மிழகத்தின் மேற்கு மண்டலத்தில் உள்ள அமராவதி ஆற்றில் வரும் தண்ணீரை தடுக்கும் விதமாக ஒரு தடுப்பணையை கட்டி வருகிறது கேரள அரசு.

அமராவதி ஆறானது காவிரியின் துணை ஆறுகளில் ஒன்று. அந்த வகையில் காவிரி நீரில் கேரளாவுக்கு உரிமை உள்ள தண்ணீரை, இந்த அமராவதியின் நீர் பிடிப்பு பகுதியில் இருந்தும் எடுத்துக் கொள்ள கேரளாவிற்கு உரிமை உண்டு. இதே போலவே சிறுவாணி ஆற்றில் இருந்தும் தண்ணீர் எடுக்க தடுப்பணைகளை கட்டியுள்ளது கேரள அரசு.

ஒரு சிறிய தடுப்பணைக்கு  ஏன் எதிர்ப்பு?

கேரளாவில் தேவைக்கு அதிகமாகவே நீர் இருப்பு உள்ளது. அவை கடலில் வீணாக கலந்தும் வருகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவை குறைக்கும் விதமாக தடுப்பணை கட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்ற கேள்விக்குள் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் இந்த பிரச்சனையின் சாரத்தை புரிந்து கொள்ள முடியும்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் போதுமான அளவு மரங்கள் செடி கொடிகள் வளர்ந்து பசுமையாகவே உள்ளன. அங்கு இருக்கும் பழங்குடியின மக்களுக்கு தேவையான தண்ணீரை சிற்றாறுகள், ஓடைகளில் இருந்து எடுத்துக்கொள்ள முடிகிறது. இந்நிலையில் மலையின் மேல் தடுப்பணைகள் அமைக்க வேண்டிய அவசியம் கேரள அரசுக்கு ஏன் வந்தது என்பதை பரிசீலிப்போம்.

மலைகள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு !

தற்போது பேசு பொருளாகி இருக்கும் அமராவதியின் துணை ஆறான தேனாற்றின் மேற் பகுதியில் உருவாகும் சிற்றாறான சிலந்தி ஆறு விவாதப் பொருளாக மாறி உள்ளது. இது இடுக்கி மாவட்டத்தின் தேவிகுளம் தாலுகாவில் அமைந்துள்ளது. எளிமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மூணாறில் உள்ளது.

மூணாறு என்பது தேயிலை, காப்பி உள்ளிட்ட பெருந்தோட்ட நிறுவனங்களால் மொத்தமாக மலைத்தொடரே முழுங்கப்பட்டுள்ள பகுதிகளாகும். அவர்களின் தோட்டப் பயிருக்கு தண்ணீர் தெளிப்பு தேவைப்படலாம். அதற்காகவும் புதிதாக அணைகளை கட்ட கூடும். அடுத்ததாக சுற்றுலாவை மையப்படுத்தி தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள் என உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காகவும் கூடுதல் தண்ணீர் தேவைப்படலாம். சுற்றுலா பயணிகளுக்கு குடிநீராக பாட்டில் தண்ணீர் விற்பனை என்பதும் முக்கிய வருவாய் தரக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளது. அப்படி பாட்டலிங் கம்பெனிகளுக்காகவும் தடுப்பணை கட்டி தண்ணீர் எடுக்கலாம். இதில் என்ன காரணத்திற்காக சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணையை கட்டுகிறோம் என்று கேரள அரசு வெளிப்படையாக சொல்லும் பட்சத்தில் நாம் குறிப்பாக விமர்சிக்கவும் முடியும்.

மொத்தத்தில் கேரளா என்பது கார்ப்பரேட்டுகளின் பிடிக்குள், மலைகளை  ஒப்படைத்துவிட்ட மாநிலம். கார்ப்பரேட்டுகளால் ஊக்குவிக்கப்படும் கேளிக்கை சுற்றுலா, மருத்துவ சுற்றுலா என  சேவைத் துறையின் மூலம் வருவாய் ஈட்டும் மாநிலம். அந்த வகையில் அவர்கள் தமது மாநிலத்தின் வரி வருவாயை பெருக்கிக் கொள்ளவும், நிதி ஆதாரத்தை விரிவாக்கிக் கொள்ளவும் தமிழகத்திற்கு உயிர்நீராக இருக்கக்கூடியதையும் பறிக்கும் எல்லைக்கு செல்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

உரிமை உள்ள தண்ணீரை தானே எடுக்கிறது கேரளா ?

காவிரியில் கேரளத்திற்கும் உரிமை உள்ளதுதான். அந்த உரிமை என்பது தமிழக விவசாயிகள் தமது வாழ்வாதாரமான பயிர்களை பாதுகாக்க, வளர்த்தெடுக்க காவிரி நீரை பயன்படுத்துவதற்கும், கேரள அரசு கார்ப்பரேட்டுகளுக்கு தண்ணீரை தாரை வார்த்து வருவாய் பார்ப்பதற்கும் பாரிய வேறுபாடு உள்ளது. இரண்டையும் சமப்படுத்த முடியாது.

இப்பொழுது விவாதிக்கப்படும் தேவிகுளம் தாலுகாவானது தமிழகமாக இருந்திருக்க வேண்டிய பகுதி என்பதும், திட்டமிட்டு மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது மோசடியாக கேரளத்துடன் இணைக்கப்பட்ட பகுதி என்றும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது.

முல்லைப் பெரியாரின் தண்ணீரைத் தேக்க மறுத்து ரிசார்டுகள் மூலம் வருவாய் பார்க்கத் துடிக்கும் கேரள அரசு முல்லைப் பெரியாருக்கு கீழே புதிதாக ஒரு அணையைக் கட்டி முல்லைப் பெரியாரையே உடைக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.  கூடுதலாக  தேவிகுளம் பகுதியில் ரகசியமாக புதிதாக தடுப்பணையை கட்டி தமிழகத்துடனான உறவை சீர்குலைக்க பார்க்கிறது.

என்னதான் தீர்வு?

நதிகள் தேசிய மயமாக்கப்பட்டு, நதிகளின் குறுக்கே உள்ள அணைகள் அனைத்தும் ஒன்றிய அரசால் பராமரிக்கப்பட்டு, சர்வதேச விதிகளின்படி நதிநீர் பங்கீட்டு முறையை நேர்மையாக அமல்படுத்த செய்யும் வகையில் போராடுவதே அனைத்து பிரச்சனைக்குமான இறுதித் தீர்வாக இருக்கும். இதற்கு ஒன்றிய அரசு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமானது. இல்லையென்றால் அந்தந்த மாநிலங்கள் தமது குறுகிய நலனுக்காக அண்டை மாநில மக்களின் நலனை காலில் போட்டு மிதிப்பதை தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது. 

படிக்க:

அணைகளை வைத்து அரசியல் செய்யும் அதிகார வர்க்கமும் அரசியல் கட்சிகளும்!

நடுவர் மன்றம், நதிநீர் ஆணையம் எதற்காக?

இதை சரி செய்ய வேண்டிய அமைப்புகளாக இருப்பவை பல்பிடுங்கிய பாம்பாகத்தான் இருக்கின்றன என்பதற்கு காவிரி நடுவர் ஆணையமே சான்று. ஒன்றிய அரசு உருவாக்கும் அமைப்புகளும், உச்ச நீதிமன்ற தீர்ப்பும்  நீதியை நிலைநாட்ட முடிவதில்லை. அதாவது காவிரி பிரச்சனையை அவை தீர்க்க விரும்புவதில்லை. அதிகாரம் அற்ற கீழ்ப்படியவேண்டிய அவசியமே இல்லாத ஒரு அமைப்பை கண்துடைப்புக்காக உருவாக்கி, அதனிடம் தமிழகத்தை கெஞ்ச விட்டுக் கொண்டு வேடிக்கை பார்க்கிறது பாசிச பாஜக அரசு.

எனவே மாநிலங்களுக்கு இடையே பிரச்சினையை உருவாக்கி, மோத விட்டு குளிர் காய நினைக்கும் பாசிச பாஜகவையும், தமது குறுகிய கண்ணோட்டத்திற்காக அண்டை மாநிலங்களுடன் உறவை கெடுத்துக் கொள்ளும் கேரள, கர்நாடக அரசுகளையும் நாம் எதிர்த்து காவிரி நீரின் மீதான தமிழக மக்களின் உரிமையை, அமராவதி ஆற்று நீரின் மீதான கொங்கு மண்டல மக்களின் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.

அண்டைமாநிலங்கள் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளால் ஆளப்பட்டாலும் சரி; தவறு என்றால், அதை  விமர்சித்து சரி செய்ய போராடுவதில் எவ்வித சமரசமும் காட்டத் தேவையில்லை. இதை தமிழக அரசு உணர வேண்டும். கேரள காம்ரேடுகளுடனான விமர்சனத்துடன் கூடிய ஐக்கியத்தை வரவேற்போம்.

  • இளமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here