உக்ரைனில் பரிதவிக்கும் இந்திய மாணவர்கள் அங்கிருந்து வெளியேறுவதில் உள்ள சிக்கல்களை விவரிக்கின்றனர்.

ரஷ்ய எல்லைக்கு அருகில் உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் உள்ள பல மாணவர்கள் தாங்கள் மீட்கப்படுவதற்கான எந்த அறிகுறிகளையும் இன்னும் காணவில்லை.

உக்ரேனிய நகரமான கார்கிவ் நகரில் இந்திய மாணவர் நவீன் ஷெல் தாக்குதலில் உயிரிழந்த நிலையில், ரஷ்யாவின் படையெடுப்பால் இருதரப்பு மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிக்கித்தவிக்கும் மக்கள் அந்நகரிலிருந்து வெளியேறுவதற்காக போராடி வருகின்றனர்.

உக்ரைன் போரில் பலியான இந்திய மாணவர் நவீன்

ரஷ்ய எல்லையில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள வடகிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரம் தொடர் குண்டுவீச்சை சந்தித்து வருகிறது. தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் நிலத்தடி வாகன நிறுத்துமிடங்கள், அடித்தளங்கள், மற்றும் சுரங்கப்பாதை நிலையங்களில் தஞ்சம் அடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 28 அன்று ரஷ்யாவின் ராக்கெட் தாக்குதல்கள் கார்கிவ் நகரில் டஜன் கணக்கான மக்களைக் கொன்றன.

குண்டுவீச்சு மற்றும் வான்வழித் தாக்குதல்கள் தொடங்கியதில் இருந்து சூமி என்ற கிழக்கு உக்ரைன் நகரில் தங்கியுள்ள தபன் குமார் பதுங்குமிடங்களுக்கும் தான் தங்கியுள்ள விடுதிக்கும் மாறி மாறிச் செல்கிறார். சூமி ஸ்டேட் யுனிவர்சிட்டி மாணவரான ஒடிசாவைச் சேர்ந்த புகுடாய் “சைரன்கள் எங்கள் கடிகாரங்களாக மாறிவிட்டன அவை இங்கே நம் நாட்களைக் கட்டளையிடுகின்றன” என்கிறார்.

ரஷ்ய எல்லையில் இருந்து வெறும் 48 கிமீ தொலைவில் உள்ள சூமியில் கிட்டத்தட்ட 1,000 இந்திய மாணவர்கள் சிக்கிக் கொண்டதாக புகுடாய் கூறுகிறார். போலந்து, ஹங்கேரி, ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு அருகிலுள்ள உக்ரைனின் மேற்கு எல்லைகளை அடைய முடிந்தவர்களை மட்டும் மீட்கும் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு முக்கியத்துவம் கொடுப்பதாகத் தோன்றுகிறது. உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரங்களான சுமி மற்றும் கார்கிவ் ஆகிய கொந்தளிப்பான பகுதிகளில் சிக்கியுள்ளவர்கள் இதுவரை எந்தவித மீட்பு நடவடிக்கைகளையும் காணவில்லை.

“சைரன்கள் ஒலிக்கும்போது ​​​​நாங்கள் எங்களுக்கு அருகிலுள்ள பதுங்குமிடங்களுக்கு ஓடுகிறோம், அது ஒரு மழலையர் பள்ளியின் கீழ் உள்ளது. நிலைமை தணிந்ததும் மக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்கிறார்கள். சூமி நகரில் நிலைமை ஒவ்வொரு மணிநேரமும் மோசமாகி வருகிறது. நாங்கள் பதுங்குமிடங்களுக்குள் செல்ல முயற்சிக்கும்போது நெரிசலான சூழ்நிலையை உள்ளது.” தானும் மற்ற இந்தியர்களும் குண்டுகள், துப்பாக்கிச்சூடு மற்றும் சைரன்களை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பதாகவும், தங்கள் பெற்றோர்கள் கவலையுடனும் உதவியற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்று புகுடாய் கூறுகிறார்.

உக்ரைனில் இந்திய மாணவர்கள்

லிவிவ் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மாணவர் அபிஷேக் குஷ்வாஹா, இந்தியத் தூதரகத்தின் ஹெல்ப்லைன்கள் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகக் கூறுகிறார். பிப்ரவரி 25 அன்று குஷ்வாஹாவும் பல இந்திய மாணவர்களும் போலந்துக்கு அருகிலுள்ள ஷெஹ்னி-மெடிகா எல்லைக்கு 80 கிமீ பயணத்தில் ஒரு பேருந்தில் ஏறினர். “எங்கள் பேருந்து எல்லையில் இருந்து 30 கிமீ தொலைவில் எங்களை இறக்கி விட்டது. எல்லையை அடைந்து அங்கே மூன்று நாட்கள் கடும் குளிரிலும் பனியிலும் காத்திருந்துவிட்டுத் திரும்பினோம். எங்களுக்கு உதவ யாரும் வரவில்லை” என்றார்.

“இப்போது நாங்கள் தூதரகத்தின் ஆலோசனையை கடைபிடிக்கிறோம். நாங்கள் இருக்கும் இடத்திலேயே இருப்போம், ஆனால் உக்ரேனிய மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். போலந்து எல்லையில் இந்தியர்களிடம் உக்ரைன் அரசு தவறாக நடந்து கொள்கிறது, இது நிஜம்” என்று குஷ்வாஹா கூறினார்.

கார்கிவ் நகரில் பதுங்கு குழிகளில் இந்திய மாணவர்கள்

போலந்து எல்லைக்கு பயணம் செய்த மற்ற மாணவர்களும் இதே போன்ற குற்றச்சாட்டுகளை எழுப்பினர். பேருந்துகள் ஷெஹ்னி-மெடிகாவிலிருந்து தொலைவில் நிறுத்தப்படுவதால், பசி மற்றும் தூக்கத்துடன் போராடி 20 கிமீ தூரம் நடந்தே எல்லையை அடைந்ததாகவும் உக்ரேனிய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

இந்தியர்களும் மற்றவர்களும் எல்லைகளில் கடுமையாக தாக்கப்படுவதை வீடியோக்கள் காட்டினாலும், இந்தியாவுக்கான உக்ரேனிய தூதர் இனவெறி குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். நாட்டை விட்டு வெளியேறுவதற்கு லட்சக்கணக்கான அகதிகள் காத்திருப்பதால் அனைத்து குடிமக்களும் தங்கள் முறைக்கு காத்திருக்க வேண்டும் என்றும் யாருக்கும் எந்தவொரு முன்னுரிமையும் வழங்கப்பட முடியாது என்றும் அவர் கூறினார். உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களை பொறுமையாக நடந்து கொள்ள வலியுறுத்தியுள்ளது. இந்தியர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் முயற்சிகளில் உக்ரைன் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பைப் பாராட்டியுள்ளது.

Life under the spectre of war: WION speaks to Indian students in Ukraine's Kyiv, World News | wionews.com
wion செய்தி

வெளியுறவுத்துறை செயலாளர் ஷ்ரிங்லாவும் உக்ரைனிலிருந்து இந்தியர்களை வெளியேற்றும் செயல்முறை “சவாலானது” என்று விவரித்தார். ஹங்கேரி, ருமேனியா, போலந்து மற்றும் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகங்கள் “நேரடி மோதலின்” மத்தியில் சிக்கியுள்ள மாணவர்களுக்கு உதவ அனைத்து அதிகாரிகளையும் அனுப்பியுள்ளன என்றார்.

எல்லைக்கு அருகாமையில் இருப்பதன் மூலம் கொடூரமான ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளான கார்கிவ் உள்ளிட்ட வடகிழக்கு பிராந்தியத்திலிருந்து தப்பிப்பது உள்ள மாணவர்களுக்கு உண்மையான சவாலாக உள்ளது. மார்ச் 1 அன்று, ரஷ்ய ஏவுகணைகள் கார்கிவில் உள்ள பிராந்திய நிர்வாகக் கட்டிடத்தைத் தாக்கி தீக்கிரையாக்கி மோதலின் தீவிரத்தை உணர்த்தியது.

நதீம் மண்டேலியா என்ற 24 வயது மாணவர் மூன்று நாட்களுக்கும் மேலாக நிலத்தடி சுரங்கப்பாதையில் தங்கியபின் கார்கிவ் நகரை விட்டு வெளியேறி மற்ற இந்திய மாணவர்களுடன் கார்கிவ் நகரிலிருந்து 1,000 கிமீ பயணித்து லிவிவ் நகருக்குச் செல்லும் ரயிலில் இருக்கிறார். “யாரும் எங்களுக்கு உதவவில்லை, எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம்,” என்கிறார்.

மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களையும் “கிடைக்கும் எந்த வழியிலும்” அவசரமாக கீவ் நகரிலிருந்து வெளியேறுமாறு செவ்வாய்க்கிழமை காலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தாலும் மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். நெருக்கடியான சூழ்நிலையில் தாங்கள் கைவிடப்பட்டதாக உணர்கிறார்கள்.

தென்மேற்கில் உள்ள மைக்கோலைவில் உள்ள பெட்ரோ மொஹிலா கருங்கடல் தேசிய பல்கலைக்கழகத்தின் 21 வயது மாணவர் தபிஷ் சித்திக் தனக்கு இந்திய அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று கூறுகிறார். நகரத்தில் அவர் தங்கியிருந்த குடும்பம் மற்றும் அவரது பல்கலைக்கழகம் அவருக்கு உதவியது என்றார். பல்கலைக்கழகம் தனது சொந்த செலவில் வெளிநாட்டு மாணவர்களுக்காக மால்டோவா எல்லைக்கு அழைத்துச் செல்ல பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. அங்கிருந்து மாணவர்கள் ருமேனியாவுக்கு விமானங்களில் செல்வார்கள்.

காஜியாபாத்தில் உள்ள சித்திக் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர். “இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகம் முன்கூட்டியே நிலைமையை தீவிரமாக ஆராய்ந்திருக்கவேண்டும். அவர்கள் நிலைமையை தெளிவாக மதிப்பிடாததன் விளைவுதான் இந்த குழப்பம்” என்று சித்திக்கின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

லிவிவ் நகரில் தங்கியுள்ள லக்ஷ்மன் அகர்வால் என்ற மாணவர் இன்று இரண்டாவது முறையாக போலந்து எல்லைக்கு செல்ல முயற்சிக்கிறார். போலந்து எல்லையில் இந்தியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. உக்ரேனிய அரசாங்கம் உக்ரேனியர்களுக்கே முன்னுரிமை கொடுத்து வேலை செய்கிறது. “உக்ரேனியர்களை முதலில் செல்ல விடுங்கள் என்று சொல்லி எங்களைத் திருப்பி அனுப்புகிறார்கள்” என்கிறார்.

உக்ரேனிய தூதர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து உக்ரேனிய குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமே மற்ற நாட்டவர்களை விட முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று கூறினார்.

லக்ஷ்மன் அகர்வால் மிகுந்த மனக்குமுறலுடன் சொல்வது இதுதான் “நாம்தான் நம்மை கவனித்துக் கொள்ள வேண்டும். உதவி எப்போது வரும் என்று தெரியவில்லை.”

தமிழில்: செந்தழல்

நன்றி: தி வயர்

https://thewire.in/rights/ukraine-stranded-indian-students-chaos-conflict-kharkiv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here