‘ஆறிய கஞ்சி..பழங் கஞ்சி’ – என்பார்கள். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்களம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் – தமிழ்ச்செல்வி தம்பதியரின் (பட்டியலினத்தவர்) மூத்த மகன் கவின் செல்வ கணேஷ். பொறியியல் பட்டதாரியான இவர் சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் நல்ல ஊதியத்தில் பணி புரிந்து வந்தார்.
அதேபோல திருநெல்வேலி மாவட்டம் சரவணன்-கிருஷ்ண குமாரி (இருவரும் காவல் சார் ஆய்வாளர்கள் – ஆதிக்க சாதி தேவர் இனத்தவர்) ஆகியோரின் மகள் சுபாஷினி என்பவர் சித்த மருத்துவப் பட்டப்படிப்பு முடித்து, திருநெல்வேலி தனியார் சித்த மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.
இவர்கள் இருவரும் பள்ளிப் பருவ காலம் தொட்டு காதலித்து வந்த நிலையில், சென்னையிலிருந்து தூத்துக்குடி அருகில் திருச்செந்தூர் மருத்துவமனையில் உடல்நலமின்றியிருந்த தனது தாத்தாவை (தனது அம்மாவின் அப்பா)ப் பார்க்க, கவின் வந்திருந்த பொழுது தனது காதலி சுபாஷினி அலைபேசி வாயிலாக கவினுடன் பேசி இருக்கிறார். அவரது தாத்தாவை திருநெல்வேலியில், தான் (காதலி(?)) பணியாற்றும் மருத்துவமனைக்கு அழைத்து வர ஆலோசனை கூற அதன்படி தனது தாத்தாவை அந்த மருத்துவமனைக்கு கவின், தனது தாய் மற்றும் மாமாவுடன் அழைத்துச் சென்று அனுமதித்துள்ளார்.
கவின்-சுபாஷினி காதலை துளி அளவும் ஏற்றுக்கொள்ள மறுத்த சுபாஷினி குடும்பத்தினர் (இது கவினுக்கு தெரியாது), ஏற்கனவே கொலைகார கும்பல் திட்டமிட்டிருந்தபடி கவின், சுகாசினி பணியாற்றும் சித்த மருத்துவமனையில் இருப்பதை கேள்வியுற்ற சுபாஷினியின் தம்பி சுர்ஜித் என்பவன் மருத்துவமனைக்குச் சென்று லாகவமாகஇனிப்பு வார்த்தைகள் கூறி தனது இருசக்கர வாகனத்தில் கவினை அன்பொழுக ஏறச்சொல்கிறான். (அனைத்து வகைகளிலும் இப்படிப்பட்ட கொடுஞ் செயலுக்கு – ஏற்கனவே தமது சாதியில் தகுந்த வேறு மாப்பிள்ளையைத் தமது குடும்பத்தினர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் – அனைத்திற்கும் சுகாசினியும் உடந்தையாக இருந்துள்ளார் என்றே தெரிய வருகிறது) ஏமாளியாகிப் போன அப்பாவி கவின் கொலைகாரன் சுர்ஜித்தின் தோள் மீது தமது கரம் போட்டு வண்டியில் பயணிக்கிறார்கள். மகிழ்ச்சியோடு கவினை அழைத்துச் சென்ற சுர்ஜித் தனது வீட்டு வாசலிலேயே தான் மறைத்து வைத்திருந்த வெட்டரிவாளால் 2025 ஜூலை 28-ல் வெட்டி படுகொலை செய்தான்.
அத்துடன், ஏற்கனவே திட்டமிட்டிருந்த படி அவனது பெரியம்மா மகன் ஜெயபாலன் ஏற்பாட்டில் தான் பணிபுரியும் கல்குவாரிக்கு இருசக்கர வாகனத்தில் பறந்து சென்று விடுகின்றனர். அங்கே சென்று ரத்தக்கரை படிந்திருந்த ஆடையில் அனைத்தையும் கழற்றி தீயிட்டுபா பொசுக்குகின்றனர்.
பைக் நம்பர் பிளேட்டை தீயிட்டு தடம் தெரியாமல் அழித்து விடுகின்றனர். அதன் பிறகு ஜெயபாலன் அளித்த ஆடையை அணிந்து கொண்டு அமர்ந்து விட்டார்கள்.அதாவது சுர்ஜித் சம்பவம் நடந்த உடனேயே சரண்டர் எல்லாம் ஆகவில்லை.

சகவாசகமாக தடயங்கள் அனைத்தையும் அழிப்பதற்கு மூன்று மணி நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறான். அதற்கு காவல்துறை உடந்தையாக இருந்திருக்கிறது என்று வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
இதற்கிடையில் தான் ஒருவர் (காவலர்) திருமதி தமிழ்ச்செல்விக்கு ஃபோன் செய்து, அஷ்டலட்சுமி நகர் மங்கம்மாசாலையில் கவின் ஃ போன் கிடக்கிறது; வந்து பாருங்கள் என்று சொல்லிவிட்டு கட் செய்து விடுகிறார். உடனே தமிழ்ச்செல்வி பதறுகிறார்.
அடுத்த சில வினாடிகளில் இன்னொருவர்(காவல் நிலையத்தினர் தான்) ஃபோன் செய்து உங்கள் பையனுக்கு திருநெல்வேலியில் ஏதேனும் ஒரு பெண்ணுடன் தொடர்பு உண்டா என்று கேட்கிறார். இவர் பதிறிப் போய் எனது மகனுக்கு என்ன ஆயிற்று? விளக்கமா சொல்லுங்ய்யா என்று கேட்டவுடன் அவரும் ஃபோனை கட் பண்ணி விடுகிறார்.
இந்நிலையில் அவர் கதறி அழுதபடி மங்கம்மா சாலை விரைகிறார். சுகாசினி- சுர்ஜித் வீட்டின் முன் பெரும் கூட்டம்; சாலையில் ரத்தம்; இவற்றைக் கண்ட மாத்திரத்திலேயே தமிழ்ச் செல்வி மயங்கி விழுந்து விடுகிறார்.

தனது மகனைக் கூட அவரால் பார்க்க இயலவில்லை. அதன் பிறகு கவின் உடற்கூராய்விற்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். தமிழ்ச்செல்வி முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டு விழிக்கச் செய்து காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். அவருடன் கவின் தாய் மாமாவையும் அழைத்துச் செல்கின்றனர். அங்கே ஒரு அறையில் தங்க வைத்து வெளியே இரண்டு காவலர்களை நிறுத்தி விடுகின்றனர். அதாவது கொலை செய்யப்பட்ட கவினின் தாய் மற்றும் மாமாவை சிறைப்படுத்தி வைத்துக் கொண்டனர்.
இவர்கள் வெளியே செல்ல வேண்டும்; உற்றார் உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்; மற்ற சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறி வெளியில் செல்ல அனுமதி யுங்கள் என்று கதறியும் காவல் நாய்கள் விடுவதாக இல்லை.
அதன் பிறகு சாவகாசமாக சுர்ஜித் ஏற்கனவே சரணாகி கைது செய்யப்பட்டு விட்டான் என்பதாக பொய் பரப்புரையைக் காவல்துறை கசிய விடுகிறது. அதுதான் செய்தியாக பரவுகிறது.
தடயங்கள் முழுவதும் அளிக்கப்பட்ட பின் சுர்ஜித்கைது செய்யப்பட்டு இருக்கிறான். இவை அனைத்திற்கும் போலீஸ் உடந்தையாக இருந்திருக்கிறது என்றே தெரிய வருகிறது.
படிக்க:
♦ திருச்சியில் நெல்லை கவின் ஆணவப்படுகொலையை கண்டித்து ம.க.இ.க, பு.ஜ.தொ.மு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!
கவின் பெற்றோர், உற்றார் உறவினர், பல்வேறு அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்களின் போராட்ட முன்னெடுப்புக்கள் காரணமாக வழக்கில் கொலையாளி சுர்ஜித் பெற்றோர் சரவணன் மற்றும் கிருஷ்ண குமாரி, ஜெயபாலன் பெயர்களும் சேர்க்கப்பட்டு சரவணன் மட்டும் கூடுதலாக கைது செய்யப்பட்டான்.
அவனைத் தொடர்ந்து கிருஷ்ணகுமாரியின் சகோதரி மகன் ஜெயபாலனும் கைது செய்யப்பட்டு ஆக மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் உள்ளபடியே கொடும் தண்டனை அனுபவிக்க வேண்டிய கொலைக் குற்றவாளிகள் மூவரும், சிறையில் பல்வேறு சாதிய இயக்கங்கள், காவல்துறை, மற்றும் பிற அதிகார வர்க்கத் துறைகள், அரசியல் இயக்கங்களின் பின்புலத்தில் ‘சொகுசு’ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தான் அறிய முடிகிறது.
இது சகிக்க முடியாத பேரவலம்! மனித சமூகத்தில் எங்கும் கண்கிராத வக்கிரமான கேவலச் செயல் இது! சகிக்க முடியவில்லை.
எங்கே சட்டம்? எங்கே நீதி? எங்கே கண்டம்ப்ட்?
கொலை சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் முதல் தகவல் அறிக்கையிலும் (FIR), குற்றப் பத்திரிகையிலும் (Charge Sheet) பெயர் சேர்க்கப்பட்டிருந்த சுர்ஜித்தின் தாய் கிருஷ்ண குமாரியை (காவல் சார் ஆய்வாளர்) இதுவரை காவல் துறை கைது செய்ய முன் வரவே இல்லை. இது கொடுமையிலும் கொடுமை. பல மாதங்கள் அவர் தலைமறைவாகி உள்ளார். தேடி வருகிறோம் என்று பித்தலாட்டம் செய்தது காவல்துறை. மாவட்ட நீதிமன்றம் எத்தனை மாதங்கள் காவல்துறையின் கண்ணுக்கே படாமல் கிருஷ்ணா குமாரி தலைமறைவாக இருந்து விட முடியும்? என்று எச்சரித்த பின் கிருஷ்ணா குமாரி நரி வேலையை துவங்கி விட்டார். ஆம்.
கிருஷ்ணா குமாரி திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தை அணுகி, தான் இவ் வழக்கில் எவ்வித குற்றச்செயலும் செய்யவில்லை என்றும், தான் குற்றவாளி அல்ல என்றும் முறையிட்டு தனக்கு முன் ஜாமீன் வழங்குமாறு கோரி இருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமா அவர்கள் துணைக் காவல் கண்காணிப்பாளரிடம், கிருஷ்ணகுமாரியை ஏன் இதுவரை கைது செய்யாமல் இருக்கின்றீர்கள் என்று வினா எழுப்பி உள்ளார். அதற்கு டிஎஸ்பி-யோ தனது நேரடி கண்காணிப்பில் கிருஷ்ணகுமாரி வைக்கப்பட்டு விசாரணையில் உள்ளார் என்பதாக கெட்டிக்காரத்தனமாக பதில் அளித்துள்ளார். உடனே மாவட்ட நீதிபதி ஹேமா அவர்கள் முதல் தகவல் அறிக்கையிலும், குற்றப்பத்திரிகையிலும் கிருஷ்ணகுமாரி பெயர் இடம் பெற்று இருக்கின்ற பொழுது அவரை கைது செய்யாமல் இருப்பது தவறு எனக் கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும் கைது செய்ய பிடி வாரண்ட்-டும் பிறப்பித்துள்ளார்.

ஆனால் கிருஷ்ண குமாரிக்கு ஆதிக்க சாதி அமைப்புகளின் பின்புலமும் ஆதிக்க சாதி அதிகார வர்க்கத்தின் பின்புலமும் இருப்பதால் அனைத்திற்கும் ‘டிமிக்கி’ கொடுத்து விட்டு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் பிடிவாரண்டை ரத்து செய்யு மாறும், முன் ஜாமீன் வழங்குமாறும் கோரி மனுச் செய்தார் கிருஷ்ணகுமாரி. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி விக்டோரியா அவர்கள் பிடிவாரண்டை ரத்து செய்ய முடியாது என்றும், தேவை என்றால் மாவட்ட நீதிமன்றத்தை அணுகுவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என்றும் தெரிவித்து கிருஷ்ணகுமாரி மனுவைத் தள்ளுபடி செய்தார். ஆனால் பிடிவாரண்ட் அமலில் இருந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமாரியை உடன் கைது செய்ய உத்திரவிட்டிருக்க வேண்டும் என்பதே சரியானது.
ஆக பிடிவாரண்டை அமல்படுத்தி காவல்துறை இதுவரை குற்றவாளி கிருஷ்ணகுமாரியைக் கைது செய்ய முற்படவில்லை?
முக்கிய குற்றவாளியே சிபிசிஐடி டிஎஸ்பி ராஜ்குமார் நவோஜ்தான்!
திருநெல்வேலி மாவட்ட வழக்கு மன்றத்தில் விசாரணையின் போது முதலில் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் நவோஜ், கிருஷ்ணகுமாரி தலைமறை வாகிவிட்ட தாகவும், தேடப்படுகிறார் என்றும் புளுகி சில காலத்தைக் கடத்தினார்.
அதன்பின் நீதிபதி எவ்வளவு காலம் தான் தலைமறைவாக இருப்பார் என அழுத்தம் கொடுத்து விசாரணை செய்கின்ற பொழுது அவரை கண்டுபிடித்து விட்டோம்; எனது நேரடிக் கண்காணிப்பில் தான் விசாரணையில்இருக்கிறார் என்று செப்பிடி வித்தைத்தனமாக இதே டிஎஸ்பி கோர்ட்டிலும் புளுகித் தள்ளினார்.
நீதிபதி ஹேமாவோ குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு – அவரது பெயர் முதல் தகவல் அறிக்கையிலும், குற்றப்பத்திரிகையிலும் இடம்பெற்றிருக்கும் போது ஏன் கைது செய்யவில்லை எனக் கடிந்து கூறி கிருஷ்ணகுமாரியை கைது செய்யப் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார். ஆனாலும் டி எஸ் பி ராஜ்குமார் நவோஜ் அசைந்து கொடுப்பதாக இல்லை.
இடைப்பட்ட காலத்தில் கிருஷ்ணகுமாரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரியும், முன் ஜாமீன் வழங்கக் கோரியும் மேல் முறையீடு செய்தார். அவரை கைது செய்யாததன் மூலம் டிஎஸ்பி இப்படி எல்லா வகையிலும் கிருஷ்ணகுமாரிக்கு உதவியாக இருந்து வந்திருக்கிறார்.
படிக்க:
♦ கண்ணகி – முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கு: கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை உறுதி!
♦ கோகுல்ராஜ் சாதிஆணவப் படுகொலை வழக்கு : தீர்ப்பு எளிதில்பெற்ற ஒன்றல்ல.
அதன் பின் உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி விக்டோரியா, இம்மனுவை தள்ளுபடி செய்ததோடு, திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திலேயே பரிகாரத்தைத் தேடிக் கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் உண்மையில் அவர் அவ்வாறு கூறாமல் பிடிவாரண்டை அமல்படுத்தி கிருஷ்ணகுமாரியை உடன் கைது செய்யுமாறு டிஎஸ்பிக்கு உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் என்பதே சரியானது.
மாவட்ட நீதிமன்ற பிடிவாரண்ட் உத்தரவு அமலில் இருந்த சூழலில் கிருஷ்ணகுமாரியை உடனடியாக கைது செய்யுமாறு அரசு தரப்பு மற்றும் கவின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர்கள் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் நிர்ப்பந்தம் செய்கின்ற பொழுது, தமக்கு உயர்நீதிமன்ற உத்தரவு கைக்குக் கிடைக்கப்பெறவில்லை என்று காரணம் காட்டி சில காலம் இழுத்தடித்தார் டிஎஸ்பி ராஜ்குமார்.
தற்போது தீர்ப்பு டிஎஸ்பிக்கு சார்பு செய்யப்பட்ட பின்னரும் இதுவரை ஏ3. குற்றவாளி கிருஷ்ணகுமாரியை ஏனோ கைது செய்ய மறுத்து வருகிறார்
டி எஸ் பி. ஆக இதிலிருந்து என்ன தெரிய வருகிறது என்றால் டிஎஸ்பி-யேகுற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவராக இருக்கிறார் என்பது தான். ஆம், அவரே தொடர்ச்சியாக கிருஷ்ணகுமாரியைக் கைது செய்ய மறுத்து தப்புவிக்கப்படக் காரணமாக இருந்து கொண்டிருக்கிறார் டிஎஸ்பி.
மேலும் முதல் தகவல் அறிக்கையிலும், குற்றப்பத்திரிகையிலும், சுர்ஜித்தைத் தவிர மற்ற ஏ2, ஏ3, ஏ4 குற்றவாளிகளை பெயரளவுக்குத்தான் காவல்துறை வழக்குப்பதிவிட்டுள்ளதே தவிர, அவர்கள் எளிதில் ஜாமீன் பெற்று விடுதலை பெறுவதற்கான மிக எளிதான சட்டப்பிரிவுகளிலேயே வழக்குப் பதிந்திருக்கிறார்கள் இந்த மோசடிப் பேர்வழிகள். எனவே இந்த அரசாங்கத்தை – இந்த காவல்துறையை – இந்த நீதித்துறையை – நம்பி சாதாரண ஏழை எளிய மக்கள் குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் – குறிப்பாக பட்டியலின மக்கள் எப்படி நியாயத்தைப் பெற முடியும்?
எனவே ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் பெற்றோர் பக்கம் அனைத்து மக்களும், அனைத்து அரசியல் இயக்கங்களும் அணி திரண்டு நின்று சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் உரிய கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்வதோடு கடும் தண்டனை கிடைக்கப் பெற கரம் கோர்த்துப் போரிடுவோம்!
தூத்துக்குடிஆறுமுகமங்கலத்தில் கவின் பெற்றோரும் உற்றார் உறவினரும் தூக்கமின்றி தவியாய் தவித்துக் கொண்டிருக்கின்றனர்– நீதி கிடைக்கவில்லையே என்று…!
உப்புக்குச் சப்பில்லாத எது-எதற் கெல்லாம் கண்டம்பட் (contempt) எடுக்கக்கூடிய ‘கனவான்’ நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றங்கள், இப்படிப்பட்ட கொடுஞ்செயல்களான படுகொலை சம்பவங்களுக்கு கூட கண்டும் காணாமல் கடந்து போகின்றனரே என்பது எவ்வளவு பெரிய துயரம்? எவ்வளவு பெரிய இழுக்கு? இழிவு?
என்ன செய்கிறது காவல்துறை?எங்கே நீதி? எங்கே சட்டம்? எங்கே மனித உரிமை? எங்கே சமூக நீதி? எங்கே அரசாங்கம்?
பட்டியலினத்தவன் உயிர் என்றால் அது கிள்ளுக்கீரையாக அமைந்து விடுமோ? கிருஷ்ணகுமாரி உள்ளிட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்!
சிறையில் கொலைக் குற்றவாளிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு அனுமதிக்கக் கூடாது! ஆணவப் படுகொலை களுக்கு காரணமான அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்!
ஆணவப் படுகொலைகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வரை தண்டனை வழங்கலாம் என்ற சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்
– என்ற கோரிக்கைகளுக்காக ஜனநாயக இயக்கங்கள், முற்போக்கு இயக்கங்கள், பல்வேறு மக்கள் நல அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புகள் போராட முன்வர வேண்டும். அதற்கான களம் காண வேண்டும்.
- எழில்மாறன்






