2014 முதல் இந்திய ஒன்றிய அரசை ஆண்டு வருகின்ற பாசிச பாஜகவின் திருவாளர் மோடி கும்பலுக்கு திடீரென்று தெலுங்கானா மீது பாசமும், அன்பும், பொத்துக் கொண்டு வந்துள்ளது.

குடும்பத்தை வழி நடத்துவதாக பொறுப்பேற்றுக் கொண்ட தந்தை தனது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் கல்வியறிவு, வேலை வாய்ப்பு வசதி, திருமணப் பிரச்சினை, உடல் உபாதைகள் போன்ற எதையும் கண்டு கொள்ளாமல் திரிந்து கொண்டிருந்தால் அவனுக்கு தறுதலை அப்பன் என்று பெயர்.

2014 தேர்தலில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று ‘சங்கல்ப் பத்ரா’ அளித்த மோடி தறுதலையாக சுற்றிக் கொண்டிருந்த அப்பனை போல உலகை சுற்றி வந்து விட்டு, திடீரென்று தெலுங்கானா மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 2023 வருகிறது என்பதை கணக்கில் வைத்துக் கொண்டு திடீர் நாடகம் ஒன்றை நடத்தியுள்ளார். மஞ்சள் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை இது நாள் வரை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு தேர்தல் ஆதாயத்திற்காக தேசிய மஞ்சள் வாரியம் அமைப்பதாக அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, “கோவிட்க்குப் பிறகு, மஞ்சள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து, உலகளாவிய தேவையும் அதிகரித்துள்ளது.  இன்று தொழில் ரீதியாக அதிக கவனம் செலுத்துவதும், உற்பத்தியில் இருந்து ஏற்றுமதி வரை மஞ்சளின் மதிப்புச் சங்கிலியில் முன்முயற்சி எடுப்பதும் முக்கியம். மஞ்சள் விவசாயிகளின் அவசியத்தைப் பார்க்கிறோம்.. மஞ்சள் உற்பத்தியின் எதிர்கால வாய்ப்புகளை கணக்கில் கொண்டு தேசிய மஞ்சள் வாரியத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது” என்று மாநிலத்தின் மகபூப்நகரில் ஒரு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Modi telangana Visit

“தெலுங்கானா விவசாயிகள், குறிப்பாக மஞ்சளை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றனர்.. நிஜாமாபாத், நிர்மல் மற்றும் ஜக்தியால் மாவட்டங்கள் மஞ்சள் சாகுபடிக்கு பெயர் பெற்றவை. இங்கிருந்து விரலி மற்றும் குண்டு மஞ்சள் உள்நாட்டு மற்றும் வணிக தேவைகளுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மஞ்சள் தவிர, தேயிலை, காபி, மசாலா, சணல், தேங்காய் போன்ற விவசாய விளை பொருட்கள் விற்பனைக்கு  வாரியங்கள் உள்ளன. இவை விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்தவும், அவர்களின் பிற தேவைகளை கவனிக்கவும் உதவுகின்றன” என்றும் கூறினார். இந்தச் செய்தியை ஏசியன் நியூஸ் தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டு மக்களை இளிச்சவாயர்களாகவும், விபரம் அறியாத கேனயர்களாகவும் கருதிக் கொண்டுள்ள மோடி, ரோடு போடுவது, பாலம் கட்டுவது, ரயில் தண்டவாளங்களை அமைப்பது போன்றவற்றை, அதாவது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதியை செய்து கொடுப்பதையே நாட்டு மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் என்று தூங்கியவன் தொடையில் திரித்துக் கொண்டுள்ளார்.

இவ்வாறு திரிப்பதற்கு சாலை, ரயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் உயர்கல்வி போன்ற முக்கியமான துறைகளில் ₹13,500 கோடிக்கும் அதிகமான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்கும், நவராத்திரி பண்டிகை காலத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நமக்கு புரியவில்லை.. ஆனால் மக்கள் மத்தியில் உள்ள கடவுள் நம்பிக்கை, மற்றும் மத உணர்வுகளை தனது தேர்தல் அரசியலுக்காக பயன்படுத்த துடிக்கும் மோடி,“பண்டிகைகளின் சீசன் தொடங்கிவிட்டது. நவராத்திரி தொடங்க உள்ளது. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி நவராத்திரிக்கு முன்பு சக்தி’யை வழிபடும் உணர்வை ஏற்படுத்தினோம். என்று மகளிர் இட ஒதுக்கீடு பித்தலாட்டத்தையும், பண்டிகைகளையும் இணைத்து வெல்டிங் செய்துள்ளார்.

மேலும் இதுபோன்ற திட்டங்களை துவக்கி வைத்து “இன்று தெலுங்கானாவில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ₹13,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு தெலுங்கானாவை வாழ்த்துகிறேன்… இது போன்ற பல சாலை இணைப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இது மக்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வரும். நாக்பூர்-விஜயவாடா வழித்தடத்தின் மூலம் தெலுங்கானா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவுக்குப் பயணம். வசதியாக இருக்கும்.இதன் காரணமாக, இந்த மூன்று மாநிலங்களிலும் வர்த்தகம், சுற்றுலா மற்றும் தொழில்துறை வளர்ச்சியடையும்” என்று பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள்: 

இதே போன்றதொரு அணுகுமுறையை தான் கர்நாடகாவில் மேற்கொண்டனர். ரோடு ஷோக்கள், மத்திய மந்திரிகளின் தொடர் சுற்றுப்பயணங்கள், திருவாளர் அண்ணாமலை உள்ளிட்ட சிலரை கொண்ட தேர்தல் பணிக்குழு, பல்வேறு பொதுக்கூட்டங்கள் என்றெல்லாம் அலப்பறை செய்தனர். ஆனால் கர்நாடகா மக்கள் ஏமாறவில்லை.

மக்களுடைய வரிப்பணத்தில் இயங்குகின்ற அரசாங்க பணத்தில் திட்டங்களை துவக்கி வைத்துவிட்டு அவை அனைத்தையும் தனது ஆட்சியின் சாதனைகளைப் போல காட்டி, தேர்தல் வெற்றிக்காக ஆளாய் பறக்கின்றனர். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவின் மீது ஈடி ரெய்டு நடத்தியது மட்டுமின்றி, கடந்த ஜூலை மாதத்தில் தெலுங்கானா வந்த போது, தெலுங்கானாவில் ஊழல் ஆட்சி நடக்கிறது என்று குற்றம் சுமத்தி ஆதாயம் அடைய எண்ணினார்.

மோடி கும்பலின் மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் அஞ்சி பாரதிய ராஷ்டிரிய சமீதி (BRS), ஆர் எஸ் எஸ் மோடி தலைமையிலான NDA கூட்டணியை ஆதரிக்குமா அல்லது அதனை எதிர்த்து நிற்கும் INDIA கூட்டணியை ஆதரிக்குமா என்பது போக போகத் தெரியும் என்றாலும் மோடி நடத்துகின்ற நாடகங்களை நம்பி ஏமாற தெலுங்கானா மக்கள் தயாராக இல்லை என்பதையே தற்போதைய அரசியல் நிலைமைகள் நமக்கு காட்டுகின்றன.

  • கணேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here