பைஜுஸ் (BYJU`S) :
இந்தியக் கல்வி அமைப்பில் என்ன பாதிப்பை உண்டாக்குகிறது?


ந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் ஜெர்ஸியில் என்ன பிராண்டின் விளம்பரம் இடம்பெற்றிருந்தது என்று கவனித்தீர்களா? பைஜுஸ். 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2022-ம் ஆண்டு மார்ச் வரையில் இந்திய அணிக்கான ஸ்பான்ஸர், ஆன்லைன் கோச்சிங் நிறுவனமான பைஜுபைஜுஸ்தான். ஷாருக்கான் பைஜுஸின் விளம்பரத் தூதுவர்.

2011-ல், சில லட்சங்கள் முதலீட்டில் போட்டித் தேர்வுகளுக்கு கோச்சிங் வழங்கும் நிறுவனமாக தொடங்கப்பட்ட பைஜுஸின் இன்றைய சொத்து மதிப்பு 18 பில்லியன் டாலர். 5 கோடிக்கு மேற்பட்ட மாணவர்கள் பைஜுஸில் தங்களைப் பதிவு செய்திருக்கின்றனர். இதில் 55 லட்சம் மாணவர்கள் கட்டணம் செலுத்திப் படித்துவருகின்றனர். ஆண்டுக்கு ரூ.3000 கோடி அளவில் வருவாய் ஈட்டுகிறது பைஜுஸ்.

கடந்த ஓராண்டில் மட்டும் ‘ஆகாஷ் அகாடமி’ (950 மில்லியன் டாலர்), ‘கிரேட் லேர்னிங்’ (600 மில்லியன் டாலர்), ‘எபிக்’ (500 மில்லியன் டாலர்), ‘வொயிட்ஹேட்ஜூனியர்’ (300 மில்லியன் டாலர்) உட்பட 8 நிறுவனங்களை பைஜுஸ் வாங்கியிருக்கிறது.

பைஜுஸின் வளர்ச்சி என்பது இந்தியக் கல்வித் துறையின் வீழ்ச்சியைக் குறிக்கிறது என்று சொல்லலாம். ஏன்? அதைப் பார்ப்பதற்கு முன்னால், பள்ளி மாணவர்களுக்கு, நுழைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கோச்சிங் வழங்கும் ஒரு நிறுவனம், எப்படி இந்த அளவுக்கு வளர்ந்தது என்பதைப் பார்த்துவிடலாம்.

பைஜு ரவீந்திரனும், அவரது மனைவி திவ்யா கோகுல்நாத்தும் இணைந்து 2011-ம் ஆண்டு பைஜுஸை திங்க் அண்டு லேர்ன் என்ற பெயரில் நிறுவனமாக மாற்றுகின்றனர். ரவீந்திரன் மூலமாக ஐஐஎம் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று அங்குப் படித்து முடித்த மாணவர்கள் ரவீந்திரனுடன் இணைகின்றனர்.
நுழைவுத்தேர்வுக்கான கோச்சிங் தவிர, பள்ளி மாணவர்களுக்கான டியூஷன் வகுப்புகளை எடுக்கும் நிறுவனமாகவும் பைஜுஸ் விரிவடைகிறது. தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து, வகுப்புகளை டிஜிட்டல் நோக்கி நகர்த்துகிறார் ரவீந்திரன். பயிற்சி வகுப்புகள் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக 2015-ல் பைஜுஸ் செயலி அறிமுகப்படுத்தப் படுகிறது. அது பைஜுஸ் நிறுவனத்துக்கு பெரும் சந்தையைத் திறந்தது.

செயலி திறந்த வாசல்

அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே ஆண்டில் 55 லட்சம் பேர் பைஜுஸ் செயலியைத் தரவிறக்கம் செய்தனர். 2.5 லட்சம் மாணவர்கள் ஆண்டுச் சந்தா செலுத்தினார்கள்.
பைஜுஸ் கைவைத்திருக்கும் சந்தை உலக கவனத்தை ஈர்த்தது. பைஜுஸ் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட மறு ஆண்டிலேயே செக்யுயா கேபிடல் (Sequoia Capital), ஸோபினா (Sofina) ஆகிய இரு நிறுவனங்கள் 75 மில்லியன் டாலர் அளவில் பைஜுஸில் முதலீடு செய்கின்றன, பேஸ்புக் நிறுவனத்தின் அமைப்பான சான் ஸூக்கர்பெர்க் இனிஷியேட்டிவ் (chan zuckerberg initiative) பைஜுஸில் 50 மில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்தபோது உலகம் உற்று அதை நோக்கியது. தற்போது, சில்வேர் லேக், பாண்ட், பிளாக் ராக், சேண்ட் கேபிடல், டென்சென்ட், ஜெனரல் அட்லான்டிக், டைகர் குளோபல் என இருபதுக்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்கள் பைஜுஸில் முதலீடு செய்துள்ளன.

கரோனாவுக்குப் பிறகு இந்தியக் கல்வித் துறையே ஆன்லைனை நோக்கிய நகரலானது, பைஜுஸ் நிறுவனத்துக்கு மிகப் பெரும் வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பைஜுஸ் நிறுவனம் வருவாய் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. நன்றாகத்தானே இருக்கிறது, திறமை கொண்ட சாமானியர் ஒருவர் கல்வித் துறையில் உச்சம் தொட்டிருப்பது வரவேற்கத்தக்கதுதானே என்றுதானே கேட்கிறீர்கள்? ஆமாம், தன் திறமையை மூலதனமாகக் கொண்டு ரவீந்திரன் எட்டிய வளர்ச்சி உண்மையில் வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஆனால், ஒரு நிறுவனமாக பைஜுபைஜுஸ், சமூகத்தில் ஏற்படுத்திவரும் தாக்கம் வரவேற்கத்தக்க ஒன்று அல்ல. இந்தியக் கல்வி அமைப்பில், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மனநிலையில் பெரும் சிதைவை பைஜுஸ் ஏற்படுத்திவருகிறது. எப்படி?

இயல்பான கல்வியமைப்புக்கான எமன்

பைஜுஸ் நிறுவனம் தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், நீட், ஐஏஎஸ் தொடங்கி வங்கித் தேர்வுகள் வரையில் கோச்சிங் வழங்கிவருகிறது. வகுப்புகளை வீடியோவாக மாணவர்களுக்கு வழங்குகிறது. பைஜுஸில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான கட்டணம் எவ்வளவு தெரியுமா? மாதம் ரூ.3,333. ஐந்தாம் வகுப்பிலிருந்து பத்து வரையில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான கட்டணம் மட்டும் ரூ.26,000.
ஐஏஎஸ் கோச்சிங்குக்கான கட்டணம் ரூ.1.5 லட்சம் வரை செல்கிறது.

பள்ளி வகுப்பு முடிந்து டியூசனுக்கு என்று செலவிடத்தானே செய்கிறோம்! எனில், பைஜுஸுடம் என்ன தவறு இருக்கிறது? ஓலா வளர்கிறது, பேடிஎம் வளர்கிறது, அமேசான் பிளிப்கார்ட், மீஸோ வளர்கிறது, பைஜு’ஸ் ஏன் வளரக் கூடாது? என்று கேட்கலாம்.

நாம் பைஜுஸை ஏனைய துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் ஒப்பிட முடியாது. பைஜுஸ் கை வைத்திருக்கும் இடம் கல்வி. அது ஒரு சமூகத்தின் போக்கிலேயே பெரும் விளைவுகளை செலுத்துக் கூடியது. பைஜுஸ் அதனை விளம்பரப்படுத்தும் முறையிலிருந்தே அதன் மோசமான தன்மை ஆரம்பமாகிறது. சமீபத்தில் பைஜுஸ் நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் ஒன்று சர்சையானது. சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் மொத்தமுள்ள 761 ரேங்குகளில் 281 பேரும், ஐஏஎஸ்-க்குத் தேர்வாகியுள்ள முதல் 100 பேரில் 36 பேரும் பைஜுஸில் பயிற்சி பெற்றவர்கள் என்று எல்லாப் பத்திரிகைகளிலும் முழுப் பக்கத்துக்கு விளம்பரம் கொடுத்திருந்தது. அந்த விளம்பரம் வெளியான சில மணி நேரங்களிலே அந்த விளம்பரத்தில் இடம்பெற்ற மாணவர்கள், தாங்கள் பைஜுவில் கோச்சிங் பெறவில்லை என்றும், அது அறிவித்த இலவச பயிற்சி வகுப்புகளில் அரைமணி நேரம் அளவில் மட்டுமே கலந்து கொண்டவர்கள் என்றும் விளக்கம் அளித்தனர். பிரச்சினை இது மட்டும் அல்ல. ‘உங்களுக்குப் பள்ளிக்கூடங்களில் சொல்லிக்கொடுக்கும் பாடங்களைப் பத்து நிமிஷங்களில் எங்கள் ஆசிரியர்கள் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிடுவார்கள்’ என்ற பாணியிலான ஆள்பிடிக்கும் வேலையையும், இப்படிப்பட்ட வகுப்புகளில் பிள்ளைகள் சேராவிட்டால், அவர்களால் உருத்தேறவே முடியாது எனும் புற அழுத்தச் சூழலையும் அது உருவாக்கத் தொடங்கியிருப்பதுதான்!

பைஜுஸின் முதன்மை இலக்கு நடுத்தர வர்க்கமும், பிள்ளைகளின் கல்வியை நம்பிக்கையிருக்கும் ஏழை பெற்றோர்களும்தான்.
பைஜுஸில் விற்பனைப் பிரிவில் பணியாற்றி வெளியேறிவிட்ட ஒருவரிடம், “அவர்கள் எப்படி பெற்றோர்களிடம் பேசி பிள்ளைகளை பைஜுஸில் சேர்க்கச் செய்கிறார்கள்?” என்பது தொடர்பாக கேட்டபோது, அவர் கூறியதாவது,
பிற பொருட்களை விற்பதுபோல் அல்ல கல்வியை விற்பது. பிற பொருட்களை நீங்கள் விற்க வேண்டுமென்றால், நீங்கள் ஆசையைத் தூண்ட வேண்டும். ஆனால், நீங்கள் இந்தியாவில் கல்வியை விற்க வேண்டுமென்றால் பெற்றோர்களின் உணர்ச்சியைத் தூண்ட வேண்டும்.

எப்படியெல்லாம் இலக்காக்குகிறார்கள்?

முக்கியமாக, இப்படியான கோச்சிங் சென்டர் வியாபாரத்துக்கு பைஜுஸ் ஒரு முன்னுதாரணமாகி வருகிறது. தற்போது கிராமப்புறப் பெற்றோர்களிடமும்கூட ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. குழந்தைகள், சிறுவர்கள் பார்க்கும் யூடியூப் வீடியோக்களிலும், கேம்களிலும் பைஜுஸ் விளம்பரம் வருகிறது. கைதவறி பைஜுஸ் செயலியை டவுன்லோட் செய்துவிட்டால்கூட அவர்கள் இந்நிறுவனத்தின் இலக்குப் பட்டியலில் வந்துவிடுவதை அதன் பிரநிதிகளுடன் பேசுகையில் புரிந்துகொள்ள முடிகிறது. பெற்றோர்களின் தொடர்பு எண்களை இத்தகு நிறுவனங்கள் வேட்டையாடுகிறார்கள். அவர்களைத் தொடர்புகொண்டு வீட்டில் படிக்கும் வயதில் பிள்ளைகள் இருக்கிறார்களா, என்ன படிக்கிறார்கள், எத்தனை மதிப்பெண் பெறுகிறார்கள் என்று ஆரம்பித்து தற்போதைய காலகட்டத்தில் உங்கள் பிள்ளை கூடுதலாக கற்றுக்கொள்ளாவிட்டால் அவரது எதிர்காலம் கேள்விக்குறிதான் என்ற இடம் நோக்கி நகர்த்துகிறார்கள். அதாவது அச்சுறுத்துவதுதான் இங்கே வியாபாரத்துக்கான தூண்டில்!

அதன் பிறகு, ‘கவலைப்படாதீர்கள் நாங்கள் உங்கள் பிள்ளைக்குப் கோச்சிங் வழங்குகிறோம். சேருங்கள். இலவசமாக சில நாட்கள் பயன்படுத்திப் பாருங்கள். அதன் பிறகு முடிவுசெய்து கொள்ளுங்கள்’ என்றெல்லாம் தூண்டில்கள் வீசப்படுகின்றன. ஒருகட்டத்தில் நிறுவனத்தில் சேர்க்காவிட்டால் அது நம் பிள்ளைக்குச் செய்யும் துரோகம் என்று எண்ணும் அளவுக்குப் பெற்றோர்கள் கரைக்கப்படுகிறார்கள்.

குடிசைப் பகுதிகளிலும்கூட கடன் வாங்கி வகுப்புகளில் சேர்க்கும் நெருக்கடிநிலையை இத்தகு நிறுவனங்கள் உருவாக்கிவருகின்றன என்கிறார்கள்.

ஏன் இது ஒரு முக்கியமான பிரச்சினை?

ஏனைய துறைகளுக்கும் கல்வித் துறைக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. அடிப்படையில் கல்வி என்பது சேவை. பைஜுஸுக்கு முன்பே கல்வி சந்தைப் பண்டமாக மாறிவிட்டது. நாமக்கல் பள்ளிகளைப் பற்றி நமக்குத் தெரியும். ஆனால், தனியார் பள்ளிகள் கல்வியை அணுகுவதற்கும் பைஜுஸ் போன்ற நிறுவனங்கள் அணுகுவதற்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது.

தனியார் பள்ளிகள் அரசின் விதிமுறைக்கு உட்பட்டே செயல்பட முடியும். அதன் கட்டண முறைகள் அரசின் விதிமுறைக்கு உட்பட்ட இருக்க வேண்டும். ஆனால், பைஜுஸ் மாதிரி நிறுவனங்கள் அப்படி அல்ல. அது பெற்றோர் மனதிலும் மாணவர்களில் மனதிலும் விளம்பரரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்திய அதன் ஒரு விளம்பரம் இது:– Double the teachers double the learning! அதாவது, ஆசிரியர்களை இரட்டிப்பாக்கி, கற்றலையும் இரட்டிப்பாக்குங்கள்!

இந்தப் போக்கு மிக ஆபத்தானது. ஏற்கெனவே கல்விரீதியாக பெரும் ஏற்றத்தாழ்வை சந்தித்துவரும் இந்திய சமூக அமைப்பில் மிகப் பெரும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தக்கூடியதாக அமைவதோடு, கல்வியின் உண்மையான தரத்தையும் கீழே தள்ளக்கூடியது.

ஆன்லைன் கோச்சிங் நிறுவனங்களின் இத்தகையப் போக்கு இந்தியாவில் மட்டுமல்ல சீனாவிலும் உண்டு. டிஜிட்டல் கோச்சிங் நிறுவனங்களில் கல்விரீதியாக சமூகத்தில் பெரும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திவருகிறது என்பதை உணர்ந்த சீன அரசு தற்போது, இத்தகைய நிறுவனங்கள் மீது கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்திருக்கிறது. இந்தியா கவனம் அளித்துப் பார்க்க வேண்டிய உதாரணம் அது.

கல்வி கற்றல் முறை காலத்துக்கு ஏற்ப பரிணாமம் கொள்ளும். தற்போது ஆன்லைன் கல்வி அப்படியான ஒரு பரிணாமம்தான். நாம் ஆன்லைன் கல்வியையையும், பைஜுஸ் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் கோச்சிங்கையும் ஒன்றாகக் குழப்பிக் கொள்ளக்கூடாது. ஆன்லைன் கல்வி என்பது கல்வி கற்றலில் புதிய சாத்தியத்தைக் கொண்டுவந்திருக்கிறது என்று சொல்லலாம். ஹார்வார்ட் பல்கலைக்கழத்தில் உள்ள ஒரு பேராசிரியரின் பாடத்தை தமிழகத்தில் கடலூரில் உள்ள ஒரு மாணவன் பார்க்க முடியும். தற்போது பள்ளிக் கல்லூரி மாணவர்கள் தங்கள் பள்ளி வகுப்புப் போக யூடியூப்பில் பாடங்களைப் பாற்றுக் கூடுதலாக கற்று வருகின்றனர். பள்ளி வகுப்புகளிலும் ஆன்லைன் கல்வி தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது.

பள்ளி தொடர்புடைய ஆன்லைன் கல்வி முறையில் பல்வேறு குறைபாடுகள் பிரச்சினைகள் இருக்கின்றன. ஸ்மார்ட் போன், இணையம் இன்னும் பல மக்களுக்கு – குறிப்பாக கிராமப்புற மற்றும் பழங்குடி மக்களுக்கு சென்று சேரவில்லை. ஆனால், இந்தப் பிரச்சினைகள் அரசால் நிவரத்தி செய்யப்படக் கூடியவை.

ஆனால், பைஜுஸ் போன்ற நிறுவனங்களின் விவகாரம் இத்தகையது அல்ல. அவை கல்வியை சந்தைப் பண்டமாக அணுகுவதன் வழியே கல்வி அமைப்பிலே பெரும் தாக்கம் செலுத்துகின்றன. கல்வி என்பது குடிமகனின் அடிப்படை உரிமை;
சமூக முன்னேற்றத்துக்கான ஊன்றுகோல் என்ற கட்டமைப்பையே அவை தகர்க்கின்றன. இந்திய மக்கள் இதைத் தீவிரமாக எடுத்துச் செயலாற்ற வேண்டும்!…
குறிப்பாக நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கம் கருத்தியல் ரீதியாக களமாட வேண்டும். இது விவாதத்திற்காக….

  • எஸ். அப்துல் மஜீத்

1 COMMENT

  1. உண்மையிலே இந்த கட்டுரை சிறப்பாக உள்ளது. ஒரு நாள் நான் ரயில்வே ஸ்டேஷனில் அமர்ந்து இருந்தேன் அப்பொழுது ஒருவர் இந்த விளம்பர நோட்டீஸ் கொடுத்து ரொம்ப நேரம் என்னை பிரைன் வாஷ் பண்ணினார் நான் அதை தவிர்த்தேன்.கொரோனா காலகட்டத்தில் சற்று யோசிக்கும்போது சரியாகத்தான் இருக்கிறது என்று எண்ணினேன் ஆனால் இந்த கட்டுரையின் மூலம் மிகப்பெரிய ஆபத்தை கொடுக்கிறது என்று தெரிந்து கொண்டேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here