மார்ச்-4:

சமத்துவம் போதிக்கும் அய்யா வைகுண்டர் வழி!

அய்யா வைகுண்டர்
வழிபாட்டுத் தலம் சாமிதோப்பு!

இன்று இந்தியாவின் தென்கோடியில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரி முனைக்கு வடமேற்கில் அரபிக் கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் தொலைவில் சாமி தோப்பு என்ற இடத்தில் அமைந்துள்ள அய்யா வைகுண்டரின் நினைவிடம் அவரது பக்தர்களால் புனித இடமாக கருதப்படுகிறது.

உருவ வழிபாடுகளற்ற அத்தலத்தில் ஒவ்வொரு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைக் சேர்ந்த உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த நாடார்களின் வழிபாட்டுத் தலமாகவும் புனித இடமாகவும் கருதப்படும் சாமிதோப்பிற்கு வருகை தரும் பக்தர்களில் கோனார் மற்றும் பிற சமூகத்தினரும் வருகை தந்தாலும் நாடார் பக்தர்களே பெரும்பான்மையாக விளங்குகின்றனர்.

கேரளாவின் ஈழவ மக்களுக்கு நாராயண குருவைப் போல் தென் மாவட்ட நாடார்களுக்கு அய்யா வைகுண்டர் வழிகாட்டுகிறார். ‘தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்” என்றுரைத்த அய்யா வைகுண்டரின் வரிகளைவிட எளிமையாக விளிம்புநிலை மக்களுக்காக இயங்கும் மனித உரிமை காப்பாளர்களின் நோக்கத்தை யாரும் கூறிவிட முடியாது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் 1809 ஆம் ஆண்டில் வைகுண்டர் பிறந்ததாக 1980 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.பில். பட்டத்திற்காக ‘வைகுண்டசாமிகளும் தென்திருவிதாங்கூரில் சமூக சீர்திருத்தமும்’ என்ற ஆராய்ச்சி கட்டுரையை எழுதிய இரா. பொன்னு கருதுகிறார். வைகுண்டர் பிறந்த காலகட்டத்தில் சாதிக் கொடுமை தலைவிரித்தாடியது.

தாங்கள் சூத்திர சாதியினர் என்பதால் பார்ப்பனர்களது வழிகாட்டுதல்படி கடவுளின் பிரதிநிதியாக அனந்த பத்மநாபசாமியின் பெயரால் ஆட்சி செய்த நாயர் சாதி மன்னர்கள், உழைக்கும் மக்கள் மீது நியாயமற்ற வரிகளை சுமத்தி அனந்தபத்மநாபனின் கருவூலங்களை நிரப்பினர். கோவில்கள் தோறும் ஊட்டுப்புரைகள் அமைக்கப்பட்டு பார்ப்பனர்களுக்கு நாள்தோறும் இருவேளை இலவசமாக பல்வகை உணவு வழங்கப்பட்டது.

திருவிதாங்கூரில் சாதி வேறுபாடுகள் இந்து மனு தர்மத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்டன. சுருங்க கூறினால் இன்று ஆர்.எஸ்.எஸ். மற்றும் தீவிர இந்து வலதுசாரி அமைப்புகள் கனவு காணும் ராமராஜ்ஜியம், 217 ஆண்டுகள் சுதந்திரம் கிடைக்கும் வரையில் கன்னியாகுமரி முதல் மலபார் வரை பரந்து விரிந்த திருவிதாங்கூரில் நடைபெற்றது. அந்த ராமராஜ்ஜியத்தில் நாடார் அல்லது சாணார், பறையர் அல்லது சாம்பவர், புலையர், ஈழவர், முக்குவர் சாதியினர் கோவில்கள் மற்றும் கோவில்கள் அமைந்துள்ள தெருக்களில் கூட நுழைய முடியாத தீண்ட தகாத சாதியினராக நடத்தப்பட்டனர்.

கோவில் கட்டுதல் போன்ற பெருநிகழ்வுகளில் தீண்டத்தகாதவர்களின் குழந்தைகள் பலியிடப்பட்டனர். நாடார் பெண்களுக்கு மார்பு சேலை அணிதல், இடுப்பில் குடம் எடுத்தல், பொன்நகைகள் அணிதல் ஆகியன தடை செய்யப்பட்டிருந்தது. நாடார் ஆண்கள் தலைப்பாகை கட்டுதல், மீசை வளர்த்தல், வளைந்த கைப்பிடி கொண்ட குடையை பயன்படுத்தல், உயர்சாதியினராக தங்களை கருதிக் கொண்டவர்களின் மொழியை பயன்படுத்தல், உதாரணமாக சாப்பிடப் போகிறேன் என கூறாமல், கஞ்சி குடிக்க அல்லது வெள்ளம் குடிக்க செல்கிறேன் என்றுதான் கூற இயலும்),

தங்கள் குழந்தைகளுக்கு இந்து கடவுளரின் பெயரை சூட்டுவது ஆகியவை தடுக்கப்பட்டன. அய்யா வைகுண்டரின் பெற்றோர்கள் அவருக்கு தாங்கள் விரும்பிய முடிசூடும் பெருமாள் என்ற பெயரை சூட்ட முடியாமல் முத்துக்குட்டி என்ற பெயரையே தேர்ந்தெடுக்க நேர்ந்தது. நாடார்கள் ஓட்டு வீடு கட்டுவது தடை செய்யப்பட்டிருந்தது. அவர்கள் ஓலைப்புரைகளிலேயே வசிக்க முடியும்.

திருவிதாங்கூர் அரசி பார்வதிபாய் ஆட்சியில் கி.பி. 1816-1829 காலகட்டத்தில் திவான் மன்றோ உயர்சாதியினரின் சாதி அமைப்பு V முறையின் உயர் அடுக்கில் இருந்த பிட்டாகைக்காரர்களது அதிகாரச் சின்னங்களை அழித்து அவர்களது கொட்டத்தை அடக்கினார். அரசி பார்வதிபாய் ஆட்சியில் லண்டன் கிறிஸ்தவ மிஷனரிகளின் தாக்கத்தால் எல்லா சாதியினரும் ஓட்டு வீடு கட்டலாம். அனைவரும் பொன் நகைகள் அணியலாம் என்ற உரிமைகள் வழங்கப்பட்டன.

அய்யா வைகுண்டர் 02.03.1809 ஆம் ஆண்டு அன்றைய தென் திருவிதாங்கூரின் ஒரு பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தின் இன்றைய அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் சாஸ்தாங்கோவில்விளை என்ற கிராமத்தில் பொன்னுநாடார் வெயிலாள் அம்மையார் தம்பதியர்க்கு பிறந்தார். அதுவே இன்று சாமிதோப்பு என அழைக்கப்படுகிறது. கி.பி. 1833 ஆம் ஆண்டு தனது தோல் நோயை குணப்படுத்த திருச்செந்தூர் சென்ற அவர் இறை அறிவு பெற்று தனது பொது வாழ்வை தொடங்கினார். நாடார், இடையர், பறையர், கம்மாளர், வாணியர், தோல் வணிகர், மறவர், பரதவர், சக்கிலியர், துலுக்கர், பட்டர் உள்ளிட்ட பதினெட்டு சாதியினருக்கும் கடவுள் எனச்சொல்லி வந்ததாக அகிலத் திரட்டு கூறுகிறது.

அன்றைய காலகட்டத்தில் இந்து கோவில்களுக்கு காணிக்கை  கொடுக்கும் உழைக்கும் மக்களை அவர் தடுத்தார். கோவில்களில் பலி கொடுப்பதையும் கண்டித்தார். ‘விஞ்ஞை’ என்ற அறிவுரைகளை உழைக்கும் மக்களுக்கு வழங்கினார்.

காணிக்கையிடாதீங்கோ

காவடிதூக்காதீங்கோ
வீணுக்கு தேடுமுதல் விறுதாவில் போடாதீங்கோ

என்ற அகிலத்திரட்டின் வரிகள் உழைக்கும் மக்கள் மீது வைகுண்டருக்கு இருக்கும் அன்பை காட்டுகின்றன. வைகுண்டரின் குரல் இந்து மன்னனுக்கு எதிராகவும் எழுந்தது. பத்மநாபசாமியின் பிரதிநிதியாக மன்னராட்சி நடந்த காலகட்டத்தில் அரசனுக்கு எதிராக பேசுவது தெய்வ நிந்தனை எனக் கருதப்பட்டது. எனினும் மன்னனால் 1838 ஆம் ஆண்டு 110 நாட்கள் திருவனந்தபுரத்தில் சிறை வைக்கப்பட்டு மார்ச் 1839 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட வைகுண்டர் ‘அவன் பட்டம் பறித்திடுவேன் கொட்டி கலைத்திடுவேன்’ எனக் கூறியது மன்னரின் அதிகாரத்திற்கு கீழ்ப்படியாத அவரது வீரத்தைக் காட்டுகிறது.

மன்னரது ஆளுமைக்குட்பட்ட இந்து கோவில்களில் பொது மக்களின் வரி பணத்தில் ஊட்டுப்புரைகள் என்ற உணவு சாலைகள் நிறுவப்பட்டு அதில் பார்ப்பனருக்கு மட்டும் இருவேளை இலவசமாக அறுசுவை உணவு வழங்கப்பட்ட காலகட்டத்தில் வைகுண்டர் உழைக்கும் மக்களை சாதி பேதமின்றி ஒன்றுபடுத்தி அவர்களை பொது சமபந்தி உணவை உண்ணவும், தனது கொள்கைகளை பரப்ப ஏதுவாக பல இடங்களில் பதிகளை விட சிறிய நிழல்  தாங்கல்களையும், பதி என்ற சற்றே பெரிய வழிபாட்டிடங்களையும் நிறுவினார். இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தாமரைக்குளம், சின்ன முட்டம் போன்ற இடங்களில் பகுதிகளில் பதிகளும், ஏராளமான நிழல் தாங்கல்களும் உள்ளன.

வைகுண்டரது அகிலத் திரட்டு இந்து சனாதனத்தை முற்றிலுமாக மறுக்கிறது.

அய்யா வைகுண்டரின் பதிகளில் ஆண் பெண் பேதமில்லை, சாதி மத பேதமில்லை வீண் சடங்குகள் இல்லை, உருவ வழிபாடில்லை. ஆனால் அனைவரும் தலைப்பாகை கட்டி சுயமரியாதையுடன் வழிபட முடியும். வைகுண்டரது அகிலத் திரட்டு இந்து சனாதனத்தை முற்றிலுமாக மறுக்கிறது.

கோவில்கள் வைத்து குருபூசை செய்யார்கள்

பூவதுகள்போட்டுபோற்றியேநில்லார்கள்
ஆடுகிடாய்கோழிஅறுத்துப்பலியிடார்கள்
மாடு மண்ணுருவை வணங்கி திரியார்கள்

என அகிலத்திரட்டு உரக்கச் சொல்கிறது. மேற்சொன்ன வரிகள், வைகுண்டரின் சனாதன மத எதிர்ப்பை காட்டுகின்றன. பசுமாட்டையும் மண்ணுருவங்களையும் வணங்குவதை அய்யா வைகுண்டர் தடுக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அறிவு ஜீவி எனக் கொண்டாடும் கோல்வார்க்கரின் சிந்தனைகளை தமிழில் வெளியிட்ட ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதியின் குருஜி சிந்தனைக் களஞ்சியத்தின் தொகுதி மூன்றில் பக்கம் 279 இல் கோல்வார்க்கர் இவ்வாறு குறிப்பிடுகிறார், ‘கர்ப்பிணி பசுவின் கருவில் இருக்கும் கன்றின் தோல் உடுத்துவதற்கு மிகவும் மென்மையாக இருக்கும் என்று சிலர் கூறுகின்றனர். பெண்களும் கருத்தரிக்கின்றனர் அவர்கள் கருவில் வளரும் சிசுவின் மாமிசமும் மிகவும் இனிமையாக இருக்குமோ என்னவோ? அதை ஏன் சாப்பிடுவதில்லை? அதனால் பல பிரச்சினைகள் தீருமே? மக்கள் தொகை குறைந்து போகுமே, குடும்பக் கட்டுப்பாடு போன்றவை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது’,

இதை விட குரூரமான வர்ணனையை மனிதர்கள் யாரும் கற்பனை செய்ய இயலாது. ஆனால் அய்யா வைகுண்டர் அவரைப் பின்பற்றுபவர்கள் பசு மாட்டையும், மண் சிலைகளையும் புனிதப்படுத்தி வணங்குவதை தடுக்கிறார்.

எளிமையான தமிழில் சொல்லப்பட்ட அகிலத்திரட்டை படிக்கும் போது அன்றைய திருவிதாங்கூரின் சமூக அவலங்களை கால இயந்திரத்தில் சென்று காண இயலும்.

1809 முதல் 1851 காலகட்டத்தில் வாழ்ந்த வைகுண்டருக்குப் பின்னரே 1854 ஆம் ஆண்டு கேரளாவின் நாராயணகுரு பிறந்தார். 1823 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பிறந்த வள்ளலார் 1867 ஆம் ஆண்டில் திருவருட்பா வெளியிட்டார். தீண்டாமைக்கு எதிராகவும், பெண் விடுதலைக்காகவும் போராடிய மகாத்மா ஜோதிராவ் பூலே 1827 ஆம் ஆண்டு மராட்டியத்தில் பிறந்தார், 1890 ஆம் ஆண்டு மறைந்தார். அந்த வகையில் எழுத்தாளர் சு. சமுத்திரம் கூறிய ‘வைகுண்டர் என்ற ஆன்மீகப் போராளி’ தென்னிந்தியாவின் ஆன்மீகப் போராளிகளுக்கு முன்னோடியாக விளங்குகிறார்.

உழைக்கும் மக்களுக்காக, எளிய தமிழில் அவர் உரைத்த அகிலத்திரட்டு நூல் நாடார் சமூகத்தினர் மீதான வரிகளையும் வன்கொடுமைகளையும் பதிவு செய்தது.

தாலிக்கு ஆயம் சருக முதலாயம்

காலிக்கு ஆயம் கம்பு தடிக்காயம்

தாலமு தேறுஞ் சான்றோ ருக்காயம்

தூலமுட னருவாள் தூருவட்டிக்கேயாயம்

தாலமதுக் காயம் தரணிதனிலே வளர்ந்த

ஆலமரம் வரைக்கும் அதிகயிறை வைத்தனனே

வட்டிக்கு மாயம் வலங்கை சான்றோர் கருப்பு

கட்டிக்கு மாயங் கடுநீசன் வைத்தனனே

பாழிலே சான்றோர்க்குப் படுநீசன் கொள்ளுகின்ற

ஊழியங்க ளெல்லாம் உரைக்கக் கேளன்போரே

பனை கேட்டடிப்பான் பதனீர் கேட்டடிப்பான்

கனத்த கற்கண்டு கருப்புக்கட்டிக் கேட்டடிப்பான்

நாருவட்டி யோலை நாள்தோறுங் கேட்டடிப்பான்

வாதுக்கு நொங்கு வாய்கொண்டு கேட்டடிப்பான்

கொடு வாவெனவே கூழ் பதனீர் டேட்டடிப்பான்

சில்லுக் கருப்புக்கட்டி சீரகமிட்டே வூற்றி

கொல்லைதனில் சான்றோரைக் கொண்டுவா என்றடிப்பான்

மீச்சுக் கருப்புக்கட்டி மிளகுபல காரமிட்டு

வீச்சுடனே கொண்டு வீட்டில்வா என்றடிப்பான்

வட்டிக்கு கருப்புக்கட்டி மணல்கருப்புக்கட்டியொடு

வெட்டக் கருப்புக்கட்டி வெண்கருப்புக் கட்டியொரு

தோண்டிக்கும் பாய்க்கும் சுமடதுக் குமாலை

வேண்டிதெல்லாமெடுத்து விரைவில்வா என்றடிப்பான்

காலைப் பதனீர் கண்முற்றா நொங்குகளும்

மாலைப் பதனீர் வற்றக்காயம் பதனீர்

கொதிக்கும் பதனீர் கொண்டுவா என்றடிப்பான்

முக்காலி கட்டி முதுகிலடித்து மிக

மின்கானா பொன்பணங்கள் வேண்டினான் பிழையெனவே

சான்றோர் தன்வஸ்து தரணி தனக்குயிராய்

ஆனாலுஞ்சான்றோர்க்கு அடியொருநாள் மாறாது

கோவில் சிவாலயங்கள் கூடஞ் சிங்காசனங்கள்

நாவுலகுங் கள்ளாய் நாடியிருந்தாலும்

சாணான் கள்ளேறியெனச் சண்டாள நீசனெல்லாம்

வீணாகச் சான்றோரை விரட்டியடிப்பான் காண்

சாணுடம்பு கொண்டுதரணிமிக ஆண்டாலும்

வீணுடம்பு கொண்டு விரித்துரைத்தே பாராமல்

சாணான் சாணானெனவே சண்டாள நீசனெல்லாம்

கோணாதுளத்தோரைக் கோட்டி செய்தேயடித்தான் (19)

அய்யா முத்துக்குட்டி சாமியின் அகிலத்திரட்டு அம்மானையிலுள்ள கீழ்வரும் வரிகள், அன்றைய காலகட்டத்தின் சமூக அவலங்களை தெள்ளத் தெளிவாக விளக்குகின்றன.

                                                                              நாடார் வரலாறு

                                                                               கறுப்பா? காவியா?

வழக்கறிஞர் தி.லஜபதிராய். நூலிலிருந்து

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here