கே.ஜி. கண்ணபிரான்
மனித உரிமை போராளிகளின் முன்னோடி!
டிசம்பர் 14, 2020 அன்று, மதுரையில் பிறந்து ஹைதராபாத்தில் கல்வி கற்று, இந்திய ஒன்றியம் முழுவதும் அறியப்பட்ட பிரபல மக்கள் வழக்கறிஞராக திகழ்ந்த கே.ஜி.கண்ணபிரான் அவர்களின் குடும்பத்தினரால், 8 நவம்பர் 1929 முதல் 30 டிசம்பர் 2010 வரையான கே.ஜி.கண்ணபிரான் அவர்களின் வாழ்க்கை, சமூக பணி மற்றும் அதன் எதிர்காலத்தை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் தமிழகத்தை சேர்ந்த மூத்த மக்கள் வழக்கறிஞர் தோழர் ப.பா.மோகன் அவர்கள் அற்றிய ஆங்கில சொற்பொழிவு தமிழில் எழுத்துவடிவில்.
தமிழாக்கம் – தோழர் பிரேம்குமார்
அனைவருக்கும் காலை வணக்கம். நான் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் பவானியில் இருந்து வருகிறேன். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம். கே.ஜி.கே (கே.ஜி.கண்ணபிரான்) உடனான எனது அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ள கல்பனா கண்ணபிரான் கேட்டப்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். என் வாழ்க்கையில் நான் கண்ட மிகச்சிறந்த மனிதர்களில் கண்ணபிரானும் ஒருவர் என்பதால் இந்த வாய்ப்புகாக மிகவும் பெருமைப்படுகிறேன். நானும் ஒரு கம்யூனிஸ்ட் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தந்தையும் மற்ற குடும்ப அங்கத்தினர்களும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள். நான் சட்டம் படிக்கும் போது சில காலம் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக இருந்தேன்.
எனது சட்டப் படிப்பை முடித்ததும், என்.டி.வானமாமலை அவர்களின் அலுவலகத்தில் சேர விரும்பினேன். ஆனால், முதலில் எனது வேலையை கீழ்மட்டத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று வானமாமலை அவர்கள் கூறினார்.
நான் எனது வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினேன், குறிப்பாக பழங்குடி மக்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன். மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த பழங்குடியின மக்களின் பல வழக்குகளை நான் நடத்தியுள்ளேன். அந்த நேரத்தில், வீரப்பனை பிடிக்கிறோம் என்ற பெயரில் தமிழகம் மற்றும் கர்நாடகாவின் சிறப்பு காவல்ப்படை அப்பாவி பழங்குடியினரை கைது செய்து கொடுமைப்படுத்தியதை நான் அறிந்துக்கொண்டேன். பழங்குடி மக்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளான சோளகர் தொட்டி வழக்கை நான் கையில் எடுத்தேன். வழக்கறிஞர் பாலமுருகன் எழுதியுள்ள நாவலின் மூலம் இந்த இடத்தை நீங்கள் அறிந்திருக்கலாம், இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் எஸ்.டி.எஃப் முகாம்களுக்கு இழுத்து செல்லப்பட்டு, அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். சித்திரவதையின் ஒருபகுதியாக அவர்களின் மீது மின்சாரம் கூட பாய்ச்சப்பட்டன. 17 பிப்ரவரி 1996 அன்று அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த சித்திரவதையினால் நாற்பது பழங்குடிகளின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையொட்டி, பழங்குடியினர் சங்கத்தின் தலைவரான இ.பி.குணசேகரனும் நானும் அவர்களை முதலில் மருத்துவமனைக்கும் பின்னர் மாவட்ட ஆட்சியரிடமும் அழைத்துச் சென்றோம். நாங்கள் இருவரும் இந்த வழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தினோம், ஆனால் யாரும் எங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் இது குறித்து ஏதாவது செய்ய வேண்டும் என்று குணசேகரன் கூறினார்.
1996-ல், மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், மனித உரிமைகள் அமைப்புகள், மனித உரிமை நீதிமன்றங்கள் மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் அமைக்கப்பட்டன. எனவே, உயர்நீதிமன்றத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, அந்த நேரத்தில் மனித உரிமைகள் நீதிமன்றமாக நியமிக்கப்பட்ட ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஒரு தனிநபர் புகார் அளிக்க முடிவு செய்தேன். நீதிபதி தனிகாச்சலம் அப்போது உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார். எனவே, இந்த நபர்கள் சித்திரவதைக்கு ஆளாகியுள்ளதாகவும், சிகிச்சை, இழப்பீடு மற்றும் பிற விஷயங்களை வழங்க வேண்டும் என்றும் 212 Cr.P.C-ன் கீழ் நான் ஒரு தனிநபர் புகார் அளித்தேன்.
நீதிபதி தனிகாச்சலம் அப்போது, “நிச்சயமாக இது ஒரு மனித உரிமை நீதிமன்றம்தான், மேலும் ஒரு சிறப்பு நீதிமன்றமாகவும் நியமிக்கப்பட்டுள்ளது, ஆனால் இவைகளுக்கான நடைமுறை விதிகள் எங்கே ? எந்த சட்டத்தின் கீழ் நான் புகாரை எடுப்பது ? நான் தண்டனை விதிப்பதற்கான விதிகள் எங்கே ?” என்று கேள்விகளை எழுப்பி அந்த புகாரை திருப்பி அனுப்பினார். ஆனால், புகாரை மீண்டும் நான் பிரதிநிதித்துவப்படுத்தினேன். இதுதான் ‘மனித உரிமைகள் நீதிமன்றம்’ என்று ஒரு குழு சொல்வதால் இதுதான் நான் புகார் அளிக்கக்கூடிய இடம். அந்த நேரத்தில் பி.யூ.சி.எல் செயலாளர்களில் ஒருவரும் வழக்கறிஞருமான திரு.பாலமுருகன் எனது அலுவலகத்தில் எனது ஜூனியராக இருந்தார். அவர் இந்த விஷயத்தை கையில் எடுத்து, ஓய்வு பெற்ற பின்னர் கொச்சியில் இருந்த நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயருக்கு புகார் அனுப்பினார். புகாரைப் படித்த கிருஷ்ண ஐயர் இது நடத்தப்பட்டவிதம் குறித்து மிகவும் கடுப்படைந்தார். எனவே, அப்போது மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஏ.சாமிக்கு ஒரு கடிதம் எழுதினார்.
கடிதத்தை படித்த தலைமை நீதியரசர் கே.ஏ.சுவாமி இந்திய அரசியலமைப்பின் படி நீதிபதி கர்பக விநாயகம் கீழ் Suo Moto திருத்தத்தை அமைத்தார். இந்த சூ மோட்டோ திருத்தம் உயர் நீதிமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டு அனைத்து வழக்குரைஞர் ஜெனரல்கள், அனைத்து பொது வழக்கறிஞர்கள், அனைத்து மனித உரிமை அமைப்புகள் என்று அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சமயத்தில் தான், தமிழக பி.யூ.சி.எல் தலைவர் சுரேஷ் கே.ஜி.கே.வை இந்த வழக்கை எடுத்து நடத்தும்படி கேட்டுக் கொண்டார். அனைத்து கருத்தரங்குகள் மற்றும் விசாரணைகளில் கே.ஜி.கே.வுடன் கலந்து கொள்ளும் முதல் வாய்ப்பு எங்களுக்கு அப்போதுதான் கிடைத்தது.
இவ்வளவு சிறந்த மனிதரைச் சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது அதுவே முதல்முறை. அவர் ஒரு எளிய, பணிவுமிக்க மனிதர். ஆனால் அதே நேரத்தில் ஒரு முழு சிந்தனைக் குழுவாகவும் இருந்தார். எனவே, விசாரணைக்கு ஒரு நாள் முன்பு ஒரு கருத்தரங்கில் பங்கேற்று அனைத்து கருத்துக்களையும் பொறுமையாகக் கேட்டார். ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பி.யூ.சி.எல் கூட்டத்தில் அனைத்து மூத்த வழக்கறிஞர்களும் பங்கேற்றனர். நாங்களும் கலந்துரையாடலில் பங்கேற்றோம். அந்த நேரத்தில் நாங்கள் மாவட்ட அளவிலும் மாஜிஸ்திரேட் அளவிலான நீதிமன்றங்களிலும் மட்டுமே பயிற்சி செய்து கொண்டிருந்தோம். உயர் நீதிமன்றத்தில் நான் ஆஜாரனது கூட இல்லை. மனித உரிமைகள் சட்டம் தொடர்பான அனைத்து கருத்துக்களையும் கே.ஜி.கே பொறுமையாகக் கேட்டு, அதை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய வழியை ஆராய்ந்தார். கூட்டத்தில், நிறைய சர்வதேச சட்டங்கள் மற்றும் பல விஷயங்களைப் பற்றி பேசினார். பின்னர், நீதிமன்றத்தின் முன், குற்றவியல் சட்டம் மற்றும் சிஆர்.பி.சி பற்றி நன்கு அறிந்த நீதிபதி ஜனார்த்தனம் முன்பு, வழக்கை நிவர்த்தி செய்வதற்கான வழிகளை கொண்டு வந்து குற்றவியல் சட்டத்தின் வரம்பிற்குள் நிறுத்தினார். ஆனால் சீனியர் கே.ஜி.கே நீதிமன்றத்தின் முன் தனது வாதங்களை யு.டி.எச்.ஆர், ஐ.சி.சி.பி.ஆர் மற்றும் மனித உரிமைகளுக்கான சர்வதேச போராட்டத்திலிருந்து தொடங்கினார். பின்னர் அவர் இந்திய அரசியலமைப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் மற்றும் வழிநடத்தும் கோட்பாடுகளை யு.டி.எச்.ஆர் உடனும், மற்றும் 1966 உடன்படிக்கைகள் மற்றும் அனைத்தையும் ஒப்பிட்டு, வழக்கு விசாரணை மற்றும் தண்டனைகளை வழங்குவதற்கான முதல் நீதிமன்றம் மனித உரிமைகள் நீதிமன்றம் தான் என்று நீதிமன்றத்திற்கு புரிய வைத்து, கவனத்தை ஈர்க்கும் வகையில் வழக்கை சிறப்பாக முன்வைத்தார்.
ஆறு சமர்ப்பிப்புகளில் பங்கேற்றோம். கிட்டத்தட்ட அனைத்து நீதிபதிகள், கற்றறிந்த மூத்தவர்கள், வழக்கறிஞர்கள், ஜெனரல்கள் மற்றும் அனைத்து அரசு வக்கீல்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் அதில் பங்கேற்றன. அவர் அசாத்திய நம்பிக்கையுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததை அப்போதுதான் முதல் தடவையாக பார்த்தோம். அவர் சர்வதேச கருத்தரங்குகள், இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் அனைத்திலும் பங்கேற்றார் என்பதை நாங்கள் அறிந்தோம். நாங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கிற்கு கே.ஜி.கேவை கொண்டுவருவதில் சுரேஷ் ஒரு பெரிய பங்கை ஆற்றினார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது, ஆனால் எப்படியிருந்தாலும், அந்த வழக்கின் தீர்ப்பின் பின்னரே (வி.பி. குணசேகரன் vs தமிழக அரசு) இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மனித உரிமை நீதிமன்றங்களும் செயல்படத் தொடங்கின. அதுவரை, எந்த விதிகளும் இல்லாததால், அனைத்து நீதிமன்றங்களும் வெறுமனே தான் இருந்தன. மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் மட்டுமே இந்த செயல்பாடு தொடங்கியது. அது அப்போது ஒரு வரலாற்று சிறப்புமிக்க பங்களிப்பாகும். அந்த நேரத்தில் நாங்கள் கே.ஜி.கே உடன் இருந்தோம், நிச்சயமாக, அவருடைய அரசியலமைப்பு நிபுணத்துவம் எனக்கு நிறைய விசயங்களை கற்றுத் தந்தது.
இதைத் தொடர்ந்து வார இதழின் ஆசிரியர் திரு.நக்கீரன் கோபாலும் அவரது நிருபர்களும் காட்டுக்குள் சென்று வனக் கொள்ளையன் வீரப்பனை பேட்டி எடுத்தனர். இந்த நேர்காணல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றியது. தான் ஆட்சிக்கு வந்தால் நக்கீரன் கோபாலை கைது செய்து சிறையில் அடைப்பேன் என்று தனது தேர்தல் அறிக்கையில் சேர்க்கும் அளவிற்கு இந்தப் பேட்டியால் அவர் கோபமடைந்தார். பின்னர் அவர் ஆட்சிக்கு வந்தவுடன் கோபல் மீது நிறைய வழக்குகளைத் போடத் தொடங்கினார். இந்த வழக்குகளுக்காக நான் அவருக்கு கோவை, ஈரோடு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் ஆஜரானேன். ஜெயலலிதா போட்ட வழக்குகளை பற்றி கோபால் என்னுடன் விவாதித்தார். சீனியர் வழக்கறிஞர் கண்ணபிரன் இந்த வழக்குகளில் வாதிட்டால் நல்லது என்று நான் சொன்னேன். அதே நேரத்தில், திமுகவின் முரசொலி மாறன் எம்.பி. திரு.நக்கீரன் கோபாலிடம், இந்த வழக்கைக் இந்தியாவில் கையாளக்கூடிய ஒரே ஒரு நபர் திரு.கே.ஜி.கண்ணபிரான் மட்டுமே என்று அறிவுறுத்தினார்.
அந்த நேரத்தில் நீதிபதி சுபாஷன் ரெட்டி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். சுமார் நான்கு நீதிமன்ற விசாரணைகளின் போது நான் கே.ஜி.கண்ணபிரானிடன் தங்கியிருந்தேன், அந்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது. சுபாஷன் ரெட்டி ஆந்திரத்தைச் சேர்ந்தவர் மற்றும் கே.ஜி.கே-க்கு நெருக்கமானவர் என்றாலும், அவர் வழக்கைத் சிறப்புப் பட்டியலுக்கு தள்ளிவிட முயன்றார். இதை அவர் நான்கு முறை செய்தார். இதற்குக் காரணம் சுபாஷன் ரெட்டி வழக்கை விசாரிக்க அஞ்சினார். கே.ஜி.கே வாதாடினால் நிறைய விஷயங்களைப் பேசுவார் என்பது அவருக்குத் தெரியும். நீதிபதிகள் கூட அவரைப் பார்த்து பயந்துவிட்டார்கள் என்பதை கவனித்தேன். ஆனால், ஏன் என்று அப்போது தெரியவில்லை.
பிப்ரவரி 14, 1998 அன்று கோயம்புத்தூரில் 12 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் பற்றி நாம் அனைவரும் அறிவோம். அல் உம்மா அமைப்பு அதற்கு குற்றம் சாட்டப்பட்டு பின்னர் தடை செய்யப்பட்டது. இது கோயம்புத்தூர் மற்றும் தமிழ்நாட்டின் முழு காட்சியையும் மாற்றியமைத்தது. குண்டு வெடிப்பின் விளைவாக 58 பேர் இறந்தனர், 252 பேர் காயமடைந்தனர், மேலும் ஏராளமான சொத்துக்கள் அழிந்தன. மொத்தம் 12 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டன; இந்த வழக்கில் 75 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது; 158 பேர் கைது செய்யப்பட்டனர்; குற்றப்பத்திரிகை சுமார் 17,000 பக்கங்களை தாண்டியது. அந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அப்துல் நசீர் மதானி (A.14) கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களில் வழக்குகளை உள்ளடக்கியவர். கேரளா தவிர மூன்று மாநிலங்கள் அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துமாறு என்னைக் கேட்டுக்கொண்டன, நான் இதை ஏற்றுக்கொண்டேன். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கூட ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட அனுபவமுள்ள வழக்கறிஞர்கள் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்று அவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். எனவே, அந்த வகையில் 26 வக்கீல்கள் நியமிக்கப்பட்டனர். அந்த வழக்கில் எனது சீனியர் பி.திருமலைராஜனின் ஆதரவையும் நாடினேன். அவரும் விசாரணைக்கு வந்தார். இந்த வழக்கு 2002-ல் தொடங்கியது. மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 220 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 1,200 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இது மிகவும் கடினமான வழக்கு. கிட்டத்தட்ட ஒரு கூண்டு கம்பிகளுக்குள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வைக்கப்பட்டனர்; நாங்கள் சாட்சிகளை விசாரிக்கலாம், ஆனால், யாரும் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. வழக்கில், நானும் எனது சீனியர் திருமலைராஜன், அபுபக்கர் மற்றும் சிலரும் விசாரணையில் பங்கேற்றோம்.
18 முஸ்லிம்கள் போலிஸ் மற்றும் பிற இந்துத்துவ சக்திகளால் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்குவதற்காக இந்த அல் உம்மா அமைப்பு மக்கள் கேரளா, கோயம்புத்தூர், சென்னை போன்ற பல்வேறு இடங்களில் சதி செய்தனர் என்பது அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்பதை நாங்கள் நன்கறிவோம். அவர்கள் வெடிகுண்டுகளை உருவாக்க ஆந்திரா மற்றும் மைசூர் பகுதிகளிலிருந்து வெடிபொருட்களை வாங்கினர். மேலும் எல்.கே.அத்வானியின் வருகையின் போது அவர்கள் தாக்குதலைத் நடத்த திட்டமிட்டுள்ளனர். 18 முஸ்லிம்கள் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட பின்னர், 1997 நவம்பர் 29 அன்று நடந்த காவல்துறை அதிகாரி செல்வராஜின் கொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் அனைவரும் குற்றவாளிகள் என்றும், மூன்று பேருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது, அதன்பிறகான விசாரணையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
அரசு தரப்பு படி, குண்டு வெடிப்பின் பின்னணி காரணம் இது. விசாரணை நியாயமான முறையில் நடத்தப்படவில்லை. இது ஒரு வெளிப்படையான விசாரணை அல்ல, ஏனென்றால் நான் சாட்சியைப் பார்க்கச் சென்ற அடுத்த நிமிடம் என்னுடன் வந்த நபர் காவலில் வைக்கப்பட்டார். எனவே, எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை, விசாரணை பாரபட்சமானதாக இருந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நாங்கள் வாதாட வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும், சாட்சிகளை சந்தித்து அறிந்து கொள்ள எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே குற்றம் சாட்டப்பட்ட 168 பேரில் ஒருவர் மட்டுமே இந்து, மீதமுள்ளவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் ஒரு திட்டவட்டமான சார்பு இருந்தது.
பாஜக மையத்தில் ஆட்சிக்கு வந்ததால் வழக்கில் தண்டனையை உறுதி செய்வதில் குறியாய் இருந்தது. எனவே, இது வெறும் குற்றவியல் வழக்காக இல்லாமல் சில அரசியல் பின்னணியையும் பெற்றுள்ளது என்பதால் கே.ஜி.கே.வின் சேவையை நாட வேண்டும் என்று நான் எனது சீனியர்களுடன் விவாதித்தேன். கே.ஜி.கண்ணபிரான் வந்து வாதிட்டால் வழக்கு புதிய பரிமாணத்தில் பார்க்கப்படும். 1,200 சாட்சிகளைப் விசாரிப்பது அவருக்கு எளிதானது அல்ல என்று எங்களில் ஒருவர் சொன்னார்.
குற்றவியல் சதி வழக்கை மட்டுமே வாதிட அவர் இங்கு இருக்க வேண்டும் சாட்சிகளை நாங்கள் கவனித்துக்கொள்வோம் என்று சொன்னேன். எனது சீனியர்கள் ஹைதராபாத் சென்று அவரை இந்த வழக்கிற்கு வாதாட ஒப்பந்தம் செய்தனர். கே.ஜி.கண்ணபிரான் கோவை வந்து முருகன் லாட்ஜில் தங்கினார். எனது ஜூனியர்களை நாங்கள் தயார் செய்யப் போகும் வழியைக் காண ஒரு வாய்ப்பாக அதைப் பயன்படுத்தினேன். அப்போது அங்கிருந்த இளைஞர்களின் பணியை அவர் கூர்ந்து கவனித்தார். திரு.கலையரசன் மற்றும் திரு.பாவேந்திரன் ஆகியோர் இந்த வழக்கில் பெரும் பங்கை வகித்தனர். அவர் எங்களுடன் அமர்ந்து வழக்கைப் பற்றி விவாதித்து, ஜூனியர்களிடம் திட்டத்தைப் படிக்கச் சொன்னார். அவரை ஒரு மேதைமை மிக்க மூலோபாயவாதியாக நான் பார்த்த சந்தர்ப்பம் அது. அவர் ஒரு மனித உரிமைகள் அல்லது ஒரு குற்றவியல் வழக்கறிஞர் மட்டுமல்ல, இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முன்மாதிரி மற்றும் வழிகாட்டியாக இருந்தார் என்பதை நான் பார்த்தேன். அனைத்து விசயங்களை பற்றி தங்கள் கருத்துக்களை தெரிவிக்க அனைத்து வழக்கறிஞர்களையும் ஊக்கப்படுத்தினார். 120பி இன் கீழ் குற்றவியல் சதித்திட்டங்களை மட்டுமே கவனிக்கும் பொறுப்பை நாங்கள் அவரிடம் ஒப்படைத்தோம்.
அவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் படித்தார். 173 Cr.P.C. இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளில் 18 முஸ்லிம்களை சித்திரவதை செய்தவர்கள் யார் என்பதை குறித்து எதுவும் இல்லை. வாசிப்பின் போது அவர் “மிஸ்டர் மோகன் நீங்கள் போய் 1940 மிர்சா அக்பர், அஜய் அகர்வால் வழக்குகளை எடுத்து பாருங்கள்” என்று கூறுவார். அந்த அளவிற்கு அவரது நினைவாற்றல் இருந்தது. எனவே மதுரையில் ஓய்வுபெற்ற வழக்கறிஞரிடமிருந்து பழைய புத்தகங்கள் பெற்று நாங்கள் படிக்க வேண்டியதாயிற்று. கிரிமினல் சதி என்றால் என்ன என்று அவர் எங்களுடன் அமர்ந்து விவாதித்தார்; மக்காலே இயற்றியப்படி 5ஏ அத்தியாயம் சட்ட புத்தகத்தில் இல்லை. தேசிய இயக்கத்தை அடக்குவதற்காக மட்டும் இது 1938இல் இயற்றப்பட்டது. குற்றவியல் சதித்திட்டத்தின் கூறுகளை அவர் விவரித்தார், பின்னர் குற்றச்சாட்டுகளைப் படித்தார். சீனியர் ஜூனியர் வித்தியாசமின்றி அனைவரின் கருத்துகளையும் கேட்டார்.
விசாரணைக்கு முன்னர், நீதிமன்றத்தின் சூழ்நிலையைப் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்பினார், அவர் என் நண்பர் ஒருவரிடமிருந்து கடன் வாங்கிய அங்கியை அணிந்து நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது உத்ரபதி தலைமை அதிகாரியாக இருந்தார். கே.ஜி.கே நீதிமன்ற டெய்ஸில் எழுந்து நின்று, “நான் கே.ஜி.கண்ணபிரான்” என்றார். உடனடியாக நீதிபதி “உங்கள் வேஜஸ் ஆஃப் இம்பூனிட்டி புத்தகத்தை நான் படித்துள்ளேன்” என்று கூறினார், இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் வாதங்களுக்கான நாள் வந்தது, அவர் சொன்ன முதல் வாக்கியம்:
“இந்தியா முழுவதும் மற்றும் சர்வதேச அரங்கில் வழக்குகளை நடத்திய எனது வழக்கறிஞர் வாழ்க்கையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள், சிறுபான்மை மக்கள் என்ற ஒரு தனித்துவமான பாகுபாடு இருப்பதை நான் காணக்கூடிய முதல் வழக்கு இதுவாகும். அவர்கள் அனைவரும் ஒரு கூண்டில் சிங்கங்கள் அடைக்கப்பட்டிருப்பதை போல இங்கு வைக்கப்பட்டுள்ளதை நான் காண்கிறேன். மற்றும் இது ஒரு நியாயமான விசாரணையும் அல்ல. பிரிவு 327 சிஆர்.பி.சி, தடா மற்றும் பொடாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை தவிர்த்து, அதற்கான சிறப்பு காரணங்கள் இல்லாவிட்டால், விசாரணைகள் திறந்த முறையில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது, இருப்பினும் இது இந்திய தண்டனை சட்டத்தின் வெடி பொருட்கள் சட்டம் மற்றும் ஆயுத சட்டம் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இதில் இப்படி நடந்து கொள்வதற்கான அவசியம் என்ன ? ”
“விசாரணை கொடியிடப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். “அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் வழக்கு விசாரணை நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும்.” அவர் இந்திய சட்டங்களை மட்டுமின்றி ஐ.சி.சி.பி.ஆர் மற்றும் சர்வதேச சட்டங்களையும் பல தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டி எப்படி ஒரு வழக்கு நியாயமான முறையில் விசாரிக்கப்பட வேண்டும் என்பதை நீதிமன்றத்திற்கு சுட்டி காட்டினார். நீதிபதியே அவர் சுட்டிக் காட்டிய பாயிண்டுகளை பாராட்டும்படி ஆயிற்று.
“ஒரு வகையில் விசாரணை நியாயமான தன்மை கொண்டதல்ல, மறுபுறம் வழக்கு விசாரணையும் ஒரு நியாயமான வழியில் செல்லவில்லை. குண்டுகள் வெடித்தன மற்றும் மக்கள் காயமடைந்தனர் என்ற குற்றம் நடந்ததை நான் மறுக்கவில்லை, ஆனால் அரசியலமைப்பின் பிரிவு 21 இன் கீழ் விசாரணை நியாயமானதாக இல்லை.” அவர் தனது வாதத்தின் கருத்தை முழு நீதிமன்றமும் ஏற்கும்படி செய்தார். நீதிபதி உத்ரபதி கூட தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் அவரைப் போன்ற ஒரு வழக்கறிஞரால் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைத்திருந்தால், தீர்ப்பு வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்று எழுதியுள்ளார்.
சொல்லிக் கொள்ளும்படி இந்த வழக்கில் விசாரணையும், நீதிமன்ற விசாரணையும் நடத்தப்படாததால், மரண தண்டனை விதிக்கப்படவில்லை. இது வழக்கில் ஒரு பெரிய திருப்புமுனையாகும்.
எச்.ஆர்.பி.சியை சேர்ந்த என் நண்பர் திரு.ராஜு அடுத்த நாள் செய்தித்தாள்களில் விசாரணையின் தனித்துவமான பாகுபாட்டை குறித்து படித்தது, அவருக்கும் பிற இளம் வக்கீல்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. பின்னர் கண்ணபிரான் அரசு தரப்பு வழக்குரைஞர்களிடம், “18 முஸ்லிம்களின் கொலைகளில் யார் குற்றவாளிகள் ? இது 18 முஸ்லிம்களின் கொலைகளுக்கு பதிலடி என்று நீங்கள் சொல்கிறீர்கள், எனவே கொலைகாரர்கள் யார் என்பதை நீதிமன்றத்தின் முன் வைக்க வேண்டும்” என்று கேட்டார். பின்னர் அவர் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பற்றி பேசினார், சதித்திட்டத்தின் குற்றச்சாட்டை நிரூபிக்க, சதிகாரர்களின் ஒப்புதல் வாக்குமூலம் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படாது என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளதால் அவற்றை ஒதுக்கி வைப்பதாக கூறினார். எனவே 1940 மிர்சா அக்பர் முதல் கெஹர் சிங் வரை பல வழக்குகளை அவர் மேற்கோள் காட்டி, ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த வழக்கை தொடரக்கூடாது என்று கூறினார்; இதற்கான தீர்வு 1951ல் பைரி சிங் vs அரசு வழக்கில் வழங்கப்பட்டுள்ளதை மேற்கோளாக நீதிமன்றத்தில் காட்டினார், இந்த தீர்ப்பு அனைத்து நீதிமன்றங்களுக்கும் இந்த வழிகாட்டலை வழங்கியது. 120A-ன் கீழ் குற்றச் சதி என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் சட்டவிரோத வழிமுறைகளின் மூலம் சட்டவிரோத செயலைச் செய்ய ஒப்புக்கொள்வது என்று அவர் கூறினார். சாட்சிய சட்டத்தின் 10-வது பிரிவின்படி அவரது சான்றுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கது, ஏனென்றால் சதித்திட்டத்தை நிரூபிக்கும் அடிப்படை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் சட்டவிரோத வழிமுறைகள் மூலம் சட்டவிரோத செயல்களைச் செய்ய ஒப்புக் கொள்ள வேண்டும், மேலும் அதற்காக ஒன்று கூடி இருக்க வேண்டும் என்று கூறினார். அடுத்த 6 விசாரணைகளில் அவர் அற்புதமாக வாதிட்டார். அவரது வாதங்கள் ஒரு வகுப்பைப் போல இருந்து நீதிமன்றத்திற்கு வெவ்வேறு விசயங்களை கற்பித்தது. எட்டு முதல் பதினொரு சாட்சிகள் முக்கிய சதிகாரர்களாக ஆஜர்படுத்தப்பட்டனர். சமர்ப்பிப்புகளைப் படிக்க ஜூனியர்களைக் கேட்டுக் கொண்டார். என் அறிவுக்கு எட்டி, இந்த 6 விசாரணைகள் முழு வழக்கையும் எங்களுக்கு ஆதரவாக மாற்றின.
இந்த வழக்கைப் பற்றி இதற்கு மேல் என்னால் பேச முடியாது, ஏனெனில் இது இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, மேலும் 167 பேரில் 18 பேர் மட்டுமே உள்ளே உள்ளனர், மேலும் மாநிலமும் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கில் இளைஞர்கள், சீனியர்கள் மற்றும் நீதிமன்றமும் நிறைய கற்றுக்கொண்டன. அதன்பிறகு நான் ஓய்வு பெற்ற நீதிபதி உத்தரபதியை சந்தித்தேன். அவர் கண்ணபிரானை மிகவும் பாராட்டியதோடு, அவரிடமிருந்து அடிப்படை குற்றவியல் நீதித்துறை பற்றி நிறைய கற்றுக்கொண்டேன் என்றார்.
நல்லக்காமன் வழக்கு 1982 பிப்ரவரி 1 ஆம் தேதி நடந்தது, நல்லக்காமன் ஒரு முன்னாள் இராணுவ வீரர், ஒரு ஒய்வுப் பெற்ற கர்னலான அவர் தனது ஆசிரியர் மனைவியுடன் வாடிபட்டியில் வசித்து வந்தார். இது ஒரு குத்தகை பிரச்சினை. ஒரு போலீஸ்காரர் உரிமையாளராக இருந்தார். குத்தகைதாரர்களை காலி செய்வதற்காக அப்போதைய எஸ்.ஐ. பிரேம்குமார் நல்லக்காமனின் மனைவியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கடுமையாக விசாரித்தார். மனைவியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதை கேள்விப்பட்டு காவல் நிலையம் சென்ற போது, தனது மனைவியிடம் தவறாக நடந்துகொண்டு அவதூறாக விசாரிக்கப்படுவதைக் கண்டார். எனவே கோபமடைந்த அவர் ஒரு போலீஸ்காரரை அறைந்தார். இதனால், நல்லகாமன் மற்றும் அவரது மகனின் துணிகள் பறிக்கப்பட்டு, அவர்கள் கைவிலங்கிடப்பட்டு பஸ் ஸ்டாண்டிலிருந்து காவல் நிலையம் வரை தெருவில் இழுத்து செல்லப்பட்டனர்.
காவல்துறையினர் அவர்களை அடிப்பதைப், அந்த அசிங்கமான காட்சியை வாடிபட்டி நகரம் முழுவதும் பார்த்திருக்கிறது. இதனால் கோபமடைந்த மக்கள் ஆர்.டி.ஓ விடம் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த நேரத்தில் 176 (1A) சிஆர்.பி.சியில் இணைக்கப்படவில்லை. எனவே, ஆர்.டி.ஓ விசாரணை நடத்தியதுடன் வழக்கு பதிவு செய்தார். நல்லகாமன், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் மீது ஒரு வழக்கு பதியப்பட்டு விசாரணை நீதிமன்றத்தால் தண்டனையும் வழங்கப்பட்டது. இது அமர்வு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு நீண்டகால சட்டப் போருக்கு வழிவகுத்தது. இந்த வழக்கு மேல்முறையீட்டிற்கு வந்தபோது, என் நண்பர் ராஜு, வழக்கறிஞர் கண்ணபிரானை இதில் ஈடுபடுத்தலாம் என்றார். நாங்கள் ஹைதராபாத் சென்றோம், ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் இது சாத்தியமில்லை என்று கூறினார். ஆனால், நடந்த சம்பவங்கள் மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதைகளை நாங்கள் விவரித்த போது, அவர் 2006 ஆம் ஆண்டில் மதுரைக்கு வர ஒப்புக்கொண்டார்.
நாங்கள் அறையில் வழக்கு பற்றி விவாதித்தோம், அனைத்து சீனியர்களும் வந்திருந்தனர். இது தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு மற்றும் எதிர் வழக்காகும்.
நேர்மை மற்றும் நாணயத்திற்கு பெயர் பெற்ற நீதிபதியான செல்வம் அப்போது மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்சில் நீதிபதியாக இருந்தார். சீனியர் கண்ணபிரான் தனது சமர்ப்பிப்புகளை அவர் முன் வைத்தார். இது, நானும், நீதிபதி தர்குண்டேவும் மற்றவர்களும் மதுரையில் அவசரநிலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது தாக்கப்பட்ட நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது. அவசரநிலையின் போது ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறை அடித்து தாக்கிய புகைப்படங்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து காக்கிகளின் மனித உரிமை மீறல்களை நிரூபித்தார். பின்னர் அவர் கையில் உள்ள வழக்குக்கு வந்து வழக்கில் என்ன நடந்தது என்பதை முன்வைத்தார், பிரேம்குமார் எஸ்.ஐ.க்கு எதிரான தண்டனை உறுதி செய்யப்பட்டு வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. அவர் நீதிமன்றத்தில் தனது வாதங்களை முன்வைத்த விதம் காரணமாக எங்களால் உச்ச நீதிமன்றத்திலும் அதிக சிரமமின்றி போராட முடியும்.
அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்கும் பாங்கும், விசாரணைக்கு முன்னர் இளைஞர்களுடன் கலந்துரையாடுவதும் அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. அவர் “எந்த நீதிபதிகளையும் பார்த்து பயப்பட வேண்டாம், நீதிபதிக்கு எல்லாம் தெரியாது. அவர்களுக்கு கல்வி கற்பிப்பது வழக்கறிஞரின் கடமையாகும், அதனால்தான் நீங்கள் வழக்கைப் பற்றி முன்தயாரிப்புகளை மேற்கொண்டு வழக்கை குறித்த ஆழ்ந்த அறிவை பெற வேண்டும். நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன்பு சட்டம், மனித நடத்தை மற்றும் பிற காரணிகளைப் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.” என்று எப்போதும் கூறுவார். இந்த வழக்குகள் அனைத்தும் ஒரு வழக்கறிஞர் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவரிடமிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது, ஆனால் கோவை குண்டுவெடிப்பில் தோழர் கே.ஜி.கேவின் வாதங்களால் முழு வழக்கும் திசை திரும்பியது. எனவே, இந்த வழக்குகள் மூலம் நாங்கள், ஜூனியர்ஸ், சீனியர்ஸ் மற்றும் ஜூரிஸ்டுகள், நீதிபதிகள் என அனைவரும் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டோம். அவர் ஒரு மனித உரிமைகள் மற்றும் குற்றவியல் வழக்கறிஞர் மட்டுமல்ல, அவர் ஒரு மனிதநேயவாதி. எனது நண்பர்கள் பாவேந்திரன் மற்றும் திரு.கலையரசு அவரைப் பற்றி பேசுவார்கள். என்னுடன் ஏராளமான ஜூனியர்ஸ் இருப்பதைக் கண்ட அவர், வாழ்நாள் முழுவதும் முன்மாதிரியாக நான் எடுத்துக் கொள்ள வேண்டிய ஆணையை எனக்குக் கொடுத்தார். அவர், “திரு.மோகன், உங்களுடன் பல ஜூனியர்ஸ் இருப்பதை நான் இங்கே காண்கிறேன். ஆகவே, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு போராடுவதற்காக உங்கள் வாழ்க்கையில் 100 மனித உரிமை வழக்கறிஞர்களை ஏன் உருவாக்கக்கூடாது” என்று கூறினார்.
அதனால்தான், என் வாழ்க்கையில் நான் குறிப்பாக ஒடுக்கப்பட்ட பிரிவுகளிலிருந்து இளைஞர்களை சேர்த்துக்கொண்டு எனக்குத் தெரிந்ததை அவர்களுக்குக் கற்பித்தேன். நான் அவர்களை வழக்கு விசாரணைகளுக்கு அழைத்துச் செல்வேன், நான் வகுப்புகள் எடுக்கும்போது கூட அவர்களை வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வேன். அந்த வகையில் அவர் எனக்கு நிறைய செய்துள்ளார்.
அவர் கோயம்புத்தூர் வெடிகுண்டு வழக்குக்கு வந்தபோது, பாலக்காடு பிளாச்சிமடாவில் கோகோ கோலா எதிர்ப்பு கிளர்ச்சி நடப்பதாகக் கேள்விப்பட்டார், அபுபக்கர் சீனியர் கோரியபடி எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த அங்கு செல்ல எங்களுக்கு ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்தார். இது ஒரு வகையான சர்வதேச இயக்கமாகும், கார்ப்பரேட்களால் மக்கள் சுரண்டப்படுவதற்கு எதிரான அவரது கோபத்தையும், பொது மக்கள் மீதான அவரது அனுதாபத்தையும் நான் கண்டேன். கிளர்ச்சியில் பொறுமையுடன் கலந்து கொண்ட அவர் அதில் பேசவும் செய்தார். அவருடைய பெயரே நமக்கு ஒரு அடையாள சின்னமாகவும், உத்வேகமாகவும் இருக்கிறது. அதனால்தான் திரு.கண்ணபிரானைப் பற்றி பேசுவது எனக்கு கிடைத்த ஒரு கெளரவமாக நான் கருதுகிறேன்.
இப்போது நான் பல எஸ்சி/எஸ்டி வழக்குகளில் ஒரு சிறப்பு பிபி ஆக நியமிக்கப்பட்டுள்ளேன், இதற்கு அவர்தான் முன்மாதிரி. அவர் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குப் பின்னால் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் ஒரு சிறப்பு பி.பியாகப் போராடினார், மேலும் என்கவுன்டர் வழக்குகளில் ஒரு நடைமுறையை அமைத்ததில் அவரது பங்கு மிக முக்கியமானது. இப்போதெல்லாம் ஒரு என்கவுன்டர் நடக்கும் போது காவல்துறையினர் மீது வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்று சொல்வது எங்களுக்கு மிகவும் எளிதானது. ஆனால் இத்தகைய வழக்குகளில் அவர் ஒரு சாம்பியன். ஆந்திராவில் போலி என்கவுண்டர்களுக்கு எதிராக அவர் போராடியபோது அவர் பல வழக்குகளை பதிவு செய்ததன் காரணமாக பிறகு என்.எச்.ஆர்.சி அதற்கான வழிகாட்டுதல்களை தாக்கல் செய்தது.
இந்த அம்சங்களில் அவர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில், நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம் என்பதை நான் இங்கு சமர்ப்பிக்கிறேன். அவர் நமக்குப் புரியவைக்க விரும்பிய விசயம் எளிமையான முறையில் செய்யப்பட்டது. நானும் வழக்கறிஞர் திரு.பாலமுருகனும் குறைந்தது பதினொரு கொலை வழக்குகளை நடத்தியுள்ளோம், குற்றம் சாட்டப்பட்ட ஆறு அப்பாவி இளைஞர்களை நாங்கள் விடுவித்தோம். அவருடன் பணியாற்றிய எங்கள் அனுபவத்திலிருந்து குற்றவியல் சதித்திட்டத்தின் சிக்கல்களை நாங்கள் புரிந்துகொண்டோம். எனவே, எங்களுக்கு மிகவும் இனிமையான நினைவுகள் நிறைய இருந்தன, இவற்றைப் பகிர்ந்து கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கிய கல்பனா கண்ணபிரானுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
மேற்கோள் காட்டப்பட்டுள்ள வழக்குகள்:
1. வி.பி. குணசேகரன் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் vs உள்துறை செயலாளரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட தமிழக அரசு (1996) இன் Crl.R.C.No.868.
2. ஆர்.ஆர்.கோபால் @நக்கீரன் கோபால் Vs அரசு 5 மார்ச், 2003 அன்று CRL.O.P.NO.4254 OF 2003 மற்றும் CRL.O.P.NO.4255 OF 2003
3. அப்துல் நாசர் மதானி vs தமிழ்நாடு மாநிலம் & Anr.AIR 2000 SC 2293; (2000) 6 எஸ்.சி.சி 204: 2000 எஸ்.சி.சி (கிரி) 1048.
4.மிர்சா அக்பர் Vs பேரரசர் (1941) 43 BOMLR 20.
5. அஜய் அகர்வால் vs யூனியன் ஆஃப் இந்தியா மற்றும் ஆர்ஸ் 1993 ஏ.ஐ.ஆர் 1637, 1993 எஸ்.சி.ஆர் (3) 543.
6. கெஹர் சிங் & ஆர்ஸ் vs ஸ்டேட் (டெல்லி அட்மின்.) 1988 ஏ.ஐ.ஆர் 1883, 1988 எஸ்.சி.ஆர். (2) 24.
7. பைரி சிங் vs ஸ்டேட் ஏ.ஐ.ஆர் 1953 அனைத்தும் 785
8. கே. பிரேம்குமார் எதிராக வருவாய் பிரிவு அலுவலர் சி.ஆர்.எல். 2000 ஆம் ஆண்டின் O.P எண் 6693
(பவானி பா.மோகன் அல்லது ப.பா.மோகன் என்று தமிழ்நாட்டில் அறியப்படும் மக்கள் வழக்கறிஞர் 1979-ல் ஈரோடு மாவட்டத்தில் தனது வழக்கறிஞர் பயிற்சியை தொடங்கினார். ஆதிவாசிகள், காவல்துறை சித்திரவதை மற்றும் காவல்துறையினரின் அட்டூழியங்கள் போன்ற வழக்குகளை எடுத்து நடத்தியவர். மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தால் தமிழகத்தில் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளுக்கு சிறப்பு அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டுள்ளார்.)
Thanks: Bright Singh Johnrose