‘இதுபோல் இதற்கு முன்பு நடந்ததில்லை. ஊடகத் துறையின் ஒவ்வொரு நல்ல அம்சமும் வேகவேகமாக அழிக்கப்பட்டு வருகிறது’ என்கிறார் மகசேசே விருது பெற்ற ஊடகவியலாளர் ரவீஷ் குமார். என்டிடிவி இந்தியாவின் முகமாக இதுவரை அறியப்பட்டுவந்த அவர் தனது 27 ஆண்டுகாலப் பணி வாழ்வை முடித்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

‘ஊடகத்தில் இணையவேண்டும் எனும் கனவோடு ஆயிரக்கணக்கான இளையோர் லட்சக்கணக்கில் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இத்துறைக்கு வந்தால் ஊடகவியலாளர்களாக அல்ல, தரகர்களாகவே செயல்பட வேண்டியிருக்கும்’ என்று தனது பதவி விலகல் உரையில் வருந்தியிருக்கிறார் ரவீஷ்.

உடையும் ஊடகத்துறை

ஊடகத்துறை அதன் வண்ணத்தையும் வலுவையும் இழந்துவருகிறது; இது மிகவும் அபாயகரமான போக்கு என்கிறார் ரவீஷ். ‘புதியவர்கள் மட்டுமல்ல, ஏற்கெனவே இத்துறையில் இருப்பவர்களும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பலருக்கு மூச்சு முட்டுகிறது. பலர் விலகிக்கொண்டிருக்கிறார்கள். வேலை என்றொன்று வேண்டுமே என்பதற்காக எந்தவித உற்சாகமும் பிடிப்புமின்றி வெறுமனே காலம் கழித்துக்கொண்டிருக்கிறார்கள் வேறு பலர்.’ அவ்வாறு காலம் கழிக்க விரும்பாத நிலையில் ரவீஷுக்கு முன்பே என்டிடிவியின் நிறுவனர்களான பிரணாய் ராய், ராதிகா ராய் இருவரும் பதவி விலகிவிட்டனர்.

உலகின் மூன்றாம் பெரும் செல்வந்தராக கவுதம் அதானி உயர்ந்ததையும் இந்தியாவின் செல்வாக்குமிக்க செய்தி நிறுவனங்களில் ஒன்றான என்டிடிவி, அதானி குழுமத்தின் கரங்களில் சென்று சேர்ந்ததையும் இந்த ஆண்டின் தீர்மானகரமான நிகழ்வுகளாகக் கருதுகிறேன்.

ஓயாமல் விமரிசிப்பதுதான் முழுநேர பணி என்று இவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அரசை அவ்வப்போது பாராட்டும் பொறுப்பும் ஊடகத்துக்கு இருக்கிறது என்று சமீபத்தில் சொல்லியிருக்கிறார் என்டிடிவியைக் கைப்பற்றியுள்ள அதானி. அச்சு முதல் காட்சிவரை இந்திய ஊடக நிறுவனங்கள் பெரும்பாலும் இந்தப் புதிய திசையில்தான் இப்போது சென்றுகொண்டிருக்கின்றன.

இதையும் படியுங்கள்: என்டிடிவி ( NDTV ) யை அதானி பறிக்கிறாரா ? ஜெயிக்கப்போவது யாரு ?

ஊடகத்துறையின் வரலாற்றில் மட்டுமல்ல இந்திய அரசியல், சமூக வரலாற்றிலும் ஒரு முக்கியமான காலகட்டத்துக்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம். அரசைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவேண்டிய இடத்திலிருந்த ஊடகம் இன்று அரசால் கண்காணிக்கப்படும் இடத்துக்குச் சென்று சேர்ந்திருக்கிறது. ஜனநாயகத்தைக் காத்து நிற்கவேண்டிய தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் ஊடகத்துறை நம் கண்முன்னால் பொலபொலவென்று சரிந்துகொண்டிருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்துவதற்கான ஆற்றலை நாம் இழந்துவிட்டோம் என்பதல்ல; அப்படியொன்று நடந்துகொண்டிருக்கிறது என்பதையே நம்மில் பெரும்பாலானோர் உணராததுதான் நம் காலத்தின் பெரும்துயர்.

அரசியலும் ஊடகமும்

மே 2014இல் ஆறு மாநிலங்களில் கால் பதித்திருந்த பாஜக இன்று நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் தனிப்பெரும் அரசியல் அதிகார மையமாக வளர்ந்திருக்கிறது. அந்த அதிகாரத்தைக் கொண்டு பிற துறைகள்போல் ஊடகத்தையும் தன் கைப்பிடிக்குள் கொண்டுவரும் திட்டத்தைக் கடந்த எட்டு ஆண்டுகளாக முன்னெடுத்துவருகிறது பாஜக. அத்திட்டம் பெருமளவு நிறைவேறிய ஆண்டாக 2022 அமைந்திருக்கிறது.

ஊடகத் துறைக்கு ‘லட்சுமணன் கோடு’ அவசியம் என்று பல காலமாகவே பாஜக ஆதரவாளர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். அந்தக் கோடு மிக அழுத்தமாக இன்று வரையப்பட்டுவிட்டது.

இதையும் படியுங்கள்: கார்ப்பரேட்- காவிகளின் பிடியில் ஊடகங்கள்! மாற்றாக சுதந்திர ஊடகத்தை உருவாக்குவோம்!

மைய நீரோட்ட ஊடகத்திடமிருந்து விலகி நிற்கும் முடிவைத் தனது குஜராத் காலத்திலேயே நரேந்திர மோடி எடுத்திருக்கவேண்டும் என்கிறார் அரசியல் ஆய்வாளர் கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா. கலவரங்களைத் தொடர்ந்து பல்கிப் பெருகிய விமரிசனங்களாலும் குற்றச்சாட்டுகளாலும் பாதிக்கப்பட்ட மோடி மைய நீரோட்ட ஊடகங்களிலிருந்து முற்றிலுமாகத் தன்னைத் துண்டித்துக்கொண்டார்.

தன்னோடு முழுக்க உடன்படும் பத்திரிகையாளர்களை மட்டும், தன் ஒளியைக் கவனமாகக் சேகரித்துப் பன்மடங்குப் பெருகிக்காட்டும் காட்சி ஊடகத்தினரை மட்டும், எதிர்த்து ஒருசொல்லும் பேசாத இதழியலாளர்களை மட்டும் தனக்கருகில் அவர் நிறுத்திக்கொண்டார். மற்றவர்கள் லட்சுமண கோட்டுக்கு மறுபக்கம் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களுக்கு இரு வழிகள் திறந்திருந்தன. மோடியோடு இணங்கவேண்டும் அல்லது இல்லாது போகவேண்டும்.

இந்த இல்லாது போதல் பல வழிகளில் நடைபெறும். மோடி ஆட்சிக்காலத் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்கள் இந்தியாவைத் தவறான ஒளியில் உலகுக்குக் காட்டுபவர்களாகச் சித்திரிக்கப்பட்டனர். நம் தேசத்தின் கசடுகள் வெளி தெரியாதவாறு அல்லது கண்டும் காணாதவாறு கடந்துசெல்வதே தேசபக்தி என்று வரையறுக்கப்பட்டது. ஆட்சியிலிருப்பவர்கள் படிக்க விரும்பாத, கேட்க விரும்பாத, காண விரும்பாத செய்திகளையும் கோணங்களையும் விவாதிப்பவர்கள் வதந்திகள் பரப்புபவர்களாகவும் தேச விரோதிகளாகவும் உருமாற்றப்பட்டனர்.

மதச்சார்பின்மை போல் கருத்து சுதந்தரமும் பரிகசத்துக்கு உள்ளாக்கப்பட்டது. இந்த இரண்டுமே மேற்கத்திய இறக்குமதி கருத்துகள் என்றும் நம் சூழலுக்கு இவை பொருந்தாது என்றும் வாதிடப்பட்டது. கருத்து சுதந்தரம் நமக்குத் தேவையா என்று விவாதிக்கவேண்டியுள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறிப்பிட்டதை இங்கு நினைவுபடுத்திக்கொள்ளலாம்.

ஊடகத்தின்மீதான போர்

ஸ்க்ரோல் இணைய இதழைச் சேர்ந்த சுப்ரியா ஷர்மா கொரேனா கால முழுஅடைப்பின்போது வாரணாசிக்கு அருகிலுள்ள பகுதியில் தலித்துகள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதைப் பதிவு செய்ததற்காக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிரதமரின் தொகுதியை இழிவு செய்யும் வகையில் அவர் செயல்பாடு அமைந்திருந்ததாம். ஹத்ராஸில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட தலித் பெண் குறித்து விசாரிப்பதற்காக கேரளாவிலிருந்து உத்தரப் பிரதேசம் சென்ற சித்திக் காப்பான் எனும் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஓர் ஊடவியலாளராக அவர் மேற்கொண்ட பயணம் மாநில அரசுக்கு எதிரான சதி நடவடிக்கையாகத் திரித்துக் காட்டப்பட்டது.

இதையும் படியுங்கள்: கவனமாக இரு; பேரா.விஜய் பிரசாத்

அரசு விளம்பரங்களை நிறுத்தி வைப்பது, வருமான வரித்துறை தொடங்கி சிபிஐ வரை ஆள்கள் அனுப்பி மிரள வைப்பது (என்டிடிவிக்கு இது நடந்தது), ஊடக நிறுவனங்களைத் தொடர்புகொண்டு ‘பிரச்சனைக்குரிய’ இதழியலாளர்களை அடக்கி வைப்பது அல்லது நீக்குமாறு செய்வது என்று பல வழிமுறைகளைக் கையாண்டு ஊடக நிறுவனங்கள் வழிக்குக் கொண்டுவரப்பட்டன. அரசுக்கு நெருக்கமான அதானி என்டிடிவியை வளைத்துப் பிடித்ததும் இத்தகைய ஒரு வழிமுறைதான்.

அச்சு, காட்சி ஊடகம் மட்டுமல்ல சமூக வலைத்தளமும் சுதந்திரமாக இல்லை. இந்த ஆண்டு வெளிவந்துள்ள பத்திரிகை சுதந்திரத்துக்கான சர்வதேச தரவரிசைப் பட்டியலில் இந்தியா 150வது இடத்துக்கு இறங்கி வந்துள்ளது. செய்தியாளர்களுக்கு எதிராகவும் இணையத்தளப் பயன்பாட்டாளர்களுக்கு எதிராகவும் அரசு மேற்கொண்டு வரும் எதிர் நடவடிக்கைகளை ‘எல்லையற்ற செய்தியாளர்கள்’ அமைப்பு வருத்தத்தோடு சுட்டிக்காட்டியுள்ளது. ஊடகத்தினர் தங்கள் கடமையைச் செய்யும்போது அவர்களை ஒடுக்கும் வகையில் அரசு வழக்குகள் பதிவு செய்யக்கூடாது என்றும் அது கோரியுள்ளது.

ஊடக விடுதலை

மற்றொரு பக்கம் ஊடக உலகம் உள்ளிருந்தும் சரிந்து கொண்டிருக்கிறது.‌ மோடி அரசும் அதன் ஆதரவாளர்களும் உருவாக்கியுள்ள புதிய இயல்புக்கு ஏற்றவாறு ஊடக நிறுவனங்கள் தங்களை தகவமைத்துக் கொள்ளும் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளன. கடுமையான சுய தணிக்கைக்குப் பிறகே செய்திகள் வெளி வருகின்றன.‌

எது வெளியிடத் தகுந்த செய்தி என்பதை ஒரு செய்தி நிறுவனம் எந்த அடிப்படையில் முடிவு செய்கிறது? எதை விவாதிக்கவேண்டும், எந்த அளவுக்கு என்பது எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? எதையெல்லாம் கண்டுகொள்ளவேண்டும் என்றும் எதையெல்லாம் விலக்கவேண்டும் என்பதையும் எவ்வாறு உயர் பதவியில் இருப்பவர்கள் முடிவு செய்கிறார்கள்? ஒரு செய்தி நிறுவனத்தில் எவ்வளவு பெண்கள் பணிபுரிகிறார்கள்? சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர்? தலித்துகள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்களா?நிர்வாகத்தின் உயர் அடுக்குகளில் இருப்பவர்கள் யார்? அவர்கள் அரசியல் சார்பு நிலை என்ன? இதழியலாளர்களால் சுதந்திரமாக செய்தி சேகரிக்கமுடிகிறதா? அவ்வாறு சேகரிக்கப்படும் செய்தி சிதைக்கப்படாமல் வெளிவருகிறதா?

ஒவ்வொரு ஊடக நிறுவனமாக எடுத்துக்கொண்டு இந்தக் கேள்விகளை எழுப்பிப் பார்த்தால் கவலையளிக்கக்கூடிய விடைகளே பெரும்பாலும் நமக்குக் கிடைக்கும்.

ஊடகத்துறை தன் துடி துடிப்பையும் மாண்பையும் திரும்பப் பெற வேண்டுமானால் உண்மையின் பக்கம் நிற்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்கிறார் ரவீஷ். இன்று ஊடகமும் அரசியல் கட்சி போல் ஓர் அதிகார மையம்தான் என்பதால் அதன் குறைகளையும் போதாமைகளையும் மக்கள் விமர்சிக்க வேண்டும். அடிப்படை நெறிகளை ஓர் ஊடக நிறுவனம் மீறும்போது மக்கள் அதனைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டி நிராகரிக்க வேண்டும்.

தனிமனித விடுதலை எந்த அளவுக்கு முக்கியமோ, தேச விடுதலை எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு ஊடக விடுதலையும் முக்கியம்.‌ அந்த விடுதலை உறுதி செய்யப்படும் போது மட்டுமே ஜனநாயகம் பலம் பெறும்.

நன்றி:
மருதன்
எழுத்தாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here