பிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து அவற்றை முறையாக பராமரிக்க உரிய ஊழியர் ஏற்பாட்டையும் மாநகராட்சி செய்யவேண்டும். சென்னை மாநகராட்சியின் வரிவருவாய் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. அவற்றில் கணிசமான தொகையை மக்களின் வசதிக்காக மாநகராட்சி செலவிடவேண்டும்.

பா. ஹேமாவதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here