புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு – புதுச்சேரி
சாதி ஆணவக் படுகொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் வழக்கு!
கொலைக் குற்றவாளி யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு சாகும்வரை சிறை!
தேதி: 09.03.2022
பத்திரிக்கை செய்தி
காவி பாசிசம் ஏறித் தாக்கிவரும் இச்சூழலில் சனாதன-சாதி வெறியர்களுக்கு எதிரான கோகுல்ராஜ் வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பல்வேறு மிரட்டல்களைப் பொருட்படுத்தாமல் தன் மகனின் கொலைக்கு நீதிகேட்டு இறுதிவரை போராடிய கோகுல்ராஜின் தாய், வாதாடிய வழக்கறிஞர் தோழர் ப.பா. மோகன் உள்ளிட்டோருக்கு எமது அமைப்பின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
2015 ஜூன் 23 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ், அவரது பெண் தோழி சுவாதியுடன் பேசிக்கொண்டு இருந்தபோது கடத்திச் செல்லப்பட்டார். அன்றைய தினமே கோகுல்ராஜின் தாய் சித்ரா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மறுநாள் 24-ஆம் தேதி நாமக்கல் பள்ளிபாளையம் அடுத்த கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ் உடல், தலை துண்டிக்கப்பட்டும், முகம் சிதைக்கப்பட்டும் நாக்கு அறுக்கப்பட்டும் கண்டெடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் கோகுல்ராஜ் தற்கொலை செய்து கொண்டார் என்றே செய்தி பரப்பப்பட்டது. அதன்பிறகு கோகுல்ராஜ் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக ஜூன் 27-ஆம் தேதி கோகுல்ராஜின் உடல் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு மிகக்கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இக்கொடூரக் கொலை சாதி வெறியோடு செய்யப்பட்ட சாதி ஆணவப் படுகொலை என்பதும் இந்தக் கொலையை தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை என்ற சாதிவெறி அமைப்பின் நிறுவனராக அறிவித்துக் கொண்ட யுவராஜ் தலைமையிலான சாதிவெறிக் கும்பல் நடத்தியது என்பதும் அடுத்த சில நாட்களில் தெரிய வந்தது.
கொலை என தெரிந்தும் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் போலீசு மெத்தனம் காட்டியதால் குற்றவாளிகளை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என்று உறவினர்கள் மற்றும் பல ஜனநாயக சக்திகளும் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்குப் பிறகே 6 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்காக மாற்றுவதற்கும் போராட்டம், கொலையாளிகளை கைது செய்யவும் போராட்டம் என்ற நிலையே இருந்தது. எனினும், சாதி வெறியன் யுவராஜை போலீசால் நெருங்கவே முடியவில்லை. இந்தியாவில் நிலவும் பார்ப்பனிய சனாதன – சாதியக் கட்டமைப்பும், அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசும் கொலையாளியைப் பாதுகாக்கவே செய்தன. ஏறக்குறைய 100 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தபடியே யுவராஜ் ஒட்டுமொத்த போலீசு துறையையே மிரட்டிக் கொண்டிருந்தான். சமூக வலைத்தளங்களில் சாதி வெறியோடு வீடியோ மற்றும் ஆடியோவை வெளியிட்டும் வந்தான்.
கொலை வழக்கை விசாரித்த டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியாவை செல்போனில் மிரட்டிப் பணிய வைக்க முயற்சித்தும் முடியாததால் தனது சாதி வெறியர்களைக் கொண்டு அழுத்தத்தைக் கொடுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. ஆணவக் கொலைக் குற்றவாளியை கைது செய்யாமல் சரணடைய சமரசம் பேசியதுடன் சரண்டருக்காக காத்தும் கிடந்தது தமிழக போலிசு. பல்வேறு அமைப்பினர் யுவராஜைக் கைது செய்ய வேண்டும் என போராடினர். அதன் பிறகே வேறுவழியின்றி 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி போலீசார் முன்னிலையில் காலரை தூக்கிவிட்டு நடந்து வந்து சரணடைந்தான் யுவராஜ்.
இதன் பிறகு தொடங்கிய கொலை வழக்கில் அவரது தாய், சகோதரர், தோழி என மொத்தம் 110 பேர் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டு, அவர்களிடம் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி விசாரணை தொடங்கியது.
வழக்கு விசாரணையின் போது சுவாதி திடீரென பிறழ் சாட்சியானார். இதேபோல், பல அரசுத் தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி, வழக்கின் போக்கையே மாற்றின. அரசுத் தரப்பு வழக்கறிஞரான கருணாநிதியின் போக்குதான் இதற்குக் காரணம் என குற்றம் சாட்டிய கோகுல்ராஜின் தாய் சித்ரா, அரசுத் தரப்பு வழக்கறிஞராக, சீனியர் வழக்கறிஞர் ப.பா.மோகனை நியமிக்க வேண்டும் என அப்போதைய நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியத்திடம், சந்தியூர் வக்கீல் பார்த்திபன் மூலமாக மனு கொடுத்தார்.
அந்த மனு கிடப்பில் போடப்பட்டு சாதி வெறியர்களுக்கு துணைபோனார் மாவட்ட ஆட்சியர். எனவே, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் சித்ரா. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கருணாநிதியை விடுவித்து விட்டு, அரசு வழக்கறிஞராக ப.பா.மோகனை நியமித்து உத்தரவிட்டது. எடப்பாடி அரசு வழக்கை முடக்குவதிலேயே குறியாய் இருந்தது என்ற போதிலும் வழக்குரைஞர் ப.பா.மோகன் இந்த வழக்கை விடாப்பிடியாக நடத்தினார். கடுமையாக முயற்சி எடுத்து சுமார் 110 சாட்சிகளை இரண்டாவது முறையாக மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து குறுக்கு விசாரணை செய்து நீதியை நிலைநாட்டப் போராடினார். இதனால் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரில் 5 பேர் விடுவிக்கப்பட்டு 10 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு நீதிபதி சம்பத்குமார் குற்றவாளிகளுக்கான தண்டனையை நேற்றைய தினம் (08-03-2022) அறிவித்தார்.
இரட்டை ஆயுள் உள்ளிட்ட தண்டனைகளைப் பெற்ற இந்த சாதிவெறி பிடித்த ஆணவக்கொலை குற்றவாளிகள் நிச்சயம் மேல்முறையீடு செய்து தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஏற்கனவே தர்மபுரியில் வேளாண் கல்லூரி மாணவிகளை பஸ்சிலேயே வைத்து ஏரித்துக் கொன்ற கொலைகாரர்கள் தண்டனையை அனுபவிக்காமல் வெளியே வந்தனர் என்பதையும், மேலவளவு முருகேசன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள், அடிமை எடப்பாடி அரசால் விடுதலை செய்யப்பட்டுள்ளதும் சில ஆண்டுக்கு முன்பு நடந்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதே நிலை மேற்கண்ட குற்றவாளிகளுக்கும் வரலாம். சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தடுப்புச் சட்டங்கள் இருந்தும் குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்கப்படுவதும் பிறகு குற்றவாளிகள் தண்டனையை அனுபவிக்காமல் தப்பிப்பதுமே நடைமுறையாக உள்ளது.
எனவே, சாதி ஆணவக் கொலைகள் தடுக்கப்பட வேண்டுமெனில், சாதிக் கட்டமைப்பு தகர்க்கப்பட வேண்டும் இதற்கு சாதிகளற்ற சமுதாயம் அமைய வேண்டும். சாதிய கட்டமைப்பைத் தாங்கிப் பிடிக்கும் பார்ப்பன பாசிசம் வேரறுக்கப் படவேண்டும். இதற்கான போராட்டக் களத்தை நோக்கி அனைத்து சமூக ஜனநாயக அமைப்புகளும், மக்களும் ஒன்று திரள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
இரா.லோகநாதன்,
மாநில பொதுச்செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு – புதுச்சேரி.
தொடர்புக்கு: 94444 42374