ஆப்கானிஸ்தான் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக இரண்டு பாதைகளுக்கு இடையிலான போரை சந்தித்து வருகிறது . முதல்பாதை பெண் விடுதலை மற்றும் இனச் சிறுபான்மை குழுக்களின் முன்னேற்றம் மூலமாக சமுதாயத்தை சீர்திருத்தம் செய்வது . மற்றொரு பாதை நாட்டின் எதிர்காலத்தை கடந்த காலத்தில் காண்பது; சமூகத்தில்ஆதிக்கம் செலுத்தும் பழமைவாதச் சிந்தனைகளை நிலைநிறுத்துவதாகும். தலிபான்கள் இரண்டாம் பாதையை வழிபடுபவர்கள்.


முற்போக்கு பத்திரிக்கைகளும் மன்னர் அமானுல்லாவின் சீர்திருத்தங்களும்

1917 அக்டோபரில் மகமது பேக் டார்ஜி, (1865-1933)காபூலில் சிராஜ் அல் அக்பர் (செய்திச் சுடரொளி) எனும் முற்போக்கு பத்திரிகையை ஆரம்பித்தார். டார்ஜி ஆட்டோமான் பேரரசில் வாழ்ந்தவர். அங்கே ஜமால்அத் தினால் எனும் அறிஞரால் பரப்பப்பட்ட சீர்திருத்தக்கருத்துக்களால் கவரப்பட்டார். டார்ஜியின் பத்திரிகை அன்றைய ஆப்கன் அரசர் ஹபிபுல்லா அமல்படுத்திய சீர்திருத்தங்களுக்கு பக்கபலமாக இருந்தது. மன்னரின் சீர்திருத்தங்களை நாடு முழுவதும் சிராஜ் அல் அக்பர் பத்திரிகை வெகுவாகப் பரப்பியது.

சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் மையமாக பெண் கல்விமுக்கிய இடம் பெற்றால்தான் ஒரு சமுதாயம் முன்னேறும் என்பதை டார்ஜி வலியுறுத்தினார். டார்ஜியின் மனைவி அஸ்மா ரஸ்மியா கான் டமாஸ்கஸில் பிறந்தவர். அவர் ஆட்டோமான் பேரரசில் அன்றைய டான்ஜிமாட் சீர்திருத்தங்களால் பெரிதும் தாக்கத்துக்கு உள்ளானவர். (டான்ஜிமாட் சீர்திருத்தங்கள் என்பது ஐரோப்பியமுற்போக்கு கருத்துக்களை உள்வாங்கி ஆட்டோமான் குடியரசில் நவீன சமுதாயத்தை படைக்க வேண்டும் என்பதாகும்.)
அஸ்மா ரஸ்மியா 1921 இல் இர்ஷாத் அல் நிஸ்வான்(பெண்களின் வழிகாட்டி) எனும் பத்திரிகையை ஆரம்பித்தார். அதில் உலகம் முழுவதும் உள்ள பெண் ஆளுமைகளை தொடர்ச்சியாக ஆப்கன் பெண்களுக்கு அறிமுகப்படுத்தி வந்தார். இவ்வாறு தம்பதியர் இருவரும் ஆப்கானிஸ்தானில் முற்போக்குக் கருத்துக்களை பரப்பினர்.

முற்போக்காளர்களின் திட்டங்களை செயல்படுத்திய மன்னர் குடும்பம் டார்ஜி – அஸ்மா ரஸ்மியா தம்பதியினரின் மகள்சுரையா. சுரையா டார்ஜி ஆப்கன் மன்னர் அமானுல்லாவை மணந்தார். அமானுல்லாவின் தந்தை ஹபிபுல்லாமரணத்துக்குப் பின் 1919இல் ஆப்கானிஸ்தான் அரசரானார்.அஸ்மா ரஸ்மியாவும் மகளும் அரசியுமான சுரையாஇருவரும் இணைந்து ஆப்கானிஸ்தானின் முதல் பள்ளியை திறந்தனர். மாமா, அத்தை மகமது டார்ஜி- அஸ்மா ரஸ்மியா ஆகியோரின் முற்போக்கு கருத்துக்களை உள்வாங்கி அரசர் அமானுல்லா முற்போக்கு சீர்திருத்தங்களை விரைவுபடுத்தினார்.

1928 இல் அமானுல்லாவின் சகோதரிகளில் ஒருவராகிய இளவரசி கோப்ரா பெண்களை பாதுகாப்பதற்கான அமைப்பைத் தொடங்கினார். இன்னொரு இளவரசி சிராஜ் அல் பானட் 1928இல் பெண்களுக்கான மருத்துவமனையை ஆரம்பித்தார்.பெண்களின் செயல்பாடுகளை விவாதிக்கும் பத்திரிகை ஆப்கானிஸ்தானில் இல்லை. ஆனால் ஐரோப்பியநாடுகள், துருக்கி, அரேபிய இந்திய இதழ்கள் பெண்ணுரிமை பற்றி விவாதிக்கின்றன என்று மகமது டார்ஜி கவலைப்பட்டார். இக்கருத்து மன்னரை மிகவும் கவர்ந்தது. உடனடியாக அவர் அரசு கொள்கைகள் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு விவாதங்களையும் உரையாடல்களையும் ஆரம்பித்து வைத்தார்.

இப்படி ஆரம்பித்த முற்போக்கு பூதம்தான் இன்றுவரை ஆப்கானிஸ்தானை விடாமல் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கிறது.அமானுல்லா குழந்தை திருமணங்களை, பலதாரமணத்தை தடை செய்தார். பெண்கள் மறுமணம் செய்யஅனுமதித்தார். சடார் எனும் பெண்களின் முகத்திரையை விலக்கச் செய்தார். மஹர் எனும் வரதட்சணையை ஒழுங்குபடுத்தினார்.
பிரிட்டிஷாரின் பிற்போக்குத்தனமான சதிவேலைகள்
1919 இல் நடைபெற்ற மூன்றாம் ஆங்கில- ஆப்கன் போரில் அமானுல்லா பிரிட்டிஷ் படையை தோற்கடித்தார். அவமானப்பட்டு போனது பிரிட்டிஷ் அரசு.எனவே அமானுல்லா ஆட்சிக்கு குழிபறிக்கும் வேலைகளை பிரிட்டிஷ் அரசு மும்முரமாக செய்ய ஆரம்பித்தது‌‌.அமானுல்லா – சுரையா அரச தம்பதியினர் 1927-28இல்ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்தனர். பல்வேறுவிதமான மக்களை சந்தித்தனர்.

பயணத்தின்போது சுரையா முகத்திரை இன்றி பொதுவெளியில் பிரிட்டிஷ் உளவுத் துறையால் படம் எடுக்கப்பட்டார். கணவருடன் மற்ற ஆண்களுடனும் ஒரு விருந்தில் கலந்துகொண்டார். அப்போது பிரெஞ்சு ஜனாதிபதி காட்டன் டௌமெர்க் பிரெஞ்சு வழக்கப்படி மரியாதை நிமித்தமாக அரசியின் கைகளை முத்தமிட்டார். பிரிட்டிஷ் உளவுத் துறையினர் ராணி ஆண்கள் மத்தியில் முகத்திரையின்றி இருப்பதையும், பிரெஞ்சு ஜனாதிபதி அவரது கைகளை முத்தமிட்டதையும் படமெடுத்து, ஆப்கானிஸ்தானில் மன்னரின் நடவடிக்கையால் பெரிதும் கலவரத்துக்கு உள்ளாகி இருந்த பழங்குடியின மற்றும் பிற்போக்குவாதிகள் மத்தியில் விநியோகித்தது.

பழமைவாதிகளின் பிற்போக்கு பாதையின் தொடக்கம்
சீர்திருத்தங்கள் யாவும் அரச உயர் குடிகள், அரசுநிர்வாகிகள் மீது மிகவும் தாக்கம் செலுத்தியது. ஆனால்பழமைவாத சக்திகளை அச்சுறுத்தியிருந்தது. பிரிட்டிஷார் விநியோகித்த ராணியின் படங்களை கண்ட பழமைவாத அதிருப்தியாளர்கள் கடுங்கோபம் கொண்டனர்.ஹபிபுல்லா கஹானி என்பவர் பல்வேறு பழமைவாதக் குழுக்களுடன் காபூல் மீது படையெடுத்தார். அமானுல்லாவை ஆட்சியிலிருந்து அகற்றினர். பழமைவாதிகள்ஆட்சியதிகாரத்தில் அமர்ந்தனர். ஹபிபுல்லா கஹானி மன்னர் அமானுல்லாவை இறை நம்பிக்கையற்ற கஃபீர் என்று குற்றஞ்சாட்டினார். பெண்களுக்கான பள்ளிகளை மூடினார். மீண்டும் முகத்திரையை கட்டாயமாக்கினார்.
அமானுல்லா செயல்படுத்திய அனைத்து சீர்திருத்தங்களையும் ஒன்றுவிடாமல் ஒழித்தார்.

1919 முதல் ஆப்கானிஸ்தான் முற்போக்குச் சீர்திருத்தங்களுக்கும், பழமை வாதத்திற்கும் இடையே போராடிவருகிறது. பிற்போக்குவாதிகளை ஏகாதிபத்திய நாடுகள் பயன்படுத்திக் கொண்டு ஆப்கானிஸ்தானின் இறையாண்மைக்கு கேடு விளைவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் பிற்போக்குவாதிகள் ஏகாதிபத்திய வாதிகளுடன் இணைந்து ஆப்கன் சமுதாய வளர்ச்சியை பின்னுக்குத்தள்ளுகின்றனர்.

மீண்டும் முற்போக்காளர்கள் கையில் ஆப்கானிஸ்தான்
அமானுல்லாவின் தோல்வியுடன் கதை முடிந்து விடவில்லை. இன்னும் இரண்டு காலகட்டங்கள் உள்ளன. ஒன்று 1953 முதல் 1992 வரையிலான நீண்டசீர்திருத்த காலக்கட்டம். மற்றொன்று 1992 முதல் இன்றுவரை தொடரும் பிற்போக்கு வாதிகளின் காலக்கட்டம். முன்பு பழமைவாதிகள் துணையுடன் ஆப்கானிஸ்தானை சிதைத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இன்றுஇல்லை. அந்த திருப்பணியை அமெரிக்க ஏகாதிபத்தியம் கையிலெடுத்துக் கொண்டது.

நீண்ட சீர்திருத்த காலக்கட்டம்

1924,1964,1976 மற்றும் 1987ஆம் ஆண்டுகளில் ஆண் -பெண் சமத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தத்திற்கான அரசியல் சட்டங்கள் இயற்றப்பட்டன. ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி முகமது தாவூத் போன்ற தாராளவாத உயர் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அனாஹிதா ராத்தேப் போன்ற கம்யூனிஸ்ட்டுகளும் சீர்திருத்தங்களைத் தொடர்ந்தனர். பல பத்தாண்டுகளாக மக்களின் எழுத்தறிவு, கல்வி மேம்பட்டது. மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றங்களை கொண்டு வந்தனர். மக்களின் கலாச்சார வாய்ப்புகளை அதிகரித்தனர்.ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தாவூத் 1977இல் முற் போக்கு சிவில் சட்டங்களை கொண்டு வந்தார். கம்யூனிஸ்ட் அனாஹிதா முக்கியமான ஏழு அரசாணைகளை பிறப்பித்தார்.1977 சிவில் சட்டமானது சட்டத்திற்கு முன்பு ஆண்பெண் இருபாலரும் எவ்வித பாரபட்சம், தனி சிறப்புரிமை இன்றி சமமான உரிமைகளையும், கடமைகளையும் பெற்றுள்ளனர் என்று அறிவித்தது.

இதை அடிப்படையாகக் கொண்டே ஏப்ரல் 1978 இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த கம்யூனிஸ்ட்டுகள் மென்மேலும் தொடர் சீர்திருத்தங்களை மேற்கொண்டனர்.1978 இன்பிற்பகுதியில் ஆப்கன் ஜனநாயக மாதர் அமைப்பு மற்றும் வெகுஜன இயக்கங்களும் அரசு அமைப்புகளுடன் இணைந்து மிகப்பெரிய அளவில் எழுத்தறிவுஇயக்கத்தை கொண்டு சென்றனர்.

கம்யூனிஸ்டுகளின் சாதனை

1978 கம்யூனிஸ்ட் புரட்சி நடந்தபோது ஆப்கானிஸ்தானில் எழுத்தறிவு விகிதம் 8.6 சதவீதம் ஆகும். (இதில்பெண்களின் எழுத்தறிவு விகிதம் மிக மிகக் குறைவு). எழுத்தறிவு பெற்ற 18,000 பயிற்றுநர்கள் நாட்டின் ஊரகப்பகுதி மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் மூலை முடுக்கெல்லாம் சென்று எழுத்தறிவை பரப்பினர். கல்வியானது சமூக சீர்திருத்தத்திற்கு அடிப்படையான ஒன்றாக கம்யூனிஸ்ட்டுகள் பார்த்தனர். கல்வி நிலையங்களிலிருந்து பெண்கள் ஆசிரியர்களாக, அரசு அலுவலர்களாக, மருத்துவர்களாக, பேராசிரியர்களாக வெற்றிகரமாக உருவானார்கள். நகர்ப்புறப் பகுதிகளில் உருப்பெற்ற கல்விச் சிந்தனைகளை ஊரகப் பகுதிகளுக்கு எடுத்துச்சென்றபோது அங்கு பழங்குடியினத் தலைவர்கள், நிலப்பிரபுக்கள் மற்றும் மதகுருமார்களின் நேரடியான மோதலை எதிர்கொண்டனர்.

வெகு மக்கள் எழுத்தறிவு இயக்கம் மற்றும் நிலச் சீர்திருத்த இயக்கத்தால் தங்களின் செல்வாக்கு பாதிக்கப்படுமென்று நிலப்பிரபுக்கள், குருமார்கள் போன்ற பழமைவாத சக்திகள் கோபம் கொண்டனர்.

பழமைவாதிகளின் சகாப்தம்

1919 முதற்கொண்டே சீர்திருத்தவாதிகள் பிற்போக்குவாதிகளின் கடும் எதிர்ப்பை சந்தித்தே வந்தனர். நிலப்பிரபுக்கள் குருமார்கள் கூட்டணியினரின் தாக்குதலை அரசர்களே எதிர்கொள்ள முடியவில்லை. 1919 இல் அரசர் அமானுல்லா பதவி துறக்க நேரிட்டது.1933 இல் நாடர் ஷா படுகொலை செய்யப்பட்டார். முற்போக்குசீர்திருத்தங்கள் ஆப்கானிஸ்தானை தலைகீழாக புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தபோது அதற்கு எதிராகபழமைவாதி சக்திகள் தங்களை அணிதிரட்டின.

முஜாஹிதீன்கள் -தலிபான்கள் வளர்ச்சி

காபூல் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இறையியல் தத்துவம் கற்பித்த பர்கானுதீன் ரப்பானி தலைமையில் 1972 இல் ஜமாயத் இ இஸ்லாமி அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அவர் சீர்திருத்த வாதிகளுக்கு எதிராக கடுமையாகப் போரிட்டார். ஜனாதிபதி தாவுத் ரப்பானியை கைது செய்ய உத்தரவிட்டார்.1973 இல் ரப்பானி பாகிஸ்தானுக்கு தப்பி ஓடினார். அவர் தன்னுடன் ஜமாயத் இ இஸ்லாமி அமைப்பினர் சிலரையும் அழைத்துச் சென்றார்.ஆப்- பாக். எல்லையோரம் அமைக்கப்பட்ட அகதிகள் முகாம்களில் அவர்களுக்கு பயிற்சி அளித்தார். அவர்களே 1980 களில் அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா ஆதரவுடன் முஜாஹிதீன்கள் ஆகவும் பின்னர்,1990 களில் தலிபான்களாகவும் உருவானார்கள்.ரப்பானி பெண் கல்வி, பொது வாழ்வில் பெண்பங்களிப்பு ஆகியவற்றின் மீது கடுமையாக தாக்குதல்தொடுத்தார். குழந்தை திருமணம் பலதார மணத்தை வலியுறுத்தினார்.

ரப்பானி காபூல் பல்கலைக்கழகத்தில் இருந்து குலாபுதீன் ஹெக்மத்யாரை வரவழைத்தார். அவர் 1969 இல் பெண்களின் முகங்களில் ஆசிட்டை வீசியதன்மூலம் அவப்புகழ் பெற்றிருந்தார்.20 ஆண்டுகள் கழித்து அவரது தொண்டர்களும் பெஷாவர் அகதிமுகாம்களில் இருந்த பெண் ஆசிரியர்கள் மருத்துவ ஊழியர்கள் மீது ஆசிட் வீசினர். இவர்கள் அனைவரும் மிக மோசமான மனிதர்கள்.ஆப்கன் நூற்றாண்டு சீர்திருத்த இயக்கங்களுக்கு முற்றிலும் எதிரானவர்கள். ஹெக்மத்யார் இப்போதுகாபூலில் இருக்கிறார். தலிபான்கள் தலைமையிலான தற்போதைய அரசில் அவரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்.

பாகிஸ்தான் முகாம்களில் பயிற்சி பெற்ற முஜாகிதீன்களுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்தது. ஒரு முறை இந்த முகாம்களில் நடத்தப்பட்ட சர்வேயில் 5- 11 வயது சிறுமிகளில் 5 சதவீதமானோரும், 12- 17 வயதுபெண்களின் 1.4 சதவீதமானோர் மட்டுமே பள்ளிக்கு சென்றது தெரிய வந்தது.

1990 இல் பெஷாவரில் ஆப்கானிஸ்தான் மதகுருமார்கள் கூடி பெண்கல்விக்கு முற்றிலுமாக தடை விதித்தனர். பெண்களுக்கு கல்வி அளிக்க இது உகந்த காலம்அல்ல என்று அறிவித்தனர். ஆப்கன் இஸ்லாமிய அரசின் உச்சநீதிமன்றம் பெண்கள் வீட்டை விட்டுவெளியே செல்ல வேண்டிய அவசியமே இல்லை; பள்ளிகள் விபச்சார விடுதிகள்; பாலியல் முறைகேடுகள் ஒழுக்க கேடுகள் நடக்கும் இடம் என்று பெண் கல்விக்கு தடை விதித்தது. இதுவெல்லாம் முஜாஹிதீன்களின் காலம். 2001 இல் இவர்கள்தான் வடக்கு கூட்டணியாக மறுவடிவம் பெற்றனர்.

பாத்திமா யாசீர் ஆப்கானிய பெண்கள் இஸ்லாமியஅமைப்பின் தலைவியாவார். இவர் கம்யூனிஸ்ட் அனாஹிதாவுக்கு நேர் எதிரானவர். அவர் இஸ்லாமிய சட்டங்களின் படி பெண்கள் முகத்திரை அணிய வேண்டும். குழந்தை பெறுதல், விவசாய விதைப்பு வேலைகள், எம்ப்ராய்டரி போன்ற வேலைகளில் மட்டுமே பெண்கள் பங்கெடுக்கலாம் என்று அறிவித்தார்.

தொடரும் போர்

நூற்றாண்டு காலமாக ஆப்கன் மக்கள் இரண்டுவிதமான கொள்கையாளர்களுக்கு இடையிலான போரை பார்த்து வருகின்றனர். சமுதாயம் முன்னேற வேண்டிய தேவையை உணர்ந்து நிலச்சீர்திருத்தம் மூலமாக அனைத்துப் பகுதி மக்களின் வாழ்க்கையை மேம்பாடு அடையச் செய்து,எழுத்தறிவு இயக்கம்மூலமாக பெண் விடுதலையையும் ,சிறுபான்மை இனகுழுக்களையும் முன்னேற்றுவது முற்போக்காளர்களின் கொள்கையாகும். மற்றொரு பாதை கடந்த காலத்தில் தங்களின் எதிர்காலத்தை பார்த்து சமுதாயத்தில் பழமைவாதக் கருத்துக்களை சாசுவதமாக நிலை நிறுத்துவதாகும். பிற்போக்குவாதிகளான தலிபான்கள் பழமைவாதத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள். இஸ்தான்புல், டமாஸ்கஸில் இருந்து மகமது பேக் டார்ஜி- அஸ்மா ரஸ்மயா ஆகியோரால் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு வரப்பட்ட முற்போக்கு சீர்திருத்தங்கள் முதலில், மன்னர்களாலும், பின்னர் தாராள ஜனநாயகவாதிகள் மற்றும் அனாஹிதா போன்ற கம்யூனிஸ்ட்டுகளாலும் மேலும் முற்போக்கு மயப்படுத்தி செயல்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களை தலிபான்கள் எவ்விதத்திலும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

நன்றி: ஃப்ரண்ட்லைன்,

பேரா. விஜய் பிரசாத்
தமிழாக்கம்: ம.கதிரேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here