சமூகத்தை செல்லரிக்கும் செல்போன்கள்!

இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் செல்போன்கள் நமது கையின் பதினொன்றாவது விரல் என்று சொல்லும் அளவிற்கு பிரிக்க முடியாததாக மாறியுள்ளது. இணைய வசதியு[டன் இணைந்த ஸ்மார்ட் போன்கள் வருகைக்குப் பிறகு சில நூறு ரூபாய் தனிநபர் வங்கி பரிவர்த்தனைகள் முதல் பல ஆயிரம் கோடிகள் வர்த்தகம் நடைபெறும் ஆன்லைன் தொழில்கள் வரை அனைத்தும் ஸ்மார்ட் போன்கள்களின் மூலம் போன் பே (Phone Pay) மூலமே நடக்கிறது.

இப்படி தொழில் ரீதியான பயன் பாடுகளை எளிமையாக்கும் ஸ்மார்ட்போன்கள் சமூகத்தில் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இணையத்தில் கொட்டிக் கிடக்கும் ஆபாச சீரழிவு வக்கிரங்களை ஸ்மார்ட் போன்கள், விரல் நுனியில் கொண்டு வந்து விட்டன. ரெண்டும் கெட்டான் வயது என்று சொல்லப்படும் பதின்ம வயதினர் அதற்கு எளிதாக பலியாகின்றனர்.

ஆனால், ஆபாச வீடியோக்களைப் பார்ப்பவர்களில் வயது வித்தியாசம் என்ப தெல்லாம் இல்லை. பாலியல் உணர்ச்சியால் உந்தப்படும் அவர்கள், அதை தீர்த்துக் கொள்ள முறையற்ற உறவுகளை நாடுவது, பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்வது என பாலியல் குற்றவாளியாக மாறி வருகின்றனர்.

மறுபுறம், நேரடி அடையாளத்தை மறைக்க முடியும் என்பதால், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் பாலியல் வக்கிரங்களுக்குத் தீனி போடுவதாக உள்ளன. இதில் தன்னை எதிர்பாலினத்தவராகக் காட்டிக் கொண்டு பாலியல் உணர்வையும், ஆசைகளையும் தூண்டிவிட்டு பல்வேறு மோசடிகள் செய்யும் கும்பல்களும் பெருகியுள்ளனர்.

சமீபத்தில் சைல்டு ஒன்லி செக்ஸ் வீடியோ என்ற மிகப்பெரிய வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கி ஆபாச வீடியோக்களைப் பரப்புதல், வீடியோ வர்த்தகத்தில் ஈடுபடுதல் என்ற வகையில் சிறார்களின் ஆபாச வீடியோக்களைப் பரப்பிய பொறுக்கி கும்பல் பிடிபட்டுள்ளது. இண்டர்போலும், இந்திய சிபிஐ-யும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் அமைக்கப்பட்ட சிறார் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தடுப்பு பிரிவு ஆபாச வீடியோக் களுடன் இந்த கும்பலைப் பிடித்துள்ளது.

இவர்களின் தகவல் மூலம் 14 மாநிலங்களில் 77 இடங்களில் சோதனை செய்ததில், குழந்தைகள் ஆபாச படங்களை பகிர்ந்தது மறைத்து வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் தமிழகத்தில் 6 பேர் உட்பட இந்தியா முழுவதும் 31 பேர் மீது சிபிஐ வழக்குப் போட்டுள்ளது. அந்த சோதனையில், மொபைல், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் இந்த வாட்ஸ் அப் குழு செயல்படுவதாகவும், வெளிநாட்டினர் உள்ளிட்ட 5000-த்திற்கும் மேற்பட்டோருக்கு இதில் தொடர்பிருப்பதாகவும், அந்த அமைப்பு கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம் நமக்குத் தெரியும் உண்மை, இணைய ஆபாச வீடியோக்களைப் பரப்பும் மிக முக்கிய சாதனமாக ஸ்மார்ட் போனின் பயன்பாடு மாறியுள்ளது என்பதே.

கட்டற்ற பாலியல் வக்கிரங்களுக்கு பெண்களை போகப் பொருளாகக் கருதும் ஆணாதிக்க உணர்வும், நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பும், எல்லா மத கட்டமைப்புகளும் கட்டியமைத்துள்ள, பெண்களை அடிமைகளாக நடத்தும் குடும்ப அமைப்பு முறையும் பெண்களை மோசமாக நடத்துகிறது. இந்த சீரழிவுகளும், ஏகாதிபத்திய முதலாளித்துவம் பரப்பி வரும் நுகர்வு வெறியும் இணைந்த வீரிய ஒட்டு ரகமாக கார்ப்பரேட் கலாச்சாரம் உருவாகி 5 வயது முதல் 70 வயது வரையிலான பெண்கள் எவர் மீதும் பாலியல் தாக்குதலைத் தொடுக்கலாம் என்ற காட்டுமிராண்டித் தன்மையுள்ள மனநோய்க் குற்றவாளிகளை செல்போன்கள் உருவாக்கி யுள்ளது.

மறுபுறம், பேஸ்புக் மூலம் முகமறியா நட்பாகி பண மோசடி செய்வது முதல், திருமண ஆசை காட்டி பெண்களை பாலியல் மோசடி செய்வது வரை குற்றங்கள் நீளுகிறது. சமீபத்தில் ஜூன்ஸ் பட சினிமா பாணியில் ஒரே பெண் அக்கா, தங்கை என இரு பெயரில் அண்ணன், தம்பி என இருவரிடமும் பேஸ்புக் மூலம் பழகி கிட்டத்தட்ட 34 லட்சம் வரை வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

புதிய தலைமுறை செய்தி

கடந்த 2015-ல் பேஸ்புக் காதல் மூலம், ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் ரூ. 2 கோடி வரை இழந்துள்ளார். 2016-ல் போலி ஐடி மூலம் பெண் போல் பேசி 57 பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்தவர் பிடிபட்டார். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் காஜிப்பேட்டையைச் சேர்ந்த வரப்பிரசாத் என்பவரது தற்கொலை முயற்சிக்கான காரணத்தைக் கண்டறியும் விசாரணையின் போது மோசடி வெளியில் தெரிந்தது. அடையாறைச் சேர்ந்த இண்டர்நெட் காதல் ஜோடி, உயர்ரக செல்போன்களை மலிவு விலையில் விற்பனை செய்வதாக ஆசை காட்டி 50-க்கும் மேற்பட்டோரிடம் ஏமாற்றியுள்ளனர்.

மறுபுறம், காலையில் குட்மார்னிங் சொல்வது தொடங்கி இரவில் குட்நைட் வரை ஸ்மார்ட் போன்களிலேயே மூழ்கும் “திரை அடிமைத்தனம்” என்ற பண்பாட்டு ரீதியான மனநோய் இளைய தலைமுறையினர் மத்தியில் வெகுவாகப் பரவி வருகிறது. சில நிமிடங்கள் போனைப் பார்க்காவிட்டால் ஏதோ இழந்து தவிப்பதைப் போன்ற ஒரு மனச்சிக்கல் உருவாகி கவனச் சிதறலை ஏற்படுத்துகிறது.

தென் தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த 15 முதல் 19 வயதுக்கு உட்பட்ட 2000 பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் நடத்திய ஆய்வு, 800 (40%) பேர் திரை அடிமைத்தனத்தில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. குறிப்பாக, 13.3% பேர் ஒரு மணி நேரம் கூட இணையம் இல்லாமல் இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். 68% பேர் வாட்ஸ்-அப்-பில் தினமும் 2 மணி நேரம் இருப்பதாகவும், 72% பேர் நாளொன்றுக்கு 3 மணி நேரத்திற்கும் மேல் வீடியோ கேமில் இருப்பதாகவும், 88.7% பேர் யூடியூபில் 1 முதல் 3 மணி நேரம் செலவிடுவதாகவும், 67.7% பேர் ஓடிடி தளத்திலும், 30% பேர் வயது வந்தோருக்கான இணையத்திலும் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இன்னும் கூடுதலாக, 3 ஆண்டுகள் கல்லூரியில் படித்தும் உடன் படிக்கும் மாணவ, மாணவியரின் பெயர் கூடத் தெரியாத வகையில் திரை அடிமைத்தனம் அவர்களை தனிமையாக்கி விட்டது

எனினும், இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட் போன் இல்லாமல் எந்த வேலையும் நகராது என அதன் பயன்பாடு அத்தியா வசியமாக மாற்றப்பட்டு விட்டது. ஆன்லைன் கல்வி மூலம் சிறு பிள்ளைகளிடமும் போன்களைக் கொடுக்க வேண்டிய தேவையை உருவாக்கி விட்டது.

கல்விப் பயன்பாட்டைத் தாண்டி, சிறுவர்கள் செல்போனில் வீடியோ கேம் விளையாடுவது அதற்காக பணம் கட்ட தனது பெற்றோரின் ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணத்தை காலி செய்வது என்ற செய்திகளும் வந்து கொண்டு தான் இருக்கிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில், வீடியோ கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் 33 லட்சம் பணம் மற்றும் 200 பவுன் நகையுடன் நேபாளம் தப்ப முயன்ற பையனை போலிசு கண்டுபிடித்த செய்தி கடந்த செப்டம்பர் மாதத்தில் நடந்தது.

ஆனால், சாதாரண மக்களிடமோ பணம் சேர்ப்பது, வகை வகையாக பொருள்களை நுகர்வது அதற்காக கூடுதலாக உழைப்பது என முதலாளித்துவம் தோற்றுவித்துள்ள நுகர்வு வெறிக் கலாச்சாரமும், எந்த வேலையும் நிரந்தரமில்லை. அதனால் இருக்கின்ற வேலையைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடுவது என்ற நெருக்கடியும் சேர்ந்து மனித வாழ்க்கையை அழுத்துகிறது. இந்த அழுத்தத்திலிருந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள பாலுணர்வை ஒரு வடிகாலாக மாற்றும் கலாச்சாரம் உருவாகி வருகிறது. சில ஐடி நிறுவனங்களே வார இறுதிக் கேளிக்கைக்கான (Week end Party) ஏற்பாடுகளைச் செய்கின்றன.

மேலும், பொழுதுபோக்க இணையத்தில் அரட்டை அடிப்பவர்களும், இந்த அரட்டை நபர்களை வலையில் சிக்க வைப்பதை தொழிலாகக் கொண்டவர்களும் உலா வருகின்றனர். இவை அனைத்தும் கொண்ட பாலியல் வெறியே பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களுக்கும், பாலியல் கொடுமை களுக்கும், பாலியல் வக்கிரங்களுக்கும் காரணமாக உள்ளது.

தகவல் தொழில்நுட்ப சாதனமாகத் தொடங்கிய டெலிபோனின் பயன்பாடு, இன்று இணையப் புரட்சியின் காரணமாக அன்றாட வாழ்வின் பல்வேறு அவசிய தேவைகளுக்கான சாதனமாக ஸ்மார்ட்போனாக உருவாகி உள்ளது. பாலியல் குற்றங்கள், மோசடிகள் ஸ்மார்ட் போன்கள் வழியே நிகழ்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேர்மை, நாணயம், போன்ற மனித விழுமியங்களை உதறித் தள்ளிவிட்டு, பணம் சம்பாதிக்க எதையும் செய்வது, யாரையும் ஏமாற்றுவது என்ற முதலாளித்துவ பொருளீட்டும் போக்கே அதற்குத் தோற்றுவாயாக உள்ளது. தட்டினால் கொட்டும் ஆபாச வீடியோக்கள், சக மனிதர்களை உணர்வுள்ள உயிராகப் பாராமல் வெறும் சதைப் பிண்டமாக பார்க்கும் போக்கும் வேகமாக பரவி வருகிறது.

இதே ஸ்மார்ட் போன்கள், உலகளவில் நடக்கும் போராட்டங்களையும் உடனுக்குடன் தருகிறது. 2011- ஜனவரியில் நடந்த துனிசியப் புரட்சிக்கும், அதே ஆண்டு பிப்ரவரியில் நடந்த எகிப்திய மக்கள் எழுச்சிக்கும் பேஸ்புக், யூடியூப் தளங்கள் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அந்த நாடுகளின் போலிசு அத்துமீறல்களும் அதனால் பாதிப்படைந்த இளைஞர்களின் மரணமும் இணையத்தில் பரவி மக்கள் எழுச்சிக்கு வித்திட்டது. நமது நாட்டிலும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டங்களின் வீச்சு ஒவ்வொரு நாளும் ஸ்மார்ட் போன்களின் மூலம் பரவலானதன் விளைவாக மிகுந்த வீச்சைப் பெற்றது.

இந்த நிலைமைகளை அவதானித்துத் தான், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்ட காலத்திலும், காஷ்மீரில் அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி காஷ்மீரைத் துண்டாடிய போதும், தற்போதைய டில்லி விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட சமீபத்திய போராட்டங்களின் போதும் மாதக்கணக்கில் இணைய சேவைகளை மோடி அரசு முடக்கி, செல்போன்களை செயலிழக்கச் செய்தது.

செல்போனின் பயன்பாடுகளால் தனிநபர் அந்தரங்கங்களை வெட்டவெளிச்சமாக்கி பாலியல் வக்கிரங்களை பரவலாக்குவதற்கு எந்த தடைகளையும் ஏற்படுத்தாத அரசு, மக்கள் பிரச்சினைகளைப் பேசும், உரிமைக்கான போராட்டங்களைப் பரவலாக்குவதைத் தடை செய்கிறது.

எனில், இணையத்தையும், ஸ்மார்ட் போனையும் பொழுதுபோக்கு, அரட்டைக்காகப் பயன்படுத்தி பாலியல் புதைகுழிக்குள் சிக்காமல், மக்கள் பிரச்சினைகள் பேசுவதற்கான அரசியல் சாதனமாக, ஒரு போராட்ட ஆயுதமாக மாற்ற வேண்டியதும், அதைப் பரவலாக்குவதற்கான மாற்று முயற்சிகளை மேற்கொள்வதும் தான் சமூகத்தின் வளர்ச்சிக்கான புதியசெல்களை உருவாக்க வித்திடவும் முடியும்.

  • தயாளன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here