ஒன்றிய அரசு திணித்த நீட் நுழைவுத் தேர்வானது தொடர்ந்து தமிழகத்தில் படுகொலைகளை நடத்தி வருகிறது. நேற்றுவரை மாணவர்கள்தான் உயிரை விட்டனர்; தற்போது சென்னையில் மாணவன் ஜெகதீஸ்வரனுடன் சேர்ந்து அவரது தந்தையும் செல்வசேகரும் உயிரை விட்டுள்ளார். தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வால் அனிதாவில் தொடங்கி இதுவரை மொத்தம் 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தமிழகம் போலவே பிற மாநிலங்களிலும் கூட நீட் காரணமாக தற்கொலைகள் நடக்கவே செய்கின்றன. குறிப்பாக ராஜஸ்தான் மாநில அரசு நீட்டுக்கு தயாராகும் மாணவர்களின் மன அழுத்தத்தை கணக்கில் எடுத்து, தற்கொலையை தடுப்பதற்காக வாரம் இரண்டு முறை உளவியல் நிபுணர்களின் ஆலோசனைக்கு ஏற்பாடு செய்லாம் என்கிறது. இதிலிருந்து நீட் என்பது எப்பேர்ப்பட்ட கொலைவாள் என்பதை உணர முடியும்.
ஒவ்வொரு முறை நீட் படுகொலை நடக்கும்போதெல்லாம் ஊடகங்களில் நீட்டுக்கு எதிராகவும் நீட்டுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் பகிரப்படுகின்றன. பாஜகவின் நாராயணன் திருப்பதி பகிரங்கமாக நீட்டுக்கு முட்டுக் கொடுத்து வாதிடுகிறார். குறிப்பாக ஆகஸ்டில் சென்னையில் நீட்டுக்கு பலியான மாணவன் ஜெகதீஸ்வரன் தேர்வே இல்லையென்றாலும் மருத்துவராகி இருக்க வாய்ப்பில்லை. அவர் எடுத்த மதிப்பெண்ணுக்கு – அதாவது மூன்று வருடங்களுக்கு முன்பு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 424 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், நீட்டே இல்லையென்றாலும் அம்மாணவனுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என திருவாய் மலர்ந்துள்ளார்.
புதுச்சேரி ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜனும் ”நீட்டைப் பற்றி பூதாகரமாக்கி பேசாமல், அம்மாணவர்களை நீட்டுக்கு படிக்க விடுங்கள்” என முட்டுக் கொடுக்கிறார். “மருத்துவம் தவிர வேறு படிப்பே இல்லையா? செத்தால் செத்துட்டுப்போகட்டும்” என சவுக்கு சங்கர் போன்ற சில்லறைகள் வாங்கிய காசுக்கு மேல் கூவுகின்றனர். நீட்டை எதிர்ப்பவர்கள் மாணவர்களின் பிணத்தை வைத்துக்கொண்டு மலிவான அரசியல் செய்வதாக காவி பாசிஸ்டுகளின் ஊதுகுழலான ஊடகங்களில் தொடர்ந்து ஊளை இடுகிறார்கள்.
ஏன் மருத்துவராக இவ்வளவு போட்டி?
சமூகத்தில் மருத்துவர் என்றால் தனி மதிப்பு உள்ளது. மற்ற தொழில்களை செய்பவர்களை போல மருத்துவர்களும் வருமானம் ஈட்டினாலும் மக்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு அத்தியாவசியமாக இருப்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றனர். மேலும் நிறுவனங்களை சார்ந்துதான் இருக்க வேண்டும் என்றில்லாமல் தனியே கிளினிக் வைத்து சுயமாக வாழும் வாய்ப்பும் இருப்பதால் அதிகம் விரும்பப்படுகிறது. இதன் காரணமாகவே பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுப்பவர்களிடம் ஊடகங்கள் உங்களின் லட்சியம் என்ன என்று கேட்கும் பொழுது அவர்கள் அனிச்சை செயல் போல மருத்துவராவது என்கின்றனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் ஏறத்தாழ மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி இருப்பதும் அதிக எண்ணிக்கையில் மருத்துவ சீட்கள் இருப்பதும் சாதாரண பின்னணியில் இருந்து வரும் மாணவர்களும் தங்களால் மருத்துவராக முடியும் என்ற கனவை விதைத்துள்ளது.
போட்டித் தேர்வுகள் சாதித்தது என்ன?
பள்ளித் தேர்வுகள் மூலம் மருத்துவ படிப்புகள் சேரும் போது இருந்த போட்டி மனப்பான்மையைவிட போட்டித் தேர்வு (நீட்) மூலம் சேரும் கட்டத்தில் போட்டி மனப்பான்மை போட்டி வெறியாக மாற்றப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் தன்னைப் போலவே மருத்துவராக வேண்டும் என நீட்டிற்கு தயாராகும் சக மாணவர்களுக்கு உதவ கூட யாரும் தயாராக இல்லை. லட்சக்கணக்கான பணம் கட்டுபவர்களின் நிலை அப்படிதான் மாறும். தான் முதலிடத்தை பிடித்தாக வேண்டும் என சக மாணவனை முந்துவதில் தான் முழு கவனமும் உள்ளது. அதாவது நூறு, ஆயிரம், லட்சம் பேரை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேறுவது எப்படி என்று அனுதினமும் யோசித்து, மதிப்பெண்ணை பெற கடுமையாக தூக்கத்தை தொலைத்து படிக்கின்றனர்.
சக போட்டியாளராக பந்தயத்தில் ஓடி வந்த மாணவர்களில் சிலர் இடையிலே சுருண்டு விழுந்து உயிரிழந்தாலும், பெரும்பாலான மாணவர்கள் திரும்பிப் பார்க்க துளியும் விரும்புவதில்லை. மாணவன் ஜெகதீஸ் மரணத்திலும், அனிதா மரணத்திலும் சில விதிவிலக்குகள் உள்ளன என்பதுதான் ஆறுதல் தரும் செய்தி. தற்போதுதான் மாணவர்களின் கண்டனக் குரல் வெளியே வருகிறது.
கட் ஆப் மதிப்பெண் பதற்றம்!
ஓசி606, பிசி 560, எம் பி சி 532, எஸ் சி 452, எஸ் சி ஏ 383, பி சி எம் 542, எஸ் டி 355 என 2023 ல் கட் ஆப் வரம்பு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட் ஆப் வரம்பு ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும். இதன்படி மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் இடம் பிடிக்க, தமது சாதி சான்றிதழ் கையில் வைத்துக் கொண்டு ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவர்களைப் போல எப்படியாவது போட்டியில் முன்னுக்கு வந்து பரிசை வென்றே ஆக வேண்டும் என நீட் தேர்வுக்காக கடுமையாக உழைக்கின்றனர்.
பெரும்பாலான பெற்றோர்கள் கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து இந்த ஆண்டு அதைவிட போட்டி அதிகமாக இருக்கும் என்பதை கணக்கில் கொண்டு அதிக மதிப்பெண் எடுத்தே ஆக வேண்டும் என தமது பிள்ளைகளை இடைவிடாமல் தூண்டி வருகின்றனர். தமது சக்திக்கு உட்பட்டு ஏதாவது ஒரு கோச்சிங் சென்டரில் சேர்த்தும் விடுகின்றனர். பெற்றோர் உறவினர்கள் தொடங்கி சமூகத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து நீட் படிப்புக்கு ஆலோசனைகளை அள்ளி வழங்குகின்றனர்.
சீட்டுகளை எப்படி நிரப்புகிறார்கள்?
தற்போது நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து நிரப்பி வருகின்றன. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 6326 MBBS இடங்கள் உள்ளன.
அதுபோக தனியார் மருத்துவக் கல்லூரிகள் தமது விருப்பத்திற்கு மாணவர் சேர்க்கையை செய்கின்றனர். நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 1509 MBBS இடங்கள் உள்ளன.
ஒன்றிய அரசாங்கம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கான இடங்களில் 50% இடங்களை நிரப்புகிறது. அதேபோல் இளநிலை மருத்துவ படிப்புகளில் 15 சதவீத இடங்களை நிரப்புகிறது. இது தவிர நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் முதுநிலை இளநிலை படிப்புகளில் 100 சதவீத இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வையும் மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனரகம் (DGHS) நடத்துகிறது.
பறிபோகும் மாநிலத்தின் உரிமை!
ஒவ்வொரு மாநிலங்களும் தமது மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளில் ஒன்றிய அரசு நிரப்பிய 50 சதவீத இடங்கள் போக எஞ்சியவற்றை நிரப்புகிறது . அதேபோல் இளநிலை மருத்துவ படிப்புகளில் ஒன்றிய அரசு நிரப்பிய 15% போக, எஞ்சி உள்ள 85 சதவீத இடங்களை நிரப்புகிறது. இதுபோக தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாநில அரசுக்காக பெருந்தன்மையுடன் விட்டுத்தந்த இடங்களுக்கான கலந்தாய்வையும் மாநில அரசுகள் நடத்துகின்றன. தமிழகத்தில் அரசுப்பள்ளியில் தமிழ்வழியில் படிப்பவர்களுக்கு என 7.5 % ஒதுக்கீடு தரப்படுகிறது.
இதுவரை நடைமுறையில் இருந்துள்ள மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை நிரப்பும் மாநில அரசின் கடமை ஒன்றிய அரசால் பறிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 2 இல் ஒரு புதிய வழிகாட்டுதலை மோடி அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இளநிலை மருத்துவ கல்வி ஒழுங்காற்றுதல் 2023 அல்லது GMER – 23 என வரையறுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலில், இளநிலை மருத்துவ கல்வி வாரியமே இந்தியா முழுவதுமான ஒரே பொதுக் கலந்தாய்வை நடத்துமாம். இந்த கலந்தாய்வு நடத்துவதற்கான அதிகாரிகளையும் ஒன்றிய அரசு நியமிக்குமாம். இனிமேல் எந்த ஒரு மாநிலமும், மருத்துவக் கல்லூரியும் சுயமாக மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்படாது என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்:
- மருத்துவர் கனவை எட்டாக்கனியாக்கும் நீட் தேர்வு!
- ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை கொடும் கனவாக்கும் நீட் தேர்வு!
மாநில அரசுகள் கல்லூரியை கட்டி இதுவரை நடத்திவந்திருந்தாலும் இனி அவை ஒன்றிய அரசுக்கே சொந்தமாக்கப்படுகிறது. மருத்துவ கல்லூரிகளுக்கான இடங்களை இனி மத்திய அரசே நிரப்பும் என்பது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் சர்வாதிகாரம்தான். தற்போது நீட் படுகொலைகள் நடந்து வரும் நிலையில், ஒன்றிய அரசின் அதிகாரத்தைக் குவிக்கும் போக்கை நாம் கண்டிக்க வேண்டியுள்ளது. மாநில அரசு இயற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்டத்தை எந்த காலத்திலும் ஏற்க முடியாது என 8கோடி தமிழ் மக்களை நக்கல் அடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இவர்கள்தான் லட்சக்கணக்கான ரூபாய் கட்டணம் கட்டும் கோச்சிங் சென்டர்களை மாணவர்களை தள்ளுபவர்கள். அதுவே தற்கொலைகளுக்கு முதன்மை காரணியாக உள்ளது.
காரியவாதமும், சுயமரியாதை இழப்பும்!
எதையும்கேள்வி கேட்காமல், எத்தகைய நுழைவுத் தேர்வை திணித்தாலும் ஏற்றுக்கொண்டு, தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்து போய் மருத்துவராக வேண்டுமா? சுயமரியாதையை இழந்து ஹேர் பின்னை நீக்கி, சடையை அவிழ்த்து, சட்டையின் கையை கிழித்து விட்டு, உள்ளாடை வரை அவிழ்த்து வைத்து விட்டு நுழைவுத் தேர்வை எழுதித்தான் பாஸ் ஆக வேண்டுமா? இப்படிப்பட்ட தார்மீக கோபம் பெரும்பாலான மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் வருவதே இல்லை.
இப்படிப்பட்டவர்கள் மருத்துவ படிப்பை படித்து முடித்த பின் பெரும்பாலும் கார்ப்பரேட் நட்சத்திர மருத்துவமனைகளில் கூலிக்கு வேலை செய்யத்தான் போகிறார்கள். முன்னர் தனது லட்சியம் என்று சொன்னபடி உழைக்கும் மக்களுக்கான சேவை அடிப்படையிலான மருத்துவமனைகளை தொடங்கி, மருத்துவத் துறையில் கோலோச்சும் கார்ப்பரேட்டுகளை எதிர்த்து நடத்த முடியுமா? தாக்குப் பிடித்து நிற்க முடியுமா? கார்ப்பரேட் மருந்து கம்பெனிகளின் கொள்ளையை எதிர்த்து ஜெனரிக் மெடிசனை பரிந்துரைக்கத்தான் முடியுமா?
நோய்க்கிருமிகள் மட்டுமா ஆபத்தானவை?
நோய்க்கிருமிகளைப்போலவே சுயநலனும், சமூகப்பற்று இல்லாத காரியவாத அணுகுமுறையும் கூட ஆபத்தானவைதான். கல்வி முதல் மருத்துவ சிகிச்சை வரை அனைத்தையும் கார்ப்பரேட்டுகள் வளைக்கிறார்கள். இந்த ஆதிக்கத்தை எதிர்க்கும் கண்ணோட்டம் இல்லாதவர்களும் கார்ப்பரேட் கிருமியால் தாக்குண்ட நோயாளிகள்தான். மருத்துவராகவே இருந்தாலும் ஆளுநர் தமிழிசை, பாமக – வின் அன்புமணி, புதிய தமிழகத்தின் கிருஷ்னசாமி உள்ளிட்டோர் கார்ப்பரேட்டுகளின் விசுவாசிகளாக காவிபாசிசத்தை பரப்புகின்ற வைரஸ்கள்தான்.
சமூகமாக நாம் வாழ்கிறோம் என்பதை உணராத வரை, நம்மால் கார்ப்பரேட்- காவி பாசிஸ்ட்களின் எத்தகைய தாக்குதல்களையும் எதிர்கொள்ள முடியாது. நீட்டை முறியடிப்பதையோ அல்லது அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கான ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை தக்க வைப்பதையும் நம்மால் செய்யவே முடியாது.
நமது மாணவர்கள் விரும்பியதை படிக்கும் உரிமையை நிலைநாட்ட தேவைப்படுவது போராட்டம்தான். நமது பலம் நான் என்பதில் இல்லை; நாம் என்பதில் தான் உள்ளது. இதை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உணர்த்துவதுதான் அவசியமானது. சமீபத்தில் ஆளுநர் நடத்திய கூட்டத்திலேயே நீட்டுக்கு எதிராக பேசிய அம்மாசியப்பன் ராமசாமி போன்றும், ஃபயாசுதீன் போன்றும் நாம் கேள்வி எழுப்ப வேண்டும். ஒருவரோடு ஒருவர் கையை கோர்த்துக்கொண்டு நடந்தால்தான் காட்டாற்றை கடக்க முடியும்.
- இளமாறன்