கி.பி 15 ஆம் நூற்றாண்டில் உருவான உலகின் இளைய மதமான சீக்கிய மதம் உலகிலுள்ள மிகப் பெரும் மதங்களில் ஐந்தாவது இடத்தை பெறுகிறது. சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் பிறந்த நாளையே குருநானக் ஜெயந்தி என்று கொண்டாடுகிறார்கள். குருநானக் தனது 30-வது வயதில் ’அறிவு விளக்கம்’ பெற்றதாக அறிவித்தார். அவ்வாறு அறிவு விளக்கம் பெற்றபோது மனிதர்கள் யாருடைய பாதையைப் பின்பற்ற வேண்டும் என்ற கேள்வி அவர் முன்னே எழுந்தது. அதற்கு அவர், “இந்து மதமா அல்லது இஸ்லாமிய மதமா என்றால் நான் கடவுளின் பாதையைப் பின்பற்ற வேண்டும்” கூறினார்.

“ஏனென்றால் கடவுள் இந்து மதமும் அல்ல! முஸ்லிம் மதமும் அல்ல! ஆகவே நாம் பின்பற்ற வேண்டிய பாதை கடவுளின் பாதையாகும் என்று கூறினார். இந்த கருத்துகளை பின்னாளில் அவருடைய சீடர்கள் மேம்படுத்தி கொண்டு சென்றனர் ’சீக்’ என்ற சொல்லுக்கு கற்றுக் கொள்பவர் என்று பொருளாகும். அவ்வாறு கற்றுக் கொள்பவர்கள் சொல்லி கொடுப்பவர்களின் ’சீடர்கள்’ ஆகிறார்கள். இவ்வாறு அவர் புதிய மத வழிபாட்டை முன் வைத்த போது இந்தியாவின் நிலை என்ன? அது பற்றி குருநானக்கே விளக்குகிறார்.

“இந்தியாவில் வாழும் குடிமக்கள் அறியாமையில் மூழ்கி கிடக்கிறார்கள்; வெறுப்புக்கு நடுவே கிடந்து விளங்குவதால் செயலற்று வாழ்கிறார்கள்; அறிவுள்ளவர்கள் போல வேடம் அணிந்து கொண்டு இசைக்கருவிகளை மீட்டிக் கொண்டு அதற்கு ஏற்ப ஆடிப்பாடி குதிக்கிறார்கள்; உரையாடுகிறார்கள்; தாங்கள் போற்றும் வீரர்கள் பற்றி எண்ணங்களை பாடல்கள் மூலம் வெளியிடுகிறார்கள்; அறத்தை கடைப்பிடிக்கிறார்கள்; ஆயினும் அவற்றுக்கு உரிய பலன் கிடைக்கவில்லை, முக்திக்கு வழி என்ன என்று கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தங்களை துறவிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் வழி தெரியாது திகைத்து, வீடு வாசல்களை துறந்து போய்விடுகிறார்கள்; ஒவ்வொருவனும் தன்னை பூரணமானவன் என்று கூறிக்கொள்ள ஆசைப்படுகிறான், உழைப்பால் உயர்ந்தவன் என்று கூறிக் கொள்ள விரும்பவில்லை. இவர்களை தராசில் எடை போட்டுப் பார்த்தால் மனிதனுடைய மதிப்பு எவ்வளவு என்பது தெரிந்து போகும்“ என்று குருநானக் கூறுகிறார்.

“இறைவன் ஒருவனே என்பதும் அந்த கடவுள் ’வாசி’ என்றும் அழைக்கப்படுகிறார், அதாவது ’மெய் ஏக தேவன்’ என்பதை நம்புகிறார்கள். சீக்கிய மதம் ஓரிறைக் கொள்கையை வலியுறுத்துவது மட்டுமின்றி, அவதாரத்தை நம்புவது இல்லை. அதாவது கடவுள் மனிதனாக அவதாரம் எடுப்பதில்லை என்பதையும், கடவுள் அவனாக உருவெடுத்து வருவதில்லை என்பதையும், சிலை வணக்கத்திற்கு உரிய பழக்க வழக்கங்களையும் எதிர்க்கிறது. இதனால் சீக்கிய மதம் அதன் தோற்றத்திலேயே பார்ப்பன மத எதிர்ப்பு தன்மைக் கொண்டது.

சீக்கிய மதத்தின் நிறுவனரான குருநானக் தேவ் மற்றும் அவரது வழியில் வந்த பிற ஒன்பது சீடர்களின் போதனைகள் அடங்கியதுதான் ’குரு கிரந்த சாகிப்’ என்ற சீக்கியர்களின் புனித நூலாகும். இந்த நூலின் மூலம் மனித குலத்தின் ஒற்றுமை மற்றும் தன்னலமற்ற சேவையில் ஈடுபடுவது அனைவரும் நலனுக்கும், சமூக நீதிக்கும் போராடுவது மற்றும் நேர்மையான நடத்தை ஆகியவற்றை பொதுவாக அறிவுறுத்துகிறார்கள். பார்ப்பன மதம் வலியுறுத்துவது போல பிறப்பின் அடிப்படையிலேயே உயர்வு, தாழ்வு என்று அறிவிப்பது இல்லை.

சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் போதித்த போதனைகள் உட்பட, கிபி 1469 முதல் 1708 வரையில் போதனை செய்த சீக்கியத்தின் மரபுகள் மற்றும் தத்துவங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப் பட்டது. பத்தாவது குருவான கோவிந்த சிங் இந்த போதனைகளை எழுத்து வடிவமாக தொகுத்து அதற்கு குரு கிரந்த் சாகிப் என்று பெயரிட்டார். அதனை ஏற்றுக்கொண்டு செயல்படுபவர்களே சீக்கியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் மதத்தை ஒழுங்குபடுத்தி சில கோட்பாடுகளை வகுத்தார்.

சீக்கிய மதம் உள்ளத்தில் ’சிம்ரன்’ என்பதை வலியுறுத்துகிறது. அதாவது தியானம் என்பதையே அவர்கள் சிம்ரன் என்று கூறுகிறார்கள். இந்த தியானத்தின் போது ஒரு கீர்த்தனையையோ அல்லது கடவுளின் பெயரை மீண்டும் மீண்டும் உச்சரிப்பதன் மூலமாகவோ, மனதின் மூலம் நேரடியாக கடவுளுடைய பிரசன்னத்தை உணரும் வழிமுறை ஆகும். அதுமட்டுமன்றி மனதை ஆட்டிப்படைக்கும் ஐந்து திருடர்களான காமம், ஆத்திரம், பேராசை, பற்று, அகந்தை ஆகியவற்றை கட்டுப்படுத்தி மதச்சார்பற்ற வாழ்க்கையை, ஆன்மீக வாழ்வோடு கைகோர்த்துக் கொண்டு இணைக்கப்பட வேண்டும் என்று ’குரு கிரந்தம்’ போதிக்கிறது.

சீக்கியர்கள் அனைவரையும் ’பஞ்சக’ வைத்திருக்க வேண்டும் என்று கூறினார். இந்தி மொழியில் பஞ்ச என்றால் ஐந்து எனும் பொருளாகும். அதன் அடிப்படையில் அவர் பிறப்பித்த 5 கட்டளைகள்; 1) நீண்ட தலைமுடி கொண்ட அடையாளத்தை மாற்றக் கூடாது, அதாவது இறைவன் எப்படி படைத்தாரோ அப்படியே இருக்க வேண்டும் என்பது வலியுறுத்தும் ’கேஸ’ என்பது ஒன்றாகும். 2) தங்கள் கையில் எப்போதும் மரத்தினாலான சீப்பு ஒன்றை வைத்திருக்க வேண்டும். இது மனதையும் ஆன்மாவையும் தூய்மையாக வைத்திருப்பதற்கு அவரை பயிற்றுவிக்கிறது.

3)கிர்ப்பன் எதிரிகளிடமிருந்து தன்னையும் பிற மக்களையும் பாதுகாக்க கிர்ப்பன் என்ற குத்துவாள் ஒன்றை ஒவ்வொரு சீக்கியரும் வைத்திருக்க வேண்டும். 4) அனைவரும் வெண்மையான அரைக்கால் சட்டை அணிந்திருக்க வேண்டும். இதன் மூலம் ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்பதை அடையாளப்படுத்துகிறது. 5) எஃகு காப்பு ஒன்றை அணிந்து கொள்வது, நல்ல அம்சங்களை செய்யத் தூண்டக் கூடியது. மேற்கண்ட ஐந்தும் தியாகம், தூய்மை, ஆன்மசுத்தி, புலனடக்கம், நேர்மை ஆகியவற்றை குறிப்பதாக குரு கோவிந்த் வலியுறுத்திக் கூறினர்.

இந்த போதனைகள் இயல்பிலேயே பார்ப்பன இந்து மதத்திற்கு எதிரானது என்பதால் தான் ஆர்.எஸ்.எஸ்-சின் சிந்தாந்த குரு கோல்வார்க்கர் கொந்தளித்தார். “இன்று பாரதீயம், பாரத் என்ற சொற்கள் கூட தவறான பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியா, இந்தியர் என்ற சொல்லுக்கு மாற்றாக அதைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியன் என்ற சொல் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம், கிறிஸ்தவர், பார்சி போன்ற பல்வேறு சமூகத்தினர் அனைவரையும் சேர்த்துத்தான் குறிக்கிறது. நம்முடைய சமூகமான இந்துவை மட்டும் குறிப்பதில்லை. ’பாரதிய’ என்ற சொல்லை மற்ற சமூகத்தினரையும் இணைத்துக்கொள்ளும் சொல்லாக குறிப்பிடுகிறார்கள். எனவேதான் இந்து என்ற குழப்பமில்லாத சரியான சொல்லையே இப்போது நாம் பயன்படுத்துகிறோம்”. (ஆதாரம் கோல்வால்கர், ஆர்கனைசர் எடு, 01-12-1919.)

இந்த அடிப்படையில் பார்ப்பன இந்து மதத்தின் ஒரு பிரிவுதான் சீக்கிய மதம் என்று ஆர்.எஸ்.எஸ் கூறுவதும், சீக்கியர்களின் போராட்டத்திற்கு பிறகு தற்காலிகமாக பின் வாங்குவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் இப்படியே அனுமதிக்க கூடாது. மதச் சிறுபான்மையினர் உள்ளிட்டு பிற மதங்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாப்பது அவசியமாகும்.

“ஆழமான வேறுபாடுகளைக் கொண்ட பல்வேறு இனங்களையும் கலாச்சாரங்களையும் ஒன்று படுத்த முடியாது என்பதை ஜெர்மன் நிரூபித்திருக்கிறது. இந்துஸ்தானத்தில் வாழும் நமக்கு இது ஒரு படிப்பினை” என்று கோல்வால்கர், ஜெர்மனியின் அனுபவத்தை இந்தியாவிற்கு முன்வைத்து கூறுகிறார். நாமும் அந்த படிப்பினையை எதிர்மறையில் போதிப்போம்.

இந்திய தத்துவ மரபு என்பது எப்போதும் இந்து மரபு கிடையாது. மக்களை சகிப்பு தன்மையுடன் வாழ பயிற்றுவிக்கும் சீக்கியமதம் உள்ளிட்ட பல மதங்களையும் உள்ளடக்கியது தான் என்று உரக்க சொல்வோம். காவி பாசிசத்தின் பார்ப்பன மேலாதிக்க நோக்கத்தை முறியடிக்கும் வகையில் போராடு வோம்.

  • சண். வீரபாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here