திருச்சியில் உள்ள சிறப்பு முகாம் ஒன்றில் ஈழத்தமிழர்கள் 16 பேர் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் கொடுமையான நிலைக்கு ஆளாக்கப்பட்டு அந்த முயற்சியிலும் ஈடுபட்டு உயிருக்கு போராடி வருகின்றனர் என்ற நெஞ்சை அடைக்கும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 78 ஈழத்தமிழர்கள் யார்? அவர்கள் ’சட்ட விரோதமாக’ இந்தியாவில் குடியேறியதால் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள்.

தற்கொலைக்கு முயன்ற ஈழத்தமிழர்கள்

“இலங்கையிலிருந்து இங்கு இருக்கும் அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இவர்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்க முடியாது அவர்களின் இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்” என்று பாசிச மோடி அரசின் சார்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த மாதம் வாதாடினார். 2009 ஆம் ஆண்டு திருச்சி கொட்டப்பட்டு முகாமில் இருக்கும் ஈழத்தமிழர்கள் இந்தியக் குடியுரிமை கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கு விசாரணையில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் ஆஜரான மோடி அரசின் வழக்கறிஞர் இவ்வாறு வாதாடியுள்ளார். ஈழத்தமிழர்கள் சட்ட விரோதமாக குடியேறி உள்ளார்கள் என்று பேசுவதற்கான அதிகாரத்தை இவருக்கு வழங்கியது யார் என்ற கேள்வியை ’நீதியரசர்கள்’ எழுப்பவில்லை. அந்தக் கோமான்களும் நாட்டின் ’பேரரசர்’ மோடி மற்றும் அவரின் குலகுருக்களான ஆர்.எஸ்.எஸ் கும்பலின் அடியொற்றி மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

ஏன் ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க முடியாது என்று கொக்கரிக்கிறது நீதிமன்றம்? ஏனென்றால் அவர்கள் சட்டவிரோதமாக இந்த நாட்டில் குடியேறியவர்களாம்! அதனால் குடியுரிமை வழங்க முடியாது என்று தீர்ப்பெழுதுகிறார்கள். ஈழத்தமிழர்கள் யார்? அவர்களுக்கும், இந்தியாவிற்கும் என்ன தொடர்பு என்ற வரலாறு மே-17, 2009 ஆம் ஆண்டு முள்ளி வாய்க்கால் படுகொலைகளுக்கு பிறகு மெல்ல மறக்கடிக்கப்படுகிறது.

இலங்கையில் இரண்டு வகையான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். முதலாவதாக ஈழத்திலேயே பிறந்து வளர்ந்த பூர்வகுடி இனமக்களான பெரும்பான்மை தமிழர்கள் உள்ளனர்.  இலங்கையில் மண்ணின் மைந்தர்களான பூர்வீக தமிழர்களின் எண்ணிக்கை, முள்ளி வாய்க்கால் இனப்படுகொலைகளுக்கு பிறகு 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இலங்கை அரசின் மக்கள் தொகை கணக்கீட்டின்படி 22 லட்சத்து 69 ஆயிரத்து 260 பேர் ஆகும். இவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 11.21% ஆகும்.

இரண்டாவதாக பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் போது 1815 ஆம் ஆண்டு, இந்தியாவின் தென் பகுதியில் இருந்து, ஈழத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்வதற்காகவும், புதிதாக உருவாக்கவும் மக்கள் அடிமைகளைப் போல கொண்டு செல்லப் பட்டார்கள். ஈழத்தில் உள்ள இவர்கள் அனைவரும் மலையகத் தமிழர்கள் என்று அறியப்படுகிறார்கள். 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இலங்கை அரசின் மக்கள் தொகை கணக்கீட்டின்படி மலையகத் தமிழர்கள் 8,39,504 பேர்களாவர். மொத்த மக்கள் தொகையில் 4.16% ஆகும்.

இந்த இரு பிரிவுகளை தவிர ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் பகுதியிலிருந்து, இதுபோன்று மக்கள் கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் மூர் எனப்படும் இனத்தை சேர்ந்த இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொண்ட தேசிய இனச் சிறுபான்மையினர் ஆவர். இவர்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழி பேசும் ஒரு பிரிவாக உள்ளனர். இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 9.23% ஆகும்.

இந்த மூன்று பிரிவு மக்களும், இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளுக்கு பிறகு, அகதிகளாக மாறி உலகம் முழுவதும் பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். உள்நாட்டுப் போரில் கடுமையாக பாதிக்கப்பட்டு தங்கள் உடமைகளை இழந்து தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களை குறிக்கின்ற சொல்தான் ’ஈழ அகதிகள்’ என்பதாகும்.

இலங்கையில் ஏற்பட்ட தமிழர்களின் மீதான சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை, இனக்கலவரமாக நிகழ்த்தப்பட்ட போது நடந்த வன்முறைகளினால் தங்கள் உயிரை பாதுகாத்து கொள்வதற்காக எவ்வித பாதுகாப்பும் இல்லாத மீன்பிடி படகுகளில் ஏறி 1983 ஆம் ஆண்டு முதல் இந்தியாவை நோக்கி அகதியாக ஈழத்தமிழர்கள் வரத் துவங்கினார். அதில் இந்தியாவில் மட்டும் 5 லட்சம் பேர் அகதிகளாக தஞ்சம் புகுந்து இருந்தனர்.

ஈழத்தமிழர்களின் வருகை 1983 முதல் 1987 வரை ஒரு காலகட்டமாகும். 1989 முதல் 1991 வரை இரண்டாம் கட்டமாகவும், 1996 முதல் 2003 வரை மூன்றாம் கட்டமாகவும், 2006 முதல் 2010 வரையில் நான்காம் கட்டமாகவும் தொடர்ந்து தமிழகத்தை நோக்கி வந்தனர். இந்த ஈழத்தமிழர்கள் அங்கே குடியிருக்க முடியாமல் தங்கள் உயிருக்கு பயந்து இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தமக்கு தஞ்சம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் வந்து சேர்ந்தனர். 2010 வரை 3 லட்சத்து 3 ஆயிரத்து 26 பேர் தமிழகத்தை நோக்கி அகதிகளாக வந்துள்ளனர்.

முதன்முதலில் ராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் என்ற பகுதியில் பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் போது அமைக்கப்பட்டிருந்த முகாம் தற்காலிக இடைத்தங்கல் முகாம் ஆக மாற்றப்பட்டது. பின்னர் தொடர்ச்சியாக தமிழகத்தில் 110 முகாம்களில் சுமார் 20 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 65,000 பேர் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை தவிர முகாம்களுக்கு வெளியில் சுமார் 35 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

இந்த அகதி முகாம்களில் வசிக்கின்ற மக்களுக்கு அவர்களின் அடிப்படை விவரங்கள் மற்றும் குடும்ப புகைப்படத்துடன் கூடிய குடும்ப அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. இத்தகைய அடையாள அட்டையை வைத்துக் கொண்டு அவர்கள் தங்களது மறு வாழ்விற்கான தேவைகளையும், பிழைப்புக்கான வேலைகளில் ஈடுபடும் போதும், அரசின் நலத் திட்டங்களிலும் பயன்படுத்தி கொண்டு வருகின்றனர்.

ஈழத்தமிழர்களின் முகாம்களை நாகரீகமாக ’முகாம்கள்’ என்று அழைப்பதைவிட  மிகவும் கொடூரமான ’சித்திரவதை முகாம்’ என்பதே பொருத்தமாகும். இந்த வகை முகாம்களில் தகரக் கொட்டகைகளே வீடு என்று கருதப்படுகிறது. இத்தகைய ஒரு வீட்டுக்கும் மற்றொரு வீட்டுக்கும் இடையில் ஒரே வாசல் தான் உள்ளது இங்கிருக்கும் வீடுகள் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. தவிர மக்கள் தண்ணீர் பிடிப்பதற்கு பொதுக் குழாயைத்தான் நாட வேண்டியுள்ளது அதுபோல பொதுக் கழிப்பறை தான் பயன்படுத்திக்கொள்ளவேண்டியுள்ளது. தினமும் தனக்கு தேவையான உணவுப் பொருள்களை வாங்குவதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டும். அங்கும் கூட்டம் கூட்டமாகவும் நெரிசலாகவும் நின்றுதான் பொருட்களை வாங்க முடியும்

இந்த லட்சணத்தில் கொரானா பேரிடர் காலத்தில் அரசாங்கம் யாரையும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவித்து இருந்தது. பத்துக்கு பத்து அளவில் உள்ள தகரக் கொட்டகைக்குள் நான்கு, ஐந்து பேர் குடும்பத்துடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும் என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அது தவிர அன்றாடம் வேலைக்கு சென்றால் தான் உயிர் வாழ முடியும் என்ற அவலத்திலும், நிர்ப்பந்தத்தில் உள்ளனர். பிள்ளைகளைப் படிக்க வைப்பது முதல் அன்றாட உணவுத் தேவைகள், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவது வரை பல்வேறு துன்ப துயரங்களிலேயே இந்த வதை முகாம்களில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பல முகாம்களில் 10-12 தினங்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

“எங்கள் நாட்டில் கழனிகளையும், சொத்துக்களையும் விட்டுவிட்டு தான் இந்தியாவிற்கு அகதிகளாக ஓடி வந்தோம். இனியும் எங்கள் நாட்டுக்கு திரும்ப போகும் உத்தேசம் இல்லை. ஆனால் இந்த முகாமிலும் எங்களுக்கு நல்ல சுகாதாரமான கழிப்பறை, சாலை வசதிகளும் இல்லை. பெண் பிள்ளைகளுக்காக ஒரு கழிப்பறை கட்டிக் கொடுத்து இருக்கிறார்கள். அந்தக் கழிப்பறையின் கதவுகள் செல்லரித்துப் கிடைக்கின்றன. குடி தண்ணீர் தவிர சாதாரணமாக புழங்கும் தண்ணீர் வசதியும் இல்லை இதனால் பெண்பிள்ளைகள் மாதவிலக்கு காலத்தில் மிகவும் அவதிப்படுகின்றனர்.” என்று அகதி முகாமின் கொடூரத்தை விவரிக்கிறார் ஒரு ஈழத் தமிழர்.

முகாம்களில் உள்ள குப்பைகளை திறந்தவெளியில் கொட்டி வருகிறார்கள். காற்றில் குப்பைகள் பறக்கின்றன. பெண்பிள்ளைகள் பயன்படுத்திய சானிடரி நாப்கின்கள் எரியூட்டப்படாமல் அப்படியே திறந்த வெளியில்தான் வீசப்படுகிறது. எப்போதாவது குப்பை வாருகின்ற லாரி வந்து போகின்றது. கன மழை பெய்தால் முகாம்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. பொது சுகாதாரம் இல்லாதால் கொசுக்கடி நிரந்தர பிரச்சனையாக உள்ளது. கொசுக்களின் மூலம் பரவும் பலவித காய்ச்சல்கள் தீராத நோயாக உள்ளது.

குடிநீர் பிரச்சனை அதிகரிக்கும்போது உள்ளூரில் உள்ள பஞ்சாயத்து குழாய்களில் தண்ணீர் பிடிக்கச் சென்றால் ’எங்கிருந்தோ வந்த அகதி நாய்களுக்கு அவசரத்தை பாரு! அங்கேயே செத்து தொலைய வேண்டியதுதானே’ என்று உள்ளூர் மக்கள் கூறும் போது மீண்டும், மீண்டும் மடிந்து போவதை போல உணர்கிறார்கள்.

இந்த முகாம்கள் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக உள்ளது. தேர்தல் சமயங்களில் மட்டும் நாடகமாடும் வகையில் அங்கு செல்வதை ஓட்டுக் கட்சிகள் வழமையாக்கியுள்ளனர். அதிகார வர்க்கத்தினர் சம்பிரதாயமாக பலமுறை ஆய்வு செய்தாலும் அதில் பெரும் அளவிற்கு எந்த மாற்றமும் இல்லாமல் சாதாரண உழைப்பாளிகளை விட கேவலமான வாழ்க்கை வாழ்வதால் ’போரில் கொல்லப்பட்டிருக்கலாமோ’ என்று மனம் வெறுக்கும் அளவுக்கு சென்றுள்ளனர். இந்தியாவில் இருந்து வெளியேறிச் செல்வதற்கும் அவர்கள். அனுமதிக்கப்படுவதில்லை.

முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு இத்தகைய சித்திரவதை முகாம்களில் இருந்து ஈழத்திற்கே திரும்பிச் சென்று விடலாம் என்ற எண்ணத்தில் ஏறக்குறைய 50 சதவீதம் மக்கள் யாருடைய அனுமதியும் இன்றி சென்றுவிட்டனர்.  அவ்வாறு செல்லும் போது அடையாள அட்டைகள் இருந்தாலும் அவர்கள் சிங்கள இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்படுகின்றனர். இலங்கைக்கு செல்ல விரும்பாமல் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு தப்பிச் செல்லும் போது படகு மூழ்கி விபத்தில் செட்துப் போகிறார்கள். நெஞ்சு பதைபதைக்க வைக்கும் வகையில் ஈழத்தமிழர்கள் படும் பாட்டை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

இதை விட கொடூரமான செய்தியை நாம் அறிகின்ற போது மனிதத்தன்மை உள்ள யாருக்கும் ரத்தம் கொதிக்கின்ற அளவிற்கு கோபத்தை தூண்டும் என்பது சந்தேகமே இல்லை. குறிப்பாக அகதி முகாம்களுக்கு வெளியில் வசித்து வரும் 34 ஆயிரம் பேர் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஏறக்குறைய 17 ஆயிரம் பேர் பிறப்பு பதிவிற்காக காத்திருக்கின்றனர் என்று ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் நிர்வாக ஆர். சந்திரகாசன் தெரிவிக்கின்றார். 1990-களில் பிறந்தவர்களில் பலருக்கும் கூட இன்னும் பிறப்புச் சான்று பதிவு செய்யப்படவில்லை. அதுமட்டுமல்ல இன்று 27 வயதிலிருந்து 30 வயது வரை உள்ள பலருக்கும் எந்தவித ஆவணமும் இன்றி தவித்து வருகின்றனர். இந்தியாவில் வாழும் மக்களே ஆதார் அட்டையை பெறுவதற்கு படும் பாட்டை இணைத்து புரிந்துக் கொண்டால் தான் வேதனையின் அளவு புரியும்.

2009 போரின் முடிவுக்குப் பிறகு ஈழத்தமிழர்களின் தஞ்சக் கோரிக்கைகள் மேலைநாடுகளில் எப்படி அணுகப்படுகிறது என்பது குறித்து பொதுவுடமை இயக்கம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ரவி பாகினி என்பவர் முன் வைக்கும் கருத்துகளைப் உணர்வு பூர்வமாக பரிசீலிக்கும் போது “சர்வதேச ரீதியில் ஈழத்தமிழர்களை கையாளும் விதம் மற்றும் இந்தியாவில் பாசிச பாஜக கொண்டு வந்துள்ள CAA விவகாரம், தற்போது முகாம்களில் வாழ்கின்ற ஈழத் தமிழர்களின் நிலைமை ஆகியவைப் பற்றி எமது மக்கள் மிகவும் மனம் வெறுத்துப் போயுள்ளனர்” என்று கூறி உள்ளவை நமது முகத்தில் அறைகின்ற செய்திகளாகும்.

குடியுரிமை சட்டத் திருத்தம் என்ற பெயரில் மோடி அரசு கொண்டு வந்துள்ள CAA, NRC பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து மத ரீதியகவோ, இனரீதியாகவோ கொடுமைக்கு உள்ளானால், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து அவர்களின் குடியிரிமை அளிக்கப்படும் என்று அங்கீகரிக்கும் போது அரை நூற்றாண்டாக சிங்கள பேரினவாதத்தினால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குடியுரிமை மறுப்பது மிகவும் கொடூரமானது. அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது. 1951 ஆம் ஆண்டு ஐ.நா அகதிகள் உடன்படிக்கை உருவானது. அதில் இன்றுவரை இந்தியா கையெழுத்து போடாமல் இழுத்தடித்து வருகிறது. இதுதான் சார்க் பிராந்தியத்தின் துணை வல்லரசான இந்தியாவின் யோக்கியதை. இந்த லட்சணத்தில் CAA, NRC சட்டங்களை அமுல் படுத்த பாசிச ஆர்.எஸ்.எஸ்- பாஜக கும்பல் துடிக்கிறது.

 

இந்தியாவில் உள்ள தமிழ் இனவாத அமைப்புகள், ஈழப் போராளிகளின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் தமிழ் ஈழம் என்பதை தனது பிழைப்புவாத நோக்கில் மட்டுமே பார்க்கிறார்கள். பல தேசிய இனங்களின் சிறைக் கூடமான இந்தியாவில், சிறைப்படுத்தும் இந்திய அரசின் மையப்படுத்தப்பட்ட அரசியல், இராணுவ அதிகாரத்தை எதிர்த்து போராடாமல் ஈழ விடுதலையை பற்றி பேசுவது கிரிமினல் குற்றமாகும். ஈழத்தமிழர்கள் நமது தொப்புள்கொடி உறவுகள் என்று வாய்ச் சவடால் அடிக்கும் தமிழினப் பிழைப்புவாதிகள் ஈழத்தில் மக்களுக்கு புதிய வாழ்வை பெற்றுத்தருவது கிடக்கட்டும். குறைந்தபட்சம் தமிழகத்தில் நிம்மதியுடன் வாழ்வதற்கு போராட முன் வர வேண்டும். பாட்டாளி வர்க்கம் தனது வரலாற்றுக் கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து ஈழத்தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு முடிவு கட்டும் வகையில் இரட்டைக் குடியுரிமைக்காக போராடுவதே உடனடித் தீர்வாக அமையும்.

இரா. கபிலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here