கொரோனா ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்களின் மீள்வருகையால் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான (MGNREGS- Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme) தேவை அதிகம் இருந்தும் ஒன்றிய அரசானது 2021 ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டை வெகுவாகக் குறைத்திருக்கிறது.

இந்த கட்டுரையில் உத்திரபிரதேசத்தின் பண்டா மற்றும் பண்ணா மாவட்டங்களை எடுத்துக்காட்டாகக் கொண்டு வேலை இழந்த புலம்பெயர் தொழிலாளிகள் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் எப்படி தங்கள் பொருளாதாரத் தேவைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதையும் ஒன்றிய அரசு இத்திட்டத்திற்கு ஏன் கூடுதலான நிதி ஒதுக்க வேண்டும் என்பதையும் விளக்குகிறார்கள்.

39 வயது பிரேம் லால் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 2020 ஆண்டு முதல் கொடும் காலத்தை அனுபவித்து வருகிறார். 2020 மார்ச்சில் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து புனேவில் பெயிண்டர் வேலை செய்து கொண்டிருந்த இவர் மற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் போலவே ஏறக்குறைய 1700 கிலோ மீட்டர் நடந்து உத்திரபிரதேசத்தின் பொருளாதாரத்தில் பின்தங்கிய பந்தல்கண்ட் பகுதியின் பண்டா மாவட்டத்திலுள்ள தனது சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். அதுமுதல் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சில வாரத்திற்கான வேலை அவருக்கு கிடைத்தது. “வருடம் முழுவதும் இவ்வாறு வேலை கிடைத்தால் நான் வேறு எங்கும் வெளியே செல்ல வேண்டி இருக்காது” என்று கூறுகிறார்.

அவரைப்போலவே 45 வயது பாபாதீன் என்பவரும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பன்னா மாவட்டத்தில் வேலை செய்கிறார். புலம்பெயர் தொழிலாளர்களின் மீள்வருகையால் இத்திட்டத்தின்கீழ் வேலை தேடுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனாலும் “எல்லோருக்கும் வேலை கிடைக்கவில்லை” என்று கூறுகிறார்.

2006-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டமானது கிராமப்புற மக்களுக்கு குறைந்தபட்ச வருவாய் அளிக்கும் வகையில் வருடத்தில் 100 நாட்கள் தனித்திறன் தேவையில்லாத வேலைகளில் மக்களை ஈடுபடுத்துகிறது. தற்போது இத்திட்டம்தான் இந்த பெருந்தொற்று காலத்தில் ஊரக மக்களின் உயிர்நாடியாக ஏறக்குறைய 14.7 கோடி பேரின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இத்திட்டம்தான் பொருளாதார மந்த நிலையிலும் இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவியாக இருந்து வருகிறது.

2020-21 காலத்தில் இத்திட்டத்தின் கீழ் வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை உச்சபட்சமாக 13.3 கோடி அதிகரித்திருந்தாலும், ஒன்றிய அரசு இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை 35 சதவீதம் குறைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 100 நாட்கள் வேலை என்பதையும் குறைத்து வருகிறது. இத்திட்டத்தின் பயனாளிகள் தங்களுக்கு உறுதியளிக்கப்பட்டது போல் 100 நாட்கள் வேலை கிடைப்பதில்லை எனவும், செய்த வேலைக்கான கூலியும் மிகவும் தாமதமாக கிடைக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

அதிகரிக்கும் வேலைவாய்ப்புக்கான தேவை:
பெரும்பாலான நாட்களில் வேலை இல்லாததால் ராஜா எனும் பயனாளியும் அவரது குடும்பமும் வெறும் சப்பாத்தி மற்றும் உப்பை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்தனர். அவருடைய நிலைமை தேசிய ஊரடங்கிற்கு முன் கொஞ்சம் மேம்பட்டதாக இருந்தது. “ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் இந்த வருடத்தை ஓட்டிவிட்டால் கொரோனா வைரஸ் எனக்கு பிரச்சனையாக இருக்காது” என்கிறார். ஆனால் அவருக்கு ஜூலை மாதத்தில் 8 முதல் 10 நாட்களுக்கு மட்டும்தான் வேலை கிடைத்தது.

ஊரடங்கிற்கு முன்பிருந்தே வேலை வாய்ப்பு என்பது ஒரு பிரச்சினையாகவே இருந்து வந்தது. 2019 டிசம்பரில் சுமார் 48 சதவீதம் பேர் சுயதொழில் செய்பவராக இருந்தனர். ஆனால் 2020 ஆகஸ்டில் அந்த எண்ணிக்கை 64 சதவீதமாக உயர்ந்தது. இது வேலைவாய்ப்புகள் அருகி வருவதைக் குறிக்கிறது. 1.6 கோடி வேலைகள் ஜூலை மாதத்தில் உருவாக்கப்பட்டாலும் அந்த வேலைகள் தரமானவை அல்ல. அதிலும் அப்போது விதைக்கும் காலமாக இருந்ததால் ஏறக்குறைய 70 சதவீதமானவை விவசாயத்தை சார்ந்தே இருந்தன என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் என்ற சிந்தனைக்குழாம் கூறுகிறது .

2019-ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 2020-21 காலக்கட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 13.3 கோடி ஆக உயர்ந்தது அதில் 84 சதவீதம் பேருக்கு வேலை கொடுக்கப்பட்டது. அரசு புள்ளிவிவரங்களின்படி 2018-19 ஆண்டின் மனிதஉழைப்பு நாட்களான270 கோடி மனிதஉழைப்பு நாட்களில் இருந்து 390மனிதஉழைப்பு நாட்களாக அதிகரித்து இருந்தாலும் 100 நாட்கள் என்ற உத்தரவாதத்தின் படி அல்லாமல் 52 நாட்கள் மட்டும்தான் வேலை கிடைத்துள்ளது.

தேசிய ஊரடங்கு அறிவிப்புக்கு முன்னாள் ஒன்றிய அரசு 2020-21 ஆண்டில் 61,500 கோடி ரூபாயை இத்திட்டத்திற்காக ஒதுக்கியது. புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்த நகரங்களில் இருந்து தங்களுடைய சொந்த கிராமங்களுக்கு திரும்பிவந்தபோது ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீட்டை 1,11,500 கோடி ரூபாயாக அதிகரித்தது.

ஆனால் அதற்குள்ளாகவே 2021-22-ம் ஆண்டில் நிதி ஒதுக்கீட்டை 73,000 கோடி ரூபாயாகக் குறைத்து விட்டது.

இந்த ஒதுக்கீடு மிகவும் குறைவானது என்றும் அதிகரித்து வரும் வேலை இழப்பு காரணமாக வேலை இழந்தவர்கள் இத்திட்டத்தை நாடி வரும்போது அவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதிப்படுத்த முடியாது, ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டபடி 100 நாள் வேலை என்பதும் சாத்தியம் இல்லாமல் போய்விடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு வேலை வேலை வாய்ப்பு தர 3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் இத்தகைய தொகையை இதுவரை எந்த அரசும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து ஒதுக்கீடு செய்ததில்லை

2020-21 ஆண்டில் இத்திட்டத்திற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகையில் பாதியளவு முதல் நான்கு மாதங்களிலேயே செலவு செய்யப்பட்டுவிட்டது. மீதமுள்ள தொகையைதான் இனி வரும் மாதங்கள் அதாவது எட்டு மாதங்களுக்கு செலவு செய்யப்பட வேண்டியுள்ளது.

அருகிப்போன வேலைகள்:
100 நாட்கள் வேலை என்ற உறுதிக்கு மாறாக 52 நாட்கள் தான் பலருக்கும் வேலை கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். பெருந்தொற்றின் காரணமான வேலையிழப்பினால் வறுமை அதிகரித்து வருகிறது. பிரேம் லால் 2020-ஆம் ஆண்டில் MGNREGS-ல் 20 நாட்கள் வேலை செய்திருக்கிறார். ஆனால் அதற்கான கூலி இன்னும் அவருக்கு வழங்கப்படவில்லை. இதுவே அவர் புனேவில் பெயிண்டராக வேலைசெய்தபோது மாதம் 20,000 வரை அவரால் சம்பாதிக்கமுடிந்ததாகச் சொல்லுகிறார். ஆனால் “ஊர் திரும்பியபின் அப்படி எதுவும் சம்பாதிக்க முடியவில்லை ஆனால் மாதச் செலவுகள் மட்டும் 8000 ரூபாய் வரை ஆகிறது” என்கிறார்.

பாபாதீன் என்பவரும் 23 நாட்கள் இத்திட்டத்தின் கீழ் வேலை செய்ததாகக் கூறுகிறார். தொடர்ச்சியான வேலை மற்றும் வருமானம் இல்லாததால் பல தொழிலாளர்கள் கடன் வலையில் சிக்கியுள்ளனர். அவருடைய கிராமத்தில் ஒவ்வொரு தொழிலாளியும் 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரை கடன் வாங்கியுள்ளதாகக் கூறுகிறார். குடும்பச் செலவு மற்றும் கடனுக்கான வட்டி போன்றவற்றிற்காகத் தன்னுடைய ஊரிலிருந்து வெளியே போய் 10 முதல் 15 நாட்கள் தான் வேலை செய்வதாகவும் கூறுகிறார்.

கடுமையான வறட்சி மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் 100 நாட்களுடன் மேலும் 50 நாட்களை சேர்த்துக்கொள்ள MGNREGS-ல் வழிவகை உண்டு. அதிகரித்துவரும் வேலையிழப்பை கருத்தில்கொண்டு ஒன்றிய அரசு இக்கொரோனா பெருந்தொற்றை ஒரு பேரிடராக அறிவித்து வேலைநாட்களையும் அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் அதிகரிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

பாராளுமன்ற நிலைக்குழுவும் 100 நாட்களுக்கு பதிலாக 200 நாட்களாக அதிகரித்து அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் அளித்து பெருகிவரும் தேவையை நிறைவு செய்ய வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தியது. அதுமட்டுமல்லாமல் வேலை செய்தவர்களுக்கு உடனடியாக கூலி தருவதையும், அனைவருக்கும் காப்பீடு வழங்குவதையும் உறுதி செய்யுமாறு கோரியது.

ஆனால் இந்த கோரிக்கைகளுக்கு ஒன்றிய அரசு செவிமடுக்கவில்லை. ஜூலை மாத பாராளுமன்ற கூட்டத்தொடரில் மாநில அரசுகள் வேண்டுமானால் தங்கள் சொந்த நிதி ஆதாரங்களைக் கொண்டு வேலை நாட்களை அதிகரித்துக்கொள்ளலாம் என்றும், தான் ஏற்கனவே வேளாண் அமைச்சகத்தின் பரிந்துரைப்படி வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களில் கூடுதலாக 50 நாட்களை சேர்த்து உள்ளதாகவும் கூறி கைவிரித்து விட்டது. மேலும் தன்னிடம் MGNREGS கீழ் வேலை உறுதி நாட்களை அதிகரிப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என்றும் கூறிவிட்டது.

இந்த பெருந்தொற்று காலத்தில் 100 நாட்கள் வேலை என்பதை மிக சீக்கிரமாகவே தொழிலாளிகள் எட்டிவிட்டார்கள் ஆகையால் குறைந்த பட்சம் பெருந்தொற்று காலம் முடியும்வரையாவது வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது.

ஆகஸ்ட் 20, 2021அரசு புள்ளிவிவரங்களின்படி சுமார் ஏழு லட்சம் குடும்பங்கள் 100 நாட்கள் வேலை என்பதை 5 மாதத்திற்குள்ளாகவே எட்டியிருக்கின்றனர். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இத்திட்டத்தில் வேலை கிடைக்கவில்லை என்றும் பெருந்தொற்று காலத்திற்கு முன்னாலும் இதே நிலைதான் இருந்தது என்றும் ராஜா என்பவர் கூறுகிறார்.

வேலை நாட்களில் அது அதிகரிப்பதற்கு ஏற்ப அதற்கான நிதி ஒதுக்கீடும் அதிகரித்து அது இருக்க வேண்டும் ஒன்றிய அரசு 2020 மற்றும் 2006 ஆண்டுகளில் ஆண்டுகளை பேரிடர் காலங்களாக அறிவித்து அதற்கு தகுந்தார்போல் வேலை நாட்களை அது இருக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது

தாமதமாகும் கூலி:
இத்திட்டத்தில் வேலை கேட்டவர்களுக்கு உடனுக்குடன் வேலை கொடுத்ததாகவும், அப்படி யாரும் தங்களை அணுகவில்லை, புலம்பெயர் தொழிலாளிகள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்று கிராம பஞ்சாயத்து அலுவலர்கள் கூறினாலும் வேலை செய்தாலும் அதற்கான கூலி உடனுக்குடன் தரப்படுவதில்லை என்பதுதான் இதற்குப் பின்னால் இருக்கும் உண்மை. கூலியைப் பெறவேண்டுமென்றால் அவர்கள் நீண்ட தடைகளை தாண்ட வேண்டியுள்ளது.

பஞ்சாயத்தாரிடம் கூலியைப் பற்றி கேட்டால் “வந்து விடும், கொடுத்து விடுவார்கள்” என்று முடித்துக் கொள்வதாக பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.

ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 21 மாநிலங்களில் 17 மாநில அரசுகளின் குறைந்தபட்ச விவசாயக் கூலியைவிட இத்திட்டத்தில் வழங்கப்படும் கூலி குறைவாக இருக்கிறது.
பொருளாதார மந்த நிலையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் MGNREG-ல் வழங்கப்படும் கூலி அந்தந்த மாநிலங்களின் குறைந்தபட்ச கூலிக்கு நிகரானதாக இருக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுகிறது.

2020-21ஆண்டில் இத்திட்டத்திற்கான கூலி உயர்வு 4 சதவீதமாகவும் அரசு ஊழியர்களுக்கான உயர்வு 11 சதவீதமாகவும் உள்ளது.

ஒன்றிய அரசின் மாற்றமடைந்து வரும் COVID-19 தொடர்பான நிலைப்பாடுகளும் போதுமான நிதி ஒதுக்கீட்டை மறுப்பதும் இந்த பெருந்தொற்று காலத்தில் மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது. இப்பெருந்தொற்றால் வேலையிழந்த ஒவ்வொரு தொழிலாளிக்கும் வேலை வழங்கப்படா நாட்களுக்கு முதல் மாதம் 25 சதவீதமும் அதன் பின்னர் 50 சதவீதமும் ஆதரவு தொகையாக அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.

“அரசு வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் என்றும், கட்டுப்படியாகக்கூடிய கூலியை தாமதமில்லாமல் வழங்கவேண்டுமென்றும்” மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் வேலை செய்யும் கோடிக்கணக்கான தொழிலாளிகளின் குரல்கள் ஒலிக்கின்றன.

நன்றி: scroll.in

தமிழில்: செந்தழல்

https://scroll.in/article/1003507/why-india-should-spend-more-on-its-rural-employment-scheme

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here