விளைய வைப்பதும் உழவரே; விலையை வைப்பதும் உழவரே’ என்ற கொள்கை முழக்கத்தோடு தொடங்கப்பட்டதுதான் உழவர் சந்தை என்ற உயரிய  திட்டம்.

இதைத் தமிழகத்தில் கொண்டு வந்த பெருமை மறைந்த முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களையே சேரும். உற்பத்தி செய்யும் உழவர்களே நேரடியாக தங்கள் பொருள்களைச் சந்தைப்படுத்த இயலும் என்பதற்கான ஒரு முயற்சிதான் இந்தத் திட்டம்.

ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற இவை இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டன. உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் நடுவில் உள்ள இடைவெளியை அகற்றி அல்லது குறைத்து, தரகு வணிகத்தின் தாக்கத்தைச் சற்றே தளர்த்தி, உழைப்புப் பயனின் பெரும்பங்கை உழைப்பவரே பெறுவதற்கான முயற்சிகளில் இதுவும் ஒன்று.

இத்திட்டத்தை வலுப்படுத்துவதுடன் இதை மென்மேலும் மெருகூட்டி இதில் உள்ள குறைபாடுகளைக் களைந்து ஊரகப் பொருளதாரத்தை உயர்த்துதல் நம் அனைவரின் பொறுப்பாகும்.

இந்தத் திட்டத்தின் மூலம் உழவர்கள் பயன்பட்டதோடு பெருமளவில் பயன் பெற்றவர்கள் நுகர்வோர்கள் என்றால் அது மிகையாகாது. எனவே நுகர்வோர்கள் இதற்கு பெரும் ஆதரவு நல்க வேண்டும். உழவர்களுக்கு ஒரு பொருத்தமான வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டு, ஒவ்வொரு உழவருக்கும் தனித்தனியாக கடைகள் ஒதுக்கப்படுகின்றன.

அதுமட்டுமல்லாது அங்கு ஒவ்வொரு உழவருக்கும் தராசு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உரிய நேரத்தில் வந்து அமர்ந்து தங்களது காய்கறிகளை விற்றுச் செல்ல முடியும். இதற்கு எந்தக் கட்டணமும் கிடையாது.

உழவர் சந்தைகளை ஊக்குவிக்கும் பொருட்டு பேருந்துகளில் காய்கறி ஏற்றி வருவதற்குக் கட்டணம் வாங்கப்படவில்லை. உழவர் சந்தைகளை நோக்கி சிறப்புப் பேருந்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன.

இப்பொழுது இயங்கும் உழவர் சந்தைகளில் பெரும்பாலும் காய்கறிகள் மட்டுமே சந்தைப்படுத்தப்படுகின்றன. அதிகாலை தொடங்கி மாலை 6.30 மணி வரையிலும்கூட கடைகள் இயங்கி வருகின்றன. பல உழவர்கள் தாங்கள் கொண்டு வந்த காய்கறிகள் விற்றுவிட்டால் முன்னமே கிளம்பிச் சென்று விடுகின்றனர். இத்திட்டம் உழவர்களுக்கு உடனடியாகப் பணம் கிடைக்கும் ஒரு வசதியான திட்டம் என்றே சொல்ல வேண்டும்.

பொதுவாக காய்கறி விளைவிக்கும் உழவர்கள் வழமையான சந்தைகளுக்கு விற்க கொண்டு செல்லும்போது தரகுக் கடைக்காரர்கள் 10 விழுக்காடு கழிவு எடுத்துக் கொள்வார்கள்.அது மட்டுமல்லாது பணத்தை உடனடியாகவும் கொடுக்கமாட்டார்கள். ஒரு நாளோ இரண்டு நாளோ கழித்துத்தான் தருவார்கள். அதிலும் தேங்காய் முதலியவற்றுக்கு கழிவுக்குக் காய்கள் என்று எடுத்துக் கொள்வார்கள்.

எந்தவிதமான நியாமான விலை நிர்ணயமோ, ஆதரவோ உழவர்களுக்குக் கொடுப்பதில்லை. உழவர்களை அவர்களுடைய வாடிக்கையாளர்கள் என்று மதிப்பதுகூட இல்லை. ஆனாலும் பல்வேறு உழவர்கள் இவர்களை நம்பியே உள்ளனர். காய்கறிகளை இருப்பு வைக்க இயலாது என்பதாலும், வந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும், அறுவடைக் கூலிக்குக்கூட வருமானம் வராமல் பலநாட்கள் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு திரும்பும் உழவர்களும் உண்டு.

இந்த அநியாய முறைக்கு மாற்றாக உருவானதுதான் உழவர் சந்தைத் திட்டம். ஆனால் இது பரவலாக விரிவுபடுத்தப்படவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய உண்மை.

பெரிய நகரங்களில் மட்டுமே உழவர் சந்தைகள் உள்ளன. அதுவும் போதிய எண்ணிக்கையில் இல்லை. குறிப்பாக 1999ஆம் ஆண்டு தொடங்கிய இத்திட்டம் 180 என்ற எண்ணிக்கையைத் தாண்டவில்லை.

தமிழ்நாட்டில் தாம்பரம் சேர்ந்து 22 மாநகராட்சிகளும் 146 நகராட்சிகளும் 561 பேரூராட்சிளும் உள்ளன. இவையாவும் பல உழவர் சந்தைகள் அமைப்பதற்குப் பொருத்தமான இடங்கள். தமிழ்நாடு பெரிதும் நகரமயமாகிவிட்ட மாநிலம். பெரும்பாலான மக்கள் வேளாண்மையைவிட்டு வெளியேறிவிட்டார்கள். காய்கறிகளை விளைவிக்கும் உழவர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. ஆனால் காய்கறிகள் கர்நாடகத்தில் இருந்தும் ஆந்திராவில் இருந்தும் வருவதைக் காண முடிகிறது.

விலை நிர்ணயம் செய்வதைப் பொருத்த அளவில் மொத்தக் கொள்முதல் விலையில் இருந்து 20 விழுக்காடு அதிகமும், சில்லறை விலையில் இருந்து 15 விழுக்காடு குறைவாகவும் விலை நுகர்வோர்களுக்கு உறுதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக நுகர்வோர்கள் நல்ல பயனைப் பெறுகின்றனர். ஆனால் உழவர்கள் குறைந்த பயனையே பெறுகின்றனர்.

ஏனென்றால், காய்கறிகளைப் பொருத்த அளவில் விலை நிர்ணயம் என்பது பெரும் சந்தைகளை நம்பியே செய்யப்படுகிறது. அதாவது ஒட்டன்சத்திரம்,அல்லது கோயம்பேடு போன்ற பெரும் சந்தையில் உள்ள வணிகர்களே விலையை உறுதி செய்கின்றனர். அதை அடிப்படையாக வைத்தே உழவர் சந்தைகளும் விலை வைக்கின்றன.

பெரும் சந்தைகளில் குறிப்பிட்ட நாளில் வரும் காய்கறிகளின் வரத்தை வைத்துத்தான் விலை உறுதி செய்யப்படுகிறது. உழவர்களின் இடுபொருள் செலவு, அவர்களது உழைப்பு போன்றவற்றை வைத்து விலை நிர்ணயம் செய்யப்படுவதில்லை.

எடுத்துக்காட்டாக ஒரு நாளில் 100 லாரிகளில் தக்காளி வருவதாகக் கொள்வோம், அன்றைய விலை 30 ரூபாய் என்றால், அடுத்த நாள் 200 லாரிகளில் தக்காளி வரத்து இருந்தால், விலை 15 ரூபாயாகக் குறைந்துவிடும். அதுவே 50 லாரியாக இருந்தால் விலை 60 ரூபாயாகக் கூடிவிடும். எனவே இந்த விலை நிர்ணயம் உழைக்கும் உழவர்களுக்குப் பெரிய பயனைத் தருவதில்லை.

இந்த முறை மாற்றப்பட்டு குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்குமானால் உழவர்களின் உழைப்பிற்கு ஓரளவிற்காவது நன்மை உண்டாகும்.நிர்வாக முறையில் உழவர் சந்தைகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் பாராட்டுக்கு உரியவாறு உள்ளன. அதற்கென்று ஊழியர்கள் உள்ளனர். வேளாண்மைத்துறை அதிகாரிகளே முன்னின்று பொறுப்பெடுத்து வருகின்றனர். ஆங்காங்கே சிறு குறைபாடுகள் இருப்பினும் நுகர்வோர்களுக்கு பெரும் பயன்தரும் வாய்ப்பாகவே இது உள்ளது.

பொதுவாக உழவர் சந்தை வளாகங்கள், நகராட்சியின் இடத்திலோ, மாநகராட்சியின் இடத்திலோ இருக்கின்றன. இதற்காக அவை உழவர் சந்தை நிர்வாகிகளிடமிருந்து வாடகை கேட்டு நிர்ப்பந்திப்பதைக் காண முடிகிறது. சில உழவர் சந்தைகள் லட்சக் கணக்கில் நகராட்சிகளுக்கு வாடகை தர வேண்டியுள்ளது. இதை மாற்றியமைக்க வேண்டும். ஒன்று அரசாணை வெளியிட்டு வாடகையை ரத்து செய்ய வேண்டும் அல்லது அந்த வாடகையை அரசே வழங்க வேண்டும்.

மேலும் இத்தகைய திட்டங்கள் நீண்டகால நோக்கத்துடன் நடைபெற வேண்டியவை. எனவே இவற்றை வெவ்வேறு அரசுத் துறைகளுடன் இணைக்க வேண்டும். அப்போதுதான் அதற்கான நிதி உறுதி செய்யப்படும். வெறும் திட்டப்பணியாக இருக்கும்போது ஒதுக்கீடுகள் குறையும்போது திட்டம் நின்றுபோகும்.

இதற்காக மக்களிடம் காய்கறி உணவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகள் நலத்துறை இதற்கு உதவ முடியும். குறிப்பாக வெளியில் இருந்து வரும் காய்கறிகளுக்கு, குளிர்பகுதிக் காய்களான காரட், உருளைக் கிழங்கு போன்றவற்றுக்கு நுகர்வோர் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதை மாற்றி உள்ளூர் காய்களின் நன்மைகளை எடுத்துச் சொல்லி அவற்றை நுகர்வோர் வாங்க வைக்க வேண்டும். மக்கள் காய்கறிச் வாங்குவதில் கீரைகளின் பங்கு மிகக் குறைவு.

ஆனால் அவைதாம் மிகுந்த சத்தானவை. மலைக்காய்கள் பூச்சிக்கொல்லி நஞ்சில் விளைவிக்கப்படுபவை. இதை நுகர்வோர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், சமையலில் நலன்மிக்க கீரைகளைப் பயன்படுத்தும்போது காய்கறிச் செலவில் 50 விழுக்காடுவரை மிச்சப்படுத்த முடியும். இந்த உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதன்மூலம் உள்ளூர் உழவர்கள் பயனடைவர்.

இப்போது பல உழவர் சந்தைகளில் பெரும் காய்கறிச் சந்தைகளில் இருந்து காய்களை வாங்கி வந்து விற்கும் அவலம் நடைபெறுவதைக் காண முடிகிறது. ஏனெனில், நுகர்வோர்களின் விருப்பம் காரட்டாக இருக்கும்போது ராமநாதபுரம் உழவர் எப்படி காரட் உற்பத்தி செய்து தர இயலும். அதிலுள்ள உடல்நலக்கேடு பற்றிய விழிப்புணர்வு நுகர்வோருக்கில்லை.

இதுகுறித்து அரசின் உடல் நல அமைச்சகம் கவனம் செலுத்த முடியும். ஊட்டச்சத்து அலுவலர்கள், மருத்துவர்கள் மூலம் இயற்கை முறைக் கீரைகள், காய்களின் நன்மைகளை பிரச்சாரம் செய்ய வேண்டும். இப்படியாக வேளாண்மையும், உடல்நலமும் இணைய முடியும்.

சத்துணவுக் கூடங்களுக்கும் அங்கன்வாடிகளுக்கும் உழவர் சந்தைகள் மூலம் மட்டுமே காய்கறிகள் வாங்க வேண்டும் என்று ஆணையிடலாம். அடுத்ததாக, காய்கறிகள் அல்லாத பிற விளைபொருள்களையும் உழவர் சந்தைகளுடன் இணைக்கலாம். இயற்கைமுறை அரிசி, பருப்பு ஆகியவற்றை விற்பனை செய்ய முடியும்.

உழவர் சந்தைகளில் உழவர் கூட்டமைப்புகளுக்கு கடைகள் வழங்குவதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும். உள்ளூர் பொருட்களை விற்பனை செய்ய முடியும்.

உழவர்களுக்கு இயற்கை வேளாண்மைக்கான விதைகள், மற்ற இடுபொருள்களை வழங்க முடியும். உழவர்களே விளைவித்த கீரை விதைகள், பிற காய்கறி விதைகள் போன்றவற்றை விற்க முடியும். வெளிச்சந்தையில் இருந்து வாங்கி வந்து விற்கும் முறையை முற்றிலும் தடை செய்துவிட வேண்டும். இல்லையெனில் உழவர் சந்தையின் நோக்கமே அடிபட்டுப்போய்விடும்.

உழவர்கள் தங்களிடம் விளைவித்த பொருட்களில் மதிப்புக் கூட்டல் செய்தும் விற்கும் வாய்ப்புகளை அளிக்க வேண்டும். குறிப்பாக ஊறுகாய், கத்தரி வற்றல், வெண்டை வற்றல் போன்ற எளிய நலமான உணவுகளை தயாரித்துக் கொண்டு வந்து விற்க முடியும்.

உழவர் வீடுகளில் இருக்கும் வயதான பெண்மணிகள் இதில் மிகுந்த திறன் பெற்றவர்களாக இருப்பர். அவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களின் வருமானம் மட்டுமல்லாது அவர்களது சமூக மதிப்பும் போற்றப்படும்.

இன்னும் ஒருபடி மேலே போய் உழவர்களின் பொருட்களை அங்கேயே சமைத்து வழங்கும் உண்டிச்சாலைகளை (eatery) அமைக்கலாம். மாலை நேரங்களில் பணியாரம், ஆப்பம் போன்ற உள்ளூர் உணவுகள் உள்ளூர் மக்களுக்குக் கிடைக்கும்.

பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் இயங்குவதுபோல உழவர்- நுகர்வோர் கழகங்களை உருவாக்கலாம். இதற்கு எடுத்துக்காட்டுகள் உள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் காதர் மீரான் என்ற இயற்கை உழவரும் அவரது நண்பர்களும் இணைந்து திண்டுக்கல் உழவர்- நுகர்வோர் கூட்டமைப்பை உருவாக்கி காய்கறிச் சந்தை நடத்தினார்கள். அதுமட்டுமல்லாது இயற்கை வேளாண்மைப் பயிற்சிகளை ஒருங்கிணைத்து நடத்தினார்கள். இப்படியான முயற்சிகள் மூலம் உழவர் சந்தைகள் உரம் பெறுவதோடு ஊரகத்தில் பசுமைப் பொருளாதாரம் மலரும்.

  • பாமயன் 

நன்றி : inmathi.com

https://inmathi.com/2021/11/11/farmers-markets-are-a-good-idea-need-more-better-ones/29355/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here