மக்கள் அதிகாரம் பத்திரிக்கைச் செய்தி!
விருத்தாசலம் கண்ணகி முருகேசன் ஆணவ கொலை வழக்கில் ஆதிக்க சாதி வெறித்தனத்திற்கும், காவல்துறை கூலிப்படை அதிகாரிகளுக்கும் ஆயுள் சிறை தண்டனை ! ஒருசில உத்தமராசா நீதிபதிகளாக இருப்பதால் இந்த நீதி ! 18 ஆண்டுகள் சமரசமில்லா நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ! இந்த வழக்கு சரியான திசையில் செல்ல மாவட்ட நீதிபதி, உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் மட்டுமல்ல சி.பிஐ அதிகாரிகள் சிபிஐ வழக்கறிஞர்களோடு வழக்கறிஞர் ரத்தினம் நடத்திய போராட்டம் மூலம் அரசு கட்டமைப்பின் யோக்கியதையை புரிந்து கொள்ள முடியும்.
முருகேசன் சித்தப்பா அய்யாசாமி, உறவினர் குணசேகரன் ஆகியோரையும் இந்த ஆணவக் கொலையில் குற்றவாளிகளாக சேர்த்து சி..பி.ஐ ஆங்கிலத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. இந்த கிரிமினல் தனத்திற்கு எதிராகத்தான் பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இறுதியில் இருவரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கண்ணகியின் தந்தை துரைசாமி உட்பட 12 பேருக்கு ஆயள்தண்டனை, சகேகாதரர் மருது பாண்டிக்கு மட்டும் தூக்கு தண்டனை. வழக்கின் சாட்சி ஆதாரங்களை மறைத்த குற்றத்திற்காக அன்றைக்கு விருத்தாசலம் காவல் துணை ஆய்வாளராக இருந்த லஞ்சப்பேர்வழி தமிழ்மாறன், ஆய்வாளர் செல்லமுத்துவுக்கும் ஆயுள் தண்டனை என்பது தீர்ப்பின் தரத்தை உயர்த்தி உள்ளது. வன்கொடுமை சட்டத்தின் வழியாக இந்த வழக்கை அணுகியதால்தான் இத்தகைய தீர்ப்பு.
தீர்ப்பில் நீதிபதி உத்தமராசா “ மற்றவர்களை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக இந்த கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை மிகச்சரியாக குறிப்பிட்டுள்ளார். கொலை நடந்த 2003 –ம் வருடத்தில் அதைபற்றி பேச மக்கள் அச்சப்பட்டார்கள். கண்ணகி முருசேகன் காதில் விசம் ஊற்றி, தனித்தனியே எரித்த கொடுமையை ஊரே வேடிக்கை பார்க்க, இது சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இரவில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் ஒரு நிகழ்வு.
சம்பவம் நடந்த பிறகு முருகேசன் உறவினர்கள் கரும்பு காட்டில் உயிருக்கு அஞ்சி பதுங்கி இருந்தனர். ஒரு வாரம் கழித்து நக்கீரனில் விசயம் வெளிவந்த பிறகுதான் வெளி உலகிற்கு தெரியும். உடனே வழக்கறிஞர் ரத்தினம் விருத்தாசலத்தில் உள்ள என்னுடைய அலுவலகத்திற்கு வந்தார். விபரங்களை கேட்டறிந்தார். முருகேசன் ஊரான குப்பநத்தம் கிராமத்திற்கு நேரில் சென்று மக்களிடம் சம்பவத்தின் பின்னணியை கேட்டறிந்தோம். அதன்பிறகு விஜயமாநகரம், வண்ணான்குடிகாடு என அருகமை கிராமங்களில் அவர்களின் உறவினர்களிடம் விசாரித்தோம். அவர்களுக்கு தைரியம் சொன்னோம்.
விருத்தாசலத்தில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் நாங்கள் இருக்கிறோம்: அச்சம் வேண்டாம்! எப்போது வேண்டுமானாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்! வழக்கறிஞர் ரத்தினம் அவர்கள் முருகேசன் உறவினர்களை என்னிடம் அனுப்பி நீதிமன்றத்திலும், காவல் நிலையத்திலும் சட்ட உதவிகள் செய்ய சொன்னார். இந்த வழக்கில் இருந்து விலகுமாறு எனக்கு உள்ளூரில் பல நெருக்கடிகள் தரப்பட்டன. இந்த வழக்கிற்காக கடலூர் சென்னை செங்கல்பட்டு என ஒவ்வொரு ஊரிலும் வழக்கறிஞர் மனித உரிமை ஆர்வலர்கள் என பலரின் பங்களிப்புதான் இவ்வளவு ஆண்டுகள் தொடர்ந்து போராட்டம் நடப்பதற்கு அடிப்படை. ஆணவக் கொலையில் ஆதிக்க சாதி வெறிக்கு எதிராக சட்டம் தன் கடமையை செய்ய வைப்பதற்குதான் இந்த போராட்டம்.
இந்த வழக்கின் சில செய்திகள் முருசேகன் தந்தையிடம் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் “என்மகனை நாங்களே விசம் வைத்து கொன்று விட்டோம் மனசாட்சி உறுத்தியதால் இன்று தங்கள் முன் சரணடைகிறோம்.“ அதுபோல் கண்ணகி தந்தையிடம் ஒரு மோசடியான ஒப்புதல் வாக்குமூலம் பெற்று தலா நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு மாதத்திற்குள் வழக்கு விசாரணை முடித்து குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விருத்தாசலம் காவல் நிலையத்திலிருந்து சம்பவம் நடந்த புதுக்கூரைப்பேட்டை 2 கி.மீ கூட இருக்காது. இந்த அநீதிக்கு எதிராக எஸ்.பி. ஐ.ஜி. டி.ஐஜி யாரும் தடுத்து நிறுத்தவில்லை. கண்ணகியின் தந்தை துரைசாமி பஞ்சாயத்து தலைவர். அவர் ஒரு மாதத்திற்கு மேல் சிறையில் இருந்தால் அவர் பதவி பறிபோகும் என்ற காரணத்தால் அவருக்கு கடலுர் மாவட்ட நீதிமன்றம் பிணை வழங்கியது குறிப்பிடதக்கது.
சி.பிஐ அதிகாரிகள் இந்த வழக்கில் கிராமப் புற மக்களிடம் பெற்ற சாட்சி வாக்குமூலங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் பதிவு செய்து கையொப்பம் பெற்று குற்றபத்திரிக்கையாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதை தமிழில் தர வேண்டும் என பல போராட்டம் நடத்தப்பட்டது.
செங்கல்பட்டு சி.பி.ஐ நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் ரத்தினத்தோடு நான் சென்றிருந்தேன். அப்போது சி.பி.ஐ அதிகாரியிடம் வழக்கறிஞர் ரத்தினம் அவர்கள் “ உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? சொந்த அண்ணன் மகனை தங்கள் குடும்பத்தில் மெத்த படித்த பி.இ கெமிக்கல் என்ஜினியர் முருகேசனை விசம் வைத்து கொன்றார் என அவரையும் வழக்கில் குற்றவாளியாக சேர்த்துள்ளீர்களே! அப்படி யாரும் செய்வார்களா என கோபமாக கேட்டார். அதற்கு அந்த அதிகாரி “ சம்பவத்தில் இவரும் உடனிருந்தார். வழக்கு விசாரணையில் இவரை அப்ருவராக மாற்றிவிடலாம் என நாங்கள் செய்தோம்“ என குறிப்பிட்டார். சித்தப்பா அ்ய்யாசாமி, உறவினர் குணசேகரன் சிறை செல்ல முருகேசன் உறவினர்கள் எப்படி சாட்சி சொல்லுவார்கள்? இதுவே குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுத்து விடாதா? என பதில் கேள்வி கேட்டார். சி.பி ஐயிடம் பதில் இல்லை. சட்டம் படித்தால் மட்டும் போதாது சமூக அறிவு, மக்களை பற்றிய அக்கறை கொண்டவர்களால்தான் இப்படி சிந்திக்க முடியும். வழக்கை சரியான திசையில் எடுத்து செல்ல முடியும்.
அன்றைக்கு இன்னொரு சம்பவம் “சமரசமாக போய்விடலாம், ஆதிக்க சாதியினர் மிக வலுவாக உள்ளபகுதி விரு்ததாசலம். இந்த வழக்கில் தண்டனை பெற்றால் தலித் மக்களுக்கு நிரந்தர அச்சுறுத்தலாக மாறிவிடும் என வழக்கறிஞர் ரத்தினத்திடம் தலித் அமைப்பின் பிரதிநிதி என சொல்லிக் கொண்டு ஒருவர் செல்லில் பேசினார். ரத்தினம் கண்டபடி அவரை திட்டினார்.
வன்கொடுமை கொலை வழக்கில் குற்றவாளிகள் தண்டனை பெற்றுத்தருவது என்பது செங்குத்தான வழுக்குப் பாறையில் ஏறுவது போன்றது. போலீசுக்கு எதிராக, கீழமை நீதிமன்றத்துக்கு எதிராக, சமரச கட்சிக்கு எதிராக, உண்மையான எதிரிக்கு எதிராக, இப்படி எதிராக எதிராக என கடந்துதான் இத்தகைய நீதி வந்துள்ளது. இந்த தீர்ப்பு உயர், உச்சநீதிமன்றத்தில் நிலைக்க வேண்டுமானால் தொடர்ந்து போராட வேண்டும்.
வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
நாள் 25-9-2021